28
28
வன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்துக்கு அதிகபட்சம் உதவுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை வந்திருந்த மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று திங்கட்கிழமை முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. பிரதிநிதிகள் குழுவை சந்தித்துப் பேசிய போதே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கொழும்பு, சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்ற இச் சந்திப்பில் ஐ.தே.க. சார்பில் ரணில் விக்கிரமசிங்கவுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக்ஷமன் கிரியெல்ல இருவரும் கலந்துகொண்டனர்.
இடம்பெயர்ந்து வரும் மக்கள் தொடர்பான மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசாங்கத்துக்கு ஐ.நா. போதிய உதவிகளை வழங்க வேண்டுமென இச் சந்திப்பில் ஹோம்ஸிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக ரவி கருணாநாயக்க கூறினார். இதேநேரம், பெருந்தொகையான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கி இடம்பெயர்ந்து வரும் நிலையில் அவர்கள் அனைவருக்குமான நிவாரண உதவிகளை வழங்க போதிய பலம் அரசிடம் இல்லாமையால், அதற்கான உதவிகளை அரசாங்கத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
அதுமட்டுமல்லாது, இடம்பெயர்ந்து வந்த மக்கள் ஒரு வருடத்திற்குள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் ஐ.நா.வுக்கு உறுதியளித்திருப்பதாக இதன்போது ஜோன் ஹோம்ஸ் கூறியதாகவும் தங்களது கட்சி அதை வரவேற்றதாகவும் கிரியெல்ல எம்.பி. மேலும் தெரிவித்தார்.
இலங் கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக ஏற்கனவே 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, பேஸ்ட் மற்றும் துணி வகைகள் கொண்ட ரூ.10 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் 13-11-08 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது.
பின்னர் அவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக இலங் கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
மேலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் ரூ.6 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் சமையல் பாத்திரங்களும், நிவாரணப் பொருட்களாக 40 ஆயிரம் சிப்பங்களில் கடந்த 22-4-09 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவை மிக விரைவில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக விநியோகிக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : இலங்கையில் தற்காலிக முகாம்களுக்கு தற்போது கூடுதலாக இடம் பெயர்ந்து வந்து சேர்ந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிப்பதற்காக மூன்றாம் கட்டமாக ஏறத்தாழ ரூ.7 கோடி மதிப்புடைய மேலும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய சிப்பங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
வழக்கமாக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் இம்முறை குடிநீரைச் சுத்திகரிக்கத் தேவையான வில்லைகளும், 10 ஆயிரம் கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களும் சேர்த்து அனுப்பப்படுகின்றன.
இந்த நிவாரணப் பொருள்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிர்வரும் மே மாதம் 5ஆந்திகதிக்குள் சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டு, அங்குள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய பணத்தில் மீதப்பட்ட 25 கோடி ரூபாவை தமிழக அரசின் சார்பில் நிதி உதவியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தொகை மத்திய அரசு அறிவித்துள்ள ஒதுக்கீடான ரூ. 100 கோடியுடன் சேர்த்து ரூ. 125 கோடியாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படும்.” என அதில் கூறப்பட்டுள்ளது.
சுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் இவ்வாரம் இலங்கை வருவதற்கான சுவீடனின் அழைப்பை இலங்கை மறுத்துள்ளது. இதனையடுத்தே இலங்கைக்கான தூதுவரை சுவீடன் மீள அழைத்ததாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இராணுவத்தின் 58 ஆவது படையணி நெருங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை மீட்கும் மனிதநேய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 53 ஆம் 58 ஆம் படையணியினர் கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியை நோக்கி முன்னேறியுள்ளனர். பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து 3.5 கிலோ மீற்றர் தொலைவில் இராணுவத்தின் 58 ஆவது படையணி இப்போது நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரபாகரனும் அவரது மிக நம்பிக்கைக்கு உரியவர்களான பொட்டு, சுசை, பானு என்போர் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் மிகப் பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் இருப்பதாக பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி வந்து இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமானப் படையின் ஆளில்லா விமானம் விடுவிக்கப்படாத பகுதியை மிக நுணுக்கமாக அவதானித்து வருகிறது. அதேவேளை கடற்படையினரும் வலைஞர் மடத்தில் இருந்து வட்டுவாகல் பகுதியில் உள்ள 7 கி.மீ கடற் பிராந்தியத்தை இடைவிடாது கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் பொலிஸாரும் இணைந்துள்ளனர். இம்மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு, பொலிஸ் நிருவாகப் பிரிவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை இன்று பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன பிரதிப் பொலிஸ்மா அதிபர் நோருன்னவிடம் கையளித்தார்.
இப்பொருட்கள் விரைவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிராந்தியத்தின் சில பகுதிகளில் இன்றிரவு 9.00 மணி முதல் நாளைக் காலை 6.00 மணி வரையான 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தரமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுவீடன் அமைச்சருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு எதனையும் விடுக்கவில்லை எனவும், இதன் காரணமாக சுவீடன் அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் எனவும் தெரியவருகிறது.எனினும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் வேறொரு நாளில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.