வட அமெரிக்காவின் மிசிகன் மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் அதே இடத்தில் இடம்பெற்றது
அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும், சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக, நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.
சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க் குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு வந்த தமிழ் மக்கள் காலை 8 மணி முதல் ஒன்று கூடி, லான்சிங் தலைமை அலுவலக கட்டிடத்தின் முன் குவிந்து சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளை கண்டித்து தமது ஆர்ப்பாட்டத்தினை நடாத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
‘Sinhala Terror Government,’
‘Rajapakse a war criminal,’
‘President Obama, help the Tamils,’
‘UN, save the Tamils,’
‘LTTE, our freedom fighters,’
‘Prabhakaran, our national Leader,’
‘Media break the silence’
ஆகியவாறு சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான தமது கோபத்தினை வெளிப்படுத்தும் முகமாக உரக்க கோஷங்களை எழுப்பியபடி இவ் ஆர்ப்பாட்டத்தினை தமிழ் மக்கள் நடத்தினர்.
இதே போன்றதொரு முரண்பாடு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றது. உலகில் ஏனைய பாகங்களில் போன்று யுத்தமும் அது உந்திவிட்டுள்ள தேசியவாத அலை தற்போது இனவாதமாகப் பரவுகிறது. இதனை தற்போது புலம்பெயர்ந்த நாடுகளிலும் உணரக் கூடியதாக உள்ளது. லண்டனில் விகாரைக்கு வைக்கப்பட்ட தீ தமிழ் அரச ஆதரவு (பெரும்பாலும் சிங்கள மக்களின்) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் புலி ஆதரவு (பெரும்பாலும் தமிழ் மக்களின்) ஆர்ப்பாட்டக் காரர்களுக்குமிடையேயான மோதல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.
வன்னியில் மனித அவலத்தில் இருந்து மீண்டுள்ள மக்களை நோக்கி இனவேறுபாடற்ற உதவிகளை அனைத்து மக்களும் முன்னெடுக்க புலம்பெயர்ந்த நாடுகளில் அந்த மக்களின் பெயரால் தேசியவாதமும் இனவாதமும் தலைக்கேறி மோதல்கள் தலைதுக்குகின்றன.
ஒரு பக்கத்தில் மனிதம் அழிந்து கொண்டிருக்க அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளைக் கைவிட்டு வெற்றி – தோல்விக்காக பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் அந்தத் தளத்தில் உள்ள மக்கள் யதார்த்தத்தைப் புரிந்த கொண்டு எதனைச் செய்ய வேண்டுமோ அதனை முன்னெடுக்கிறார்கள்.