ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளின் மாணவர்களுக்கான புதிய விசா நடைமுறையொன்றை பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. குடிவரவை கட்டுப்படுத்துவதும் மோசடிகளைத் தடுப்பதுமே இந்த புதிய நடைமுறைக்கான நோக்கமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புள்ளி அடிப்படையிலான விசா வழங்கும்திட்டத்தின் நான்காவது படிமுறையின் ஒரு அங்கமாக கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய ஏற்பாடுகள் விசா வழங்கும் செயன்முறைகளை எளிதாக்கும் என்பதுடன் கூடுதலான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடையதாகவும் குடிவரவு முறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதாகவும் அமையும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜாக்குயி சிமித் கூறியிருக்கிறார்.
வெளிநாட்டு மாணவர்களை ஆட்திரட்டும் பிரிட்டனில் உள்ள சகல கல்வி வழங்கும் நிறுவனங்களும் ( பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்) நேற்றுமுதல் பிரிட்டனின் எல்லை பாதுகாப்பு அமைப்பிடம் (UK Border Agancy) தங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனுசரணையாளர்களாகுவதற்காக (Licensed Sponsors) 2,100 க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும் சுயாதீன பாடசாலைகளும் கல்லூரிகளும் விண்ணப்பம் செய்திருக்கின்றன.
பிரிட்டனில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய விசா நிபந்தனைகளுக்கு இசைவாக நடப்பதை உறுதிசெய்துகொள்ளும் பொறுப்பு இனிமேல் இந்தக்கல்வி நிறுவனங்களினுடையதே. எந்தவொரு மாணவரும் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனமொன்றிடமிருந்து நிபந்தனையற்ற முறையில் தனக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
தனது கற்கை நெறிக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பிரிட்டனில் தங்கியிருந்து கல்விகற்கும் காலகட்டத்தில் தனது வாழ்க்கைச் செலவுக்கும் போதுமான நிதி தன்னிடம் இருப்பதை மாணவர்கள் சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியதும் அவசியமாகிறது.
குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பதற்கான விசாவே வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேலான கற்கைநெறி என்றால் அதைப் பூர்த்தி செய்வதற்கான முழுக்காலகட்டத்துக்கும் விசா வழங்கப்படும்.
பிரிட்டனில் கல்வி கற்பதற்கு செல்கின்ற வெளிநாட்டு மாணவர்களும் அவர்களைக் கற்பிப்பவர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதை புதிய நடைமுறை உறுதிசெய்யும். பிரிட்டனில் கல்விகற்பதற்கு உண்மையில் யார் வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் போலி கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் புதிய விசா நடைமுறை அனுமதியளிக்கிறது என்று உள்துறை அமைச்சர் சிமித் தெரிவித்திருக்கிறார்.