20

20

சீனாவிற்கு தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவசர வேண்டுகோள்

nadesan.jpgஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் எதிர்வரும் 26 ஆம் திகதிய கூட்டத்தில் இலங்கை விவகாரத்தை ஆராய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், இவ்விடயத்தில் இடையூறு விளைவிக்க வேண்டாம் என விடுதலைப் புலிகள் சீன அரசாங்கத்திற்கு நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை  விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பா. நடேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசானது தனது இனப்படுகொலைகளை மூடிமறைக்க இது ஒரு உள்நாட்டு யுத்தம் என்ற போர்வையில் பரப்புரைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இரண்டாவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட இருந்த இவ் விவாதத்தை உள்நாட்டு பிரச்சனை என சீனா வர்ணித்திருப்பதனால் இவ்விவாதம் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சீனாவிடம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்தே, சீனா இலங்கை அரசிற்கு சார்பாக நடந்து கொள்வதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் தமிழ்மக்களின் இந்நிலை தொடர்பில் சீனா அதிகாரிகளுக்கு விளக்க விருப்பமுடையர்களாக உள்ளதாகவும், சீனாவிடம் ஐநாவில் தமிழ்மக்களின்நிலை தொடர்பில் விவாதிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து இன்று 483 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

navy_civilians.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து காயமடைந்த பொதுமக்களில் 483 பேர் இன்று புல்மோட்டைக்கு கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளவர்களை இந்திய வைத்தியர்களின் கள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் முகமாக அவர்களை கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 11 தடவைகளில் புதமாத்தளனில் இருந்து இதுவரை  நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது

ருபெல்லா தடுப்பூசி வழங்குவதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு.

vaccina.jpgருபெல்லா தடுப்பூசி வழங்கப்பட்ட பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்ததையடுத்து ,த்டுப்பூசி வழங்குவதை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிடுள்ளார். அத்துடன் தடுப்பூசி வழங்கப்பட்ட பின் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ருபெல்லா தடுப்பூசி வழங்கப்படதையடுத்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் பல மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 12 வயது மாணவியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அதேவேளை வைத்தியசாலையில் 26 மணவியர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமலை சிறுமி படுகொலையுடன் ரி.எம்.வி.பியை தொடர்புபடுத்தியிருப்பது கவலைக்குரியது -முதலமைச்சர் சந்திரகாந்தன்

Regie_Varsaதிருகோண மலையில் 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மக்கள் மத்தியில் அதிருப்தியையும ஆத்திரததையும் எற்படுத்தியுள்ளமை நியாயமானது. ஆனால் இதில் தமது கட்சியை தொடர்புபடுத்தியிருப்பது கவலைக்குரியது என கூறுகின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்.

ஜூட் ரெஜி வர்ஷா வின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.  நேற்று பொலிஸ் காவலில் இருந்த வேளை சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபரான வரதராஜா ஜனார்த்தனன் தமது கட்சியின் உறுப்பினர் அல்ல. தேர்தல் பிரச்சார காலத்தில் சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார் என்றும் இக் கொலை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த ஈடுபாடு காரணமாக குறித்த சந்தேக நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் போன்று மக்கள் மத்தியில் நடமாடியுள்ளார் என்பதை தற்போது தான் தங்களால் அறிய முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் நேற்று மாலை சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் வீரநகரிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடமொன்றிலிருந்து 2 கைக்குண்டுகளும் ஏற்கனவே மாகாண சபையின் பாவனையிலிருந்த அச்சுக்கூட களஞ்சியத்திலிருந்து ஒரு கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் தகவல்களின்படி இரண்டாவது இடத்திலேயே புத்தகங்களுக்குள் மறைத்து வைக்கப்படடிருந்த சயனைட்டை எடுத்து உட்கொண்டதாக தெரிய வருகின்றது.

ரி – 56 துப்பாக்கியொன்றும் தன்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இந்நபர் பொலிசாரிடம் தெரிவித்திருந்த போதிலும் அது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

கலாபூஷணம் முத்தழகு அவர்களின் பெயர் காலத்தால் அழிந்துவிடாது. – முதலமைச்சர் அனுதாபம்.

cm-ep.jpg இலங்கையின் மூத்த கலை இலக்கிய கலைஞர்களில் ஒருவரான மட்டுநகர் வி. முத்தழகு  (மார். 19) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 77.  மிக நீண்ட காலமாக இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இவரின் `தாகமாய் இருக்கிறேன்` சிறுகதைத் தொகுதி பல விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் அரசியல், கலை, இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் அண்ணன் முத்தழகு. இவர் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக, நகைக்கடை வர்த்தக சங்கத்தின் தலைவராக, ஒரு சிறந்த கவிஞராக, சிறந்த எழுத்தாளனாக எமது மக்களுக்கு ஆற்றியுள்ள சேவைகள் காலத்தால் அழிந்துவிட முடியாதவை. தமிழ் இனம் வாழும்வரை அண்ணன் முத்தழகுவின் பெயர் நிலைத்து நிற்கும். அன்னாரின் மறைவினால் கலை உலகத்திற்கு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

அன்னார் எமது தாய் நாட்டில் மாத்திரம் அல்ல தென் இந்தியாவிலும் தனது பெயரை நிலைநிறுத்தியவர். அரச உயர் விருதான கலாபூஷணம் விருதினைப் பெற்று எமது பிரதேசத்திற்குப் பெருமை தேடித்தந்தவர். அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், மற்றும் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்..

புலி ஆதரவாளர்களை கட்டுப்படுத்த சுவாமி நடவடிக்கை.

subramanian_swamy.jpg தமிழ் நாட்டிலுள்ள புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய உயர் நீதிமன்றத்தில் உதவியை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் ஆட்சியின்கீழ் புலி ஆதரவாளர்கள் சட்ட திட்டங்களை உதாசீனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதி நீதிமன்றத்தில் வைத்து புலி ஆதரவுச் சட்டதரணிகளினால் சுப்பிரமணிய சுவாமி தாக்கப்பட்டார் நீதிபதி மற்றும் பொலிஸார் முன்னிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இவ்வாறு எதிர்வரும் காலங்களில் இடம்பெறாது தடுப்பதற்கு இந்திய உயர் நீதிமன்றத்தின் உதவியினை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆளுனர் மொகான் விஜயவிக்கிரம புல்மோட்டைக்கு விஜயம்.

கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜய விக்கிரம இன்று (20.03.2009) புல்மோட்டைப் பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புல்மோட்டை வைத்தியசாலை இந்திய வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார இணையத்தளம்

upfa-website.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார இணையத்தளம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொடர்பான வைபவம் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறை பீ யில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

(www.sandanaya.lk) எனும் பெயரிலான இந்த இணையத்தளத்தை வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திறிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டத்திற்கு முரணானதல்ல -கனடியப் பொலிஸார் தெரிவிப்பு

ltte_flag.jpg
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கனடா தடைசெய்திருக்கின்ற நிலையில் இந்த வாரம் ரொரொன்ரோவில் தமிழ் சமூகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பொது புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டரீதியானதென கனடியப் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ரொரொன்ரோவில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர் . இலங்கை யுத்தம் தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையிலும் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு கனடிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுமே இந்த மனிதச்சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புலிகளின் கொடிகளை ஏந்தியிருந்தனர். அவ்வாறு கொடிகளை வைத்திருந்தமை கனடாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு முரணானதா என்பது குறித்து கனடாவின் சட்டத்திணைக்களம் ஆராய்ந்து வருவதாக நகரப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர். ஆனால், அது சட்டவிரோதமானதல்ல என்ற கருத்தை பொலிஸ் படை வழக்கறிஞர்கள் கொண்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மார்க்புகாஷ் கூறியுள்ளார்.

“எந்தவொரு சட்டத்திற்கும் முரணானதாக இது இல்லை’ என்ற கருத்தை எமது வழக்கறிஞர்களிடமிருந்து கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசு புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டதையடுத்து புலிகள் அமைப்பிற்கு அங்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது

பிரிட்டிஷ் பிரபல நடிகை பனிச்சறுக்கில் விழுந்து மரணம்

natasha-richardson.jpgபிரிட்டிஷின் பிரபல நடிகை நடாசா ரிச்சர்ட்சன் கனடாவில் பனிச்சுறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளை திடீரெனச் சறுக்கி விழுந்ததால் உயிரிழந்தார். 45 வயதான நடாசா கனடாவிலுள்ள பிரபல பூங்காவில் நேற்று முன்தினம் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கிழே விழுந்ததால் தலையில் கடும் காயம் ஏற்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தாங்க முடியாத வலியால் துடித்த அவரை கனடா நாட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அமெரி க்காவில் உள்ள நியூயார்க் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் நேற்றுக் காலை அவர் மரணம் அடைந்தார். நடாஷாவின் கணவர் நீசலும் நடிகராவார். அவர் நடாஷாவுடன் இருந்து அவரைக் கவனித்து வந்தார். நடாஷாவின் தந்தை டோனி சினிமா டைரக்டர் ஆவார். அவர் 1991ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.