பிரிட்டனில் இருந்து உணவு மற்றும் மருந்துப் பொருள்களுடன் “வணங்கா மண்” என்ற கப்பல் வன்னிக்கு வருவதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து, கடற் படையினர் உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். கடற்படை வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.
வன்னி மக்களுக்காக லண்டன் வாழ்.புலம்பெயர் தமிழ் மக்கள் வழங்கிய உதவிப் பொருள்களுடன் வணங்கா மண் இந்த மாத ஆரம்பத்தில் வன்னி நோக்கிப் பயணிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று புறப்படவுள்ளமை தொடர்பாக அங்கிருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் நிவாரணக் கப்பல்களைக் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தியிருப்பதால், இந்தக் கப்பல் குறித்தும் தாம் கூடுதல் அக்கறை செலுத்தியிருப்பதாகவும், இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் உயர்ஸ்தானிகராலயம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யயப்பட்ட நிகழ்வில் உத்தியோகபூர்வமாக கப்பலில் பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன என்று லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் “ஏசிரி நவ்” என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை அரசின் இணக்கத்தை பெற்ற பின் கப்பல் வன்னி நோக்கிப் புறப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இலங்கை அரசின் இணக்கத்தை நேற்று வரை பெறமுடியவில்லை. அநேகமாக கப்பல் இலங்கைக்குள் செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம் என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அர்ஜுன் எதிர்வீர சிங்கம் தெரிவித்தார்.சர்வதேச ரீதியிலான விண்ணப்பத்தை ஆரம்ப நிகழ்விலேயே விடுத்திருந்தோம் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை குறிப்பிட்ட கப்பல் அனுமதியின்றி இலங்கைக் கடற்பகுதிக்குள் பிரவேசிக்குமானால் அதன் மீது சுடுவோம் என கடற் படை எச்சரித்துள்ளது.