20

20

கொழும்பைத் தாக்கவந்த புலிகளின் இரு விமானங்களும் வீழ்த்தப்பட்டன- படைத்தரப்பு தகவல்: இருவர் பலி, 52 பேர் காயம்.

colombo1.jpgகொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளவென வந்த புலிகளின் இரு விமானங்கள் படையினரால் நேற்று (20.02.2009) இரவு  சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

ஒரு விமானம் கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்றைய விமானம் கொழும்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத் தொகுதியில் மோதி வீழ்ந்ததாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க படைத்தளத்துக்கு அருகே சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் விமானமோட்டி ஒருவர் சடலத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விமானம் அங்கே வீழ்ந்தபோது பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புக் கருதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (20.02.2009) இரவு 9.30 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்ததையடுத்து கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட வான்காப்பு பொறிமுறைகள் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

புலிகளின் ஒரு விமானம் இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின்  மோதுண்டு உடைந்து விழுந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கட்டடத்தின் 12-13 வது மாடிப்பகுதியின் பின் புறமாக விமானம் மோதுண்டதாலும் குண்டு வெடித்ததாலும் இருவர் பலியானதுடன், 52 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார். விமானத்தின் உடைவுகளைப் பார்வையிடுவதற்காக வேண்டி தேசிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~ நல்லிரவு அவ்விடத்துக்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறைவரித் திணைக்கள அலுவலகம் கொழும்பிலே விமானப் படை தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவித் திணைக்கள கட்டடத்தின் மீதுவிழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்துள்ள இலங்கை வங்கிக் கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன. சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
neelp-pulikal.jpgசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளா கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

colombo-01.jpg

colombo-04.jpg

041.jpg

colombo-06.jpg

ltte_aircraft-2009-02-21.png

புகைப்படங்கள் www.lankadeepa.lk,   www.army.lk   இணையத்தளஙகளிலிருந்து பெறப்பட்டவை.

வக்கீல்கள் ஆவேசம்:போலீஸ் ஓய்வறையை எரித்தனர்

court-tamilnadu.jpgசென்னை ஐகோர்ட்டில் நேற்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கு பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.தாம்பரம் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஓய்வறையை அடித்து நொறுக்கினர். அங்கிருந்து மேஜை, நாற்காலிகளை வெளியில் கொண்டுவந்துபோட்டு தீ வைத்து கொளுத்தினர். கோர்ட் முன்பு ஜிஎஸ்டி சாலையில் மறியல் செய்து வாகனங்களை தடுத்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் இயக்குநர் சீமான் கைது

seeman-1302.jpg
திருநெல்வேலி  காவல் ஆணையர் முன் சரண்ணடைய வந்த இயக்குநர் சீமானை  போலீசார்  கைது செய்தனர். கடந்த 12ம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். டைரக்டர் சீமான், அவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்தால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.  இந்நிலையில் 19ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (19.02.09) அல்லது நாளைக்குள் (20.02.09) கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து இன்று நெல்லையில் இயக்குநர் சீமான் கைது  செய்யப்பட்டுள்ளார்.

அத்வானியை சந்தித்தார் ரணில் முகர்ஜியுடன் சந்திரிகா பேச்சு

chandrika-bandaranaike-kumaratunga-01.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை புதுடில்லியில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்து பேசிய அதேநேரம், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார்.
அவசர பயணமாக புதுடில்லி சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க அத்வானியை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளதுடன், இலங்கை விவகாரம் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், இந்திய மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் எழுதிய ராஜீவ்காந்தி; மாற்றத்திற்கான காலம் என்ற நூல் ஆய்வு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முகர்ஜியை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் சந்திரிகா குமாரதுங்க ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, தற்போதைய நிலைமையில் நீங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்; புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்திருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், “குண்டு வீசி ஆயிரக்கணக்கான மக்களை கொல்வதிலும் பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்குவதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. எனது ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுக்கு பிரபாகரனை இணங்க வைத்தேன். எனது ஆட்சிக்காலத்தில் புலிகள் வசமிருந்த 70 தொடக்கம் 75 சதவீதமான நிலப் பிரதேசங்கள் மீட்கப்பட்டு விட்டன. தற்போதைய அரசாங்கம் நாங்கள் வாங்கிய ஆயுதங்களைக்கொண்டு மீதமுள்ள நிலப் பகுதிகளையும் மீட்டிருக்கிறது’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

படையினர் அம்பலவான்பொக்கனைப் பகுதியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்

ambalawan-pokkana.jpg
இராணுவத்தின் 58வது படையணியினர் இன்று (பெப்:20) பிற்பகல் அம்பலவான் பொக்கனைப் பகுதியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று காலை எல்ரிரிஈயின் பலமான தளங்களை தகர்த்துக்கொண்டு முன்னேறிய 10வது காலால் படைப்பிரிவினரும் 6வது கெமுனு படைப்பிரிவினரும் இப்பகுதியை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் பயங்கரவாதிகளின் 7 சடலங்களையும் அவர்களின் ரி-56 ரக துப்பாக்கிகளையும் கைபற்றியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினர் புதுக்குடியிருப்பு நகருக்கு வடக்காகவும் தெற்காகவும் தாக்குதல் தொடுத்துக் கொண்டு நகரை நோக்கி முன்னேறி வருகின்றனர் எனவும், அம்பலவானன்பொக்கனைக் கிராமம் சாலைக்களப்பு மேற்கில் களப்பு ஓரத்தில் தனிப்பட்ட கிராமமாகும். இது புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்காக 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவத் தளபதி யாழ். விஜயம்

sarath_f_jaffna.pngஇராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
பலாலி விமான நிலையத்தை நேற்றுக் காலை சென்றடைந்த இராணுவத் தளபதியை யாழ். பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையில் அங்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி, யாழ். கட்டளைத் தளபதி தலைமையிலான உயர் அதிகாரிகள், இராணுவத்தின் 51, 52 மற்றும் 55வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

யாழ். பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அங்குள்ள தற்போதைய நிலைமைகளை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.  யாழ். குடாநாட்டை நோக்கி நாளுக்கு நாள் வருகை தந்துகொண்டிருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான போதிய வசதிகள் செய்து கொடுக்க படையினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இராணுவ உயர் அதிகாரிகள் தளபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 யாழ்ப்பாணத்திற்கு இதுவரை 2000 சிவிலியன்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  படையினரால் விரட்டியடிக்கப்பட்ட புலிகள் யாழ். குடாநாட்டுக்குள் எக்காரணம் கொண்டும் ஊடுருவி அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்காத வண்ணம் தேவையான பாதுகாப்பையும் முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதி இதன்போது அதிகாரிகளை பணித்துள்ளார்.

நீருக்கடியில் ஓடும் மூன்று ஸ்கூட்டர்கள் புதுக்குடியிருப்பில் படையினரால் கண்டெடுப்பு

ltte_underwater_vehicle.pngநீருக்கடியில் ஓடக்கூடிய புலிகளின் மூன்று ஸ்கூட்டர்களை (அண்டர் வோட்டர் ஸ்கூட்டர்கள்) படையினர் நேற்று வன்னியிலிருந்து மீட்டிருப்பதாக 58 ஆம் படையணியின் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

புதுக்குடியிருப்புக்கு வடக்கே தமது நிலைகளைப் பலப்படுத்திவரும் படையினர் அம்பலவன் பொக்கணை என்ற கிராமத்திலிருந்தே நீருக்கடியில் ஓடக் கூடிய மூன்று ஸ்கூட்டர்களுடன் பல பொருட்களையும் மீட்டெடுத்துள்ளனர்.  இந்த ஸ்கூட்டரில் ஒன்று ஒருவர் பயணிக்கக் கூடியது. இன்னுமொன்று இருவர் பயணிக்கக் கூடியது. மற்றையது தேவைக்கேற்ப விரித்து ஒடுக்கக் கூடியது. அதில் மூவரும் பயணிக்கலாம். ஒருவரும் பயணிக்கலாமெனவும் பிரிகேடியர் சவேந் திர சில்வா தெரிவித்தார். புலிகளின் மறைவிடமொன்றிலிருந்து இந்த ஸ்கூட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 58 ஆம் படையினர் இவற்றுடன் 25 ஒட்சிசன் தாங்கிகள், நீருக்கடியில் உபயோகிக்கக் கூடிய இரண்டு தொலைநோக்கி, ஆயுதங்களை வைக்கக்கூடிய ஜக்கற்றுக்கள், சுழியோடிகள் பயன்படுத்தும் 20 அங்கிகள், கடற்புலிகளின் சீருடைகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நேற்றுக் காலை இடம் பெற்ற மோதல்களில் புலிகளின் முக்கியத் தலைவர்களான அன்பு, சுரேஷ் ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்திருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார கூறினார். இவர்கள் புலிகள் இயக்கத்தில் விசேட தேர்ச்சி பெற்றவர்களெனவும் அவர் தெரிவித்தார்.

புலிகள் வைத்திருப்பது கேடயம்- ராணுவம் வைத்திருப்பது கத்தி : விஜயகாந்த்

vijayagath1.jpgஇலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் விஜயகாந்த் பேசியதாவது: 

இலங்கைத்தமிழர் பிரச்சனையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும்  பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகிறது. நம் மக்கள் இலங்கையில் தினம் தினம் செத்து மடிகிறார்கள். அதனால் நமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல. இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சனையில் நாடகமாடி வருகிறார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவோ, ‘ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்’ என்று கூறுகிறார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும். விடுதலைப்புலிகள் வைத்திருப்பது கேடயம்தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கிறது.
 
கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.

அடுத்த நாட்டு பிரச்சனையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சனையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களை பார்த்து தான் இப்போது மற்ற கட்சிகளும் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.

வரும் 24 ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது நம்முடைய போராட்டம் அவர்களுடைய செவிக்கு எட்டும் வகையில் அமைய வேண்டும். இருந்தாலும், தேமுதிக தொண்டர்கள் அனைவரும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சனையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். அதன் பின்னர் அவரது தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு அளித்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை; இரண்டாவது நாளாக இந்திய பாராளுமன்றில் எதிரொலிப்பு

india-parliament.jpgஇலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் (லோகசபை) நேற்று இரண்டாவது நாளாகவும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி சபையை 45 நிமிடங்கள் இடைநிறுத்தி வைத்தார்.

மக்களவை அமர்வு பகல் 11 மணியளவில் ஆரம்பமானது. அச்சமயம் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் மறுப்புத் தெரிவிக்கவே அமளிஏற்பட்டது. இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த பா.ம.க., ம.தி.மு.க. எம்.பி.க்களும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பாரதியஜனதா, பகுஜன்சமாஜக் கட்சி உறுப்பினர்களும் ஆசனங்களை விட்டு எழுந்து சபா மண்டபத்தில் குழுமிநின்று கோஷம் எழுப்பினர். முதலில் உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயற்சிசெய்தார் சபாநாயகர். முடியாமல் போகவே கடுமையாக எச்சரித்துவிட்டு சபையை 12 மணிவரை இடைநிறுத்தி வைத்தார்.

பின்னர், சபை மீண்டும் கூடியபோது, இலங்கைப் பிரச்சினை குறித்து பிரணாப் தாக்கல் செய்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி பா.ம.க. வினர் குரல் எழுப்பினர் பிரணாப் அறிக்கை இலங்கை பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி பிரதீபா பேசியதற்கு அப்படியே எதிர்மறையாக இருப்பதாகவும் கூறினார்கள். மேலும் பிரணாப்பின் அறிக்கை ஒரு தலைப்பட்சமாக இருப்பதாகவும், பெறுப்பற்ற முறையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. பா.ம.க மற்றும் ம.தி.மு.க.வினர் லோக்சபாவுக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

இலங்கை, இந்திய அரசுகளே! தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை நிறுத்து! : தேடகம்

srilanka_displaced_.jpgபல்வேறு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து புலம்பெயர்ந்த தமிழ் அகதிகளால் கனடிய மண்ணில் உருவாக்கப்பட்ட அமைப்பே தமிழர் வகைதுறைவள நிலையமாகும் (தேடகம்).

1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழர் வகைதுறைவள நிலையம், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கான நியாயப்பாட்டை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களால் ஏற்பட்ட பின்னடைவுகளையும் ஆக்க பூர்வமாக விமர்சித்தும் வந்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து மறுத்துவரும் சிங்கள பேரினவாத அரசாங்கங்களின் தொடர்ச்சியான வன்முறை அரசியலை மறுத்து சுமூகமான முறையில் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்துள்ளோம்.

ஆனால் இன்றுவரை பேரினவாத சிங்கள அரசுகளோ தமிழ் மக்களுக்கான ஆரோக்கியமான தீர்வு எதனையும் வெளிப்படையாக வைக்காமல் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் இராணுவத் தீர்வுக்கூடாக கொன்று குவிப்பதிலும் அகதிகளாக்குவதிலும் தான் ஆர்வம் கொண்டு செயற்படுகின்றன. இக்கணம் வரை சிங்களப் பேரினவாதம் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாது தமிழர்களை அழிப்பதிலேயே தீவிரமாக இருந்து வருகிறது.

இந்தியா அரசோ 1983ம் ஆண்டு இலங்கை அரசின் திட்டமிட்டு இனப்படுகொலைக் கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் மக்களின் அடிப்படை அரசியலஅபிலாசைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியினால் பெற்றுத்தர முடியாது எனக்கூறி தமிழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தீவிர ஆயுதமயமாக்கியது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற அரசியலை முடிவுக்குக் கொணர்ந்து ஆயுதப் போராட்டத் தலைமையை இந்திய அரசு முன்தள்ளியது.

தேசிய விடுதலைப் போராட்ட தலைமையை கைப்பற்றுவதற்கான போட்டியில் ஆயுத முறையில் வெற்றிபெற்று பெருன்பான்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகினார்கள்.

இந்தியஅரசு தனக்கு சாதகமான அரசியல் குழுக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் தலைமையில் இல்லையென்ற காரணத்தால் சகோதர படுகொலைகளை ஊக்குவித்தது. இயலாமல் போனபோது இலங்கை அரசிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாகக்கூறி தனது படைகளை அனுப்பி புலிகளுடன் யுத்தம் என்ற போர்வையில் தமிழ் மக்களை கொன்றழித்தது.

இன்று தனது கட்டுப்பாடின்றி சுயாதீன வளர்ச்சியுற்ற விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தனக்கு அச்சுறுத்தலாகக் கருதி இலங்கை பேரினவாத அரசுக்கு முழுமையான இராணுவ ஒத்துழைப்பை நல்கி தமிழ் மக்கள் மீதான இராணுவ ஒடுக்கு முறையை செயற்படுத்த உதவி வருகிறது.

இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவே உலகளாவிய விதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதற்கும், சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த நாடுகள் பின்வாங்குவதற்கு இந்தியாவே பின்னணியிலிருந்தது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான ஆதரவுடன் பணம், தள,  ஆயுத உதவிகளை வழங்கிய இந்திய அரசு இன்று எமது போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

சிங்கள பேரினவாத யுத்தம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரதேசங்கள் யுத்த களமாக்கப்பட்டு தமிழ் மக்களை அவர்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் இன்று கோரி வருகிறது.  அவர்களை பலவந்தமாக வெளியேற்ற கண்மூடித்தனமான தாக்குதல்களையும் தொடர்ந்து வருகின்றது.

சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மீது தனது உக்கிரமான அடக்கு முறையை தொடர்ந்து வருகின்றது.

இன்றைய நிலையில் பெரும்பான்மைத் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும், தமிழர் சுயநிர்ணயத்துக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பின்தள்ளும் நடவடிக்கையாகவே நாம் கருதுகிறோம்.

சிங்கள பேரினவாத அடக்குமுறை தொடரும்வரை இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது தற்பாதுகாப்புக்காகவும் தங்களது அரசியல் எதிர்காலத்திற்காகவும் போராட உரிமையுடையவர்கள்.

சிங்கள பேரினவாதம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது திட்டமிட்ட தமிழர் இன அழிப்பை மிக நேர்த்தியாக தொடர்ந்தே வருகிறது.

இன்று இடம்பெயர்ந்த மக்களை இடைத் தங்கல் முகாம் என்ற போர்வையில் சிறையில் அடைத்து தமிழ் இளையவர்களை பிரித்தெடுத்து படுகொலை செய்தும், இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்கள் சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தாமல் தமிழர் பராம்பரிய நிலங்களில் இராணுவ மயமாக்கல் ஊடாக சிங்கள குடியேற்றத் திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப் படுத்தியதுபோல் வடக்கிலும் ஏற்படுத்த முனைகிறது.

இலங்கை-இந்திய அரசுகள் ஒன்றுபட்டு 1972ல் இலங்கையில் புரட்சி நிகழ்த்த முயன்ற சிங்கள இளைஞர்களை ஆயிரக்கணக்கில் அழித்ததை வரலாற்றில் பார்த்தவர்கள் நாம். இன்று இலங்கை- இந்திய அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இலங்கை தமிழ் மக்களை புலிகளிடமிருந்து காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை கொன்றொழித்து வருகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைமை குறித்த விமர்சனம் எமக்கு இருந்தாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உயிர்நீத்த ஒவ்வொரு போராளியும் எங்கள் உறவுகள். எங்கள் குடும்பத்தினர். ஒரே குடும்பத்திற்குள்ளேயே வேறு இயக்க ஆதரவு இருந்திருக்கிறது. கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன.

எமது முரண்பாடுகளை தீர்க்க அடக்குமுறையாளர்களை துணைக்கு அழைக்க முடியாது.

அன்று உள்முரண்பாடுகளை சாதகமாக்கிய இந்திய அரசு சகோதரப் படுகொலைகளை திட்டமிட்டு உருவாக்கியது. இன்று எம் உள்முரண்பாடுகளை காரணம் காட்டி இராணுவமயமாக்கல் ஊடாக தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களை உருவாக்கி தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க நினைக்கும் இலங்கை இந்திய அரசுகளின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காமல் ஈழத் தமிழர் ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடும் இந்திய தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் நாமும் கரம் கோர்க்கின்றோம்.

சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான அடக்குமுறையின் எதிர் வெளிப்பாடே தமிழீழ விடுதலைப் புலிகள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதம் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாமல் தனது அடக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் புலிகளை அழிப்பதென்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தமிழர்களது எதிர்கால இருப்பையும் அழிக்கும் நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.

இலங்கை அரசே! தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து

இலங்கை அரசே! தமிழ் மக்களை சொந்த மண்ணிலேயே அகதி முகாமுக்குள் அடைப்பதை நிறுத்து

இலங்கை அரசே! தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் நிரந்தர தீர்வை பகிரங்கமாகவை

இந்திய அரசே! புலிகள் மீதான யுத்தம் தமிழ் மக்களின் மீதான யுத்தமே. இலங்கை அரசுக்கான இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்து.

கனடிய அரசே! தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு.

கனடிய அரசே! இலங்கையில் நடந்துவரும் தமிழின அழிப்பை கண்டித்து ஐ. நா சபையூடாக அகதிகளை பராமரிக்கவும், மீள் குடியேற்றவும், மனித உரிமைகளை கண்காணிக்கவுமான ஒழுங்குமுறையை உடனடியாக செய்.

கனடிய அரசே! ஐ.நா சாசனத்தின்படி சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் பூரண சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தரக்கூடிய அரசியல் வழிமுறைகளைச் செய்.

உலக நாடுகளே! இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி

– தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)-
ரொரன்டோ,
கனடா