03

03

உத்தேச மாலபே தனியார் பல்கலைக்கழகம் 30 வருடங்களின் பின்னர் அரசிடம் கையளிக்கப்படும்

pr-con-02042009.jpgமால பேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம்  30 வருடங்களின் பின்னர் இலங்கை உயர் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்படும். அமைச்சினால் நியமிக்கடும் செயற்குழு அதனை  நிருவகிக்கும் என பொது நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும்; உரையாற்றுகையில், மாலபேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம் காரணாக இலங்கையில் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று  பிழையான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இது எதுவித ஆதாரமுமற்று வெறும் யூகமாகும்.

ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஐந்து மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இந்த இநத தனியார்  பல்கலைக்கழகத்தில் பல்கலை அனுமதி பெறாத 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி புகட்டப்படும். இந்த பல்கலைக்கழக அனுமதியில் ஐந்த வீதம் படை வீரர்கள் மற்றும் சமுர்த்தி உதவி பெறுவோரின் பிள்ளைகளுக்காக ஒதுக்கப்படுவதோடு இவர்களுக்கு இலவசமாக கல்வி போதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு – இதுவரை இணக்கம் காணப்படாத முக்கிய விடயங்களில் உடன்பாடு

இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றைத் தயாரிப்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே இதுவரை இணக்கம் காணப்படாத முக்கிய விடயங்கள் சிலவற்றுக்கு இவ்வாரம் நடைபெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

எஞ்சிய விடயங்களுக்கு அடுத்தவார கூட்டத்தில் இணக்கப்பாடொன்றை எட்டிவிடலாமென நம்புவதாகவும் பேராசிரியர் விதாரண தெரிவித்தார். அரசியல் தீர்வு யோசனையொன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஏற்கனவே 95% விடயங்கள் தொடர்பில் பொது இணக்கப்பாட்டைக் கண்டுள்ளது.

இதில் ஏனைய விடயங்களிலும் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வாரா வாரம் கூடி கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் இவ்வாரம் நடைபெற்ற கூட்டத்தில் மேலும் சில விடயங்களுக்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

மீதமாகவுள்ள விடயங்களுக்கும் பொது இணக்கம் ஏற்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக பேராசிரியர் விதாரண தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்தக் கட்சிகளினதும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் உள்ளடக்கி தீர்வுத் திட்ட வரைவொன்றைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கௌரவ கலாநிதி பட்டம்

arrahma.jpgஒஸ்கார் விருது பெற்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக் கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கத் தீர்மானித்துள்ளது.  மிடில்செக்ஸ் பல்கலையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோ விக்டர், சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவர் ஆரம்பித்துள்ள இசைப் பள்ளியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது எதிர்வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் பல்கலைக்கழக விழாவில் ரஹ்மானுக்கு கலாநிதி பட்டம் வழங்க உள்ளதாக ஜோ விக்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தி்னால் இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் வவுனியா கிளைக்கு வழங்கப்பட்டுள்ளன.

slrc.jpgஇலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் வவுனியா கிளைக்கு இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் இன்று வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா கிளையினர் தெரிவித்தனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா பிரதேசத்திற்கு வந்துள்ளவர்களின் பயன்பாட்டிற்காக 12.6 மில்லியன் ரூபா பெறுமதியான அம்புலன்ஸ் வண்டிகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைத் தலைவர் டாக்டர் பி.சத்தியலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்ற அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு வைபவத்தில் தாய்ச்சங்கத்தின் செயலாளர் எஸ்.எச்.நிமல்குமார் அவறிற்குரிய ஆவணங்களை வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கையளித்தார்.

கடந்த வருடம் 880 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகள்- இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தகவல்

dammika_perera_.jpgஇலங் கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடம் 880 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் இலங்ககைக்குக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுகாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு முதலீட்டுச் சபைத் தலைவர் தொடர்ந்தும்; உரையாற்றுகையில்,

இலங்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும் அதனால் பெருந்தொகையானோர் வேலையிழந்திருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை.

கடந்த 2008 ஜனவரி மாதம் முதல் 2009 மார்ச் மாதம் வரையில் இலங்கையில் 50 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆனால் 93 புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த வருடத்தில் 7000 பேருக்கு இத்தொழிச்சாலைகளில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவ்வருடம் 10 ஆயிரம் பேருக்கான வெற்றிடம் உள்ளது. இதனை எமது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறினார். 

தீர்மானங்கள் எடுக்கும் போது தொழிலாளர் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் – உப குழுவின் பரிந்துரைக்கு இ.தொ.கா பதில்

பெருந்தோட்டங்கள் சம்பந்தமான தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது, அங்கு நிரந்தரமாக வாழும் தோட்டத் தொழிலாள சமூகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

இலங்கையிலுள்ள பெருந்தோட்டங்கள் சம்பந்தமாகவும் பெருந்தோட்ட கம்பனிகள் சம்பந்தமாகவும் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் முடிவுகள் அத்தோட்டத்தையே நம்பி வாழும் பல தலைமுறையைச் சேர்ந்த நிரந்தர தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை, சமூக சேவைகள் மற்றும் நிரந்தர குடியுரிமை எதையுமே கருத்திற்கொள்ளாது வெறுமனே கம்பனிகளின் காணிகளை அளவிட்டு அவற்றை சிறு தேயிலை தோட்டக்காரருக்கு பகிர்ந்தளிக்கலாம் என பரிந்துரை செய்திருப்பது மிகவும் வேதனையும் வருத்தமுமளிப்பதாகவும் உள்ளது.

அமைச்சரவை உப குழுவின் கருத்துகள் முழுமையாக கிராம மக்களின் நலனுக்காகவே அமைகின்றது. 170 ஆண்டு காலமாக தோட்டங்களில் வாழும் தோட்ட தொழிலாளர்களின் நலன் பற்றி அவ்வறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, உப குழுவின் பரிந்துரை எவ்வாறு இருந்தாலும், ஜனாதிபதி தோட்ட மக்களின் நலன்கள் பாதிக்காத வண்ணம் செயற்படுவார் என்ற நம்புக்கை உண்டு.

சிறு தோட்ட விவசாயிகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் போது அங்கு நீண்ட தலைமுறையாக வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களையும் தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.