05

05

இலங்கை அணிமீதான தாக்குதல் வெட்கக் கேடானது : இம்ரான்கான்

imran-khan.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து தான் மிகுந்த கவலையும் வெட்கமும் அடைவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அணிக்குப் பாகிஸ்தானில் வைத்து அளிக்கப்பட்ட பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பல்வேறு தீவிரவாத அச்சுறுத்தல்கள் லாகூரில் இருந்தமையை கருத்திற் கொண்டு இலங்கை அணிக்கான பாதுகாப்பை அரசாங்கம் மேலும் பலப்படுத்தியிருக்கவேண்டும் ” என்றார்.

பாடசாலையில் காதலர்தினம் கொண்டாடிய அதிபரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

love.jpg எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள மத்திய கல்லூரியில் காதலர் தினத்தை கொண்டாடியதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இங்குள்ள கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய அதிபர் மாணவர்களிடையே காதலைத் தூண்டிவிட்டு அவர்களின் கல்வியைப் பாழாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இக்கல்லூரியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது தொடர்பாக கல்வியமைச்சும் விசாரணைகளை நடத்திவருகிறது.

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரிடம் வித்தியாதரன் ஒப்படைக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் யாப்பா தெரிவிப்பு

anura_priyadarshana_yapa.jpgபுலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல் நடத்திய சமயம் புலிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் வித்தியாதரன் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, ஓர் ஊடகவியலாளர் என்ற ரீதியில் வித்தியாதரன் கைது செய்யப்படவில்லை. புலிகளுடன் தொலைபேசித் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே கைதானார்.

ஊடகவியலாளர்களுக்கு அரசு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளது. அவர் என்னிடமும் ஜனாதிபதியிடமும் கேள்விகள் கேட்டுள்ளார். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊடகவியலாளர்களை அரசு கௌரவத்துடன் நடத்துகின்றது. அவர் கடத்தப்பட்டதாகவும் வெள்ளை வேனில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டவை அனைத்தும் வெறும் கற்பனைகளே.

வித்தியாதரன் நிரபராதி என விசாரணையில் தெரிய வந்தால் அவர் விடுவிக்கப்படுவார். குற்றவாளியாக இருந்தூல் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து 387 சிவிலியன்கள்கப்பல் மூலம் திருமலைக்கு

vanni-injured.gif முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 387 பேர் நேற்றிரவு கிறீன் ஓஷன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சசு அறிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட 57 பேரும், காயமடைந்துள்ள 87 பேரும், இரு கர்ப்பிணிகளும் மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 162 பேருமே இவ்வாறு திருமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அரச குறுந்தகவல் செய்திச் சேவை ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

gid_mobitel_agreement.jpgஅரசாங்க தகவல் திணைக்களமும் இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனமும் இணைந்து மொபிடெல் தொலை பேசிப் பாவனையாளருக்கு குறுந்தகவல் மூலம் செய்திகளை வழங்கும் சேவையொன்றை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவும் மொபிடெல் நிறுவனத்தின் தலைவி லீஷா டி சில்வா சந்திரசேனவம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஆவணங்களை கைமாறிக்கொண்டனர். அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா கையடக்கத் தெலைபேசியை இயக்கி  இந்த சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

அரசாங்கம், அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்றம், அமைச்சுக்கள், திணைக்களங்கள் உட்பட அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் மக்களைக் கவரும் விசேட தகவல்கள் இந்தச்சேவையின் மூலம் வழங்கப்படவுள்ளன. தேசிய கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் டெலிகொம் மொபிடெல் நிறுவனத்தடன் இணைந்து விசேட தகவல்களையும் தேர்தல் முடிவுகளையும் குறுத்தகவல்கள் மூலம் பாவனையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை மகிழ்ச்சிக்குரியதென அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இலங்கை மொபிடெல் நிறுவனத்தின் தலைவி லீஷா டி சில்வா சந்திரசேன கருத்துத் தெரிவிக்கையில்,உடனுக்குடன் செய்திகளை பாவனையாளர்களுக்கு வழங்குவதில் செயற்திறன் மிக்க சேவையாக இதனைக் குறிப்பிடலாம் எனக் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இணைந்து வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள் இச்சேவையினூடாக வழங்கப்படபோது மக்களிடமிருந்து பொரும் வரவேற்புக் கிடைத்ததாகவும் இனிவரும் தேர்தல்களின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

எஞ்சிய 45 ச.கி.மீ. பிரதேசத்தையும் அவதானத்துடன் மீட்க ஆலோசனை – இராணுவத் தளபதி

sarath_fonseka.jpgஇராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் நேற்று வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். விசேட ஹெலி மூலம் வவுனியாவைச் சென்றடைந்த இராணுவத் தளபதியை வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற விசேட கலந்துரையாடலின் போது வன்னியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை இராணுவத் தளபதி கள தளபதிகளிடம் கேட்டறிந்துள்ளார். அதிகூடிய முன்னெச்சரிக்கையுடன் புலிகளிடம் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் மீட்டெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேசமயம், படையினரின் போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக யாழ்-கண்டி ஏ-9 வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும் புலிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எந்தவித தாக்குதல்களையும் நடத்தாத வகையில் அந்த வீதி ஊடாக செல்லும் படையினரின் வாகன தொடரணிக்குத் தேவையான போதிய பாதுகாப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி இந்த விஜயத்தின் போது உத்தரவிட்டுள்ளார்.

10ம் தேதி சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரதம்

05-jayalalitha.jpgஇலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும் வருகிற 10ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் பல்வேரு விதங்களில் போராடி வருகின்றன. திமுக மற்றும் பாமக தலைமையிலான பல்வேறு கட்சிகள் தனித் தனியாக அமைப்புகளைத் தொடங்கி பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.

ஆனால் அதிமுக பெரிய அளவில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக போராட்டம் எதையும் நடத்தாமல் அமைதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் – சபையில் தங்கேஸ்வரி எம்.பி.

srilanka-parliament.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மாணவியொருவரின் மரணம் தொடர்பாக அப் பல்கலைக்கழக மாணவியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளதால் அம்மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டமீட்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவிகள் இருவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் 24 ஆம் திகதியும் இன்னுமொருவர் 25 ஆம் திகதியும் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இம்மாணவிகளில் ஒருவரின் தற்கொலை தொடர்பாக அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர். மாணவி உண்மையில் தற்கொலை செய்திருந்தால் மாணவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும். சுருக்கில் தொங்கிய அந்த மாணவியின் கால்கள் நிலத்தில் முட்டிய படி இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே இது தொடர்பில் சந்தேகங்கள் எழுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவசரகால சட்டத்தின் பேரில் கடத்தல்கள், கப்பம் பெறுதல், சுற்றிவளைப்புகள், கைதுகள் தான் இடம்பெறுகின்றது. மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்துள்ளன. அவசரகாலச் சட்டத்தின் தாக்கத்தை மூவின மக்களும் அனுபவிக்கின்றனர்.

கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாகக் அரசு கூறுகின்றது. ஆனால், அங்கு மக்களின் சுதந்திரம் இழக்கப்பட்டு விட்டது. தற்போது கிழக்கில் அபிவிருத்தி என்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. வடக்கின் நிலையோ இன்னும் படுமோசம். அங்கு மக்கள் கும்பல் கும்பலாக தினமும் கொல்லப்படுகின்றனர். தென்பகுதியில் கூட காணமல் போவோர் கடத்தப்படு?வாரின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனை அரசினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளே உறுதிப்படுத்துகின்றன.

வித்தியாதரனை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

vithyatharan.jpgகடந்த வாரம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் பிரதம செய்தி ஆசிரியர் என்.வித்தியாதரனை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாடட்த்திற்கான ஏற்பாட்டினை ஊடக அடக்கு முறைக்கு எதிரான முன்னணி மேற்கொண்டிருந்தது.எனினும் இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்த்தில் மொத்தமாக 30 ற்கும் குறைவான ஊடகவியலாளர்களே கலந்து கொண்டனர்.

முறையாக ஒழுங்கமைப்பு செய்யப்படாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்ட என்.வித்தியாதரனை விடுதலை செய்யும்படி வலியுறுத்தினர்.

கடந்த 26 ம் திகதி கல்கிஸ்ஸ மஹிந்த மலர்சாலையில் வைத்து காலை 9.40 மணியளவில் என்.வித்தியாதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அவர் இதுவரையில் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட என்.வித்தியாதரன் இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று நடைபெற்ற அமைச்சாரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடவியலாளர் மாநாட்டில் என்.வித்தியாதரன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதன் போது உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் என்.வித்தியாதரன் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் கைது செய்யப்படவில்லை எனவும் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட விமான தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டதாகவும் அரசாங்க அமைச்சரவை பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அத்துடன் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகையின் பிரதம செய்தியாசிரியர் என்.வித்தியாதரன் தற்பொழுது இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தக் கோரி பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்

uk-050309.jpgஇலங்கையில் போர்நிறுத்தம் வந்து அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இலண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

லண்டனில் வாழுகின்ற சில நூறு தமிழர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரிட்டனில் தமிழர்கள் வாழும் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினார்கள்.

பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயலணிக்குழுவின் மாநாடு இங்கு நடைபெறும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு அலுவலக்த்துக்கு முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு என்ற அமைப்பு செய்திருந்தது.

தமது தொகுதி மக்களின் உறவினர்கள் இலங்கையில் இன்னல்களை சந்திப்பதனாலேயே, அவர்களுக்காக குரல் கொடுக்க தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனா தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கின்ற இந்த பொதுநலவாய அமைச்சர்கள்மட்ட செயலணிக்குழு உறுப்பினர்கள், பொதுநலவாய நாடுகள் எங்கிலும் மனித உரிமை நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என்று என்பீல்ட் வடக்கு பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் ரையன் கூறினார்.