பருப்பு, சீனி உட்பட முக்கிய பாவனைப் பொருட்களுக்கு அரசு கட்டுப்பாட்டு உச்ச விலையை அறிவித்தபோதும் அக்கட்டுப்பாட்டு விலைகளுக்கும் குறைவாகவே சந்தையில் அப்பொருட்கள் விற்கப்படுகின்றன என வர்த்தக, சந்தை அபிவிருத்தி, கூட்டுறவு, மற்றும் பாவனையாளர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும் கூறுகையில்,
கடந்த வருட புதுவருடத்தை விட இவ்வருடம் பாவனைப் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 100 ரூபாவாக நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. தேங்காய் மற்றும் முட்டை என்பன விலை குறைந்துள்ளன.; போட்டி வர்த்தகத்துக்கு இடமளிக்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.
பாவனைப் பொருட்களின் விலை அதிகம் வீழ்ச்சியடைவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அரசாங்கத்து உண்டு. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட பொருட்கள் பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்போது அவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை செல்லுபடியாகாது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வைத்து சில் வர்த்தகர்கள் அப்பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கின்றனர் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தனியார் திறந்த பொருளாதாரக் கொள்கையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன முதன்முதலாக அமுல்படுத்தினார். ஆனால் நாட்டுக்குப் பொருத்தமான உண்மையான திறந்த பொருளாதாரக் கொள்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்தியுள்ளார்
இதன் மூலம் அரசாங்கமும் தனியார் துறையினரும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையமும் பொதுவான நன்மைகளை அடைந்துகொள்ள வழி ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.