._._._._._.
தற்போதைய இலங்கை நிலவரம் தொடர்பாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நீதிபதி நிஹால் ஜெயசிங்கேயை தேசம்நெற் க்காக நேர்காண்டிருந்தோம் அதன் தொகுப்பு இங்கு பதிவிடப்படுகிறது. மார்ச் 24 இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்காணலில் தேசம்நெற் சார்பில் த ஜெயபாலன் ரி சோதிலிங்கம் ஆகிய இருவரும் உயர்ஸ்தானிகர் நீதிபதி நிஹால் ஜெயசிங்க மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடகப் பொறுப்பாளர் கபில ஆகியோர் பங்கேற்றனர். 90 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நேர்காணலின் போது உயர்ஸ்தானிகர் ஆயுதப் போராட்டத்தின் முன் தமிழ் பிரதேசங்களுக்கு தான் பயணித்த தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
._._._._._.
தேசம்நெற்: இன்றைய யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தனது சொந்த மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஐ நா உட்பட பல சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசு மீது வைத்துள்ளன. குறிப்பாக கிளிநொச்சி அரச படைகளிடம் வீழ்ந்ததன் பிற்பாடு இவ்வாண்டு ஜனவரி முதல் தொடரும் முல்லைத்தீவு முற்றுகையில் எவ்வித பாகுபாடுமற்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. தமிழ் பொது மக்களின் இழப்பு ரொக்கற் வேகத்தில் அதிகரித்து உள்ளது. இலங்கை அரசாங்கம் வன்னி மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்குகிறதா ?
உயர்ஸ்தானிகர்: பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் பல்வேறு மூலங்களில் இருந்து வெளிவருகிறது. நாங்கள் கிழக்கை மீட்டெடுக்கவும் இவ்வாறான ஒரு இராணுவ நடவடிக்கையையே கையாண்டோம். ஆனால் அப்போது இப்படியான குற்றச்சாட்டுகள் எழவில்லை. வடக்கில் தான் புலிகளின் பிரச்சாரத்தால் இந்த பொய்ப்பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது. வேறு வேறு மனித உரிமை அமைப்புகள் பல்வேறு புள்ளிவிபரங்களை வெளியிடுகிறது. அரசாங்கம் உதவி அமைப்புகளையோ ஊடகங்களையோ அப்பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் இவர்கள் புலிகள் கொடுக்கும் தகவல்களைக் கொண்டு பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனர்.
சண்டை நடைபெறும் பகுதிகளுக்கு வெளியே வடக்கிற்கு வன்னிக்கு வெளியே தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். கொழும்பில் சிங்கள மக்களின் சனத்தொகை வெறும் 28 வீதமே. 72 விதமானவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும். தமிழர்கள் மிகவும் பலம் வாய்ந்த வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் அந்த வாக்காளர்கள் தங்களைவிட்டுச் செல்வதை எப்படி விரும்புவார்கள். 19 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் 12.5 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். சிறுபான்மை இனங்களது வாக்குகள் 25 வீதம். எந்த ஒரு அரசாங்கமும் 25 விதமான சிறுபான்மையினர் தங்களை விட்டு ஒதுங்கிச் செல்லவதை விரும்பாது.
ஆகவே வேறுவேறு முகவர் அமைப்புகளால் வெளியிடப்படும் இந்த அழிவுகள் பற்றிய தகவல்கள் அர்த்தமற்றவை. அரச படைகள் எழுந்தமானமான கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துவதில்லை. ஆனால் யுத்த சூழலில் இழப்புகள் ஏற்படும். புலிகள் மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும். புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் தான் யுத்தம் செய்வதாகக் கூறினால் மக்களை எதற்காக அங்கு தடுத்து வைத்திருக்கிறார்கள். அரசபடைகளுடன் சண்டை என்றால் போய் அரச படைகளுடன் சண்டையிடுங்கள். புலிகள் ஒரு பலம் மிக்க இராணுவ அமைப்பு என்று சொன்னால் எதற்கு பொது மக்களை கவசமாகப் பயன்படுத்துகிறார்கள்.
தேசம்நெற்: புலிகள் பொது மக்களை தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சர்வதேச அமைப்புகளும் தெரிவிக்கின்றன. புலிகள் இலங்கையில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ள ஒரு இராணுவ அமைப்பு. ஆனால் இலங்கை அரசு அப்படியல்ல. அது சட்டபூர்வமான ஒன்று. அதனால் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசு பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும். ஒரு பயங்கரவாத இயக்கம் என்று நீங்கள் சொல்லும் ஒரு இயக்கத்திடம் மலர்க் கொத்தையும் மனிதாபிமானத்தையும் எப்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமையல்லவா? ஆனால் 3000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 7000 பேர்வரை காயமடைந்து உள்ளனர். இரண்டில் மூன்று வீதமான குண்டுத் தாக்குதல்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்டதாக ஐ நா குற்றம்சாட்டி உள்ளது. பாதுகாப்பு வலயம் இருப்பதன் அர்த்தம் என்ன ?
உயர்ஸ்தானிகர்: இலங்கை அரசாங்கம் மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எப்போதும் மேற்கொண்டு வருகின்றது. அரச படைகள் முன்னேறிச் செல்லும் வேகத்தை பெருமளவில் குறைத்து இருப்பதே மக்களுடைய இழப்புகளைக் குறைப்பதற்கே. இதில் பெரும்பாலான பரப்புரைகள் பொய்யானவை. அரச படைகள் கிளஸ்ரர் குண்டகளைப் பயன்படத்துவதாகக் கூறப்படுகிறது. இவ்வகையான குண்டுகளை பயன்படுத்தவதில்லை என்ற ஒப்பந்தத்தில் இலங்கை கையழுத்து இட்டு உள்ளது. அப்படி இருக்கும் போது அவ்வாறான ஆயுதங்களை எமக்கு அயுதங்களை வழங்கும் நாடுகள் எப்படி வழங்கி இருக்க முடியும். இது சாதாரண விடயங்கள் அல்ல. ஆயுதக் கொள்வனவுகளுக்கென்று சில நடைமுறைகள் இருக்கின்றது. அப்படியானால் எந்த நாடு எங்களுக்கு இந்த கிளஸ்ரர் குண்டுகளைத் தந்திருக்க முடியும். இதுவும் புலிகளின் ஒரு பிரச்சார யுக்தியே.
மற்றது பாரபட்சமில்லாமல் தமிழ் மக்கள் மீது செல்தாக்குதல் நடத்துகின்றது என்று சொல்வதும் புலிகளின் ஒரு பொய்ப் பிரச்சாரமே. 2010ல் அடுத்த தேர்தல் வர இருக்கின்றது. சிங்கள மக்களுடைய வாக்குகளில் மட்டும் எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் மிக முக்கியம். அப்படி இருக்கும் போது அரசாங்கம் எப்படி தமிழ் மக்களை பகைத்துக் கொள்ள விரும்பும். அந்த மக்கள் மீது செல் தாக்குதலை நடத்திவிட்டு எப்படி அவர்களின் வாக்குகளை வெல்ல முடியும்.
தேசம்நெற்: தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் தாக்குதல் நடத்தப்படுகிறதே ?
உயர்ஸ்தானிகர்: அரச படைகள் தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் வேண்டுமென்று தாக்குதல் நடத்தவில்லை. தாக்குதல் தவிர்ப்புப் பகுதிகளில் ஒளிந்துகொண்டு மக்களைக் கேடயமாக்கிக் கொண்டு புலிகள் தான் அரச படைகள் மீது தாக்குதலை நடத்துகின்றனர். அப்படிச் செய்யும் போது அரச படைகள் என்ன செய்ய முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களும் தங்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா. தமிழ் மக்களைப் போல இராணுவ வீரர்களும் மனிதர்கள் தானே. அவர்களும் தங்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா.
அங்கே சிங்கள மக்கள் மத்தியிலும் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்த விடயத்தில் தாக்குதல் தவிர்ப்புப் பகுதி, பாதுகாப்பு பகுதி என்றில்லாமல் அரச படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி முன்னேறிச் செல்வது இலகுவாக இருந்திருக்கும். ஆனால் அரச படைகள் அவ்வாறு செய்யவில்லை. அப்படிச் செய்தால் பாரிய உயிரிழப்புகள் பொது மக்களுக்கு ஏற்படும். அதனால் பொது மக்களுடைய பாதுகாப்பை கவனத்தில் எடுத்தே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதனால் தான் 50000 தமிழ் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தப்பி வரக் கூடியதாக இருக்கிறது.
தேசம்நெற்: புலிகளை துடைத்தழிக்கின்ற பீக்கன் புரஜக்ற் என்கிற திட்டம் ஒன்றை இன்றைய அரசாங்கம் 2005ல் இந்தியா மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு வழங்கியதாகவும் அதற்கு அவர்கள் தங்கள் ஆதரவை இரகசியமாக வழங்கி இருந்ததாகவும் தேசம்நெற் அறிகிறது. இத் திட்டம் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இந்த இணைத்தலைமை நாடுகள் இதற்கு ஆதரவு அளித்துள்ளனவா ?
உயர்ஸ்தானிகர்: இது என்ன விடயம் என்றே எனக்குத் தெரியாது. இது பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.
தேசம்நெற்: எல்ரிரிஈ பெரும்பாலும் தங்கள் அனைத்து நிலப் பரப்புக்களையும் இழந்து விட்டனர். அரசாங்கம் பெரும்பாலும் யுத்தத்தில் வெற்றி பெற்று உள்ளது. இந்த யுத்தத்திலும் பார்க்க கடினமானது தமிழ் மக்களுடைய இதயங்களை வெற்றி கொள்வது. அதனை அரசாங்கம் எவ்வாறு செய்யப் போகின்றது ?
உயர்ஸ்தானிகர்: இது தான் மிக முக்கியம். அரசாங்கம் பல்வேறு நம்பிக்கைத் தரக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கிறது. இலங்கை மக்கள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்கிறது. இலங்கை அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்காக சேர் பொன் ராமநாதன் சேர் பொன் அருணாச்சலம் போன்ற தமிழ் தலைவர்கள் உழைத்து உள்ளார்கள்.
தேசம்நெற்: இலங்கையில் தமிழ் மக்களுக்கு திட்டமிட்ட இனப்பாகுபாடு இல்லையென்று சொல்கிறீர்களா ?
உயர்ஸ்தானிகர்: தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட முறையில் இனப்பாகுபடுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. யாழ்ப்பாணப் பெண் குடி தண்ணீர் எடுக்க நீண்ட துரம் நடக்க வேண்டி உள்ளது. பாடசாலைகள் சுகாதார வசதிகள் பிரச்சினையாக உள்ளது. அப்படித்தான் மொனராகலையிலும். தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்கள் ஒரே பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அது தமிழர்களுக்கு மட்டுமான பிரச்சினையில்லை. இது ஒரு மூன்றாம் உலகநாடுகள் எதிர்கொள்கின்ற பிரச்சினை.
தேசம்நெற்: கடந்த 30 வருட யுத்தத்தில் 100000 பேர்வரை கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பொது மக்கள். இந்த உயிரிழப்புகளில் எல்ரிரிஈ க்கு மட்டுமல்ல பாதுகாப்பு படையினருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள நீதித்துறையால் எந்தவொரு பாதுபாப்பு படையினரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. பண்டாரவளையில் 35 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கில் நீங்கள் நீதிபதியாக இருந்துள்ளீர்கள் அதிலும் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. இலங்கையின் நீதித்துறையில் எவ்வாறு தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியும் ?
உயர்ஸ்தானிகர்: இது உண்மையல்ல. இலங்கையில் உள்ள நீதித்துறை சட்டங்கள் பெரும்பாலும் குறம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாகவே உள்ளது. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதில் நீதித்துறை கவனமாக உள்ளது. இலங்கையில் ஒருவர் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அதனை எங்கு வந்தும் சொல்வதற்கு நான் தயாராக உள்ளளேன்.
ஒருவருக்கு தண்டனையை உறுதிப்படுத்த சாட்சியங்கள் அவசியம். ஆனால் பெருமளவு வழக்குகளில் ஆதாரபூர்வமான சாட்சியங்கள் கிடைப்பதில்லை. உங்களுடைய கேள்விக்கு எனது பதில் ஆதாரங்கள் இருந்தால் அரசாங்கம் நிச்சயம் அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்கும். நீதித்துறையில் ‘truth beyond reasonable dobut’ என்று குறிப்பிடுவார்கள். வழக்கின் போது கூறப்படுகின்ற உண்மையில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தினாலே குற்றம்சாட்டப்பட்டவருக்கு போதுமானது.
தேசம்நெற்:அதாவது இலங்கையில் உள்ள நீதித்துறை நிரபராதிகளை தண்டிக்கவில்லை. ஆனால் பல்வேறு குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக உள்ளனர் என்பதை ஏற்றக் கொள்கிறீர்களா ?
உயர்ஸ்தானிகர்: அப்படியில்லை. ஒருவரும் சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் அல்ல. ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எங்களுக்கு உள்ள பிரச்சினை ஆதாரங்கள் சாட்சிகள் இல்லை.
தேசம்நெற்: ஆதராங்களை பெற்று குற்றவாளிகளைத் தண்டிப்பதும் சாட்சிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பல்லவா ?
உயர்ஸ்தானிகர்: மக்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதன் மூலமே குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொள்கிறது.
தேசம்நெற்: ஒரு இலங்கைப் பிரஜை அங்குள்ள சட்டத்துறையில் நம்பிக்கை கொள்ள முடியுமா ?
உயர்ஸ்தானிகர்: சட்டத்துறை என்பது ஒரு விடயம். அதில் தங்கி இருக்க முடியுமா என்பது அடுத்தது. ஏனைய துறைகளைப் போன்றது தான் இதுவும். ஒவ்வொருவரும் தமது கடமைகளை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும். ஒரு தவறு ஏற்பட்டதற்காக அந்தத் துறையை நிராகரிக்க முடியாது. ஒரு தவறும் நிகழாத சட்டத்துறை ideal situation தான் இருக்கும்.
தேசம்நெற்: இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்சவுக்கும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கும் எதிராக இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றங்கள் சுமத்தப்பட்டு அமெரிக்காவில் வழக்கு தொடரபட்டு உள்ளது. இது பற்றி என்ன சொல்கிறீர்கள் ?
உயர்ஸ்தானிகர்: இந்த வழக்கைத் தொடுத்தவர் முன்னாள் செனட்டர் புருஸ்பெயின். இவர் எல்ரிரிஈ இன் தீவிர ஆதரவாளர். எல்ரிரிஈ ஆல் இதற்காக அமர்த்தப்பட்டு உள்ளார். இனப்படுகொலை என்பது திட்டமிட்ட முறையில் ஒரு இனத்தை அழிப்பதற்கு எடுக்கும் நடவடிக்கை. அதனை எழுந்தமானமாக பயன்படுத்த முடியாது. இலங்கையில் தென் பகுதியில் கூடுதலான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். மற்றையது யுத்தத்தில் தோக்கின்ற தரப்பு எப்பொதும் யுத்தத்தில் வெல்பவர்கள் யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவதாகவே குற்றம்சாட்டுகின்றனர்.
தேசம்நெற்: இலங்கையில் யுத்தத்தில் சிக்குண்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ‘வணங்கா மண்’ என்ற கப்பல் பயணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அது பற்றி இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?
உயர்ஸ்தானிகர்: நிவாரணப் பொருட்களை அனுப்புவதில் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சுனாமி காலகட்டத்தில் நிவாரணங்கள் பலராலும் அனுப்பி வைக்கப்பட்டது தானே. இலங்கையின் சுங்க நடைமுறைகளுக்கு அமைய இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை யாரும் அனுப்பி வைக்கலாம். ஆவணங்கள் சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டால் அதில் என்ன திரில். வன்னி மிஸனில் என்ன திரில்.
எந்த ஒரு கப்பலும் ஒரு துறைமுகத்தில் இருந்து புறப்படும் போதும் அது எந்தத் துறைமுகத்திற்கு செல்ல வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்தத் துறைமுகத்திற்கு செல்கிறது என்று தெரியாத கப்பல் தனது கடல் எல்லைக்கு வந்தால் எந்த நாடும் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கும்.
தேசம்நெற்: கிழக்கு விடுவிக்கப்பட்டு விட்டது. அபிவிருத்திகள் நடைபெறுகிறது என்றெல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அண்மையில் பள்ளிச்சிறுமி பாடசாலையில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் முதலமைச்சர் பிள்ளையனுடன் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். மக்கள் எப்படி உங்கள் ஆட்சியில் உங்கள் அரசில் நம்பிக்கை வைக்க முடியும் ?
உயர்ஸ்தானிகர்: 28 வருடங்கள் யுத்தம் நடைபெற்று சட்டமும் ஒழுங்கும் இல்லாது இருந்த பகுதி. தற்போது 10 மாதங்களாகவே அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. 28 வருடங்களாக சட்டம் ஒழுங்கு இல்லாது இருந்த பிரதேசத்தில் உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. அதற்கு காலம் எடுக்கும்.
அடுத்தது முதலமைச்சரின் கட்சியுடன் தொடர்புடையவர் செய்தார் என்பதற்காக முதலமைச்சர் மீது குற்றம் சுமத்த முடியாது.
ஒரு சிறுமியை இவ்வளவுக்கு கொடுமைப்படுத்தியவர்களைப் போன்றவர்களுக்கு மத்தியில் தான் நாங்கள் சட்டம் ஒழுகை நிலைநாட்ட முயற்சிக்கிறோம். இதுவெல்லாம் நீண்ட கால ஆயுதக் கலாச்சாரத்தின் விளைவுகள். சட்டம் ஒழுங்கை இவர்கள் மத்தியில் நிலைநாட்ட காலம் எடுக்கும்.
தேசம்நெற்: கிழக்கு விடுவிக்கப்பட்டு இவ்வளவு காலம் ஆகியும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாமல் இன்னமும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனரே.
உயர்ஸ்தானிகர்: இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றது. பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் இன்னமும் முகாம்களிலேயே வாழ்கின்றனர். இலங்கை ஒரு வறியநாடு. எங்களால் செய்யக் கூடியவற்றை செய்கிறோம்.
தேசம்நெற்: ஆனால் இலங்கை 1.5 பில்லியன் டொலர்களை பாதுகாப்புக்கு செலவிடுகிறது. உலகிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை உள்ளது.
உயர்ஸ்தானிகர்: இது இன்றைய அரசாங்கத்திற்கு மட்டும் அல்ல. தவிர்க்க முடியாதது. நாங்கள் எதிர்கொள்ளும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவதற்கு இந்த செலவு ஏற்படும்.
தேசம்நெற்: கிழக்கு விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. எல்ரிரிஈ யை குறிப்பிட்ட காலத்திற்குள் இல்லாமல் துடைத் தெறிவோம் என்றும் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் எல்ரிரிஈ ஆங்காங்கே கெரில்லா தாக்குதலை நடாத்தி வருகிறது. ஒரு கெரில்லா அமைப்பை அவ்வளவு இலகுவாக துடைத்தெறிய முடியும் என்று நம்புகிறீர்களா ?
உயர்ஸ்தானிகர்: அரசாங்கம் அப்படி நம்பவில்லை. ஆனால் ஏற்படப் போகும் வெற்றிடத்தை அரசியல் நடைமுறையால் நிரப்ப முடியும் என்று அரசாங்கம் மனசார நம்புகிறது. அதனை அரசாங்கம் நிச்சயமாக நிரப்ப வேண்டும்.
தேசம்நெற்: தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிரப்பப்பட வில்லை என்பதே. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அது எல்ரிரிஈ க்கு விளைநிலமாகவே அமையும். அதனாலேயே தமிழ் மக்கள் எல்ரிரியை நோக்கிச் சென்றனர்.
உயர்ஸ்தானிகர்: அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனை ஏற்கனவே குறிப்பிட்டும் உள்ளேன். இந்த யுத்தம் முடிவடைய அரசாங்கம் வடக்கு கிழக்கை கைவிட்டால். யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் இளைஞன் எல்ரிரிஈ இடம்தான் செல்ல வேண்டும். அதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது.
தேசம்நெற்: தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அரசாங்கம் எவ்வாறு நிரப்பப் போகின்றது ?
உயர்ஸ்தானிகர்: அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறது. இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க இருக்கிறது. பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.
தேசம்நெற்: அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் நிறைவு செய்ய முடியும் என்று நினைக்கிறது. அதிகாரத்தை பரவலாக்கும் எண்ணம் இல்லை. அப்படித்தானே ?
உயர்ஸ்தானிகர்: அரசியல் தீர்வு பற்றித் தானே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஆராய்கிறது. 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்கள்.
தேசம்நெற்: ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லையே.
உயர்ஸ்தானிகர்: அதனை அமூல்படுத்துவதற்கு எல்ரிரிஈ அனுமதிக்கவில்லையே.
தேசம்நெற்: நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்களை யுத்த பகுதிக்குள் அனுமதிக்கவில்லை என்று. சரி ஆனால் அரசாங்க கட்டப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் நலன்புரி நிலையங்களுக்கும் அவர்களை ஏன் அனுமதிக்கவில்லை.
உயர்ஸ்தானிகர்: இந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சில எல்ரிரிஈ க்கு சார்பாக இயங்குகின்றன என்ற பலமான சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டு உள்ளது. இந்த மனித உரிமை அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு விநியோகிப்பதற்காக இவ்வமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் எல்ரிரிஈ ன் கைகளுக்குச் செல்கிறது.
தேசம்நெற்: வன்னி மக்கள் மத்தியில் இலங்கை இராணுவம் பற்றிய அச்ச உணர்வு ஒன்று இருக்கிறது. அப்படி இருக்கையில் அச்சத்தில் வருபவர்களை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொருத்தமற்றது. மேலும் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் சீவிக்க வேண்டும் என்பதால் பலர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அச்சம்கொள்வார்கள். அதனால் அந்த முகாம்களை சர்வதேச அமைப்புகளிடம் கையளிப்பதே பொருத்தமானதாக இருக்கும் அல்லவா ?
உயர்ஸ்தானிகர்: ஏன் நாங்கள் சர்வதேச அமைப்புகளிடம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் தேவையான அனைத்து விடயங்களையும் செய்கிறது.
இது வந்து எம்மிடம் உள்ள ஒரு மூளைப் பதிவு. எங்களுக்கு எங்களுடைய மக்களைப் பார்க்கத் தெரியாதா? எங்களுக்கு எதற்கு வெளிநாட்டவர். எங்களுடைய மூளைப்பதிவில் வெள்ளைத் தோலுடையவர்கள் உயர்ந்தவர்கள் என்று நாங்கள் நினைக்கின்றோம். நோர்வே சுவீடன் டென்மார்க் பிரிட்டன் என்று நாங்கள் ஏன் இவர்களுக்கு பின் செல்ல வேண்டும். நாங்கள் எங்களுடைய மக்களை கவனிப்போம்.
தேசம்நெற்: வன்னி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக எல்ரிரிஈ இன் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள். இலங்கை இராணுவம் என்பது இரத்த வெறியுடையது என்றே புலிகள் பிரச்சாரப்படுத்தி உள்ளனர். அப்படி இருக்கையில் அவர்களைக் குறைந்தபட்சம் இராணுவம் அல்லாத சமூக அமைப்புகளின் கைகளில் கூட அரசாங்கம் ஒப்படைக்க முன்வரவில்லையே ஏன் ?
உயர்ஸ்தானிகர்: இப்போது யுத்தம் நடந்தகொண்டிருக்கிறது. இது ஒரு முடிவுக்கு வரும்போது இந்த முகாம்கள் ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடப்படும்.
தேசம்நெற்: எஸ்எல்எப்பி மட்டுமல்ல முக்கியமாக யூஎன்பி உட்பட இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இன்றைய இந்த மோசமான சூழலை ஏற்படுத்தி உள்ளன என்பதை நீஙகள் ஏற்றுக் கொள்கிறீர்களா ?
உயர்ஸ்தானிகர்: இது ஒரு மிகவும் அரசியல் சார்ந்த கேள்வி. எனது பொறுப்பிற்கு அப்பாற்பட்டது அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
தேசம்நெற்: தமிழ் மக்கள் எல்லோரும் எல்ரிரிஈ என்ற பார்வை அரசாங்கத்திடம் உள்ளதா ?
உயர்ஸ்தானிகர்: தமிழ் மக்கள் வேறு எல்ரிரிஈ வேறு. இது அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாகத் தெரியும். இந்த நம்பிக்கையீனம் தான் பெரும் பிரச்சினை. மகிந்த ராஜபக்ச பதவிக்கு வரும் முன்னரே மேற்கு நாட்டு ஊடகங்கள் அவரை கடும் போக்காளர் என்றும் யுத்தப் பிரியர் என்றும் கட்டமைத்தனர்.
தேசம்நெற்: எல்ரிரிஈ பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன ?
உயர்ஸ்தானிகர்: பிரபாகரன் ஒரு இராணுவ தந்திரோபாயம் மிக்க தலைவர் என்று தான் நான் எண்ணியிருந்தேன். ஆனால் மாவிலாற்றில் யுத்தத்தை ஆரம்பித்ததும் ராஜிவ் காந்தியின் படுகொலையும் என்னை அந்த அபிப்பிராயத்தில் இருந்து விடுவித்தது.
தேசம்நெற்: இன்றைய யுத்தத்திற்கு இந்தியா இலங்கைக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறப்படுவது பற்றி….. ஆரம்பத்தில் இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டது. இன்று இலங்கை அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து உள்ளது.
உயர்ஸ்தானிகர்: இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை அதற்கும் மேல் இந்தியாவே இந்த இயக்கங்களை உருவாக்கியது.
தேசம்நெற்: சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வு எப்போதும் இருக்கிறதல்லவா?
உயர்ஸ்தானிகர்: ஆம். அந்த எதிர்ப்புணர்வு இருக்கிறது. அது இயல்பு தானே. இந்தியா தானே இந்த நிலைமையை தோற்றுவித்தது.
தேசம்நெற்: ஆனால் இந்தியா தானே இந்த யுத்தத்தில் இலங்கைக்கு உதவுகிறது.
உயர்ஸ்தானிகர்: இந்தியா இந்த யுத்த்திற்கு ஆதரவு தருகின்றது. ஏனென்றால் ராஜீவ் காந்தியை படுகொலை செய்து பிரபாகரன் மிகப் பெரிய பிழைவிட்டுவிட்டார்.