08

08

யாழ் தேவி இன்று முதல் வவுனியா வரையில் சேவை!

bati-trnco.jpgதமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு யாழ் தேவி ரயில் இன்று மீண்டும் வவுனியா வரைக்கும் சேவையில் ஈடுபட்டது. பாதுகாப்பு கரணங்களை முன்னிட்டு இச்சேவை முன்னர் மதவச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று காலை 5 :45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட யாழ்தேவி கடுகதி ரயில் முற்பகல் 10.10 மணக்கு வவுனியாவை அடைந்தது. இன்று மாலை வவுனியாவிலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்ளம் அறிவித்துள்ளது. இன்று முதல் தினமும் காலை 5.45 மணிக்கு யாழ் கடுகதி வவுனியா வரையில் சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டென்மார்க் வெளிவிவகார அமைச்சகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர் கைது

denmark.jpgடென்மார்க்கில் வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மோதல்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து

நேற்று மாலை 5 மணிவரை டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்த பொலிஸார் அனுமதி வழங்கி இருந்தனர். எனினும் குறித்த நேரத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியேற மறுத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் -வைகோ

vaiko-black-flag.jpgஇலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

சென்னையி்ல் நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வைகோ பேசுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றார். இனப்படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தமிழர்கள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இராமநாதபுரம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக்குண்டுதாரி நடத்திய இந்தத் தாக்குதலில் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதிக்கு வந்த யுவதியொருவர் மீது சந்தேகம் கொண்ட படையினர், அவரை தடுத்து நிறுத்திய போது, அவர் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை வெடிக்கவைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளார். எனினும், ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் அந்த யுவதி அங்கு வந்ததாகவும் எனினும் அங்கிருந்த படையினர் அந்த யுவதியின் திட்டத்தை குழப்பிவிட்டதாகவும் படையினர் கூறுகின்றனர்.

ஈழத்தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்: திருமாவளவன்

thiruma_8-4.jpgமக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்று, ஈழத் தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர்,

சிதம்பரம் தொகுதியில் நான் 3வது முறையாக போட்டியிடுகிறேன். ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் பெரும்பாலான மக்களின் நன்மதிப்பையும், மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றேன். எனவே, மக்கள் வெற்றிவாய்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கையிலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையிலும் மீண்டும் 3வது முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளேன். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக, இந்த தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். எங்களிடம் தற்போது அரசியல் அதிகாரம் இல்லை. எனவே, இலங்கை தமிழர் பிரச்சனையை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று, நாடாளுமன்றம் செல்வோம். அங்கு இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து வலியுறுத்துவோம்.

அரசியலமைப்பு பேரவையை அமைப்பதில் இழுபறி நிலை – ரணிலுக்கு பிரதமர் விளக்கம்

parliament.jpg அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான உறுப்பினர்களின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சபையை நியமிப்பதற்கு எந்தத் தடங்கலும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு பெயர்களை சிபார்சு செய்திருப்பதால் மட்டுமே அரசியலமைப்பு சபை நியமித்துவிட முடியாதென்றும் அந்தப் பெயர்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

இதேநேரம், சிறிய கட்சிகள் சார்பாக அரசியலமைப்பு சபைக்கு பெயர்களை சிபார்சு செய்யும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா இதன்போது சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் அரசியலமைப்பு சபை நியமனம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையை அடுத்து ஏற்பட்ட வாத பிரதிவாதங்களில் இவ்வாறான கருத்துகள் வெளியிடப்பட்டன.

இன்று ஜே.வி.பி. கொழும்பில் ஆர்ப்பாட்டம்

jvp-0804.jpgமக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகக் கோஷமெழுப்பினர்.

இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:

“மேல் மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எமது கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை உக்கிரமடைந்து எமது கட்சி ஆதரவாளர் ஒருவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்களாகியும், பொலிஸார் ஒரு சந்தேகநபரைக் கூட இதுவரை கைது செய்யவில்லை. தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறியின் வாகனத்தில் வந்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அனைத்து சாட்சியங்களுடன் இதனை நாம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளோம்.

அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக பொலிஸார் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எமது கட்சியை அழிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் அரசாங்கத்திற்கு நாம் சரியான பாடம் புகட்டுவோம்”. இவ்வாறு அவர் கூறினார். 

இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள்

அண்மையில் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதியான லோரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

பெருந்தொகையான ஆயுதங்கள் புதுக்குடியிருப்பில் மீட்பு – பாதுகாப்பு அமைச்சு

puthukuduirruppu_.pngபுதுக் குடியிருப்பு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் நேற்றும் நேற்று முன்தினமும்  மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள புதுக்குடியிருப்பில் படையினர் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தேடுதலின் போது நம்பமுடியாதளவு பெரும் எண்ணிக்கையான புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையின்போது படையினர் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகளது சடலங்களின் ஒருதொகுதியான 72 சடலங்களை படையினர் இப்பிரதேசங்களிலிருந்து மீட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார் 

பாதுகாப்பு வலயத்தில் பாரிய வெடிச்சப்தம்!

map_pudumathalan.jpgபுலிகளின் பிடியிலுள்ள பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடிச் சப்தம் கேட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களை விடுவிக்குமாறு ஒலிபெருக்கிகள் மூலம் புலிகளுக்கு படையினர் இறுதி எச்சரிக்கை விடுத்தபின்னரே இந்த பாரிய வெடிச் சப்தம் கேட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.