புத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
சர்வதேச யுத்த கொள்கைகளை நாம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி எங்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு முயற்சிகளை சிலர் மேற்கொண்டுவருக்கின்றனர் எனினும் தாய் நாட்டிற்காக நான் கழுத்தையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற ஒன்றுக்கூடலில் ஆயுர்வேத நிபுணர்கள் ,சமாதான நீதவான்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ ஒருபோதும் முடியாது
எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ அவற்றின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்து நாட்டைப் பாதுகாக்க முன்வருமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். மேல் மாகாண ஐ.ம.சு.மு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று மாலை நடை பெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உங்களைப் போன்ற மூன்று இளைஞர்களின் தந்தையாக இருந்து உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமைப்படுகின்றேன். உங்கள் மத்தியில் இருக்கும் துடிப்பையும், எதையாவது புதிதாக செய்யவேண்டு மென்ற ஆர்வத்தையும் நானறிவேன்.
இந்நாட்டின் எதிர் காலத்தைப் பொறுப்பெடுக்கவிருப்பவர்கள் நீங்களே, உங்களைப் போன்ற பருவத்தை நானும் கடந்து வந்திருக்கிறேன். மிகவும் குறைந்த வயதில் பாராளுமன்ற உறுப்பினரானேன்.
தாய் நாட்டின் மீது பற்றுள்ள இளம் சமுதாயத்தினரே புலிகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த வடக்கையும், கிழக்கையும் விடுவித்திருக்கின்றனர்.
நாட்டின் இளம் சமுதாயத்தினர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பை அண்மையில் கிளிநொச்சிக்கு சென்ற சமயம் நான் புரிந்துகொண்டேன். திருமலை கடற்படை முகாமிலும், விமானப்படை முகாமிலும் நடைபெற்ற வைபவங்களில் கலந்துகொண்ட வேளையிலும் இதனை நான் அறிந்துகொண்டேன்.
இலட்சக்கணக்கான இளைஞர்கள் பாதுகாப்பு படையில் இணைவது வேறு தொழில்களில் ஈடுபட முடியாமல் அல்ல. மாறாகத் தாய் நாட்டின் மீது கொண்டிருக்கும் பற்று காரணமாகவே அவர்கள் இவ்வாறு இணைகின்றனர்.
இளம் சமுதாயத்தினருக்கு நல்லதொரு நாட்டையும், சமுதாயத்தையும் உருவாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.
அவர்களது எதிர்பார்ப்புக்கள் இனம்காணப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுபானத்திற்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தின் மூலம் நல்லொழுக்கமுள்ள சமுதாயம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
நாட்டு மக்கள் அனைவரும் அச்சமும், சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எனது நோக்கமாகும் என்றார்.