March

March

பேதங்கள் இல்லாத இலங்கையை உருவாக்க இணைந்து செயற்படுவோம் – பசில் ராஜபக்ஷ

ameerali.jpgவடக்குத் தெற்கு என்றோ கிழக்கு மேற்கு என்றோ சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் என்றோ பேதங்கள் இல்லாமல் வாழக்கூடிய ஒரு இலங்கையை உருவாக்குவதற்கு அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையில் அண்மையில் வாழைச்சேனையில் இடம்பெற்ற மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்; எமது நாட்டின் பிரதான வளங்களில் ஒன்றாக கடல் வளத்தை எமது ஜனாதிபதி அடையாளங் காட்டியுள்ளார். நமது நாடு சகல வளங்களையும் கொண்டது. நமது நாட்டைச் சுற்றிவர கடல்வளம் உள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவ்வாறான மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகிறோம்.

நீண்டகாலமாக பயங்கரவாத பிரச்சினைகளால் பயிர் செய்யப்படாத காணிகளில் இன்று கிழக்கில் விவசாயம் செய்யப்படுகிறது. கிழக்கில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த வாய்ப்பு விரைவில் வடபகுதி மக்களுக்கும் கிடைக்கும். இந்த சுதந்திரத்தை மீண்டும் நமக்கு வழங்குவதற்காக தமது, இன்று உயிரைத் தியாகம் செய்த படையினரை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர்களால் தான் இன்று வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

அடுத்தபடியாக உங்களது பிரதேச அமைச்சர் அமீர் அலியின் முயற்சியை நான் குறிப்பிட்டாக வேண்டும். வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு எத்தனை கற்கள் கொண்டு கட்டப்படவுள்ளதோ அத்தனை கற்களையும் விட அதிகமான முறை என்னிடம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தைப் பற்றிப் பேசியுள்ளார். பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அவரது முயற்சி பாராட்டத்தக்கது. நமது முயற்சிகளுக்குத் தடையாக சர்வதேச வலைப்பின்னல்களில் அகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது வழியில் சென்றுவிட வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்

ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் மூவரையும் தெரிவு செய்து எமது கரங்களை பலப்படுத்துங்கள் – மனோ எம்.பி.

election_ballot_.jpgஐக்கிய தேசியக் கூட்டணியில் போட்டியிடும் எமது பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகிய எமது மூன்று வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்வதன் மூலம் மேல் மாகாணத்தில் எமது கட்சியினதும், தலைநகர தமிழ் மக்களினதும் சக்தியை முழு நாட்டிற்கும் நாம் வெளிப்படுத்த வேண்டும். மலையகத்திலே நாம் முதன் முறையாகப் பெற்றுள்ள வெற்றி தலைநகரிலே பலமடங்காக எதிரொலிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தலைநகரத்திலே தமிழ் மக்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி தவிக்கும் வேளையில் எமது மக்களுக்காகக் குரல் கொடுத்து போராடுவது எமது கட்சியே. அன்று முதல் இன்றுவரை அணிமாறாமல் கொள்கை வழி நின்று தலைநகர தமிழ் மக்களுக்கு காவலர்களாகப் பணியாற்றுவது எமது கட்சியே. அச்சுறுத்தல்களுக்கும் பதவிகளுக்கும் தலைவணங்காது நிமிர்ந்து நிற்பது எமது கட்சியே. எமது இந்த நேர்மையான செயற்பாடு தலைநகரிற்கு வெளியே மலையகத்திலும் வட, கிழக்கிலும் எதிரொலிக்கின்றது.

இந்நிலையில் தலைநகர தமிழ் வாக்காளர்கள் கொழும்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எமது மூன்று வேட்பாளர்களுக்கும் பெருவாரியாக வாக்களித்து அவர்களை வெற்றி பெறச்செய்து எனது கரங்களைப் பலப்படுத்தவேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொழும்பு மாவட்டத்திலே வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தேர்தல் தினத்தன்று கட்டாயமாக வாக்களிக்கவேண்டும். வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் எமது கூட்டணி சின்னமான யானை சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். யானைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் தமது மூன்று விருப்பு வாக்குகளையும் எமது மூன்று வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும். இதன் மூலமே தலைநகரத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்திலே தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை எமது கட்சியால் உருவாக்க முடியும்.

கொழும்பிலே வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், வட, கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்கள் மற்றும் கொழும்பை பிறப்பிடமாக கொண்ட தமிழ் மக்கள், தமிழை தமது தாய்மொழியாகப் பேசிவரும் மலையாள, தெலுங்கு வம்சாவளி மக்கள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும். நாம் பெறப்போகும் வெற்றி தலைநகர வரலாற்றிலே பாரிய சாதனையாக அமைய வேண்டும். இதுவே கொழும்பு மாவட்டத்தில் நாம் இதுவரையில் செய்துவந்துள்ள பணிகளுக்கும், நாம் எடுத்துள்ள நிலைப்பாடுகளுக்கும் தமிழ் மக்கள் தரக்கூடிய விருதாகும். எமது வேட்பாளர்களின் வெற்றி எனது வெற்றியாகும். எனது வெற்றி ஒட்டுமொத்த தலைநகர தமிழர்களின் வெற்றியாகும்

இழப்பதற்கு நேரமில்லை. உடனடியாகச் செயற்பட வேண்டும் – There is no time to lose : த ஜெயபாலன்

John_Holmes_UNஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காது போயின. நேற்று (பெப்ரவரி 27)ல் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு Under-Secretary-General for Humanitarian Affairs ஜோன் ஹொல்ம்ஸ் தனது இலங்கை விஜயம் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தினார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த அழுத்தங்கள் வழங்கப்பட்ட போதும் பாதுகாப்பு கவுன்சில், சிறு நிலப்பரப்பிற்குள் சிக்குண்டுள்ள மக்களின் பாதுகாப்புப் பற்றியே கவலை கொண்டுள்ளதாக தங்கள் கரிசனையை வெளிப்படுத்திக் கொண்டதுடன் தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். பாதுகாப்பு கவுன்சிலின் மூடிய அறைக்குள் இடம்பெற்ற ஜோன் ஹொல்ம்ஸ் உடனான சந்திப்பு இலங்கை அரசுக்கு சாதகமானதாகவே அமைந்து உள்ளது. http://www.un.org/apps/news/story.asp?NewsID=30046&Cr=sri+lanka&Cr1=

அங்கு ‘There is no time to lose.’ என்று ஜோன் ஹொல்ம்ஸ் சரியாகவே சுட்டிக்காட்டிய போதும் யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் அவலத்தை மட்டுப்படுத்த உருப்படியான ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இந்த பாதுகாப்பு கவுன்சிலின் சந்திப்பில் அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலந்துகொள்ளவில்லை. ரஸ்யப் பிரதிநிதி ‘இது ஒரு தடவையே கேட்கப்படும்’ என்று தெரிவித்து உள்ளார். பிரித்தானியா அழுத்தங்கள் எதனையும் வழங்கவில்லை. இச்சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்பு கவுன்சிலின் இம்மாதத் தலைமை ஏற்றுள்ள ஜப்பானியத் தூதுவர் யுக்கியோ ரக்காசு பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகக் கூறி உள்ளார்.

இதற்கிடையே இன்று (பெப்ரவரி 28) இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி இலங்கை அரசு எல்ரிரிஈ இன் யுத்த நிறுத்த அழைப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவிடம் இருந்து வந்துள்ள இந்த வேண்டுகோள் அரசியல் பலமுடையதா அல்லது சர்வதேச கண்டனங்களுக்காக விடுக்கப்பட்ட கண்துடைப்பு வேண்டுகோளா என்பது இன்னும் சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் தெரியவரலாம்.

இந்த அரசியல் சதுரங்கத்தினிடையே வன்னியில் நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசம் 14 சதுர கிலோ மீற்றர்களாக குறுகியுள்ளது. இந்த 14 சதுர கி.மீ பரப்பளவில் 300 000 மக்கள் உள்ளதாக புலிகள் தெரிவிக்கின்றனர். 200 000 மக்கள் இங்கு சிக்குண்டு உள்ளதாக யூஎன் மற்றும் சர்வதேச அமைப்புகள் குறிப்பிடுகின்றன. 70 000 மக்களே அங்கு சிக்குண்டு உள்ளதாக இலங்கை இந்திய அரசுகள் தெரிவிக்கின்றன.

யுத்தத்திற்கு முன்னான வன்னி மக்களின் சனத்தொகைப் பரம்பலுடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதாக அமையும். வட மாகாணத்தின் யாழ் மாவட்டம் தவிர்ந்த வவுனியா மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி பெருநிலப்பரப்பும் அதன் சனத்தொகைப் பரம்பலும் வருமாறு. மன்னார் – 100 000 (1 996 சதுர கி.மீ) கிளிநொச்சி – 142 000 (1 279 சதுர கி.மீ) முல்லைத்தீவு – 145 000 (2 617 சதுர கி.மீ) வவுனியா – 164 000 (1 967 சதுர கி.மீ). மொத்த வன்னி நிலப்பரப்பு 7 859 சதுர கி.மீ. வன்னியின் மொத்த மக்கள் தொகை – 551 000. (மூலம்: Department of Census and Statistics, Sri Lanka (web) – 2006).

இன்று 2 617 சதுர கி.மீ பரப்பளவுடைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வெறும் 14 சதுர கி.மீ பரப்பளவிலேயே கிளிநொச்சி (சனத்தொகை 142 000) – முல்லைத்தீவு (சனத்தொகை 145 000) மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இந்த மரணப் பொறிக்குள் சிக்குண்ட மக்களின் அவலம்  தாங்கொண்ணாதது.

”53 வயதானவருடைய குடும்பம் ஒரு நாள் முழுவதையும் சாப்பாடு தண்ணீர் இன்றி பங்கரில் கழித்தது. பசியின் கொடுமையிலும் தாகத்தின் தவிப்பிலும் செல்கள் வந்துவிழுவதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பங்கரை விட்டு வெளியே வந்து சாப்பாட்டைத் தேடிய போது 15 பேருள்ள குடும்பத்தில் மூவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.  அவருடைய மகள் மோசமான பாயத்திற்கு உள்ளாகி வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடைய சில உறவுகள் வன்னியிலேயே தங்க வேண்டியதாகி விட்டது. அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்பதும் இந்த வயதானவருக்குத் தெரியாது. இது ஒரு உதாரணமே. பலரும் இவ்வாறான சொந்த சோகக் கதைகளுடனேயே இருக்கின்றனர்.”
Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF) / Feb 26, 2009 : http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3440&cat=field-news&ref=home-center

”மருத்தவமனையில் சிறுவர்கள் துணையின்றி உள்ளனர். அவர்கள் வீரிட்டு அம்மாவைத் தேடி அழுகின்றனர். வயதானவர்களும் துணையின்றி உள்ளனர். சிலருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு அவயவங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. அல்லது மிகவும் மோசமாக கூர்மையாக வெட்டப்பட்டு உள்ளது. யுத்த பிராந்தியத்தில் இருந்து தப்பி தஞ்சம் கேட்க முற்படும் 10 பேரில் ஆறு பேர் கொல்லப்படுகின்றனர்.”
Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF) / Feb 13, 2009 : http://www.doctorswithoutborders.org/news/article.cfm?id=3403&cat=field-news&ref=related-sidebar

பிரான்ஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடந்த இரு வாரங்களில் யுத்தப் பகுதியில் இருந்து வந்த காயப்பட்ட மக்களுக்கு 300 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு உள்ளதாகவும் இது உருகும் பனிப்பாறையின் ஒரு சிறு பகுதியே எனவும் தெரிவிக்கின்றனர். ஏனைய மனிதாபிமான அமைப்புகள் போன்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினரும் வன்னிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தனர். தற்போது இவர்கள் யுத்த பிராந்தியத்தின் எல்லையாக உள்ள வவுனியாவில் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அண்மைய வாரங்களில் 35000 பேர் வரை யுத்தப் பகுதிகளில் இருந்து தப்பித்து வந்துள்ளனர். இவர்களிலும் நோயாளிகள் காயப்பட்டோர் அடங்குகின்றனர். மேலும் 2000 நோயாளிகள் காயப்பட்டோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இந்தக் காயங்கள் சில வாரங்களாக சிகிச்சையளிக்கப்படாததால் தொற்று ஏற்பட்டு நிலைமையை மேலும் மோசமாக்கியும் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் அவயவங்களைத் துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது யுத்த பிராந்தியத்தின் அயலில் உள்ள திருகோணமலை வவுனியா மருத்துவமனைகள் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட்டு இருப்பதுடன் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாத அளவுக்கு திணறிக் கொண்டிருப்பதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

இவ்வாறு மனித அவலங்கள் மிக மோசமாகிக் கொண்டு உள்ளது. செல் வீச்சில் கொல்லப்பட்ட தனது தந்தையின் சிதறிய உடலை பதினாறுவயதுப் பையன் பையினுள் அள்ளிச் சென்றதாகவும் உடல்கள் வீதிகளில் அனாதரவாக கிடப்பதாகவும் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசு சர்வதேச செய்தியாளர்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் யுத்தப் பகுதிக்குள் அனுமதிக்காத போதும் தகவல் தொடர்பின் வளர்ச்சியும் மின்னியல் ஊடகங்களின் வளர்ச்சியும் ஓரளவுக்காவது தகவல்களை வெளியே கொண்டு வருகின்றன. இந்த அவலங்களை புலிகளின் சார்பு ஊடகங்கள் வெளிக் கொணருவதில் அவர்களுக்கு வேறு அரசியல் நோக்கங்கள் இருந்த போதும் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்கின்ற உண்மை ஓரளவுக்கேனும் வெளியே கொண்டு வரப்பட்டதில் அந்த ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

வன்னி யுத்தமானது மனித நாகரிகத்தின் அனைத்து பண்புகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுள்ளது. நவீன ஆயுதங்களுடன் நடத்தப்படும் காட்டுமிராண்டித் தனமான யுத்தத்தில் அவலங்கள் அரசியலாக்கப்படுகிறது. தமிழ் மக்களின் அவலத்தின் மீது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொள்ளும் இராணுவ வெற்றி சிங்கள மக்களின் வெற்றியாக கற்பிதப்படுத்தப்படுகிறது. தனது குழந்தைக்கு பால் மா வாங்கப் பணமில்லாத ஏழைத் தொழிலாளிக்கு ஜனாதிபதி ரம்போவாகவும் பிரபாகரனை வில்லனாக்கியும் பிலிம் காட்டுகிறார்.

‘உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை துரத்தினனாங்கள்’ ‘மோட்டுச் சிங்களவனுக்கு பாடம் படிப்பிக்கிறோம்’ என்று மாவிலாற்றில் ஆரம்பித்த புலிகளின் இராணுவ அணுகுமுறை அவர்களுக்கே வினையாக வந்த நிற்கிறது. பொங்கு தமிழ் வைத்து யுத்தத்திற்கு அறைகூவிய புலம்பெயர் தொப்புள் கொடிகள் இன்றைக்கு யுத்தத்தை நிறுத்தச் சொல்லி பேச்சுவார்த்தைக்கு அழைக்கச் சொல்லி ஆயிரம் பத்தாயிரம் நூறாயிரம் என்று திரண்டு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவில்லை என புலம்புகின்றனர்.

மறுதலையாக யுத்தத்தை நிறுத்தினால் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுவார்கள். வலியோடு வலியாக புலிகளை அழித்துவிட்டு மற்றையவை பற்றிச் சிந்திப்போம் என்று புலியெதிர்ப்பு ஜனநாயகம் புலம்புகிறது. நண்பர் சேனன் இதனை சரியாகவே தனது கட்டுரையில் சுட்டிக்காட்டி உள்ளார். வன்னியில் எஞ்சியவர்கள் பெரும்பான்மையினர் தலித்துக்கள் என்றும் களத்தில் போராடுபவர்களும், தலித்துக்கள் என்றும் மாநாடுகளில் ஓங்கி ஒலித்த குரல்களை இப்போது கேட்க முடியவில்லை. அவர்களும் புலி எதிர்பு ஜனநாயகத்தினுள் மூழ்கிவிட்டனர்.

சமூக ரிதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். இன்று வன்னியில் சிக்குண்டவர்களில் மிகப் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களே. வே பிரபாகரன் என்ற அரசியல் தலைமையின் முடிவுகளுக்காக வன்னி மக்களையும் போராளிகளையும் பலி எடுக்கும் இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். அதற்காக பெப்ரவரி 27 மற்றும் 13ம் திகதிகளில் யுத்தத்தை நிறுத்தி நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிகையின் அடிப்படையில் Forum for Peace, Democracy and Permanent Political Solution என்ற அமைப்பு பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்னால் கண்டணப் போராட்டங்களை நடத்தியது. இன்னும் நடத்த உள்ளது.

இதனை மாற்றுக் கருத்துத் தளத்தில் உள்ளவர்களே மேற்கொண்டும் இருந்தனர். ஆனாலும் நடைபெற்ற போராட்டங்களில் ‘மாற்றுக் கருத்து’ப் புலியெதிர்ப்பாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. யுத்தத்தை நிறுத்தினால் புலிகள் மீண்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்று புலியெதிர்ப்பு அணியும் மக்களை வெளியேற்றச் சொல்வதால் புலிகளை அழிக்க முற்படுகிறீர்கள் என்று புலி அதரவு அணியும் இந்தக் கண்டணப் போராட்டத்தை எதிர்த்ததாக ஏற்பாட்டாளர் மனவருத்தத்துடன் தெரிவித்தார். ‘இன்றைக்கு உள்ள நிலையிலும் இவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றால் இவர்கள் என்ன ஜனநாயகம் பேசுகின்றனர்’ என்றும் அவர் நொந்துகொண்டார்.

சர்வதேச நாட்டு அரசுகள் முதல் சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவு – ஜனநாயக அமைப்புகள் வரை தங்களுடைய அரசியல் பின்னணி மற்றும் அரசியல் நலனில் நின்றே வன்னி மக்களின் அவலத்தை பார்க்கின்றனர். இவர்களுக்கு பசிக்கொடுமை ஏற்படுவதில்லை. தண்ணீர்த் தாகம் இல்லை, இவர்களுக்கு அருகில் செல் வந்து வீழ்வதில்லை. இவர்களுக்கு மரண பயம் இல்லை. அதனால் புலத்தில் உள்ள புலி அதரவாளர்கள் தமிழ் மானம் பற்றியும் தன் மானம் பற்றியும் தமிழீழம் பற்றியும் ‘நெஞ்சுரத்துடன்’ பேசுவார்கள்.

அதேபோல் புலத்தில் உள்ள புலிஎதிர்ப்பாளர்களும் இந்த அரசினை நம்ப முடியாது என்று தெரிந்தாலும் யுத்தத்தின் அவசியத்தையும் புலிகள் அழிக்கப்படுவதன் அவசியத்தையும் மிகவும் ‘உறுதியுடனும் தெளிவாகவும்’ பேசுவார்கள். ஏனெனில் இவர்களுக்கும் பசிக்கொடுமை ஏற்படுவதில்லை. தண்ணீர்த் தாகம் இல்லை, இவர்களுக்கு அருகில் செல் வந்து வீழ்வதில்லை. இவர்களுக்கு மரண பயம் இல்லை.

வன்னியில் நடப்பது ஒன்றும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான யுத்தம் அல்ல. நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான யுத்தமல்ல. சரிகளையும் தவறுகளையும் வேறு பிரித்தது ஆராய முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலான கூர்மையான அரசியல் முரண்பாடு உடையவர்களுக்கிடையே நடைபெறுகின்ற ஈவிரக்கமற்ற யுத்தம். இந்த யுத்தத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர்களின் பெயரிலேயே நடைபெறுகின்றது. அந்த மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்படுகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய அரசியல் நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும்.

நேற்று (பெப்ரவரி 27) பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை நிலைமை பற்றி எடுத்தக் கூறிய ஜோன் ஹொல்ம்ஸ், ‘எல்ரிரிஈ வன்னி மக்களின் நடமாட்டத்தை இப்பவும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கட்டுப்படுத்தி உள்ளதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சிறு சிறு குழுக்களாக வெளியேறுபவர்கள் மீதும் எல்ரிரிஈ துப்பாக்கிப் பிரயோகம் செய்து உள்ளதாகவும்’ அவர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கம் பற்றிக் குறிப்பிடுகையில் மென்போக்கை கொண்டிருந்த ஜோன் ஹொல்ம்ஸ் பெருமளவான பொது மக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கத்தின் தாக்குதல்கள் காரணமாக இருந்தது பற்றி அழுத்தமாக எதனையும் குறிப்பிடவில்லை. பொது மக்களின் உயிரிழப்புகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் எதனையும் வழங்கவில்லை.

‘பொது மக்கள் பாதுகாப்பாக அப்பிரதேசங்களில் இருந்த வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும்’ என்ற மென்மையான வேண்டுகோளே விடுக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு சண்டையை சற்று நிறுத்தி வைக்கலாம் அல்லது பாதுகாப்பாக மக்கள் வெளியேறுவதற்கான வழி ஒன்றை ஏற்படுத்தலாம் என்றளவில் சில ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

சர்வதேசமே அவதானித்துக் கொண்டிருக்க பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், புலியழிப்பு யுத்தம் என்ற பெயர்களில் தமிழ் மக்கள் வகைதொயின்றிக் கொல்லப்படுகின்றனர். இக்கொலைகள் பற்றி பல்வேறு தரப்பினரும் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தினாலும் அந்த மக்களின் நலனின் அடிப்படையில் இருந்து குரல் கொடுப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே உள்ளனர்.

புலம்பெயர்ந்த புலி அதரவாளர்கள் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோருகின்ற அதேநேரம் வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்கும்படி புலிகளுக்கு அழுத்தங்கள் எதனையும் கொடுக்கவில்லை. வெளியெறுகின்ற மக்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்காதது மட்டுமல்ல, அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே இருட்டடிப்புச் செய்ய முற்படுகின்றனர். இலங்கை அரசினால் கொல்லப்பட்டவர்களிலும் பார்க்க புலிகளால் கொல்லப்பட்டவர்கள் மிக மிகச் சிலரே. ஆயினும் எந்த மக்களுக்காகப் போராடுவதாகக் கூறினார்களோ அந்த மக்கள் மீதே ஒடுக்குமுறையையும் துப்பாக்கியையும் பயன்படுத்துவது அடிப்படைத் தவறு. புலிகளுடைய புலம்பெயர்ந்து வாழ்பவர்களுடைய அரசியல் நலன்களுக்கு அப்பால் மரணப் பொறிக்குள் உள்ள மக்களை காப்பாற்றுவதனை இலக்காகக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் முடக்கி விடப்பட வேண்டும்.

பாதுகாப்பு கவுன்சிலில் ஜோன் ஹொல்ம்ஸ் உறுப்பு நாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கையில் ‘எல்ரிரிஈ யின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள், மக்களை வெளியேற அனுமதிக்கும்படி எல்ரிரிஈ க்கு அழுத்தம் கொடுக்கும்படி’ கேட்டுக்கொண்டு உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இழப்பதற்கு நேரமில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள ‘ஜனநாயகவாதிகள்’, ‘மாற்றுக் கருத்தாளர்கள்’, ‘மறுத்தோடிகள்’, ‘முற்போக்காளர்கள்’ அனைவரும் இன்று சர்வதேச ஏகாதிபத்தியங்களின் பாதுகாப்புச் சபை எடுக்கும் அதே நிலைப்பாட்டுக்கே வருகின்றனர். இன்றைய யுத்தத்திற்கு மௌனமாக ஆதரவு வழங்குவதன் மூலம் வன்னி மக்களின் படுகொலைகளையும் மௌனமாக அங்கிகரிக்கின்றனர்.
 
இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மிகக் குறைந்த இழப்புகளுடன் மேற்கொண்டிருக்க முடியும். இன்றும் இலங்கை அரசினால் வன்னியில் நடைபெறும் மனித அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இந்திய அரசும் சர்வதேசமும் கூட இலங்கையை அதற்கு வற்புறுத்தி இருக்க முடியும். ஆனால் இலங்கை அரசு தனது வெற்றியை நிலைநாட்டுவதில் காட்டும் அக்கறையை தமிழ் மக்களின் உயிர்கள் பற்றிக் கவலைப்படவில்லை என்பதே யதார்த்தம். சர்வதேசத்தைப் பொறுத்தவரை இலங்கை ஒரு கேந்திர முக்கியத்தவமான புவியியல் மையத்தில் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பிராந்திய வல்லரசான தனக்கு சவால் விடப்பட்டதற்கு பழிவாங்குகிறது மேலும் இந்தியாவுடைய நலன் இலங்கை அரசு சார்ந்து இருப்பதிலேயே தங்கி உள்ளது. இன்று புலிகளின் (வே பிரபாகரனின்) அரசியல் வறுமைக்கும் அரசியல் தவறுகளுக்கும் குறுகிய இராணுவக் கண்ணோட்டத்திற்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் போராளிகளும் மிகப் பெரும் விலையைச் செலுத்துகின்றனர்.

ஆனால் இலங்கை அரசையும் சர்வதேச சமூகத்தையும் பொறுத்தவரை புலிகள் பயங்கரவாதிகள் என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்துள்ளனர். அப்படியானால் சட்ட ரீதியான அரசுதான் அந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டிய முழுப்பொறுப்பையும் உடையது. அதனைத் தட்டிக்கழிப்பதன் மூலம் இலங்கை அரசும் புலி எதிர்ப்பு அணியும் மறுதலையாக புலிகளைப் பலப்படுத்துகின்றனர். இந்த நச்சுச் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காத வரை அண்மைக் காலத்தில் தமிழ் மக்களது அவலம் தொடர்கதையாகும் அச்சம் உள்ளது.