20

20

பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்: வைகோ

india-election.jpgவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, கருணாநிதி முன்கூட்டியே இரங்கல் கவிதை எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது கனவு பலிக்காது. பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார் என்று வைகோ பேசினார். அமைந்தகரையில் நடந்த தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கை தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த மூன்று பேருக்கு மட்டுமே கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். தற்போது, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாளர் என்பது போல கபடநாடகம் ஆடுகிறார். சேது சமுத்திர திட்டம் குறித்து நான் சொன்ன கருத்தை வைத்து, அ.தி.மு.க.,வுடன் நெருடல் இருப்பதாக ஒரு ‘டிவி’ பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால், அதற்கு அடுத்த கேள்விக்கு இந்திய பிரதமராக வர அனைத்து தகுதியும் உள்ளவர் ஜெயலலிதா என்று நான் கூறிய கருத்தை வெளியிடவில்லை.

தற்போது, தனித்தமிழ் ஈழம் அமைய அ.தி.மு.க., பாடுபடும் என்று அ.தி.மு.க., அறிவித்திருப்பது மிக முக்கியமான விஷயம். முடிவெடுத்தால் அந்த முடிவில் உறுதியாக இருக்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். பிரபாகரன் பிடிபட்டால் போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். ஆனால், தற்போது தனியார் ‘டிவி’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பிரபாகரன் எனது நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்,’ என்று கூறியிருக்கிறார். பிரபாகரன் எப்போது சாவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி

ஈழத்தமிழர் பிரச்னைக்காகவே மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டவர் அவர். முன்கூட்டியே பிரபாகரனுக்கு இரங்கல் கவிதையை கருணாநிதி எழுதி வைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும். அவர் எண்ணம் பலிக்காது; பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்.எனக்கு மரண தண்டனை விதித்தாலும், பிரபாகரனுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன்.

சோனியாவே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா? – கருணாநிதி

20-karunanithi.jpgசோனியா காந்தியே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியின் இன்னொரு பகுதியை அந்த டிவி வெளியிட்டுள்ளது.

அதில், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்வது என்பது மாநில அரசின் கையில் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்றார்.

பின்னர், கொள்கை அடிப்படையில், அனுதாபத்தின் அடிப்படையில் நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்களா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி அவர்களே நளினியிடம் இரக்கம் காட்டியபோது, நான் காட்டாமல் இருக்க முடியுமா என்றார் கருணாநிதி.

இதற்கிடையே, சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ் காந்தி படுகொலையை நான் மன்னிக்க மாட்டேன். அதை செய்த இயக்கத்தையும் நான் மன்னிக்க மாட்டேன் என்றார் கருணாநிதி.

பெப்ரவரி முதல் இதுவரை 10.000 நோயாளிகள் அரச பகுதிக்கு வருகை!

taking-to-green-ocean.jpgகிரீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த பெப்ரவரி முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் புலிகளின் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாக ஐ. சி. ஆர். சி. தெரிவிக்கின்றது. கடந்த இரு தினங்களில் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 940 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் ஐ. சி. ஆர். சி.யினூடாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுடன் நோயாளிகளின் உறவினர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். நோயாளர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தமிழ் சிங்களப் பாடசாலைகளின் இரண்டாம்; தவணை நாளை ஆரம்பம்!

schools_stu.jpgநாட்டி லுள்ள தமிழ் – சிங்கள – பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை இன்றுடன் முடிவடைவதுடன் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ் – சிங்கள பாடசாலைகள் நாளை 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகின்றது. தமிழ் – சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய உள்ளதுடன்,  முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்விச்செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளன.

இந்த வருடத்தின் பாடசாலைக் கல்வி; நடவடிக்கைகள்; யாவும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக் கல்விமையமைச்சு அறிவித்துள்ளது.

புலிகளுக்கெதிரான மற்றுமொரு புகைப்படக் கண்காட்சி நாளை ஜெனீவாவில் ஆரம்பம்

புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளைச் சித்தரிக்கும் மற்றுமொரு புகைப்படக் கண்காட்சி நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெனீவாவிலுள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ள இப்புகைப்படக் கண்காட்சியின்போது கடந்த மூன்று தசாப்தங்களில் எல்.ரீ.ரீ.ஈ. யினர் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் என்பவற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பவற்றுடன் இணைந்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடமிருந்தும் சர்வதேச செய்தி முகவர் நிலையங்கள்,  வெளியீட்டு நிறுவனங்கள் என்பவற்றிடமிருந்தும் பெறப்பட்ட புகைப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. புலிகளின் கொடுமைகளை சித்தரிக்கும் இவ்வாறான புகைப்படக் கண்காட்சிகள் கடந்த வருட இறுதிப் பகுதியில் பிரித்தானியா, நெதர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

நோர்வே தூதரகம் முன் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

norway-colombo.jpgநோர் வேயின் ஒஸ்லோ நகரில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகியன இணைந்து கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டன.

நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு சார்பான வகையிலான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கை தூதுவராலயத்தைத் தாக்கியவர்கள் குறித்து நோர்வே அரசாங்கம் மௌனப் போக்கினை கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

35000 மக்கள் மீட்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவிப்பு : பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு

puthu.jpgவன்னிப் பிரதேசத்திலிருந்து 35000 மக்களை காப்பாற்ற இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி இன்று மாலை தெரிவித்தார். மேலும் இந் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

புலிகள் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், தற்கொலைத் குண்டுத்தாக்குதல்  மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  காயப்பட்ட 17 பேர் விமான ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு : அரசு அறிவிப்பு 

 “24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்”

இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : “பாதுகாப்பு பகுதியில் இருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். விரைவில் ஒட்டு மொத்த மக்களையும் மீட்டு விடுவோம். விடுதலைப்புலிகள் முற்றிலும் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர்.

பிரபாகரனுக்கு 24 மணி நேரம் கெடு விடுக்கிறோம். அவரும் அவரது குழுவினரும் அதற்குள் சரணடைய வேண்டும். இல்லை என்றால் எங்கள் படை அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் : புதுமாத்தளன் மேற்கு பகுதிமண் அரணின் 3 கி.மீ. படையினர் வசம் 
 
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் மேற்கு பகுதியிலுள்ள மண் அரணின் 3 கிலோமீற்றர் அளவிலான பகுதியினை இன்று காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58ஆம் மற்றும் 53ஆம் படையணியினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. அதேவேளை பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரிடம் வரும் பொதுமக்கள் மீது இன்று 3 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு அரசாங்கம் 24 மணி நேர காலக்கெடுவினை அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்துள்ள இந்த காலக் கெடு நாளை நண்பகலுடன் முடியவடையவுள்ளது.

civiling_flee_vanni_01.png

civiling_flee_vanni_02.png

ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மீட்பு!

pokkanai.jpgபுலிகளிடம் சிக்கியிருந்த ஆயிரக் கணக்கான பொது மக்கள் இன்று காலை படைப் பிரிவினரால் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்கும் பணிகளை படையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மண் மேட்டை தகர்த்து பொதுமக்களுக்கு தப்பி வருவதற்கு படையினர் வழி வகுத்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது. 

காணாமற்போன சிறுவனும் சிறுமியும் சடலமாக மீட்பு- அக்மீமனை கிராமத்தில் துயரம்

baby-01.jpgகாலி மாவட்டம் அக்மீமன பகுதியில் கடந்த வாரம் முதல் காணாமற் போயிருந்த சிறுவனும் சிறுமியும் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தனுஜா ஐராங்கனி (10) எனும் சிறுமியும் கவின் ரஸ்மிக்க (03) எனும் சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கபடுவதாவது:- அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொனாமுள்ள நுகேகந்த கிராமத்தைச் சேர்ந்த மேற்படி சிறுவனும் சிறுமியும் கடந்தவாரம் முதல் காணாமற் போயுள்ளார்கள். ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே இவ்விருவரும் காணாமற் போயுள்ளனர். சிறுவனும் சிறுமியும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இரு குடும்பத்தாரும் தமது பிள்ளைகள் காணாமற் போனது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு பிள்ளைகளைத் தேடியும் வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (18) நண்பகல் வேளையில் பாடசாலை மாணவியான தனுஜா ஐராங்கனி (10) எனும் சிறுமி தனது வீட்டு வளவுக்குள்ளிருந்த பழைய மலசல கூடமொன்றிலிருந்து அக்மீமன பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும் ஊர் மக்களும் பொலிஸாரின் உதவியுடன் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் துர்திஷ்டமாக கவின் ரஸ்மிக்க (03) எனும் சிறுவனும் நேற்று (19) காலை சடலமாகவே கண்டெடுக்கப்பட்டார். துகேகந்த கிராமத்தில் ஜயந்தி எனும் சந்தியிலிருந்த காட்டுக்குள்ளிருந்த வீடொன்றின் அருகிலிருந்தே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இம்மர்ம கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். பெரியவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு சிறுவர்கள் பலிக்கடாவாக்கப் பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர். இரண்டு குடும்பங்களுடனும் கோபமுள்ள ஒருவராலேயெ இப்பிள்ளைகள் கடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கொல்லப்பட்டுள்ள சிறுவனதும் சிறுமியினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்தியாவின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி இன்று இலங்கை வருகிறார்

sri_sri_ravisangar_.jpg இந்தியாவின் ஆன்மீகத்தலைவரும், வாழும்கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி இன்று (20.04.2009) இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 3 நாட்கள் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் தலைவர்களையும் சர்வமத தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது