23

23

இந்து ராணுவத்தை அமைத்து, துப்பாக்கி உரிமம் கொடுப்பேன் – வருண் காந்தி

20-varun-ganthi.jpgவருண் காந்தி இஸ்லாமியர்களையும், சீக்கியர்களையும் இழிவுபடுத்திப் பேசியதாக இன்னொரு புகார் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது. இந்தப் புகாரையும், முதல் புகாரைக் கொடுத்த பிலிபித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங்கே கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள சிடியில், இந்த தொகுதியில் ஒரு பைத்தியக்கார சீக்கியர் (வி.எம்.சிங்) போட்டியிடுகிறார். அவர் ஒரு முஸ்லிம் ஏஜெண்ட். அவரை ஆதரிக்கும் இந்துக்கள், இந்து மதத்தின் மாபெரும் துரோகிகள்.

இதுபோல், ரியாஸ் அகமது என்பவரும் போட்டியிடுகிறார். அவர் அப்பட்டமான பாகிஸ்தானி. இத்தகையவர்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்துவிட வேண்டும்.

எனக்கு முஸ்லிம்களின் ஓட்டு தேவையில்லை. இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் ஓட்டு போடாமல் இருப்பது, மதத்துக்கு துரோகம் செய்வது போன்றது. இந்து ராணுவத்தை அமைத்து, துப்பாக்கி உரிமம் கொடுப்பேன் என்று பேசியுள்ளாராம் வருண் காந்தி.

வருண் காந்தி மீதான இந்த தொடர் புகாரால் அடுத்தடுத்து பரபரப்பு கூடிக் கொண்டே இருக்கிறது.

ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்

ஊடக அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் அவர்களை நேற்று இரவு 8.30 மணியளவில் கைதுசெய்தனர். இவர் ‘மாற்றம்’ பத்திரிகையின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பொரலை கொட்டா வீதியில் வைத்து அவரை இராணுவத்தினர் கைதுசெய்தனர். அப்போது தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஆவணங்களை பாதுகாப்பு தரப்பிடம் சமர்ப்பித்தும் அவைகளை இராணுவத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோன்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையைக் காட்டிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொரலை பொலிஸ் நிலையம் அவரை விசாரணைக்குட்படுத்தி சரிகண்ட போதும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் கட்டாயத்தால் ஊடகவியாலாளர் எஸ்.எம். நஜீம் பொரலை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து ‘மாற்றம்’ பத்திரிகையின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையம் வந்து நிபந்தனைகளின் அடிப்படையில் இரவு 10.30 மணியளவில் விடுவித்துள்ளனர்.

ஊடக அடையாள அட்டை பாதுகாப்புத்தரப்பிடம் காட்டிய போதும் பாதுகாப்புத்தரப்பினர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்தாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டதாக ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் தெரிவித்தார். 

இலங்கை செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியப் பிரஜைகளுக்கு வேண்டுகோள்

uae-fla.jpgஇலங் கையில் யுத்த சூழல் உக்கிரமடைந்துள்ளதால் அத்தியாவசிய தேவையைத் தவிர, வேறெந்த காரணங்களுக்காகவும் இலங்கை செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியம், தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தற்போது வதியும் ஐக்கிய அரபு இராச்சிய பிரஜைகள், உடனடியாகத் தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு, தமது தொடர்பு இலக்கங்கள், முகவரிகள் போன்ற விவரங்களை அறியத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

வருண் காந்தி குற்றவாளி – வேறு வேட்பாளரை நிறுத்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

20-varun-ganthi.jpgமத உணர்வைத் தூண்டும் வகையில் வருண் காந்தி பேசியது உண்மையே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவரை தேர்தலில் நிற்க பாஜக தலைமை அனுமதிக்கக் கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி. உ.பி. மாநிலத்தில் உள்ள தனது தாயாரின் தொகுதியான பிலிபித்தில் போட்டியிடுகிறார்.

சமீபத்தில் அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக, துவேஷமாக பேசினார். கைகளை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று அவர் பேசியது மத வெறியைத் தூண்டும் வகையில் அமைந்தது. இதையடுத்து வருண் காந்தி மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறின. இதுதொடர்பான சிடிக்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தன் மீதான புகார்களை மறுத்தார் வருண் காந்தி. தனது பேச்சு திரிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வருண் காந்தி மீதான புகார்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்தது. இதன் இறுதியில், வருண் காந்தி மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியது உண்மையே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தனது 10 பக்க உத்தரவில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: இம்மாத தொடக்கத்தில் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் பேசிய பேச்சுகள், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான மிகவும் தரக்குறைவான, முற்றிலும் ஏற்க முடியாத பேச்சுகளாக உள்ளன.

மத உணர்வை தூண்டும்வகையில் பேசிய அவர், இந்த தேர்தலில் வேட்பாளராக நிற்க தகுதி அற்றவர். அவர் கோர்ட்டால் தண்டிக்கப்படாத சூழ்நிலையில், அவர் போட்டியிட சட்டப்படி தடை விதிக்க முடியாது என்று தெரியும். எனவே, வருண்காந்தியின் பேச்சில் உள்ள கருத்துகளை அங்கீகரிக்கவில்லை என்று பா.ஜனதா கூறி இருப்பதால், அக்கட்சி நடப்பு பாராளுமன்ற தேர்தலுக்கு வருண்காந்தியை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

வருண் காந்தி குற்றவாளி என்று மட்டுமே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் கோர்ட் மூலமாக அவர் இன்னும் குற்றவாளி என்று சொல்லப்படாததால் அவருக்கு போட்டியிட தடை விதிக்கப்படவில்லை. அதேசமயம், அவரை நிறுத்தக் கூடாது என பாஜகவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், எந்த விதியின் கீழ் தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியிருக்கிறது என்று தெரியவில்லை. இது ஒரு அறிவுரைதான், உத்தரவு அல்ல என்று கூறினார்.

புலிகளின் ஆட்பதிவுத் திணைக்களம் படையினர் வசம்

wanni_pic.jpgகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இரணைப்பளை பிரதேசத்தை கைப்பற்றிய படையினர் அங்கு புலிகளின் தலைவரினால் திறந்து வைக்கப்பட்ட தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலமைக் காரியாலயத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஆட்பதிவுதிணைக்களத்தை திறந்து வைத்த பிரபாகரன் முதலாவது அடையாள அட்டையை தானே உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கைப்ற்றப்பட்டுள்ள தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வன்னி குடியிருப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் படையினர் பெற்றுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி முதல் 50 ஆயிரம் சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை!

_mullai_1.jpgகடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த சனிக்கிழமை வரையில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து 50,000 சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்து 1164 பொது மக்களோடு மொத்தம் 50 ஆயிரம் பொது மக்கள் கடந்த ஜனவரி முதல் வந்து சோந்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் உணவும் வைத்திய சிகிச்சைகளும் வழங்கப்பட்ட பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார். 

புதுமாத்தளன் பிரதேசத்தில் காயமுற்ற 494 பேர் நேற்று புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்

navy_rescue_civil.jpgமுல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருதரப்பினரதும் தாக்குதலால் காயமடைந்த 494 பேர் நேற்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் புல்மோட்டை இந்திய வைத்தியர்களின் சிகிச்சை முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சுமார் 4000க்கும் மேற்பட்டோர் புல்மோட்டைக்கும் திருகோணமலைக்கும் ஏற்கனவே அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் 13 ஆவது முறையாக ஏற்றிவரப்பட்ட இக்குழுவில் 152 ஆண்களும் 216 பெண்களும் 126 சிறுவர்களும் அடங்கியிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சரக்கு விமானம்

japan-fli.jpgஜப்பானில் தரையிறங்கிய சரக்கு விமானமொன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பலியாகியுள்ளனர். குவாங்ஸொயுவிலிருந்து நரிடா சர்வதேச விமான நிலையத்தை திங்கட்கிழமை காலை வந்தடைந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தையடுத்து ஜப்பானின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக விளங்கும் மேற்படி விமான நிலையம் மூடப்பட்டது. அந்த விமான நிலையத்துக்கான பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டன.

த.தே.கூட்டமைப்பு – ஜனாதிபதி எதிர்வரும் வியாழனன்று சந்திப்பு

tna.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக இதற்கான அழைப்பை இன்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அனுப்பி வைத்துள்ளது.

அலரி மாளிகையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம் பெறும் என்றும் அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் “நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடவே இந்தச் சந்திப்பு என அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக எமது கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கும்”  என்று கூறினார்.

காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் – “சண்டே ரைம்ஸ்’

pullmottaiindiadoctors1.jpgஇலங் கையின் வட, கிழக்கு கடற்கரையில் (முல்லைத்தீவு) காப்பாற்றப்படுவதற்காக காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் காத்திருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகளை மேற்கோள் காட்டி “சண்டே ரைம்ஸ்’ சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.  இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த தமிழ் குடும்பங்கள் ஷெல் தாக்குதல்களுக்கு  அஞ்சி புதுமாத்தளன் கடற்கரையில் வெளியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.

அப்பகுதியிலிருந்து கடந்தவாரம் காயமடைந்த 460 பேரையும் அவர்களின் குடும்பத்தவர்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசன்’ கப்பலுக்கு உள்ளூர் மீனவர்களின் மர டிங்கிப்படகுகள் மூலம் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காக சனிக்கிழமை இரவு மீண்டும் கப்பல் அப்பகுதிக்கு திரும்பிச் செல்லவிருந்தது.

“நிலமை மிகவும் கவலைக்கிடமானது. தேவையிலும் பார்க்க மிக குறைந்த மட்டத்திலேயே ஆட்களை வெளியே அப்புறப் படுத்தக் கூடியதாக உள்ளது. யார் அதிகளவு காயமடைந்தவர்கள், எவர் சிறியளவு காயமடைந்திருக்கிறார்கள் என்றும் நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது’ என்று இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதி சோபி ரோமனன்ஸ் கூறியள்ளார்.

ஷெல், விமானத் தாக்குதல்களாலும் அல்லது மருத்துவ பராமரிப்பு இல்லாமலும் அல்லது உணவு, தண்ணீர் இல்லாமலும் பொதுமக்கள் பலியாவதாக உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன. அப்பகுதியிலிருந்த இறுதியான ஆஸ்பத்திரியும் மூடப்பட்டுவிட்டது.

புதுமாத்தளனில் ஒரேயொரு மருந்தகத்தில் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அங்கு காயமடைந்தவர்கள் தடித்த போர்வைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். மரக்கிளைகளில் கட்டப்பட்டு மருந்து ஏற்றப்படுகிறது. கடற்கரை வழியாக வெளியேற முயற்சிப்போர் தொகை கடந்த வாரம் அதிகரித்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களில் சிலர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த ஹியூகஸ் ரொ போர்ட்ஸே அங்குள்ள ஒரேயொரு வெளிநாட்டு மருத்துவ நிபுணராவார். 960 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் ஷெல், நிலக்கண்ணி, துவக்குச்சூடு என்பவற்றால் காயமடைந்தவர்கள் என்றும் அவர் சண்டே ரைம்ஸுக்கு கூறியுள்ளார். மூன்று வயது பிள்ளை முதல் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் காயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.