11

11

பிரித்தானியாவில்,போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

இலங் கையில் உடனடியானதும், நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரித்தானியா நேரப்படி இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகியது.

ceasefire.jpg

இப்பேரணியில் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நீண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தப்பட்டது. இந்த ஊர்வலம் பிரித்தானிய தமிழர்கள் தமது ஆதங்கத்தை பிரித்தானிய அரசக்கும் தமது எதிர்ப்பை இலங்கை அரசக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வன்னியில் யுத்த யுத்த்ததை நிரந்தரமாக நிறுத்தும்படி வற்புறுத்தியது.

சித்திரைப் புதுவருட காலத்தில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்.

igp-sl.jpgஎதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருட காலப்பகுதியில் புலிகளினால் மேற்கொள்ளப்படக் கூடிய நாசகார தாக்குதல்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஜயந்த விரமரட்ண பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

68, 863 மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு வருகை

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் கட்டுப்பாட்டை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் 200 பொது மக்கள் இன்று (ஏப். 11) காலை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பித்து இதுவரையில் 68, 863 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி மக்கள் பாதுகாப்பாக  அரச கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான வழிகளை படையினர் அடையாளப்படுத்தி காட்டியுள்ளதாகவும் இதற்கென ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தல்களை தொடர்ந்து ஒலிக்க விட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கும் பெல்ஜியத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

chamal-rajapaksha.jpgகப்பல் சிப்பந்திகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கைக்கும் பெல்ஜியத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார். இதன்மூலம் பெல்ஜியத்தில் கப்பல் பணியாளர்களாக வேலை செய்வதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ். மாவட்டத்தில் நேற்று 47.8 மில்லிமீற்றர் மழை

lighting.jpgயாழ். மாவட்டத்தில் நிலவிய கடும் வரட்சிக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை கடும் மழை பெய்துள்ளது. காலை ஆறு மணி முதல் மாலை மூன்று மணி வரையான காலப்பகுதியில் 47.8 மில்லிமீற்றர் மழை பெய்திருப்பதாக திருநெல்வேலி வானிலை ஆய்வுநிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவும் அதேவேளை, யாழ். மாவட்டத்திலும் கடும் மழை பெய்திருப்பதாகவும் குடாநாட்டில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் தொடர்ந்து மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழை சிறுதானிய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பெரும் நன்மை பயக்குமென தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு வலயத்திலுள்ளோர் பெரும் அவலம்

rain-wanne.jpgதற்போது தொடரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் மேலும் கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் பா. பார்த்தீபன் தெரிவித்துள்ளதுடன், சிறுவர்களே இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இடைநிலை காலநிலையினால் முல்லைத்தீவிலுள்ள புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் மழை பெய்தது.

அதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை பரவலாக தொடராக மழை பெய்துவருகின்றது. இதனால் இடம்பெயர்ந்து கூடாரங்களில் உள்ள மக்கள் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கூடாரங்களிலுள்ள துவாரங்கள் காரணமாக ஒழுக்கு ஏற்பட்டு சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உணவுப் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் கடந்தவாரம் கப்பலில் வந்த 110 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றோம். மேலும், உணவுப் பொருட்கள் தேவையாகவுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் கப்பல் திருமலை திரும்பியது

புதுமாத்தளன் பகுதியிலுள்ள அவசரமாக சிகிச்சை பெற வேண்டிய நோயாளர்கள் மற்றும் காயப்பட்டவர்களை புல்மோட்டைக்கு அழைத்துவரும் நோக்கில் புறப்பட்ட சேருவில கப்பல் சீரற்ற காலநிலை காரணமாக திரும்பிவிட்டது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு திருகோணமலையிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வழித்துணையுடன் சேருவில கப்பல் சென்றது. இக்கப்பல் நேற்று காலை 7 மணியளவில் புதுமாத்தளன் கரையை அடைந்ததாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர் ரி. வரதராஜா தெரிவித்தார்.

எனினும், காலநிலை சீரின்மையால் கடல்கொந்தளிப்பையடுத்து நோயாளர்களையும் காயப்பட்டவர்களையும் கப்பலில் ஏற்றுவது சிரமமானதென்பதால் அக்கப்பல் பிற்பகல் 2 மணிக்கு திருமலை நோக்கி புறப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, புதிதாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை இக்கப்பலில் கொண்டுவரப்படும் அவசர மேலதிக சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவோருக்கென புல்மோட்டை கள வைத்தியசாலை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நாவுடன் விடுதலை புலிகளுக்குத் தொடர்பு:அரசாங்கம்

un-logo.jpgவன்னியில் விடுவிக்கப்படாதிருக்கும் பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் விடுதலைப் புலித் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பில் உள்ளமை தெரியவந்திருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களிடம், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் முல்லைத்தீவிலுள்ள பாதுகாப்பு வலயத்தில் இருந்துகொண்டு ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர் எனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன” என ஜனாதிபதி செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அதிகாரிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொலைபேசியில் நடந்த உரையாடலுக்கு நோர்வே ஏற்பாடு செய்து கொடுத்ததாக வெளியான குற்றச்சாட்டுக்களை நோர்வேக்கான தூதுவர் மறுத்திருந்தார். இந்த நிலையிலேயே விடுதலைப் புலிகளுக்கு இன்னமும் ஐ.நாவுடன் தொடர்பிருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இலங்கை தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்…- விஜயகாந்த்

vijayakanth1.jpgஇலங்கை தமிழர்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். அவர்களின் நலனுக்காக வரும் 14ம் தேதி சார்பில் தேமுதிகவினர் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள் என கட்சி தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேமுதிகவினர் இலங்கை தமிழர்களுக்காக மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் இருந்தனர். அறிவழியில் போராட்டம் நடத்தினர்.

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டு இலங்கை ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. லட்சக்கணக்கான தமிழர்களை இடம் பெயரச் செய்து துன்புறுத்திகிறது. தற்போது யுத்தப்பகுதியில் இருக்கும் சுமார் 1 லட்சம் தமிழ் மக்களை சுட்டுகொன்று மிகப்பெரிய மனித பேரழிவை இன்னும் சில நாட்களில் நடத்தவுள்ளது.

தமிழக அரசோ முதல்வர் கருணாநிதி தலைமையில் பேரணி நடத்துவதும், மத்திய அரசுக்கு மனுபோடுவதும், இலங்கை இறையாண்மையில் இந்திய அரசு தலையிட முடியாது என்றும் தெரிவிக்கிறது.

சோனியாகாந்தி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி போல் செயல்பட வேண்டுமென்று கூறிவிட்டு, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அடையாளப்படுத்தி கொண்டார்.

விமான சேவையை நிறுத்து…

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்திய அரசு விமான போக்குவரத்தை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படாத நிலையில் தமிழினத்திற்கு மிகப்பெரிய வரலாற்று துரோகத்தை இழைத்து வருகின்றன. ஒருபுறத்தில் ஐயோ என்று கதறும் இலங்கை தமிழ் மக்கள், மறுபுறத்தில் ரத்த கண்ணீர் மட்டுமே வடிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.

இலங்கை தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்…

இலங்கை தமிழ் மக்களை காப்பாற்ற எனக்கு தெரிந்த ஒரேவழி, கடவுளிடம் வேண்டுவது தான். இனி ஆண்டவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.

இலங்கை தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் தமிழ்நாட்டு மக்கள் இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆலயங்களிலும், மசூதிகளிலும், மாதாகோவில்களிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையையும், உணர்வையும் உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ரு கேட்டுக்கொள்கிறேன். ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பது பழமொழி என்றார் விஜயகாந்த்.

பாதிக்கப்பட்ட யாழ். மாவட்ட அரச ஊழியர்களுக்கு முற்பணம்

sarath-amunugama.jpgயாழ்ப் பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெய்த கடும் மழை மற்றும் கடும்புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்ட அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சமர்ப்பித்திருந்தார். இதன்படி பாதிக்கப்பட்ட யாழ். மாவட்ட அரச ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் முற்பணமாக வழங்கப்படும். இந்தத் தொகையை அவர்கள் 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.