09

09

இந்திய மருத்துவர்கள் குழுவுடன் மருந்துப் பொருட்களும் இலங்கை வந்துள்ளது

india-dr.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் பொருட்டு இந்திய மருத்துவர்களின் குழு ஒன்று மருந்துப் பொருட்களுடன் இன்று இலங்கைக்கு வந்துள்ளது  இந்திய மருத்துவர்களும் மருந்துகளும் மருத்துவ பணியாளர்களையும் தாங்கிய விமானம் இன்று கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதில் 8 வைத்தியர்களும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணரும் உள்ளடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்திய மருத்துவர்கள் புல்மோட்டையில் 50 படுக்கை வைத்தியசாலை ஒன்றை அமைக்கவுள்ளதாக இன்று கொழும்பில் தெரிவித்துள்ளனர்.

3வது முறையாக மருந்து பொருட்களை இலங்கைக்கு இந்தியா நேற்று அனுப்பியது. – விமானப்படை அதிகாரி கேப்டன் எஸ்.எம்.கோஸ்வாமி

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவிகள் வழங்க.  இந்தியா ஏற்கனவே 2 முறை மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக மருந்து பொருட்களை இலங்கைக்கு இந்தியா நேற்று அனுப்பியது.

டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் ஐஎல் 76 விமானத்தில் 25 டன் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள்ஆகியவற்றுடன் 25 பேர் கொண்ட மருத்துவ குழுவும், இலங்கைக்கு நேற்று சென்றது.

இதேபோல், மருந்து மற்றும் மருத்துவக் குழுவுடன் மற்றொரு விமானம் இன்று, கொழும்பு செல்கிறது. இது மட்டுமின்றி, மேலும் 2 விமானங்களில் மருந்துகள் அனுப்பப்படும்  என்றும் விமானப்படை அதிகாரி கேப்டன் எஸ்.எம்.கோஸ்வாமி தெரிவித்தார். இந்த மருந்து பொருட்கள் ஐ.நா. குழு மற்றும் செஞ்சிலுவைசங்கம் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்படும்.

ஏ 9 வீதியூடாக அனுப்பப்பட்ட உணவு லொறிகள் நாளை யாழ் குடாநாட்டை வந்தடையும்- யாழ் அரச அதிபர்

lorries.jpgயாழ்குடா நாட்டிற்கு ஏ 9 வீதியூடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய லொறிகள் நாளைய தினம் யாழ் குடாநாட்டிற்கு வந்து சேருமென யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை இவ் லொறிகள் கொழும்பிலிருந்து சென்றுள்ளதாகவும், அவை நாளைய தினம் யாழ் குடாநாட்டை வந்தடையுமெனவும் அவர் தெரிவித்தார். 24 வருடங்களின் பின்னர் ஏ9 வீதியூடாக இன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இன்று கருணா அம்மான் அமைச்சரானார்.

karuna_minister_.jpgபாராளுமன்ற உறுப்பினரான விநாயக மூர்த்தி முரளிதரன் ( கருணா அம்மான்) இன்று தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்தற்ற) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் சத்தியப் பிரமாண வைபவம் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக ரூ. 1 கோடி : ஜெ. அறிவிப்பு

jayalalitha.jpgஇலங்கை யில் ராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினரால் அங்கு வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வலியுறுத்தியும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கோரியும், அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் ஜெயலலிதா இதனை வெளியிட்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். மாலை 5 மணியளவில், உண்ணாவிரத முடிவில் பேசிய ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படும் நிதிக்கு அதிமுக சார்பில், அதன் பொதுச் செயலாளர் என்ற முறையில் மேலும் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று கூறினார். தவிர மாநிலம் முழுவதும் தங்கள் கட்சியினர் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்பட்டுள்ள நிதி சென்னை வந்து சேர்ந்ததும், மொத்தமாகச் சேர்த்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

மேடையில் ஜெயலலிதாவிடம் ஆசிபெற்ற பள்ளிக்குழந்தைகள் இருவர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கைத் தமிழர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவிற்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
 

இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம்: ஜெ

jayalalitha.jpgஇலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு முழு ஆதரவு தெரிவித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களையும், தளவாடங் களையும் இந்திய அரசு அனுப்பியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதனை மத்திய அரசு மறுக்கவில்லை. பிரதமருக்கு மிகவும் நெருக்கமான பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு சென்று வந்த தகவலையும் ஊடகங்கள் வெளிப்படுத்தின. இந்த செய்திகளையும் மத்திய அரசு மறுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசை திமுக எதிர்க்கவும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்சனையில் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். தமிழர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் நலன் என்று வரும்போது கருணாநிதி வாய்மூடி மவுனியாக மாறி விடுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களது சுயநிர்ணய போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்பட்டு சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டுமென்ற அவர்களது போராட்டத்தை ஆதரிக்கும். அதே வேளையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறக்க காரணமான திசை மாறிப் போன ஆயுதமேந்திய போராட்டத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்த போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இவை இரண்டையும் ஒன்று சேர்த்து கருணாநிதி பிரச்சனையை குழப்ப முயற்சி செய்கிறார். இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சண்டையில் அப்பாவி மக்கள் இடம் பெயர்ந்து உணவு, உடை, மருந்து எதுவுமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உணவு, உடை மற்றும் மருந்துகளை ஏன் அனுப்பவில்லை.

இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் மாபெரும் தோல்வி அடைந்து விட்டன. தமிழ் மக்கள் மேல் மன்மோகன் சிங்குக்கும், கருணாநிதிக்கும் உண்மையான அக்கறையே இல்லை. நாம் இங்கு உண்ணாவிரதம் இருப்பதால் பசியால் வாடும் இலங்கை தமிழர்களின் வயிறு நிரம்ப போவதில்லை. இது ஒரு அடையாளமே. இதன் மூலம் இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்திருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்துவதற்காகத் தான் இந்த போராட்டம் என்றார்.

100 நாட்களில் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு – அத்வானி

_atvany_.jpgஇலங்கைத் தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசாங்கமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி தமது பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 100 நாட்களில் தீர்வு காணும் எனத் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று முன்தினம் (07.03.2009) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்னில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழர் வாழ்விற்கு முன்னுரிமை அழிக்கப்படும் முதல்வரும் 100 நாட்களுக்குள் அவர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மலேசியத் தமிழர்களின் பிரச்சினையைக் கண்டு கவலையுறும் தமிழக மக்களை பாராட்டுவதாக தெரிவி;த்துள்ள அவர் இலங்கை தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

உணவுக் கப்பல் மீது புலிகள் ஷெல் தாக்குதல்

ltte_attack.pngமுல்லைத் தீவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்மீது புலிகள் இன்று காலை ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 500 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிய எம்.வி பிந்தன் சரக்குக் கப்பல் கடந்த 07 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கோதுமை மா 399 தொன், பருப்பு 61 தொன், மண்எண்ணெய் 1400 தொன், சீனி 20 தொன், மரக்கறி எண்ணெய் 21 தொன்,பெற்றோல் 200 தொன் மற்றும் குளோரின் 90 கிலோ ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் இக்கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டன.

நேற்றுக் காலை 7.30 மணியளவில் புதுமாத்தளன் பிரதேசம் சென்றடைந்த இக்கப்பல் பொருட்களை இறக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டது. எனினும் 142 மெற்றிக் தொன் பொருட்கள் இறக்கப்பட்ட வேளையில் திடீரென புலிகள் ஷெல் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் என கப்பல் கெப்டன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக இக்கப்பல் ஆழ்கடல் நோக்கிச் செலுத்தப்பட்டதாகவும் எனினும் கொந்தளிப்பான நிலையில் கடல் காணப்படுவதாகவும் கெப்டன் தெரிவித்துள்ளார்.

முல்லையில் தொடர்கிறது சமர் இரு தரப்பிலும் பெரும் இழப்பு

sl-army.jpgமுல்லைத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரச படைகளுக்கும் இடையில் தொடர்ந்து கடுஞ்சமர் இடம் பெற்று வருகின்றது என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இரு தரப்புகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரை விடுதலைப் புலிகளில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த விடுதலைப் புலிகளின் 50 சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன என்று இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
விசுவமடுப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் 57ஆவது படைப்பிரிவின் மீது விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கடந்த சனிக்கிழமை காலை 6.30 மணியளவிலும் பிற்பகல் 2.30 மணியளவிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்தாக்குதலின்போது இராணுவத்தினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் விடுதலைப் புலிகளில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் கூறியுள்ளது.அதேவேளை, 58 ஆவது படைப் பிரிவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நேற்றுமுன்தினம் (சனியன்று) அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை கடுஞ் சண்டை இடம்பெற்றிருக்கிறது
இந்த மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போது விடுதலைப் புலிகளின் 19 சடலங்கள் மீட்கப்பட்டன என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது.அதேசமயம், சாளைப் பகுதியிலும் கடுஞ் சண்டை இடம்பெற்று வருகின்றது என படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் பலி புதுக்குடியிருப்பில் மும்முனைகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தின் நான்கு டிவிசன்கள் மீது தாம் நடத்திய தாக்குதலில் சுமார் 450 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அதிக எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படையினரின் 53 ஆம், 58 ஆம் படைப்பிரிவுககளின் மூன்றாம் எட்டாம் விசேட படையணிகளின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இதன்போது படையினரின் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களையும் சடலங்களையும் புலிகள் கைப்பற்றினர் என அச்செய்திகள் தெரிவித்தன.

தேர்தல் வந்தது.. உண்ணாவிரதமும் வந்தது- கருணாநிதி

karunanithy.jpgமக்கள வைத்து தேர்தல் அறிவிப்பு வந்ததால் தான் தா.பாண்டியன் பக்க மேளம் வாசிக்க, நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர, இலங்கை பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசில் அங்கம் வகித்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் திமுகவும்- பாமகவும் தமிழகத்தில் மட்டும் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான ராஜா பேசியிருக்கிறார். என் செய்வது; திமுக- பாமக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு பெற்று ராஜ்ய சபாவுக்குள் நுழைந்தவர்; இதுவும் பேசுவார் -இன்னமும் பேசுவார்!.

மத்திய அரசுக்கு திமுகவும், பாமகவும் ஆதரவு கொடுப்பது பற்றி ஆதங்கப்பட்டுள்ளார். தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஜெயலலிதாவின் மேடையில்- கையாலாகாத கருணாநிதி ஆட்சித் திறமையின்மை என்றெல்லாம் திட்டிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஜெயலலிதாவிற்கும், அவருடைய கட்சியினருக்கும் கோபம் என் மீதுதான் என்றும்- இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியோ, சிங்கள அரசைப் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ அவர்களுக்கு கவலையோ கோபமோ இல்லை என்றும் தெரிகிறது அல்லவா?. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் வெளியாகும் என்பார்கள், அம்மையாரின் புளுகு ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாகி விட்டது; அதுவும் அந்த உண்ணாவிரத மேடையிலேயே!.

உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களால் முடிந்த நிதி உதவியை அந்த உண்டியலில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்-ஜெயலலிதா அறிக்கை. தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நிதிக்காக என்று உண்டியல் மூலமாக அல்ல- காசோலையாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் என்று கூறி- ஒவ்வொரு காசோலையை வழங்கியவரின் பெயரும் ஏடுகளில் அறிவிக்கப்பட்டு- அந்தத் தொகை முழுவதும் அரசின் நிதித்துறை மூலமாக வரவு வைக்கப்பட்டு- ரசீதுகளும் வழங்கப்பட்டபோது- அந்த நிதியை நான் என் குடும்பத்திற்குச் சொந்தமாக்கி விட்டதாக அறிக்கை விடுத்தது இதே ஜெயலலிதாதான்.

அதை எதிர்த்து வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது நான் அவ்வாறு கூறவில்லை, மக்கள் பேசிக் கொண்டதைத்தான் சொன்னேன் என்று தன் வழக்கறிஞர் மூலமாக ஜகா வாங்கியதும் இதே ஜெயலலிதாதான்.

மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக உதவி புரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைத்தான் மாபெரும் தோல்வி என்று சுட்டிக் காட்டுகிறேன். மத்திய அரசும், மாநில அரசும் தமிழ் மக்களின் மேல் உண்மையான அக்கறை செலுத்தவில்லை- உண்ணாவிரதத்திற்கு முன் ஜெயலலிதா விடுத்த அறிக்கை.

15-10-2008 அன்று ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம், இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும், அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று முழங்கினார்.

ஆனால் அப்போது தேர்தல் ஒன்றுமில்லை; அதனால் பாண்டியன் பக்க மேளம் வாசிக்க- நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர; இப்போது இலங்கை மீது ஜெயா பாய்வதற்குக் காரணம் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது என்ற அறிவிப்பு அல்லவா!.

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசை வழி நடத்தும் சோனியா காந்தியே காரணம். இதற்கு முதல்வர் கருணாநிதியும் உடந்தை- நாஞ்சில் சம்பத் பேசியதில் எந்தத் தவறும் இல்லை- இது வைகோ.

உலகில் எந்தவொரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் போர்க்களத்தில் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் என்றெல்லாம் பேசியிருப்பவர், சோனியா காந்தி மீதும் என் மீதும் குற்றம் சாட்டுவதில் எந்தவிதமான வியப்பும் இல்லை.

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைமுக அழைப்பு விடுத்து காங்கிரஸ், திமுக இரண்டுக்குமே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன். காங்கிரசுக்கு அழைப்பே விடவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அவருடைய கூட்டணியிலே உள்ள நண்பர் பரதனோ மறைமுக அழைப்பு விடுத்ததாக சொல்கிறார். ஆனால் அந்த அறிக்கையால் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக அவர் சொல்வதுதான் தவறு.

எங்களுக்கொன்றும் அவரது அழைப்பால் கலக்கம் இல்லை. உண்மையான கலக்கம் பரதனுக்குத்தான். காங்கிரசுக்கு எதிராக அவர்கள்தான் ஜெயலலிதா பக்கம் சென்றார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான் ஜெயலலிதா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். எனவே கலக்கம் அவர்களுக்குத்தானே தவிர எங்களுக்கு அல்ல.

கார்கில் போரில் உயிரிழந்த 11 தமிழர்களின் குடும்பத்தையும் நேரில் சென்று பார்த்த ஒரே தமிழ் தலைவராக உள்ளேன்- இது வைகோ.

கார்கில் போர் நடைபெற்றபோது தமிழகத்தின் சார்பில் 50 கோடி ரூபாயை வசூலித்து, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கையில் ஒப்படைத்தது திமுக அரசுதான். அந்தப் போராட்டத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியும், அது தவிர அவர்களுக்கு வீடும் வழங்கப்பட்டது. ஆனால் அதைப் பெருமையாக கருதி திமுக சொல்லிக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்குமாறு தமிழ் அமைப்புக்களிடம் கிழக்கு முதல்வர் வேண்டுகோள்.

pullayaan.jpgகிழக்கு மாகாணத்தில் ஆயுதம் வைத்துள்ள சகல தமிழ் அமைப்புக்களும் தம்மிடமுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

விடுதலைப் புலிகளும் உடனடியாக ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டு ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுதம் வைத்துள்ள சகல தமிழ் அமைப்புக்களும் அவற்றிடமுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும என மேலும் கேட்டுக்கொண்டார்.