May

May

6 மத்திய அமைச்சர்கள் இலாகாக்கள் அறிவிப்பு

india-f-m.jpgஇந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மன்மோகன்சிங் மீண்டும் பதவி ஏற்றார். அவருடன் 19 `கேபினட்’ மந்திரிகளும் பதவி ஏற்றனர். இவர்களில் பிரணாப் முகர்ஜிக்கு நிதித்துறையும், ப.சிதம்பரத்துக்கு உள்துறையும், ஏ.கே.அந்தோணிக்கு பாதுகாப்பு துறையும், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வெளியுறவு துறையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு ரெயில்வேயும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வேளாண்மை, உணவு மற்றும் சிவில் சப்ளை துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் தற்கொலை

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ யுன் (62) இன்று தற்கொலை செய்துகொண்டார். நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அருகேயுள்ள மலை ஒன்றில் ஏறி அங்கிருந்து கீழே குதித்ததாகவும், பாறை ஒன்றின் மீது அவர் உடல் பலமாக மோதியதில் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, தகவல் கிடைத்ததும் அவர் பூசான் நகர மருத்துவமனைக்கு உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலை 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த தகவல் குறிப்பில், வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது என்றும், ஏராளமான மக்களை அவதிக்குள்ளாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தற்கொலை செய்திருப்பது தென் கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர் கடன் வழங்கும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

imf-international-monetary-fund.jpgஇலங்கையை பொருளாதார ரீதியில் மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெறுவதற்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் கடன் வழங்கும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை யுத்தத்தில் வெற்றிபெற்றிருப்பதாக அறிவித்திருப்பதை அடுத்து நாட்டில் முன்னேற்றத்தை எதிர்பார்த்திருப்பதாக நாணய நிதியம் கூறியுள்ளது.

நாங்கள் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றகரமான கட்டத்தில் இருக்கின்றோம். நிறைவேற்று சபை நிகழ்ச்சி நிரல் தொடர்பாக எம்மிடம் திட்டவட்டமான கால அட்டவணை இல்லை. ஆயினும், எதிர்வரும் வாரங்களில் சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கரோலின் அட்ரின்சன் வாஷிங்டனில் நிருபர்களுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் ஹிலாரி தொலைபேசியில் தொடர்பு

hillary-clinton.jpgஅமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அரசியல் நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கொண்டிருப்பதாக இலங்கை அறிவித்திருப்பதை தொடர்ந்து ஹிலாரி இந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.

அதேவேளை, இலங்கையின் வடபகுதியின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாகவும் ஹிலாரி கிளின்டன் தனது கவலையை வெளிப்படுத்தியிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியை மேற்கோள்காட்டி பி.டி.ஐ. செய்திச்சேவை நேற்று தெரிவித்தது. அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சர்வதேச மனிதாபிமான நிறுவனங்கள் செல்வதற்கு அனுமதியளிக்குமாறும் ஹிலாரி ஜனாதிபதி ராஜபக்ஷவை கேட்டுள்ளார்.

இடம்பெயர்ந்திருக்கும் சுமார் 3 இலட்சம் மக்களை துரிதமாக மீளக் குடியேற்றுமாறு அமெரிக்க அதிகாரிகள் கொழும்பை வலியுறுத்தியுள்ளன. யுத்தத்திற்கு பின்னர் விடயங்களை உடனடியாக கொழும்பு எவ்வாறு கையாளுகின்றது என்பதிலேயே நாட்டின் எதிர்கால சமாதானம் தங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பத்மநாதனின் பூதவுடலுக்கு கனகரட்னம் அஞ்சலி

kpatmanathan.jpgகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் இன்று முற்பகல் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவென பொரளை ஜயரட்ன மலர்ச்சாலைக்கு சிவில் உடையினர் வாகனமொன்றில் இவரை அழைத்து வந்திருந்தனர் எனவும் அஞ்சலி செலுத்திய பின்னர் சுமார் 15 நிமிடங்கள் வரை அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

படைவீரர்களுக்கான தேசிய வைபவம் இன்று கண்டியில்

daladamaligawa.jpg நாட்டில் அர்ப்பணிப்புடன் பாடுபட்ட படைவீரர்களுக்கான தேசிய வைபவம் இன்று கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது. மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரோக்களின் ஆலேசனைக்கு ஏற்ப கண்டி தலதா மாளிகை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின்  செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் சபையின் தலைவர் எயார் சீப் மார்ஷல் டொனல்ட் பெரேரா,இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரண்ணாகொட,  விமானப்படைத் தளபதி எயார் சீப் மாhர்ஷல் ரொஷான் குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன,  மக்கள் பாதுகாப்பு படைப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத் வீரசேகர மற்றும்; தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல ஆகியோரும் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த வைபவத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ராஜாங்க பெரஹரா ஒன்றையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெங்கு பரவுவதைத் தடுக்க 20 வைத்தியர்களுக்கு விசேட பயிற்சி

mosquito_preventionss.jpgஇலங்கையில் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக 20 வைத்தியர்களுக்கு விசேட பயிற்சியொன்றை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பயிற்சிகள் முடிந்த பின்னர் இந்த வைத்தியர்களைப் பயன்படுத்தி மேலும் ஒரு செயற்குழுவுக்கு பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றம் செய்தல், இரவில் இராசயனப் பரிசோதனை மேற்கொள்ளல், அவசரத் தேவைகளின்போது இரசாயன பரிசோதனை நிபுனர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளுதல், நோயின் தன்மைகளை அறிந்துகொள்ளுதல் போன்ற விடயங்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 5201 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 70 பேர் மரணித்துள்ளனர் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளர்

பாதாள உலகக் குழுவை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

Gun 01பாதாள உலகக் குழுவை சேர்ந்த ஜே.எஸ். குமார என்பவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை கொழும்பு கல்கிசையில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இவர் தன்னிடம் உள்ள ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டுவதாகக் கூறி பொலிஸாரை அங்கு கூட்டிச் சென்றார்.

அச்சமயம் அவர் பொலிஸாரை நோக்கி கைக் குண்டை வீச முயன்றதாகவும் பொலிஸார் பதிலுக்கு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார்.

முகாமிலிருந்த கனகரட்ணம் எம்.பி. விசாரணைக்காக கொழும்பில்

kanagaratnam.jpgவவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.கனகரட்ணம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை விசாரணைக்காக பொலிஸாரால் கொழும்புக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு தங்கியிருந்த இவர் வன்னியிலிருந்து கடந்த வாரம் வவுனியா வந்தார்.

செட்டிகுளம் முகாமில் தங்கியிருந்த இவரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு விசாரணைக்கெனக் கூறி கொழும்புக்கு கூட்டிச் சென்றுள்ளது.இவரது குடும்பத்தவர்கள் தற்போது செட்டிகுளம் முகாமில் தங்கியுள்ளனர்.

கம்பஹா எம்.பி.க்கு பிணை அனுமதி

12 வயது சிறுவனைக் கடத்திச் சென்றது, ஒருவரை துப்பாக்கியால் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரணகுணவர்த்தனவையும் மற்றும் நால்வரையும் பிணையில் செல்ல கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் அனுமதி வழங்கினார்.  இவர்களை தலா 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

சந்தேக நபர்களின் பிணை அனுமதி விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிபதி இதற்கு அனுமதி வழங்கினார். அரச தரப்புச் சட்டத்தரணி இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை