15

15

திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை

varsa.jpg
திருகோணலையில் 6 வயது சிறுமியை கப்பத்திற்காக கடத்திச்சென்று கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று நண்பகல் 12.05 அளவில் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.
 
பின்னர் இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு பின்னர் அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது. இந்தநிலையில் 10 இலட்சம் ரூபாவை கொடுத்து சிறுமியை மீட்க தாய் தயாரான போது சிறுமி கொலை செய்யப்பட்டார்
 
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் 25 வயதான ரினவுட் என்பவரை இன்று பொலிஸார் வைத்திய பரிசோதனைக்குட்படுத்த அழைத்து சென்ற போது அவர் தமது கைவிலங்கினால்,காவலுக்கு வந்த பொலிஸ்காரரின் கழுத்தை நெரித்துள்ளார். இதன் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேக நபர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரால் கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்படும் பொலிஸ்காரர் திருகோணமலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சிறுமியின் கொலை தொடர்பான வைத்திய பரிசோதனையின் பின் வர்ஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக  பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். சிறுமியின் உடலத்தை கண்டெடுத்த போது அவரது வாய்க்குள் துணிகள் திணிக்கப்பட்டு பிளாஸ்டரால் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலை தொடர்பான  முக்கிய சந்தேக நபர், கணனி பயிற்சியாளரும் சிகரம் இணைய வானொலி நடத்துனர் என்பதும் தெரிய வந்த பின்னர் அந்நபரிடமிருந்து சிகரம் பணிப்பாளர் என அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சிகரம் இணைய வானொலி மூலம் சிறுவர்களது நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளதாகவும், திருகோணமலை சிவன் கோவில் அருகாமையிலேயே இவரது இணைய வானொலி சேவை செயற்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது வானொலியை விரிவுபடுத்துவதற்காகவே தாம் குழந்தையைக் கடத்தி கப்பம் கேட்டதாக அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்படவர்களில் மற்றுமொரு இளைஞர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பெண் பொலிஸ்காரர் ஒருவரின் மகன் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். 

ஐ.நா.வின் திட்டம் தமிழர்களை வலிந்து சரணடையவைக்கும் யுக்தியே: கஜேந்திரன்

gajenthiran.jpgஇலங்கையில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசு முகாம்களுக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் திட்டம், கொழும்பின் கொலைகார கரத்திற்கு கையளிக்கவே உதவும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார். முல்லைத் தீவுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தி்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடக்கும் பகுதியில் மிகப் பெரிய மனித அவலம் தொடர்கிறது என்று கூறியுள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசும் அங்கு தாக்குதல் நிறுத்தம் செய்து அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. .

ஐ.நா.மனித உரிமை ஆணையரின் இந்த கோரிக்கை, தமிழர்களை இனப் படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசிற்கு உதவுவதாகவே அமையும் என்று கூறியுள்ளார் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், போர் பகுதியில் இருந்து கடல் வழியாகவோ அல்லது நில வழியாகவோ வெளியேற்றும் மக்களை எங்கே கொண்டு செல்வார்கள் என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் குறிப்பிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

போர் நடக்கும் பகுதியில் இருந்து இதுவரை வெளியேறிய மக்களை சிறிலங்கா அரசு முட்கம்பி வேலி போட்ட முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. அதேபோன்று போர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்களையும் அப்படிப்பட்ட முகாம்களுக்கு கொண்டு சென்று அடைப்பது அவர்களை சிறிலங்கா அரசிடம் பலவந்தமாக சரணடையச் செய்வதாகும் என்றும், அது ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் கொழும்பின் திட்டத்திற்கு உதவுவதாகவே ஆகும் என்று கூறியுள்ளார்.

போர் பகுதியில் இருந்து இதுவரை வெளியேறிய, வெளியேற்றப்பட்ட மக்களை இப்படிப்பட்ட முகாம்களில் அடைத்து வைத்து சிறிலங்கா இராணுவம் சித்திரவதை செய்து வருவதை கண்டுகொள்ளாமல் ஐ.நா. மனித உரிமை ஆணையம் எங்கே சென்றிருந்தது என்றும் கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“போர் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் சம்மதமின்றி, அவர்களை வலிந்து வெளியேற்றுவது, சில சுய நல அரசுகளின் விருப்பத்தி்ன்படி, சிறிலங்கா இனவெறி அரசிற்கு உதவும் ஒரு நடவடிக்கையாகும்” என்று கூறியுள்ள கஜேந்திரன், “ஐ.நா.வும் அதன் மனித உரிமை அமைப்பும் ஈழத்தில் வாழும் அப்பாவி மக்கள் மீது யார் போர் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதையும், யார் போர் குற்றவாளிகள் என்பதையும் நடுநிலையுடன் நின்று நியாயத்தை கூறிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“இலங்கைத் தீவில் நிலவும் அவலத்தை துடைக்க எந்தப் பொறுப்பும் ஏற்காத, போர் பகுதியில் இயங்கி வந்த தனது துணை அமைப்புகளை திரும்பப் பெற்றுக்கொண்ட ஐ.நா. அமைப்பிற்கு, அப்பாவி மக்களை காப்பதற்காக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு எந்த அருகதையும் இல்லை” என்று கூறியுள்ள கஜேந்திரன், ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவையில் விவாதிப்பதில் கூட எப்படிப்பட்ட வஞ்சக வேலைகள் எல்லாம் நடந்து வருகின்றன என்பதை கடந்த சில வாரங்களாகவே கண்ணுற்றுத்தான் வருகிறோம் என்று கூறியுள்ளார் என அந்த இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. .

நவநீதம்பிள்ளைக்கு புலிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒருபோதும் நம்பவில்லை – வெளிவிவகார செயலாளர் கோஹண

Dr Kohonaமனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக அரசாங்கம் ஒருபோதும் நம்பவில்லையெனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண புலிகளுக்கு ஆதரவான சக்திகள் அவரைத் தவறாக வழிநடத்த முற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலேயே வெளிவிவகார செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா.ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனீவா தலைமையகத்திலிருந்து விடுத்திருக்கும் அறிக்கையானது,ஒரு தலைப்பட்சமானதாகவே நோக்கப்படவேண்டியதாகும். ஒரு தரப்பினரின் தகவலை மையமாக வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. தனக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் அவர் இலங்கை அரசுடனோ, அல்லது ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியிடமோ கலந்துரையாடியிருக்கலாம்.அவர் அப்படிச் செய்யாமல் பக்கச்சார்பான விதத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதனை வைத்துக்கொண்டு நாம் அவரை புலிகளுக்குச் சார்பானவரென்றோ, புலிகளுடன் தொடர்புள்ளவரென்றோ கூறமுட்படமாட்டோம். புலிகளுடன் தொடர்புடையவர்களும் புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் நவநீதம் பிள்ளையை தவறாக வழிநடத்தியிருப்பதாகவே நோக்குகின்றோம்.

இதன் மூலம் தனது பதவிக்கும், ஐ.நா. மனித உரிமைகள் செலயகத்துக்கும் அபகீர்த்தியை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் எனவும் கலாநிதி பாலித கோஹண தெரிவித்தார்.

437 வன்னி நோயாளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

vanni-injured.gifமுல்லைத் தீவிலிருந்து ஒரு வார காலத்தின் பின்பு யுத்தத்தில் காயமடைந்தவர்கள்,நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கலாக 10 வது தொகுதியினர் நேற்று சனிக்கிழமை இரவு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படடனர்.

18 சிறுவர்கள் உட்பட 437 பேர் இந்த தடவை அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் முல்லைத்தீவிலிருந்து இப்படி அழைத்து வரப்படும் நோயாளர்களை திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் நேரடியாக புல்மோட்டை மற்றும் பதவியா தள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பது என சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தாலும், பதவியா வைத்தியசாலை புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாகவே 10 வது தொகுதியினர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

காலநிலை மாற்றம் மழை தொடரும்

flod-wanni.jpgபருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைநேரங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுமென்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எல்.ஆர்.ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் நேற்று முன்தினம் பெய்த மழையை அடுத்து குருபகனே மந்தபுர பகுதியில் கடும் காற்று வீசியதன் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த காற்றினால் குருநாகல் மெதிபுர பிரதேச செயலகப் பிரிவில் பண்டுகஸ்துவ, மங்குலாகம, ஷெனிகெதர ஆகிய பகுதிகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி -இதுவரை மூவர் கைது

trnco.jpgகடத்தப் பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட 6 வயது மாணவி வர்ஷா யூட் ரெஜியின் இறுதிக்கிரியைகள் எப்போது நடத்தப்படும் என்பது நேற்று சனிக்கிழமை மாலைவரை தீர்மானிக்கப்படவில்லை. சிறுமியின் தந்தை ரெஜி, கட்டாரில் தொழில் செய்கிறார். அவர் நாடுதிரும்புவதைப் பொறுத்து இறுதிக்கிரியை தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சிறுமி படித்துவந்த திருகோணமலை சென். மேரிஸ் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள், அதிபர் அருட் சகோதரி எம்.பவளராணி தலைமையில், சிறுமியின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பாலையூற்றுபூம்புகார் இல்லத்திற்குச் சென்று நேற்று சனிக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையில், இக் கடத்தல், கொலைச் சம்பவம் தொடர்பாக திருகோணமலைப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

இந்திய-இலங்கை ஒப்பந்தம்: எங்களுக்கு தொடர்பேயில்லை- புலிகள்

yohi.jpgஇந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு விடுதலைப் புலிகள் பதில் தந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகரத்தினம் ‘புலிகளின் குரல்’ வானொலிக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு யோகரத்னம் யோகி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் கூறுகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள்தான் ஏறி மித்தார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம் அவர்களால் (இந்தியா-இலங்கை அரசுகளால்) செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை செய்துவிட்டு இங்கே வந்த அவர்கள், நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் புலேந்தி அம்மான் போன்றவர்களை இலங்கை அரசு கைது செய்தபோது அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. ஆனால், இந்திய அரசு ஒப்பந்தத்தை காப்பாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு எங்கள் மீது போர் தொடுத்தது. ஆறாயிரம் மக்களை கொன்று குவித்தது என்பதை ப.சிதம்பரம் மறந்து விட்டார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரங்களை பரவலாக்கி, வடக்கு-கிழக்கு கௌரவமாக இணைக்கப்பட்டது என்பது ராஜீவ் காந்தியால் கூறப்பட்ட ஒன்று. அதை உறுதியாக பேணியிருக்க வேண்டியதும் இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் காலால் ஏறி மிதித்தனர் எனக் கூறுவதை பலர் அதனை ஏற்றுக்கொண்டு பேசுவதை நாங்கள் காண்கிறோம். இங்கே, நான் என்ன கூற வர விரும்புகின்றேன் என்றால் இந்த போலி வார்த்தைகளில் ஏமாறாதீர்கள்; மயங்காதீர்கள். எங்களைப் பொறுத்த வரை மிகப்பெரிய அழிவுக்குள்ளும் மிகப் பெரிய பேரழிவுக்குள்ளும் நின்று போராடுகிறோம். உறுதியாக போராடுகிறோம்.

இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் பின்னால் உலகத் தமிழினமே ஒன்றுபட்டு நில்லுங்கள். நிச்சயமாக எங்களுக்கான ஒரு நாட்டை நாங்கள் விரைவில் அமைப்போம் என்று யோகரத்தினம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பெண் மந்திரி ஷெர்ரி “திடீர்” ராஜினாமா

sherry_rehman.jpgபாகிஸ்தான் மந்திரி சபையில் மூத்த மந்திரியாக இருந்தவர் ஷெர்ரி ரகுமான் தகவல் தொடர்பு இலாகாவை கவனித்து வந்தார். இவருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் மூத்த தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் ரகுமான் திடீரென்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.ராஜினாமா கடிதத்தை உடனடியாக பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பாகிஸ்தான் அரசின் தகவல் ஒலிபரப்பு கொள்கை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையே ராஜினாமாவுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. நவாஸ்செரீப் நடத்திய வக்கீல்கள் பேரணியை அரசு அடக்க நினைத்தது. ஆனால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் பின் வாங்கியது.

இது தொடர்பாக அதிபர் சர்தாரி,பிரதமர் கிலானி ஆகியோரது சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒளிபரப்புவது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.எதிர்க்கட்சிகள் போராட்டம், வக்கீல்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவதால் அதிபர் சர்தாரி அதிருப்தி அடைந்தார்.இதையடுத்து ரகுமான் ராஜினாமா செய்தார்.

பத்திரிகையாளரான ரகுமான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் சிக்கியுள்ள சிவிலியன்களை மீட்க சர்வதேசம் இலங்கைக்கு உதவ வேண்டும் – பொக்ஸ்

liam_fo_.jpgவன்னியில் சிக்கியுள்ள மக்களை பாதிப்புகளின்றி மீட்பதற்கு சர்வதேச நாடுகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யும் பாதுகாப்பு நிழல் அமைச்சருமான லியாம் பொக்ஸ் தெரிவித்தார். இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் நேற்று நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே இதனைத் தெரிவித்தார்.

வன்னியில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் பல, பல்வேறு அறிக்கைகளை விடுத்தும் குரலெழுப்பியும் வருகின்றன. எனினும் சர்வதேசம் இவ்விடயத்தினை முழுமையான கவனத்திற்குக் கொண்டு வந்து அம்மக்களை மிகக் குறைந்த பாதிப்புடன் மீட்டெடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்தார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம். சமாதானம் ஏற்படுத்தப்பட்டதும் நாட்டின் பொருளாதாரம் கல்வி மற்றும் அபிவிருத்திகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு உள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகத்தின் உதவியை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை புலிகளின் பிடியில் அகப்பட்டுள்ள பொதுமக்களை விடுவிப்பதற்கும் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தாம் இலங்கையில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் இவர்களிடம் இவ்விடயம் பற்றி வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற மேற்படி செய்தியாளர் மாநாட்டில் வியாம் பொக்ஸ் மேலும் தெரிவித்ததாவது:- சுதந்திரமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான நிதியமொன்று ஏற்படுத்த வேண்டும். அந்நிதியத்தினூடாக வடக்கு, கிழக்கு மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய நிதியமொன்று தொடர்பாக நான் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது அவரது கவனத்தை கொண்டு வந்துள்ளேன்.

இதனை ஆரம்பிப்பதில் நான் முன்னின்று செயற்படுவேன் என அவரிடம் நான் தெரிவித்துள்ளேன். இந்நிதியத்திற்கு சர்வதேச நாடுகளின் முழுமையான பங்களிப்பு பெறப்படுவதுடன் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களினதும் உதவிகளைப் பெறமுடியும். வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்நிதியம் முக்கியத்துவமளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் தொடர்பான ஸ்திரத்துவம் முன்னேற்றம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. யுத்தத்தினால் ஏற்படும் இழப்புகள் குறித்து கவனத்திற் கொள்வதுடன் இத்தகைய இழப்புக்கள், பாதிப்புக்கள் சர்வதேச ரீதியாக நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமே சமாதானத்தை வென்றெடுக்க உதவக் கூடும்.

வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு விரைவான அரசியல் தீர்வு முக்கியம். அங்கு தேர்தலொன்றை நடத்துவதானது இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கான சிறந்த ஆரம்பமாக அமையும். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கேற்பானது அதன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதாக அமையுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கலாநிலையம்: தெற்கு கலைஞர்கள் பங்களிப்பு

jaffna1.jpgவடக்கு தெற்குக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் கலா நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் சகல கலைஞர்களின் பங்களிப்புடன் யாழ்நகரில் இக்கலா நிலையம் அமையவுள்ளது.

இக்கலா நிலையம் திரையரங்கு, சன சமூக நிலையம், கலையரங்கு ஒத்திகை மேடை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் யாழ்ப்பாணத்துக் கட்டிடக் கலை சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கலா நிலையத்தை அமைப்பது தொடர்பாகக் கலந்துரையாடும் விசேட நிகழ்வும் பத்திரிகையாளர் மாநாடும் கொழும்பு திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாலினி பொன்சேகா, ரவீந்ர ரந்தெனிய உட்பட தெற்கின் முன்னணிக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இத் தேசியப் பணிக்கு அரசாங்கம் உதவ முன்வந்துள்ளதுடன் சகல கலைஞர்களும் தமது முழுமையான பங்களிப்பினை வழங்க முன்வந்துள்ளனர். அத்துடன் நாடளாவிய சகல சினிமாத் திரையரங்குகளினதும் ஒரு நாள் வருமானம் (மார்ச் 22 ஆம் திகதி) இதற்காக பெறப்பட வுள்ளதுடன் சகல திரையரங்குகளின் உரிமையாளர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி கலாநிலையத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில் தெற்கில் கலை நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகளையும் நடாத்தி நிதி சேகரிக்கவும் கலைஞர்கள் முன்வந்துள்ளனர். கலா நிலையம் அமைப்பதற்கான காணியை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளதுடன் மினி திரையரங்கை அமைப்பதற்கான நிதியை திரைப்படக் கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.

வடக்கு தெற்கிற்கான உறவின் கலைப்பாலமாக அமையும், இந் நடவடிக்கையில் எந்தவொரு அரசியலும் கலக்கப்படமாட்டாது. 30 வருட கால கசப்பான அனுபவங்களை ஒருபுறம் வைத்து விட்டு கலைஞர்களுக்கிடையில் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமென நடிகை மாலினி பொன்சேகா தெரிவித்தார்.

சிங்களத் திரைப்பட வளர்ச்சிக்கு தமிழ்க் கலைஞர்கள் வழங்கிய பாரிய பங்களிப்பும் இந் நிகழ்வில் நினைவு கூரப்பட்டதுடன் மேற்படி பணிக்கு தமிழ் கலைஞர்களின் பங்களிப்புக்களும் பெறப்படுமென அவர் தெரிவித்தார்.