06

06

உடனடியாக 20,000 பேர் இடம்பெயர்ந்து வவுனியா வருவர் என எதிர்பார்ப்பு

risadbadurudeen.jpgவன்னிப் பகுதியில் இருந்து மேலும் 20 ஆயிரம் பேர் உடனடியாக இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வருவார்கள் என அதிகாரிகள் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே 50 ஆயிரம் பேர் வவுனியாவுக்கு வந்திருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வருபவர்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு வருபவர்களுக்கான தங்குமிடம், அடிப்படை வசதிகள் என்பவற்றைச் செய்து கொடுப்பது தொடர்பாக இன்று வவுனியா செயலகத்தில் அரச அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் கலந்து கொண்டார். இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி பிரிகேடியர் எல்.சி.பெரேராவும் இந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலைகள் எவை என்பது பற்றிய விபரங்களை அமைச்சர் வெளியிடவில்லை. எனினும், அந்தப் பாடசாலைகளில் மலசலகூடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களுக்கும் உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நாளை

அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுன் மாகாண சபைகளின் கருத்தை அறிந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாளைய விசேட செயலமர்வில் இச்சட்டதிருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

புதிய உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கிணங்க , உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார ரீதியில் அதிக வாக்குகளைப்பெறுபவருக்கே வெற்றி என்ற அடிப்படையில் நடத்தச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கைவிடப்படுகிறது.

இலங்கை இராணுவத்திடம் மனித நேயம் இல்லாவிட்டால் வன்னியில் எஞ்சியுள்ள பகுதி துவம்சமாக்கப்பட்டிருக்கும் – அமைச்சர் டலஸ்

dalas_alahapperuma.jpgமனித நேயம் மிக்க இலங்கை இராணுவத்திடம் மனித நேயம் குறித்து சர்வதேச இராணுவங்கள் பாடம் கற்க வேண்டும். அந்தளவுக்கு யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் மனித நேயம் பேணுகின்றது. இந்த மனிதநேயத்தின் காரணமாகவே வடக்கில் எஞ்சியுள்ள கிலோமீற்றர் பிரதேசத்தை இராணுவம் தாக்கி துவம்சம் செய்யாமல் பொறுமையாக செயல்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப் பெரும தெரிவித்தார்.

பலாங்கொடை டிப்போவை 37 ஆவது மாதிரி டிப்போவாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது,

கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒசாமா பின் லேடன் சிக்கியிருந்தால் மேற்கு நாடுகளின் இராணுவங்கள் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமா? இலங்கை இராணுவம் தமிழ்ப் பொது மக்களைப் பாதுகாப்பதற்காக மிகவும் மனித நேயத்துடன் பண்புடன் செயல்படுகிறது.  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க உட்பட சர்வதேச உலகமும் புலிகளைத் தோற்கடிக்க முடியாது எனக் கூறி அவர்களுக்கு தாயகத்தின் ஒரு பகுதியை தாரை வார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கையில் நாட்டின் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ஷ இந்த யுத்தத்தை எமது இராணுவத்தால் வெற்றி கொள்ள முடியுமென திடசங்கற்பம் பூண்டு முப்படைகளையும் வழிநடத்தி இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை எமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பயங்கரவாதிகளான அல்ஹைடா அமைப்பிடம் கூட விமானங்கள், நீர்மூழ்கிகள், பயங்கர ஆயுதங்கள் இருக்கவில்லை. ஆனால் யாருமே நினைத்தும் கூட பார்க்க முடியாத அளவில் ஆயுத மயப்பட்ட புலிகளை எமது இராணுவம் வெற்றி கொண்டமை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். நாம் எந்தளவு வெற்றிகளை அடைந்தாலும் அவை சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. சகல இன மக்களும் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டும். சிறுபான்மை சமூகங்களை அடக்கிய உலகில் எந்த நாடும் முன்னேறியதில்லை.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை எதிர்த்து புலம்பெயர் தமிழர் கிளர்ந்தெழ வேண்டும் : பழ.நெடுமாறன்

neduma2.jpgவன்னியில் பாதுகாப்பு வலயம் மீது படையினர் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருமே கிளர்ந்தெழ வேண்டும் என பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் அவர்களே உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், தமிழ்-சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, இலங்கை அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியத் தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.  புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கை அரசை வலியுறுத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். 

யுத்த சூழல் நீங்கியதும் அரசியல் தீர்வு – அமைச்சர் மைத்திரிபால தெரிவிப்பு

srisena.jpgதற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும்; அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும்; அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இன்று மட்டக்களப்பில் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில

சுமார் 25 வருடங்களின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வடக்கு-கிழக்கு மக்களுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்த போதிலும் யுத்த சுழ்நிலை காரணமாக துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் அந்தத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

யுத்தத்திற்கு இன்னும் சில நாட்களில் முடிவு கட்டப்பட்டுவிடும். அடுத்து அரசியல் தீர்வு முன் வைக்கப்படும். எப்படியான அரசியல் தீர்வு என்பதைப் பற்றி தற்போது ஆராய்ந்து வருகின்றோம் எனக் கூறினார்.

குருக்கள் மனைவி கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிராக எதிரி மேன்முறையீட்டு மனு

திருகோணமலை கோணேசர் ஆலய குருக்கள் மனைவி கொலை வழக்கில் மேல் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு எதிராக எதிரி மேன்முறையீடு செய்துள்ளர். இந்த ஆலய முன்னாள் பிரதம குருக்கள் சிவகடாட்சக் குருக்களான விசாகேஸ்வர ஐயர் மீது அவரின் மனைவி அம்பிகாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவில் எதிரியை குற்றவாளியாகக்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டு அரை மணித்தியாலத்தில் எதிரியின் மேல் முறையீட்டு மனுவை சட்டத்தரணி கே. எம். தில்லைநாதன் தாக்கல் செய்திருந்தார்

குற்றச்சாட்டு நியாயமான அளவு சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை எனவும் அம்பிகாவின் மரணம் தொடர்பாக நிரூபிக்கப்படவில்லை எனவும், மேன் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசு தரப்பு சாட்சியான பாலமுரளி சர்மா என்பவரின் சாட்சியம் ஒப்புறுதி செய்யப்படவில்லை என்ற காரணமும் மேன் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் பூமியதிர்ச்சி 70 பேர் உயிரிழப்பு! இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

italyearthquake.jpgஇத்தா லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று அதிகாலை இடம்பெற்ற பூமியதிர்ச்சியால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது

பூமியதிர்ச்சியின் வேகம் 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் பெரும் எண்ணிக்கையிலான  வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் இந்தத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவணம்  செலுத்திவருகிறது.

நலன்புரி நிலைய முகாமைத்துவ உதவியாளர்களாக இடம்பெயர்ந்து வந்துள்ள இளைஞர் யுவதிகள்.

வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நலன்புரி நிலையங்களில், தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் 110 பேர் அந்த நிலையங்களின் முகாமைத்துவ உதவியாளர்களாக மீள்குடியேற்ற அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.  இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வைபவரீதியாக வவுனியா செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டன.

இடம்பெயர்ந்த மக்களின் இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த 110 பேரும் ஏற்கனவே இந்த நிலையங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் தொண்டர்களாகப் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இடைத்தங்கல் நிலையங்களின் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள கிராமசேவை அதிகாரிகளுக்கு இந்த உதவியாளர்கள் பல்வேறு பணிகளிலும் உதவிபுரிவார்கள் என்றும், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சுகாதாரம், தண்ணீர் மற்றும் மின்சாரம் என்பவற்றைப் பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தும் வழிவகைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றும்  மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்தார்.

இடைத்தங்கல் நிலையங்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நாளாந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களீல் இன்று இலங்கை அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

mohamed-kaleel.jpgஇலங்கை வந்துள்ள பாகிஸ்தான் சாரதி  மெஹர் மொஹமட் களீல் இன்று இலங்கை அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார். இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற களீலின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகே உட்பட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் வைத்து பயங்கரவாதிகள்; துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது மொஹமட் களீல் துணிச்சலுடன் வாகனத்தைச் செலுத்தி கிரிக்கெட் விரர்களைக் காப்பாற்றினார்.

குடும்பத்துடன் ஒரு வார காலத்துக்கு இங்கு தங்கியிருக்கும் அவர் கண்டி, நுவரெலியா உட்பட பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளார். இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவரும் அவருக்கு விருந்துபசாரம் ஒன்றை நடத்தவுள்ளார். 

ஆபிரிக்கா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோ மீது ஏறி கவனயீர்ப்பு போராட்டம்

kilimanjarociegos.jpg வன்னி மக்களின் துன்ப துயரங்களை உலகறியச் செய்வதற்காக ஈழத் தமிழ் இளைஞரொருவர் ஆபிரிக்க கண்டத்திலுள்ள மிக உயரமான “கிளிமஞ்சாரோ’ என்ற மலையிலேறி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். யாழ். குடாநாட்டைச் சேர்ந்த கீரன் அரசரட்ணம் (33 வயது) என்பவரே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆபிரிக்காவில் தன்சானியாவிலுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,891.8 மீற்றர் (19,330 அடி). இந்த மலை மீதே அவர் நேற்று முதல் ஏறத் தொடங்கியுள்ளார்.

தனது 13 ஆவது வயதில் பிரிட்டனுக்குச் சென்று அங்கு பட்டப் படிப்பை முடித்து தற்போது லண்டனில் வங்கியொன்றில் பணியாற்றி வரும் இளைஞரே வன்னி மக்களின் அவல நிலையை முழு உலகிற்கும் எடுத்துக் கூறுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வன்னி மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் வன்னி நோக்கி புறப்படவுள்ள “வணங்காமண்’ கப்பலுக்காக இந்த முயற்சியின் மூலம் நிதி சேகரிக்கவும் கீரன் திட்டமிட்டுள்ளார்.