March

March

வணங்கா மண் 27ம் திகதி தாயகம் நோக்கிய பயணம்

Vanni_Missionவணங்கா மண் கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி இலண்டனில் இருந்து தாயகம் நோக்கிப் புறப்படுமென்று வணங்கா மண் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம்திகதி  அளவில் இக்கப்பல் முல்லைத்தீவிற்கு கிழக்கான கடல் எல்லையை அடையுமென எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மக்களுக்கான பொருள் சேகரிப்பு பெரும் எழுச்சியாக இலண்டனில் நடைபெற்று வருகின்றது. பெருமளவு மக்கள் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். வணங்கா மண் கப்பலில் மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு யானைத் தந்தங்கள் அன்பளிப்பு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரு யானைத் தந்தங்களை சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக இன்று அன்பளிப்பாக வழங்கினார்.

ஜனாதிபதி மாளிகையில் அலங்காரப் பொருளாக வைக்கும் நோக்குடனேயே இந்த அன்பளிப்பு இன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் கொழும்பு மாவட்ட மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கமன்பில மற்றும் கம்பஹ மாவட்ட வேட்பாளர் கே.எஸ்.ஜி.பி.கொடகதெனிய ஆகியோரும் கலந்துகொண்டனர்

நமக்காக நாம் நிதியத்துக்கு மூவின வர்த்தகர்கள் 45 மில்லியன் ரூபா அன்பளிப்பு!

fund_donated.jpgபடை வீரர்களின் நலன் கருதி பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நமக்காக நாம் எனும் நிதியத்துக்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் உள்ளடக்கிய 35 வர்த்தகர்கள் 45 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த நிதி கையளிக்கப்பட்டது.

தொழில் உறவுகள், மனிதவலு அமைச்சின் செயலாளர் மஹிந்த மத்திஹேஹெவவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நன்கொடை அன்பளிப்பு வைபவத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொட்டு அம்மானின் பாதுகாப்பு வீடு படையினர்வசம்

pottu_amman-house.pngஎல்.ரீ.ரீ.ஈ. உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் பயன்படுத்திய பாதுகாப்பு வீடு படையினரால்  நேற்றுக் கைபற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் தேடப்பட்டுவருபவர்களான  பொட்டுஅம்மான் மற்றும் கபில் அம்மான் ஆகிய இருவரும் இந்த வீட்டை பயங்கரவாத திட்டங்கள் தீட்ட பயன்படுத்தியுள்ளனர் என படையினர் தெரிவிக்கின்றனர்.

பொட்டு அம்மானினால் பாவிக்கப்பட்டதாக நம்பப் படும் ஜீப்வன்டி ஒன்று மற்றும் பெருந் தொகையான மிதிவெடிகள் என்பனவற்றை படையினர் இப்பிரதேசத்தில் மேற்கொண்ட  தேடுதலின்போது  கண்டுபிடித்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

ஐரோப்பிய ஆணைக்குழு பிரதிநிதிகள் அகதி முகாம்களுக்கு விஜயம்

lankadisplaced.jpgஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் இடம்பெயர் மக்களையும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகளையும் குறித்த குழுவினர் நேரில் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஆணைக்குழு உறுப்பினர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து இடம்பெயர் மக்களது நிலைமை குறித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் ஊடாக ஐரோப்பிய ஆணைக்குழு இடம்பெயர் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பின்லேடன், முல்லாஒமர் ஆப்கானில் 20 ச.கி.மீ.பரப்புக்குள் சிக்கியிருந்தால் அமெரிக்கப்படை என்ன செய்யும்?

dalas_alahapperuma.jpgஆப் கானிஸ்தானில் அல்ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் தலிபான் தலைவர் முல்லா ஒமர் போன்றோர் சுமார் 20 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் சிக்குண்டிருப்பது உறுதியானால் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நேச நாட்டு படைகளின் நடவடிக்கை எப்படியானதாக இருக்குமென சர்வதேச சமூகத்திடம் கேள்வி எழுப்பியிருக்கும் இலங்கை அரசாங்கம் ஏனெனில் அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இன்று பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் சிக்குண்டு இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது.

கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“பாதுகாப்புப் படையினருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச அண்மையில் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நிலையில் சர்வதேச சமூகத்திடம் கேட்க எமக்கு கேள்வியொன்று இருக்கிறது. அதாவது விடுதலைப் புலிகள் இன்று சுமார் 20 கிலோமீற்றர் பரப்பிற்குள் சிக்குண்டிருக்கின்றனர். பிரபாகரன், பொட்டு அம்மான் போன்ற புலிகள் முக்கிய தலைவர்களும் இந்தப் பரப்பிற்குள் தான் இருக்கின்றனர்.

500,700 மீற்றர் தூரத்தில் அவர்களின் (புலிகளின்) நடமாட்டங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே, அல்ஹைடாவுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கப் படையினருக்கு பின்லேடன் 20 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் சிக்குண்டிருப்பது நிச்சயமாக தெரிந்திருந்தால் அந்த படையினர் எப்படி செயற்படுவார்கள்?

அதேபோல், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட அமெரிக்க நேசநாட்டுப் படையினர் கந்தகாரில் ஒளிந்திருக்கும் தலிபான் இயக்கத் தலைவர் முல்லா ஒமர் உள்ளிட்ட அவ்வியக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தலிபான் தலைவர் 20 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் படையினர் எப்படிச் செயற்படுவார்கள் என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

இது முக்கிய பிரச்சினை. இலங்கைப் படையினர் பொதுமக்களுக்குப் பிரச்சினையின்றி பயங்கரவாதிகளை அழித்தொழிக்கவே முயற்சித்து வருகின்றனர். இது கஷ்டமான வேலை. புலிகளால் பொதுமக்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அம்மக்களை பாதிப்பின்றி மீட்பதானது முட்களில் விழுந்த சேலையை எடுப்பது போன்ற கஷ்டமான பணியாகும்.  எவ்வாறாயினும் இலங்கைப் படையினர் ஒழுக்கத்துடனும், மனிதாபிமானத்துடனும் செயற்பட்டு வருவதை தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு நிவாரண உதவி

160309.jpgமோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைதரும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கவென கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் “வடக்கு உறவு பயணம் செல்வோம்’ என்னும் தொனிப்பொருளில் சேகரிக்கப்பட்ட ஒருதொகை உணவு மற்றும் உடுதுணிகளை மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் வைத்து கையளித்தது.

இந்த பொதிகளில் பால்மா, உடுதுணிகள், உலர் உணவு, மருந்துவகைகள் மற்றும் பாட சாலை உபகரணங்கள் என்பன உள்ளடங்குகின்றன. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக உப வேந்தர் என்.எல்.ஏ.கருணாரத்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இங்கு கருத்துரைத்த மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன்;

உடைந்து சிதறிப் போயிருந்த இலங்கையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முயற்சியினால் முழு இலங்கையாக உருவாக்கமுடிந்துள்ளது. இதற்கு முன்னுதாரணமாக தற்போது அமைச்சுப் பதவியினை ஏற்றிருக்கும் அமைச்சர் கருணா அம்மான், கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் என்னும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து அரசியல் பிரவாகத்துக்குள் வந்துள்ளனர்.

கடந்த 20 வருட காலமாக கவனிப்பாரற்றிருந்த நிலங்கள் இன்று விவசாயம் செய்யும் நிலங்களாக மாறியுள்ளன. அதேபோல், வடக்கிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் வெகு விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது. கல்விச் சமூகம் பாதிக்கப்படுகின்ற சமூகங்களுக்கு உதவி செய்ய முன்வருகின்ற போது அது இந்த இலங்கை வாழ் மக்களின் உயர் குணத்தை பறைசாற்றும் ஒன்றாகும் ‘ என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஹால்தீன், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பணிப்பாளர் சரத் பெரேரா, பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.அபயசேகர உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தியப் பிரதமரின் பிரதம செயலாளர் இன்று இலங்கை விஜயம்

nayar.jpgஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரதம செயலாளர் டீ.கே.ஏ. நாயர் இன்று இலங்கை வரவுள்ளதாக இணைய தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பை ஏற்றே அவர் இங்கு வரவுள்ளார் எனவும் இலங்கை- இந்தியாவுக்கிடையிலான அபிவிருத்தி, பொருளாதாரம் தொடர்பாகவே இவரது விஜயத்தின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

விமானப்படையினரின் ஹெலிகொப்டர்கள் இரண்டின் மீது புலிகள் தாக்குதல்

bell80.jpgபுதுக் குடியிருப்பில் மோதல்களில் காயமடைந்தவர்களை அழைத்துச்செல்ல வந்த இரண்டு பெல் 212 ரக  ஹெலிகொப்டர்கள் மீது விடுதலை புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு  ஹெலிகொப்டர்கள்  விமானிகளினதும் பொறியிலாளர்களின் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறக்கப் பட்டதாகவும் இதன்போது ஹெலிகொப்டர்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகள் இவ்விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்தே மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

அமைச்சர் அமீர் அலியின் ஊடக செயலாளர் மீது தாக்குதல்

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஊடகச் செயலாளர் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு ஓட்டமாவடியில் பொலிஸார் கடும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை இரவு 10.15 மணியளவில் ஓட்டமாவடியில் தனது தாயாரின் வீட்டோடு இணைந்துள்ள தனது கடையிலிருந்த போதே அங்கு வந்த வாழைச்சேனை பொலிஸார் இவரைக் கடுமையாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான அமைச்சரின் ஊடகச் செயலாளர் எம்.எஸ்.ஏ.எம்.அஜ்வத் அலி கூறுகையில்;

நாங்கள் கடையிலிருந்த போது அங்கு வந்த பொலிஸார் அடையாள அட்டைகளை காட்டுமாறு கேட்டனர். எனது பெயரைக் கேட்டனர். அவர்கள் கடுமையாக நடந்து கொண்டனர். அமைதியாக இருக்குமாறு கூறவே பொலிஸாரில் ஒருவர் என்னைத் தாக்கினார். மற்றொரு கான்ஸ்டபிளும் தாக்க முற்பட்டார்.

எனது தேசிய அடையாள அட்டையையும் அமைச்சின் அடையாள அட்டையை காண்பித்து என்னை அறிமுகப்படுத்தினேன். அதனைப் பொருட்படுத்தாத அவர்கள் என்னை பொலிஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினேன். முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார். பொலிஸாரின் தாக்குதலால் காயமடைந்ததால் பின்னர் வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.