மேல் மாகாண சபை தேர்தலுக்காக கம்ஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டது குறித்து ஆராய்வதற்கு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் :
மேல் மாகாண சபைத்தேர்தல் வன்முறை தொடர்பாக நாம் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் கண்காணித்து வருகிறோம். இந்நிலையில் சனிக்கிழமை வரை நாம் மொத்தமாக 69 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளோம். இதில் 54 சம்பவங்கள் தாக்குதல் சம்பவங்களாகும். தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக முறையே 10 முறைப்பாடுகளைப் பெற்ற அதேவேளை அச்சுறுத்தல் சம்பவங்கள் மூன்றும் தமக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் பெயர், விலாசம், என்பன மாற்றப்பட்டு பல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் எவ்வளவு தொகை இவ்வாறு மேலதிக வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து ஆராயவுள்ளோம் என்றார்.