13

13

புலிகளின் கடைசி அகழி படையினரிடம் வீழ்ந்தது – பெருந்தொகையான ஆயுதங்களும் மீட்பு

army-attack.jpgமுல்லைத்தீவு, அம்பலவான்பொக்கனை பிரதேசத்தில் உள்ள படையினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற புலிகளை இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்தப் பிரதேசத்தில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கடைசி அகழிகளையும் கைப்பற்றியுள்ளனர். புலிகளை இலக்கு வைத்து படையினர் நடத்திய கடுமையான பதில் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முயற்சிகள் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. அம்பலவான்பொக்கனை பிரதேசத்திலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

கடுமையான மழைக்கு மத்தியிலும் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொதுமக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ள அதேசமயம் புதுக்குடியிருப்பின் மேற்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் கடுமையான தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மிதிவெடிகள் – 150, அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் – 14, கைக்குண்டுகள் – 150, வெடிமருந்துகள், குண்டுகள் – 08, கனரக ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகையான உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைதான 34 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு

இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 34 இலங்கை மீனவர்களை இந்திய அரசு விடுதலை செய்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று தெரிவித்தது. இவர்கள் நேற்று முன்தினம் இந்திய கடற்படையினரால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

34 மீனவர்களும் 7 படகுகளும் கடற் படையினரிடம் கையளிக்கப்பட்டதாக கடற் படைப் பேச்சாளர் கப்டன் மகேஷ் கருணாரத்ன தெரிவித்தார். மேற்படி மீனவர்கள் நீர்கொழும்பு, தெவிநுவர போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 108 மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் கூறியது.

ஏனைய 74 பேரும் விரைவில் நாடு திரும்புவர் எனவும் அதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது. இவர்கள் தெவிநுவர, திருகோணமலை, தங்கல்ல, கோட்டகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்த படகொன்றை மடக்கிய கடலோர காவல் படையினர் அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இருந்த 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்றும், தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த படகும் அதில் இருந்த 5 மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டு காசிமேடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் அடைமழையால் நோயாளிகள் பாதிப்பு

trico.gifஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்திலும் வட பகுதியிலும் கடந்த சில தினங்களாகவே அடை மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக  புதுமாத்தளனிலிருந்து புல்மோட்டைக்கு கொண்டு வரப்படும் நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து நோயாளிகளை ஏற்றிக் கொண்டு எந்த ஒரு கப்பலும் புல்மோட்டைக்கு வரவில்லை என்று அங்குள்ள மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்தார். மழை தொடர்ந்தால் நோயாளிகளை இறக்குவது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார், அங்கு மேலும் பத்து அவசர ஊர்திகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்திய வெளியுறவுச் செயலருடன் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்?

tna-mp-22.jpgதமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வெளியுறவுச் செயலரின் அழைப்பையேற்று பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த பேச்சுவார்த்தை வரும் 16ம் தேதி நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூன்று உறுப்பினர்களுடன் மாவை சேனாதிராஜா நேற்று தமிழகம் சென்று ஆலோசனை நடத்திய பின்னர்தான இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதே நேரம், இந்தியாவின் அழைப்பை கூட்டமைப்பு உறுப்பினாகள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.  குறிப்பாக  என்.ஸ்ரீகாந்தா, இலங்கைப் போரை இந்தியாதான் நடத்துகின்றது என்றும் முதலில் இந்தியா போரை நிறுத்தட்டும். அதன்பின் நாம் அவர்களின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என அறிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்ற தேர்தலை புறக்கணியுங்கள்

india-election.jpgஇலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரவிக்கும் முகமாக பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழக மக்களிடம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலர்களில் ஒருவரான கார்த்திக் கூறுகையில்;

இலங்கையில் நடக்கும் போரில் கொல்லப்படும் தமிழ் மக்களை காப்பாற்றக் கோரி கடந்த 5 மாதங்களாக நாம் போராட்டங்களை நடத்தி வருகின்றோம். இலங்கையில் நடக்கும் போரில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி செய்து வருகின்றது. இதற்கு சாட்சியாக அங்கு நடக்கும் போரில் காயமடைந்த 125 இந்திய இராணுவ வீரர்கள் நந்தம்பாக்கத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, இலங்கையில் நடக்கும் போரில் இந்திய அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகின்றோம் என்ற பெயரில் சில கட்சிகள் போராடி வருகின்றன. இவை வாக்குக் கட்சிகள் தான். வாக்குகளுக்காக வேஷம் போடுகின்றனர்.

எனவே, இலங்கைத் தமிழர்களுக்காக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

ரணில் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானால் அவருடன் விவாதத்திற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் -ஐ.தே.க.

போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனாதிபதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் சவாலை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.

தான் தெரிவித்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் ஜனாதிபதி தயக்கம் காட்டாமல் மேல்மாகாண சபைத் தேர்தல் நடக்கவிருக்கும் இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்க விவாதத்திற்குரிய திகதியை நிர்ணயித்து அறிவிக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவரின் சவாலை ஜனாதிபதி தைரியமிருந்தால் ஏற்று விவாதத்துக்கு முன்வரவேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முதலில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க கூறியதாவது;

கடந்த வியாழக்கிழமை மத்திய கொழும்பில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்; தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வாய்ப்பை ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் அவர் போதிய ஆதாரங்களுடன் தன்னுடன் பகிரங்கமான விவாதத்துக்கு வரவேண்டுமென்று சவால் விடுத்தார். தனது சுயநல அரசியலை நோக்கமாகக் கொண்டு பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை தவறாக வழிநடத்தவே அரசும் ஜனாதிபதியும் முனைப்புக் காட்டி வருகின்றது.

தனியார் ஊடகங்கள் மௌனியாக்கப்பட்டிருப்பதோடு அரச ஊடகங்கள் 24 மணி நேரமும் ஐக்கிய தேசியக்கட்சி மீதும் ரணில் மீதும் சேறு பூசுவதையே பணியாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் வைத்தே பகிரங்க விவாதத்துக்கு ரணில் சவால் விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 47 இலட்சம் வாக்குகளை பெற்றவர் ரணில். நாட்டின் பிரதமராக பதவிவகித்தவர். இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார். நாட்டின் மாற்றுத் தலைவராக காணப்படுகின்றார். சர்வதேசம் ஏற்றுக் கொண்ட தலைவராகக் கூடக் காணப்படுகின்றார். இத்தனை தகைமையும் கொண்டவருடன் பகிரங்க விவாதத்துக்கு வரமுடியாது என்று ஜனாதிபதி கூறுவாரானால் அது இயலாமையையே காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் பொய்க்குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது என்பதையே காட்டுகின்றது எனக் கேட்டுக் கொண்டார்.

விளம்பரப்பலகை மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் கடும் உத்தரவு

election_ballot_cast.jpgமேல் மாகாண சபை தேர்தல் தொடர்பான விளம்பரப்பலகை மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் கடும் உத்தரவு பிறப்பித்து பொலிஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேர்தல் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில் :

சிறியளவிலான சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் ஏனையவற்றை அகற்றுமாறும் அவர் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான தேசிய வாக்களிப்பு நிலையம் தேர்தல் வன்முறை தொடர்பில் 72 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பிரசன்ன அதிகாரி தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்களில் ஜே.வி.பி ஆதரவாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் கடத்தல் சம்பவங்கள் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசமெங்கும் புது வசந்தம் வீசட்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

epdp-sec.jpgபிறக்கின்ற சித்திரைப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒளிமயமான எதிர்காலத்தின் வருகைக்கான பாதையை திறக்கின்ற வாசல்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரினதும் மன விருப்பங்களாகும். ஆனாலும் கடந்து போன ஆண்டுகளில் பிறந்து வந்த புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளுக்கு மாறாக துயரங்களையும், அவலங்களையுமே எமது மக்களின் வாழ்வின் மீது அதிக சுமைகளாக்கி சென்றிருக்கின்றன.

இது வரை காலமும் முடிவற்று தொடர்ந்து வந்த அழிவு யுத்தமே இதற்குக் காரணமாக இருந்து வந்திருக்கின்றது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-எமது மக்களின் வாழ்வியல் உரிமைகள் மீது வலிகளை மட்டும் தந்து கொண்டிருந்த யுத்த சூழல் மெல்ல மெல்ல அகன்று வரும் இத்தருணத்தில் அடுத்து வரும் காலம் வலிமை பெற்ற மகிழ்ச்சி தரும் வாழ்வின் தொடக்கத்தை தரும் என்ற நம்பிக்கை ஒளிகள் எம் கண் முன்தோன்றி வருகின்றன.

இத்தகைய சூழலில் இந்த ஆண்டிலும் இன்னொரு புத்தாண்டு பிறந்து வருகின்றது. எமது தேசமெங்கும் புது வசந்தம் வீச, எமது மக்களின் இல்லங்கள் தோறும் புன்னகை பூத்துக்குலுங்க, இந்த ஆண்டிலும் பிறக்கின்ற புத்தாண்டு வழி சமைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

பிறக்கின்ற புத்தாண்டு எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஆண்டின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். எமது மக்கள் அச்சமின்றி உயிர் வாழவும், எமது தேசமெங்கும் சுதந்திரமாக நடமாடவும், உதடு திறந்து உண்மைகளை பேசவும், விரும்பிய படி சுதந்திரமாக தொழில் புரியவும் உகந்த குழலை உருவாக்க நாம் தொடர்ந்தும் உழைக்க வேண்டும். இதுவே பிறக்கின்ற புத்தாண்டை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு நாம் ஆற்ற வேண்டிய பாரிய பணியாக இருக்கும்.

அன்றாட அவலங்களுக்கான தீர்வும், அபிவிருத்தியும், அரசியலுரிமை சுதந்திரமும் பெற்ற அமைதி மிக்க சமாதான தேசம் ஒன்றை நோக்கி பிறக்கின்ற புத்தாண்டில் புது நம்பிக்கையோடு அனைவரும் சேர்ந்துழைப்போம். அடுத்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான காலம் என்ற நம்பிக்கையோடு சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் அனைவரினதும் உணர்வுகளோடு நாமும் இணைந்து கொள்கிறோம்!

புல்மோட்டை வைத்தியசாலையிலுள்ளோரை கிறிஸ்தவ மதகுருமார் நேரில் சென்று பார்வை

pullmottaiindiadoctors1.jpgதிருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட துணை ஆயர் அதிவந்தனைக்குரிய பொன்னையா ஜோசப் தலைமையிலான கிறிஸ்தவ மதகுருமார் குழு ஒன்று புல்மோட்டையில் களவைத்தியசாலையில் முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களையும் நோய்வாய்ப்பட்டவர்களையும் சென்று பார்வையிட்டது

அக்குழுவில் திருகோணமலை மாவட்ட எஹெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்பணி பிரான்ஸிஸ் சேவியர் டயஸ், நிலாவெளி புனித ஜோசப் தேவாலயப் பங்குத் தந்தை அருட்பணி குணநாயகம், உதவிப்பங்குத் தந்தை அருட்தந்தை அஜித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

புல்மோட்டைக் களவைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சையளித்து வரும் இந்திய டாக்டர் குழுவின் தலைவர் டாக்டர் வசந்தகுமாரை கிறிஸ்தவ மதகுருமார் குழு சந்தித்து உரையாடியுள்ளனர்.

உள்ளுர் அதிகார சபைகள் சட்டமூலம் சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பு

election_ballot_cast.jpgமாகாண சபைக்கான அதிகாரங்களை மேலும் குறைத்து சிறுபான்மை மக்களின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்; அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளுர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமானது தமிழ்ப் பேசும் மக்ளிடையே இன்றைய அரசு தொடர்பான நம்பிக்கையீனத்தை மேலும் வலுப்படுத்தும். அத்துடன்  இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பாராமுகத்தன்மை குறித்து சர்வதேசமும் சந்தேகக் கண்ணோடு நோக்கக் கூடிய ஒரு வாய்ப்பினை இந்தச் சட்ட மூலம் வழங்குமென புளொட் இயக்கத் தலைவர் ரீ. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ளதாவது, இன்றைய நெருக்கடியான கட்டத்திலும் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக சர்வதேசம் உன்னிப்பாகத் தமது கவனத்தைச் செலுத்திக் கொணடிருக்கும் போதும் இலங்கை அரசாங்கம் இவ்வாறனதொரு சட்ட மூலத்தின் வாயிலாகக் தமிழ்பேசும் மக்களின் உள்ளுராட்சி பிரதிநிதித்துவத்தில் கைவைப்பது ஒரு காலோசிதமான செயலல்ல. அத்துடன் இன்று இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் குறைந்த பட்சமாக வழங்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரங்களிலிருந்து மேலும் சிலவற்றைப் பிடிங்கியெடுப்பதானது அதிகாரப் பரவலாக்கத்தையே கேள்விக்குட்படுத்தி விடும். எதிர்காலத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை புதிய சட்ட மூலத்துக்கு அமைவாகவே அரசு நடத்தப் பார்க்கிறது.

இந்த அடிப்படையில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுமானால் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் வாழக் கூடிய தமிழ் பேசும் மக்கள் தமது பிரதிநிதித்துவத்தில் அதிகளவில் இழப்புகளை எதிர்நோக்குவர். வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் பெருன்பான்மை இன மக்களின் பிரதேசங்களை எல்லைப் புறமாகக் கொண்ட தமிழ்ப்பேசும் மக்களின் பிரதேசங்களும் அதே போன்று வவுனியா மாவட்டமும் பாதிக்கப்படுவதுடன் மலையகம் உட்பட இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளில் சிறுபான்மை இனமக்கள் பிரதிநிதித்துவத்தில் பாரிய இழப்பை ஏற்படுத்துமெனவும் அவர் குறிப்பிட்டார்.