26

26

கண்டி தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துக: அமைச்சர் முரளிதரன்

Karuna Colதனக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பலம் பெற முயற்சிக்கும் நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் வி. முரளிதரன் பொலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணா குழுவினர் என தம்மை கூறிக்கொண்டு கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி ஒரு லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை கப்பல் கேட்கும் கும்பல்கள் பற்றிய தகவல்கள் வெளியானதை அடுத்தே அமைச்சர் வி. முரளிதரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

பாதுகாப்பு வலயத்தை மீட்டெடுக்க இன்னும் 4 நாட்கள்

images-army.jpgதற்பொழுது இடம்பெற்றுவரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் நான்கு நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். பொதுமக்களை மீட்கும் பணியினை படையினர் மிகவும் அவதானத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். எந்தவொரு கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தாது துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்தி முன்னேறி வருகின்றனர் என கூறினார்.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

sarath-fonseka.jpg வவுனியாவுக்கு நேற்று சனிக்கிழமை காலை இராணுத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா விஜயமொன்றை மேற்கொண்டார்.  முல்லைத்தீவு, புதுமாத்தளன் மோதல் தவிர்ப்பு வலயத்தில் இடம் பெறும் படை நடவடிக்கை குறித்து ஆராயும் நோக்கிலேயே சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் சகிதம் இராணுவத் தளபதி இந்த விஜயத்தை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட வன்னிக்கான கட்டளைத்தளபதிகள், வன்னியில் புலிகள் எஞ்சியிருக்கும் பகுதியின் நிலைமைகள் குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கம் கூறினார். எதிர்வரும் நாட்களில் அந்தப்பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள படை நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்த இராணுவத்தளபதி அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

28 சடலங்கள் வவுனியாவில் அடக்கம்

வவுனியா பொதுவைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்கள் மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் பூந்தோட்டம் பொதுமயானத்தில் கடந்த புதன்கிழமை இரவு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் எடுத்து செல்லப்படாததும், அடையாளம் காணப்படாததுமான சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தன. இடநெருக்கடியும் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதனைத் தொடர்ந்து இவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.

ஒரே குழியில் 28 சடலங்களும் போடப்பட்டே அடக்கம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடம்பெயர்ந்தோருக்கு உடனடியாக 155 மில்லியன் டொலர் நிதி தேவை – அரசு, ஐ.நா., 40 நிவாரண அமைப்புகள் கோரிக்கை

cvili.jpgமோதல் பகுதியிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்போருக்கு உடனடி நிவாரண உதவி வழங்க நிதி உதவி தேவைப்படுவதாக உதவி வழங்கும் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கும் அதேசமயம், ஐ.நா.வும் அரசாங்கமும் 40 நிவாரண முகவரமைப்புகளும் 155 மில்லியன் டொலர் தேவையென கோரிக்கை விடுத்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி நிராதரவாகவிருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உதவியளிக்குமாறு வேண்டுகோளை விடுத்துவரும் உதவிவழங்கும் அமைப்புகள் பல மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கும் முகாம்கள் நிரம்பி வழிகின்றன. நாற்காலி வைக்கும் இடத்தின் அளவுடைய பகுதியில் சில குடும்பங்கள் இருப்பதாக நிவாரணப் பணியாளர்கள் கூறுவதாக “ரிலீவ்வெப்’ இணையத்தளம் தெரிவித்தது.

மருத்துவமனைகளும் காயப்பட்டடோராலும் நோயாளர்களாலும் நிரம்பியுள்ளன. மோசமான காயங்களுடன் மோதல் பகுதியிலிருந்து கொண்டுவந்து அனுமதிக்கப்படுவோருக்கு மருத்துவர்கள் இரவுபகலாக சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நிதியுதவி அதிகளவு தேவைப்படுவதாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி நீல்புனே கூறியுள்ளார்.

குழந்தைகள் வயிற்றோட்டத்தாலும் சிறுவர்கள்,பெண்கள் போஷாக்கின்றியும் காயமடைந்தவர்களையும் நான் பார்க்கின்றேன். மோதல்பகுதியிலிருந்து மாதக்கணக்காக உடுத்தியிருந்த ஆடையுடன் ஆட்கள் வந்துள்ளதையும் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். வவுனியாவுக்கு சென்று முகாம்களின் நிலைமையை பார்வையிட்டு திரும்பியிருந்த நீல்புனே இந்த மக்களில் பலர் ஒருவருடத்துக்கு முன்பே தமது வீடுகளிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்றும் அந்த மாதிரியான மோசமான சூழ்நிலையிலிருந்தும் இவர்கள் உயிர்தப்பி வாழ்வது ஏதோவொரு அற்புதம் எனவும் புனே கூறியுள்ளார்.

இலங்கைக்கு உதவி வழங்க ஐ.நா. வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, புகலிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் முகவரமைப்புகள் நிதிப்பற்றாக்குறையினால் திண்டாடுகின்றன. 196,000 பேர் வெளியேறியிருப்பதாக அரசு கூறுகிறது. இவர்களில் அநேகமானோர் வவுனியாவிலுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். முதலில் இடம்பெயர்ந்தவர்கள் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் தங்கியுள்ளனர். விரைவில் இவர்களுக்கு முகாம்களை அமைப்பதற்கான இடங்களை தயாராக்குமாறு ஐ.நா. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பொருத்தமான நிலத்தை வழங்குவதில் அரசு தாமதம் காட்டுவதாகவும் தற்காலிக முகாம்களுக்கான உள்சார் கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிட உதவி வழங்கும் குழுக்களால் எவ்வளவு தொகையை. செலவிட முடியும் என்பதில் யதார்த்தபூர்வமற்ற எதிர்பார்ப்புகளை அதிகாரிகள் கொண்டிருப்பதாகவும் நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்ததாக ரிலீவ் வெப் கூறியுள்ளது. பலர் உடுத்த ஆடையுடனேயே எதுவுமின்றி வந்துள்ளனர். பசியுடனும் தாகத்துடனும் இருக்கும் அவர்களுக்கு சிறியளவு உணவும் நீருமே கிடைக்கிறது. அன்புக்குரியவர்கள் கண் முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் இல்லாதவர்களாக பிரமை பிடித்தவர்களாக உள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கான அவசரப் புகலிடங்கள் , மலசல கூடங்களை அமைக்கவும் 9 மில்லியன் டொலர் நிதியுதவி தேவையென செயலர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  உணவு , ஆடைகள், படுக்கைகள், சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்கிவரும் சேவ்த சில்ரன் அமைப்பு 3.65 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் குடும்பங்கள் சகலவற்றையும் இழந்துவிட்டன. சிறுவர்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சேவ்த சில்ரன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரசாத் நாயக் தெரிவித்துள்ளார்.  நிதி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் அதிக அளவில் உதவவேண்டும் என்றும் ?கிறிஸ்ரியன் எய்ட், அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புகலிடம், உணவு, நீர், சுகாதார வசதி, ஆடை, படுக்கை, நுளம்பு வலைகள் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு உடனடியாக தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வும் அரசாங்கமும் சுமார் 40 உதவி வழங்கும் அமைப்புகளும் 2 இலட்சம் பேருக்கு உதவுவதாகவும் 155 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளன. அதேசமயம், தேவைப்படும் தொகையில் 31 சதவீதமே அதாவது 48 மில்லியன் டொலரே கிடைத்திருப்பதாக ஐ.நா. பேச்சாளர் கோர்டொன் வைஸ் கூறியுள்ளார்.

உணவுக்கான உதவி 60 சதவீதம் கிடைத்திருப்பதாகவும் ஆனால் தங்குமிடத்திற்கு 18 சதவீதமே கிடைத்திருப்பதாகவும் நீர், சுகாதார வசதிகளுக்கு 16 சதவீதமும் சுகாதார வசதிகளுக்கு 15 சதவீதமும் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன் இது மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உடனடி மனிதாபிமான உதவிகள் வழங்க உதவி வழங்குவோர் விரும்புவதாகவும் ஆனால் நீண்டகாலத்துக்கு இடைத்தங்கல் முகாம்களுக்கு நிதியுதவி வழங்க தயங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று மன்மோகன் சிங்கை நோக்கி ஷூவை வீச முயற்சி – குஜராத்தில் பரபரப்பு

manmohan1.jpgகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி ஒரு நபர் ஷூவை வீச முயன்றார். ஆனால் போலீஸார் பாய்ந்து சென்று அந்த ஷூவை மடக்கிப் பிடித்து விட்டனர். அந்த நபரும் கைது செய்யப்பட்டார். அகமதாபாத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் ஷூவை எடுத்து அவரை நோக்கி வீச முயன்றார்.

ஆனால் இதைப் பார்த்து விட்ட போலீஸார் பாய்ந்து சென்று அந்த நபரை மடக்கினர். இதனால் ஷூ பாதியிலேயே விழுந்து விட்டது. பின்னர் அந்த நபரை குண்டுக்கட்டாக அங்கிருந்து கொண்டு சென்றனர். ஷூ வீசிய நபருக்கு 25 வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர், என்ன பெயர், எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்துத் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்த மாதத் தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஷூ வீசினார். இதுதான் இந்தியாவில் சமீப காலத்தில் நடந்த முதல் பரபரப்பு ஷூ வீச்சு சம்பவம். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜின்டால், அன்வர் உசேன் ஆகியோர் மீதும், அத்வானி மீது செருப்பும் வீசப்பட்டது. இந்த நிலையில் பிரதமரை நோக்கி ஷூ வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் – லாரி மோதல் – அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்

neduma2.jpg இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் சென்ற கார் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்.பழ.நெடுமாறன் நேற்று மாலை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் பயணித்த கார் சேந்தன்குடி என்ற இடத்தில் வந்தபோது, எதிரே காஸ் நிரப்பிக் கொண்டு வந்த டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இருப்பினும் நெடுமாறன் உள்பட காரில் இருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

விரைந்து வந்த சீர்காழி போலீஸார், லாரியை ஓட்டி வந்த முசிறியைச் சேர்ந்த கணபதி என்பவரைக் கைது செய்தனர்.

கூடாரங்கள், அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அவசரமாக அனுப்புகிறது யூ.என்.எச்.சி.ஆர்.

new_welfare.png
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களின் அவசர தேவைகளுக்காக கூடாரங்கள் மற்றும் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் அவசர பணிகளைத் தாங்கள் ஆரம்பித்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளையடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்களுக்கு வந்துள்ளனர்.

வவுனியா, மன்னார், யாழ்.குடாவில் இந்த மக்கள் பாடசாலைகளிலும் பொட்டல் வெளிகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இந்த மக்களுக்கான தங்குமிட வசதிகள் மிகவும் குறைவாயுள்ள நிலையில் யு.என்.எச்.சி. ஆர் தனது அவசர உதவிப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் முதல்கட்டமாக கூடாரங்கள் மற்றும் பொருட்களை விமான மூலம் கொழும்புக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தேவையான. ஐயாயிரம் கூடாரங்களும் வேறுபொருட்களும் அடுத்த ஓரிரு தினங்களில் விமானங்கள் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. அந்தக் கூடாரங்கள் தற்போது வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் 38 முகாம்களிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

வன்னி அகதிகளுக்கு உதவி வழங்குமாறு முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை

cvili.jpgவன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்ற தமிழ் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களின் ஊடாக நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்புமாறு ஜம் இயத்துல் உலமாவின் உதவிச்செயலாளர் மௌலவி தாசிம் அறிவித்துள்ளார். தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இடம்பெயரும் வன்னி மக்களுக்கு இன்று அவசியமாக சமைத்த உணவே வழங்கவேண்டியதாக சுட்டிக்காட்டி அதனை முதலில் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து ஜமா அத்தே இஸ்லாமிய குழுவை வவுனியாவுக்கு அனுப்பி அங்கு உணவை சமைத்து வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழுகின்ற முஸ்லிம்கள் மதியஉணவு மற்றும் உணவுப்பொருட்களை உடன் சேகரித்து வவுனியா நலன்புரிநிலையங்களில் உள்ள அகதிகளுக்கு வழங்குமாறும் மௌலவி தாசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிநீர் போத்தல், குழந்தைகளுக்கான பால்மா வகைகள், பிஸ்கற் வகைகள், பெண்களுக்கான உடுபுடவைகள் , சுகாதாரத் துணிகள், பெட்சீற், சாரம் போன்றவற்றைச் சேகரித்து வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தெமட்டகொடவில் உள்ள வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் இப்பொருட்களை ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பேர்லினில் இலங்கை தூதரகம் மீது வியாழன் இரவு கைக்குண்டு வீச்சு

germany.jpgஜேர்மனியின் பேர்லின் நகரிலுள்ள இலங்கைத்தூதரகம் மீது கடந்த வியாழக்கிழமை இரவு கைக்குண்டுத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தூதரகப்பகுதிக்கு வந்த சிலர் இரு கைக்குண்டுகளை தூதரகத்தின் மீது வீசியுள்ளதாக பேர்லின் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு குண்டுகளில் ஒன்றே வெடித்துள்ளது. மற்றது வெடிக்கவில்லை. இக்குண்டுவெடிப்பால் கட்டிடத்திற்கு சிறிதளவு சேதமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்த எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே இந்தக் குண்டுத்தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தாங்கள் கருதுவதாக இலங்கைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேர்லின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்தமூன்று மாதங்களுக்கு முன்னரும் இந்தத் தூதரகம் மீதுதாக்குதல் நடத்தப்பட்டதும் தெரிந்ததே.