May

Sunday, September 19, 2021

May

கிழக்கு: மாகாண ஆஸ்பத்திரிகளை சகல வளங்களுடன் தரமுயர்த்த முடிவு

basil.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாகாண ஆஸ்பத்திரிகளில் நிலவும் ஆளணி மற்றும் பெளதீக வளங்களை பூர்த்தி செய்து தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று அம்பாறை போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர்களான சுசந்த புஞ்சி நிலமே, பி. தயாரட்ன உட்பட பலரும் கலந்து கொண்டனர். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு வைத்தியசாலை, மட்டக்களப்பு வைத்தியசாலை அக்கரைப்பற்று வைத்தியசாலை, அம்பாறை போதனா வைத்தியசாலை என்பன தர முயர்ததப்பட்டு முழுமையான ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில் மாகாண ஆஸ்பத்திரிகளையும் தரமுயர்த்துவது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மஸ்கெலியா மண்சரிவு: வீடுகளில் வெடிப்பு; குடியிருப்பாளர்களை வெளியேற உத்தரவு

home.jpgஅம்பக முவ பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா நகரத்தில், மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியின் அருகில் அமைந்திருந்த குடியிருப்புகள் சில நில வெடிப்பு காரணமாக பாதிப்படைந்துள்ளன.

மவுசாக்கலை நீர்தேக்கத்தின் கரையில் அமைந்திருந்த இந்த வீடுகளில் குடியிருந்த 5 குடும்பங்களை உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் பணித்துள்ளார். தற்போது மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இக்குடியிருப்புப் பகுதி மண்சரிவு அபாயத்தையும் எதிர்நோக்கியுள்ளது.

இந்த வீடுகளின் சுவர்கள் 4-5 அங்குலம் வரை வெடித்து இடைவெளிகளுடன் காணப்படுகின்றன. சில வீடுகளின் சுவர்கள் நிலவெடிப்புகள் காரணமாக நிலத்தினுள் புதைந்துள்ளன. தொடர்ந்தும் மழைபெய்தால் நிலவெடிப்புகளின் அளவு அதிகரிப்பதோடு, பாரியளவு மண்சரிவு அபாயத்தையும் எதிர் நோக்கும் என புவி சரிதவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 குடும்பங்களும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். இவர்களுக்கான நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

‘ஸ்லம்டாக்’ குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய வீடு

azhar_rubina.jpgஆஸ்கர் விருதை வென்ற‘ஸ்லம்டாக் மில்லியனர்’திரைப்படத்தில் நடித்த இரு இந்திய குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய வீடுகளை கொடுக்க அரசாங்கம் முன் வந்துள்ளது. மும்பையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் இவர்கள் இருவருடைய வீடும் இடிக்கப்பட்டது.

அசாரூதின் இஸ்மாயில் மற்றும் ரூபினா அலி என்ற இந்த இருவருக்கும் காங்கிரஸ் கட்சி வீடு கொடுக்க முன்வந்துள்ளது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடித்தமைக்காக இவர்களுக்கு வீட்டை விருதாக கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த வீட்டுக்கு ஆகும் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்று கொண்டுள்ளது.

இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்கு ஜான் ஹோம்ஸ் ஆதரவு

holmes_.jpgஇலங் கையில் நடந்து முடிந்துள்ள உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் போர்க் குற்றமாக அமையகக்கூடிய மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்தன என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில விசாரணைகள் வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ஐ.நா.மனித உரிமைகள் விவகார ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் அவர்களும் குரல் கொடுத்துள்ளார்.

போர்க்குற்றமாக அமைகின்ற மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் வரும்போதலெல்லாம் அவை முழுமையாக விசாரிக்கப்படுதல் அவசியம் என்றும், இந்த வாரத்தில் முன்னர் கூடிய ஐ.நா.மனித உரிமை மன்றம் அப்படியான ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்திருக்கலாம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அப்படியிருக்கும்போது அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் இனி நாம் தான் யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்புமே பொது மக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்த காரியங்களை தெரிந்தே செய்துள்ளன என்று நம்புவதற்கு இடமளிக்கக்கூடிய வலுவான காரணங்கள் இருக்கவே செய்வதாகவுன் ஜான் ஹோம்ஸ் குறிப்பிட்டார்.

பிரித்தானிய மருத்துவ பணியாளரின் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேச்சு

thamilvany-gnanaku.jpgஇலங் கையில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த லண்டன் கிழக்கு சிங்போர்ட் பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ பணியாளரான தமிழ்வாணி ஞானகுமார் என்பவர் வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பிரித்தானிய மருத்துவ பணியாளரின் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரஜை வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாமில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். .

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஒக்ஸ்போர்ட் விஜயம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து

university-of-oxford.jpgஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் விவாத சங்கத்தின் நிகழ்ச்சியொன்றில் இலங்கை கிரிக்கெட் அணியினர் பங்குபற்றவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்விஜயம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் அணியின் முகாமையாளர் பிரண்டன் குறுப்பு ஆகியோர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்யவிருந்தனர். எனினும் பிரிட்டனிலிருந்து வெளிவரும் த டைம்ஸ் பத்திரிகையின் நேற்று முன்பக்கச் செய்தியொன்றில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசி மாதங்களில் 20 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியான சூழலில் இவ்விஜயம் ரத்துச்செய்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒக்ஸ்போர்ட் யூனியன் நேற்று வெளியிட்ட அறிக்கை யொன்றில் “டைம்ஸ் பத்திரிகையின் இன்றைய முன் பக்கச் செய்தியினால் எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக மேற்படி விஜயத்தை ரத்துச்செய்வதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகர்கள் எமக்குத் தெரிவித்தனர். இது எமக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைத்தல், போதைவஸ்து பாவனை: 6342 பேர் கைது; 3,716 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

may-31.jpgபுகைத் தலினால் தெற்காசியாவில் மாத்திரம் வருடாந்தம் 1.2 மில்லியன் பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது இடங்களில் புகைத்தல் மற்றும் போதைவஸ்து பாவனை தொடர்பாக 6342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3, 716 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட் டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் சுகாதார நலன்புரி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

மனித உரிமை பேரவையின் கூட்ட தொடர் ஜூன் 2இல் ஆரம்பம் விசேட அறிக்கை சமர்ப்பிக்க இலங்கை முடிவு

mahinda_samarasinghe_.jpgஇலங் கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், மனித உரிமைகள் செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்த விசேட அறிக்கையொன்றை மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

எதிர்வரும் 2ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான அமர்வு ஆரம்பமாகிறது. இந்த அமர்வின் போதே இலங்கை சார்பாக இவ்விசேட அறிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவிலிருந்து தெரிவித்தார்.

இலங்கை அரசு மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்காக உறுதிபூண்டுள்ள நிலையில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்குவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளுக்கு நாளை 860 பட்டதாரி ஆசிரியர் நியமனம்

teacher.jpgநாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசா லைகளுக்கு நாளை (01) 860 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து, காலை 9 மணிக்கு இந்த நியமனங்களை வழங்குவதாக பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 1500 பட்டதாரிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1000 பேருக்கு நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை 860 பேருக்கு நியமனம் வழங்குவதுடன், எஞ்சியோருக்குக் காலக்கிரமத்தில் வழங்கப்படுமென பிரதி கல்வி அமைச்சர் தெரிவித்தார். இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கூடுதல் புள்ளிகளைப் பெற்ற பட்டதாரிகளுக்கே இந்நியமனம் வழங்கப்படுகின்றது.

இந்த நியமனம் வழங்குவதுடன், ஊவா, மத்திய, சபரகமுவ மாகாணங்களின் தேசிய பாடசாலைகளில் நிலவிய ஆசிரிய பற்றாக்குறை பிரச்சினை தீர்த்து வைக்கப்படுவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிபுரைக்கு அமைய, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் வழிகாட்டலின் கீழும் பிரதியமைச்சர் சச்சிதானந்தனின் ஒத்துழைப்புடனும் இந்நியமனம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயற்பட எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – ஜனாதிபதி

mahinda-0000.jpgஇலங்கை மண்ணைப் பயன்படுத்தி எவரும் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவின் என். டி. ரி. வி.க்கு (தொலைக்காட்சிக்கு) பேட்டி வழங்கிய அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“இலங்கை மண்ணில் இருந்து எவரும் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது” எனக் கூறிய ஜனாதிபதி இலங்கையில் இருக்கும் சீனர்கள் அபிவிருத்திப் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் துறைமுக அபிவிருத்திப் பணிகளில் ஈடு படுகின்றனரென்று தெரிவித்தார்.

கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், இலங்கையில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது. இரண்டு இனங்கள் தான் இருக்கினறன. ஒன்று நாட்டை நேசிப்பவர்கள். மற்றயவர் நாட்டை நேசிக்காதவர்கள் என்று கூறினார்.

இதேவேளை, இலங்கையின் அபிவிருத்திக்கு இந்திய தொழில் துறையினர் பங்களிப்புச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில், இலங்கையின் அபிவிருத்தியில் இந்திய தொழிலதிபர்கள் பங்களிப்பு வழங்கவேண்டு மெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவிலிருந்து வெளியாகும் வாரவெளியீடான ‘த வீக்’ சஞ்சிகைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகள் மீதான எனது போர் பயங்கரவாதத்திற்கு எதிரான தெற்காசியாவின் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே நான் கருதுகிறேன். உண்மையில் சொல்லப் போனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற புலிகளை அழித்ததன் மூலம் நான் இந்தியாவுக்காக சண்டையிட்டுள்ளேன் என்றே கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினரின் அடுத்த கட்ட கடமை, வடக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் புலம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் அதே சமயம் சண்டை நடைபெற்ற போது கூட இராணுவத்தினர் வடக்குப் பகுதிகளில் சாலைகள் அமைப்பது மற்றும் பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையில் தற்போது போர் முடிவுற்றுள்ள நிலையில் பல ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமது அரசு ‘உள்நாட்டு வளர்ச்சி’யுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வுக்கான அணுகு முறையானது இந்தியாவின் நிலைப்பாட்டையும் உள்ளடக்கியதாக அமையும். இந்தத் தடவை அரசியல் தீர்வானது இலங்கையரின் ஒவ்வொரு தரப்பினரினதும் அபிப்பிராயங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாக அமையும். இலங்கையில் ஆர்வமுள்ள விடயமாக சமாதானம் உள்ளது. அதன் உள்ளடக்கம் தொடர்பாக நாம் அமர்ந்திருந்து தீர்மானிக்க வேண்டியுள்ளது.

இந்தியா நினைப்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமானது இல்லை. யுத்த காலத்தில் ஆதரவளித்தமைக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றி செலுத்துகிறேன்.எனது வெற்றியானது அவரின் (சோனியா) தேர்தல் வெற்றியுடன் சமகாலத்தில் அமைந்தது. தேர்தலில் வெற்றியடைந்தமைக்காக நான் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தேன்.

யுத்தத்தின்போது இந்தியாவின் தார்மீக ஆதரவானது மிகவும் முக்கியமானதாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளுடன் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிர்களா? என்று கேட்கப்பட்ட போது, யுத்தத்தின் பின்னர் தமிழ் நாட்டின் பல அரசியல்வாதிகள் தனக்கு வாழ்த்துத தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களின் விதியை தேர்தலின்போது பாருங்கள். புலிகளுக்கு ஆதரவளித்த சகலரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்களுக்கு தமிழக மக்கள் பொருத்தமான பதிலை அளித்திருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெற்காசியா முழுவதும் நண்பர்களைக் கொண்டிருக்க விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாகிஸ்தானுடனும் சிறந்த உறவுகளைக் கொண்டிருப்பது சரியானதாகும் என்று கூறியுள்ள அவர், இஸ்ரேலியர், பலஸ்தீனியர்கள் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற எதிரெதிர் தரப்பினருடனும் தான் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கைப் படைவீரர் மீதான மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குறிப்பிட்ட அவர் மனித உரிமைகள் தொடர்பாகப் பேசப்படும் தருணமானது பிழையானது என்று தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார். இலங்கையரைப் புலிகள் பயங்கரவாத நிலைக்கு உள்ளாகிய வருடங்களில் அவர்கள் எங்கே இருந்தார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.