14

14

ஈழத்தமிழர்களுக்காக தே.மு.தி.க.வினர் கூட்டு பிரார்த்தனை

vijayakanth1.jpg இலங்கையில், போர் நிறுத்தம் ஏற்பட வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியிருந்தார். அதன்படி தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், குன்றத்தூர், திருப்போரூர், காட்டாங் கொளத்தூர், ஸ்ரீபெரும்புதூர், மாங்காடு, பெருங்குடி, தாமஸ் மலை, சோழிங்கநல்லூர், சிட்லபாக்கம், பீர்க்கங் கரணை, பெருங்களத்தூர், திருநீர்மலை, பம்மல், அனகா புத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
 
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு தமிழ் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையை தே.மு.தி.க.வினர் செய்தனர்.

எந்தவொரு அழுத்தமும் யுத்தத்தை நிறுத்தாது. பாதுகாப்புச் செயலர்.

sec-def.jpgசர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் எதுவும் வன்னியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படும் வரை படைநடவடிக்கைகள் தொடரும் எனவும் உள்ளுர் ஊடகம் ஒன்றிற்கு பாதுகாப்பமைச்சில் செயலர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மே 13 வரை கருத்து கணிப்புக்கு தடை

india-election.jpgஇன்று மாலை 3 மணி முதல் மே 13ம் தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடவும், ஒளிபரப்பவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் மே 13ம் தேதி வரை ஒளிபரப்பவோ, பிரசுரிக்கப்படவோ கூடாது.

இதுதொடர்பாக பிப்ரவரி 17ம் தேதியே உத்தரவிடப்பட்டு விட்டது. ஜனவரி 19ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் கடைசிக் கட்டத் தேர்தல் முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்து பேசி வருகின்றது.

co-chair.gifஇலங் கையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களது விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்து பேசிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நேற்றுக்காலை அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர். இக்கருத்தரங்கில் அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்காசிய நாட்டு விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் ரிச்சார்ட் பௌசர் கலந்து கொண்டுள்ளார்.

இக்கருத்தரங்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபேர்ட் வூட், இலங்கை அரசு புத்தாண்டை முன்னிட்டு யுத்தத்திற்கு கொடுத்திருக்கின்ற 48 மணி நேர ஓய்வை இணைத்தலைமை நாடுகள் வரவேற்பதாகவும் அதே நேரத்தில் இருதரப்பும் அங்கு சிக்கியுள்ள மக்களின் அடிப்படை தேவை விடயங்களில் கவனம் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து வகைகள் அவர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுடன் அங்கு காயமடைந்துள்ள மக்கள் சிகிச்சைக்காக வெளியேற இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் வன்னியில் சிக்கியுள்ள மக்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் கேட்டுள்ளனர் எனவும் இலங்கை விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நாடாத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் : மூவர் கொலை

மொனராகலை மாவட்டத்திலுள்ள கல்டெம் எரா கிராமததில் நேற்றிரவு ஆயுதக் குழுவொன்றினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் வெட்டுக் காயங்களுடன் மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிராமவாசிகள் புத்தாண்டுப் பண்டிகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அங்கு நுழைந்த ஆயுதக் குழுவொன்று இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார் கூறுகின்றனர். ஏற்கனவே இந்தப் பகுதியிலுள்ள மஹாகொடயாய என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற இதே பாணியிலான சம்பவமொன்றில் 9 கிராமவாசிகள் கொல்லப்பட்டும் மற்றுமொருவர் காயமடைதிருந்தும் இருந்தார்

இந்தச் சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலத்திற்குள் நேற்றைய சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு தாக்குதல்களும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற் கொண்டுள்ளனர்.

புலம் பெயர் தமிழர்களே தாயகத்தில் புதிய காற்று வீச அனுமதியுங்கள் : சிறீ ரெலோ

sri_telo-01.jpgபுதிதாக பிறந்துள்ள ‘விரோதி’ என்றழைக்கப்படும்  இப்புத்தாண்டு, ஒரு மனித ஆயுள் காலத்தை அறுபது வருடங்களாக முன்னோர்கள் வகுத்த கணக்குப்படி, இருபத்திமூன்றாவது ஆண்டாக வரும். நான்கு யுத்த காண்டங்களைக் கண்ட ஈழப் போரின் வயது அரைவாசி மனித ஆயுளை தின்று தீர்த்து விட்டது. தீராத பசிகொண்ட யுத்த பிர(பா)புக்களுக்கு, பிறந்த இந்தப் புத்தாண்டு, அறம் சார்ந்து கடன் தீர்க்கும் ‘விரோதி’யாக மலர வேண்டுமென்பதே, இந்த யுத்தத்தில் தங்கள் வாழ்வை இழந்து தவிக்கும் சாமானியர்களின் விருப்பமும் வேண்டுதலும் பிரார்த்தனையும் ஆகும்.

எமது தாயகமான இலங்கையிலும் அதன் பூகோள அமைவிடமான இந்திய உப கண்டத்தினதும் மற்றும் சர்வதேசத்தினதும் புதிய போக்குக்களையும் அதன் ஒழுங்கீனமான ஒழுங்குகளையும் கைவசம் உள்ள பழைய சூத்திரங்கள் விளங்கவும் விளக்கவும் வினையாற்றவும் போதுமானவை அல்ல.

இந்த அழிவு யுத்தம் ஓய்ந்து நாட்டில் சமாதானமும் சனநாயகமும் சகவாழ்வும் தோன்ற புதிய திசைகளில் நாம் பயணிக்கத் துணிய வேண்டும்.

முல்லைத்தீவு யுத்த சூனிய வலயத்திலிருந்து அப்பாவிப் பொது மக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறும், மனிதக் கேடயங்களாக மக்களை பாவிப்பதை நிறுத்துமாறும் புலிகள் மீது பாரிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியது வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களினது  மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால், அவசியமானதும் அவசரமானதுமான இப் பணிகளை தட்டிக் கழித்து நனைத்துச் சுமக்கும் `வீண் அரசியல்` வேலைகளால் புலம் பெயர் தேசங்களில் தமிழர் உழைப்பும் சேமிப்பும் காரியாகி வருவை கண்டு மெத்த மனவருத்தம் கொள்கிறோம்.

‘வெற்றியை காப்பது வீரம், தோல்வியை ஏற்பது மாவீரம்’ எனும் போரறவியலை புலிகள் கருத்திலெடுத்து இந்த யுத்தத்தில் தமது தோல்வியை ஏற்பதும் தமிழர் மரபை காப்பதாக அமையும் என்பதையே இங்கு இடித்துரைக்க விரும்புகிறோம்.

ஒரு கும்பலின் கூட்டுக் கொள்ளைக்கும் காட்டாச்சிக்கும் இடைவிடாது வளங்களைக் குவிக்கும் இந்த ‘ஈழப்’ போர்ப்புயல், தமிழர் வாழ்வில் மனித விழுமியங்களை அடியோடு பிடுங்கியெறிந்து ’ஏக தலைமை’ செயற்கையாக உருவாக்கிவிட்ட மனிதப் பேரவலம். இந்த சண்ட மாருதம் ஓய்ந்து தாயகம் மீளெழுச்சி கொள்ள புகலிடத் தமிழர்கள் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமைகள் நிறைந்த ஒரு புத்தாண்டாக இந்த வருடம் மலர்ந்துள்ளது.

புலம் பெயர் தமிழர்களே! எமது தாயக அரசியலில் புதிய காற்று வீச தயவுசெய்து அனுதியுங்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்ட விபத்துக்கள் 202 பேர் வைத்தியசாலையில் அனுமதி

புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற விபத்துக்களில், 202 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 6.00 வரையான 24 மணி நேரத்தில் மட்டும் 75 பேர் மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

புத்தாண்டு காலத்தில் முக்கிய பாதுகாப்பு குறித்து மட்டும் கவனம் செலுத்தவும் – படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு

mahinda.jpgதற்போது ஏற்பட்டுள்ள தோல்வியை முழுமையாக ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அரசாங்கத்திடம் சரணடைவதற்கு இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு பாரிய துன்பங்களுக்கு முகங்கொடுத்து வரும் அப்பாவி மக்கள் தேசியப் புத்தாண்டைப் பொருத்தமான முறையில் கொண்டாட வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

இதன் காரணமாகப் புத்தாண்டு காலப் பகுதியில் அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாத்திரம் அதிக கவனம் செலுத்தும்படி படை நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது 

கண்துடைப்பு அறிவிப்பு : தேவை நிரந்தர போர் நிறுத்தம் – விடுதலைப் புலிகள்

lttelogo.jpgஇலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது ஒரு தலைபட்சமான போர் நிறுத்தம், கண்துடைப்பு அறிவிப்பு. இப்போது அவசரத் தேவை நிரந்தர போர் நிறுத்தமே என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் – முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.

சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை – புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோம்.

போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு மக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களையும் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிங்களப் படைகள் தொடர்ந்து நடத்துகின்றன.

உலகையும் – தமிழ் மக்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட இந்த அரசியல் நாடகத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று புலிகள் இயக்கம் நீண்ட நாளாகவே கோரி வருகின்றது.

இதனையே நாம் இப்போதும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இத்தகைய போர் நிறுத்தம் அரசியல் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அமைதி வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக்காணும் ஏது நிலையையும் அது உருவாக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புகின்றது.

இத்தகையதொரு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள புலிகள் இயக்கம் தயாராகவுள்ளது.

சிங்களப் படைகளின் முற்றுகைப் போருக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்கள் இங்கே சொல்லொணாத் துயர்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த அவல வாழ்க்கை உலகத்தலைவர்களாலும் – உலக மக்களாலும் அனுதாபமாகப் பார்க்கப்படுவது எமது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.

சிங்கள அரசின் உணவு மற்றும் மருந்துத் தடைகளால் மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், நன்னீர் கிணறுகளை அசுத்தமாக்கியுள்ளது.

இதனால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

படையினரின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படும், காயமடையும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 300 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.

மக்களின் வாழ்விடத்திற்கு நெருங்கி நின்றவாறு படையினர் நடத்தும் துப்பாக்கித் தாக்குதல்களால் இப்போது அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வெட்டவெளியான மணற்திடல்களில் – தறப்பாள் கூடாரங்களுக்குள் முறையான காப்பகழிகள் இன்றி வாழும் மக்களை இந்த ரவைகள் தாக்குகின்றன.

இவ்விதம் சிங்களப் படைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் எமது மக்களுக்கு உடனடிப் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாகவுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் சிறிலங்கா அரசு விரும்புவது போல அதன் ராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக, மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம் கொண்டதாகவும் அமைய வேண்டும்.

அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று புலிகள் கூறியுள்ளனர்.

தாக்குதல் இடைநிறுத்தத்தை புலிகள் ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தத்துக்கு வழிகோல இந்தியா உதவும். – பி.சிதம்பரம்

chidambaram1.jpgஇலங்கை அரசு அறிவித்துள்ள தாக்குதல் நிறுத்தத்தை விடுத லைப்புலிகள் முறைப்படி அனு சரித்துச் செயற்பட்டால், போர் நிறுத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர அது உதவும் என்று இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தமை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்று கொண்டுவரப் படவேண்டும் என்று இந்தியா இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.

போர் நிறுத்தம் இரு தரப்புகளும் சம்மதித்தாலேயே நடைமுறைப்படுத்த முடியும் விடுதலைப்  புலிகளும் போர் நிறுத்த அறிவிப்பை உடன் வெளியிடவேண்டும். தாக்குதல் இடைநிறுத்தம் இரு நாள்களில் முடிவடையாமல் தொடரவேண்டும் என்பதனையே சமாதானத்தை விரும்பும் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.

தாக்குதல் இடைநிறுத்தம் சிறிய அளவிலாளன செயற்பாடுதான். ஆனால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். நாம் தொடர்ந்து வழங்கிய அழுத்தத்தினாலேயே இலங்கை அரசு இரண்டு நாள்களும் தாக்குதல் இடைநிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் விடுதலைப்புலிகளும் இந்தியாவின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டால், நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர நாம் எடுக்கும் முயற்சி பலன் தரும்  என்றார் அமைச்சர் சிதம்பரம்.