கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான கனகசபை பத்மநாதனின் பூதவுடல் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர் அங்கிருந்து தம்பிலுவில் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அன்றைய தினம் மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
May
May
தங்காலைப் பகுதியில் நேற்றிரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பயணிகள் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன்,15 பேர் வரை காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
காலஞ் சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் தற்போது பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான அன்னாரின் பூதவுடல் நேற்றிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது.
இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பூதவுடல் பின்னர் அங்கிருந்து நேரடியாக அவரது சொந்தக் கிராமமான காரைதீவுக்கு எடுத்துச் செல்லப்படும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட மேலும் 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது : வன்னியில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வந்த மோதல்கள் நிறைவுக்கு வந்ததையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வியக்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புலி உறுப்பினர்களின் சடலங்கள் படையினரால் மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களுள் பல பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் அவற்றை உடனடியாக அப்பகுதியிலேயே அடக்கம் செய்ய வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டது. இவ்வாறாக பிரபாகரன் உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களது சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில் பிரபாகரனின் சடலம் கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டதுடன் அவரது மகன் சாள்ஸ் அன்டனி, கடற்புலிகளின் தளபதி சூசை, புலனாய்வுப் பிரிவின் தளபதி பொட்டு அம்மான், அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரினதும் சடலங்கள் இவ்வாறாக அடக்கம் செய்யப்பட்டன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் ஏனைய குடும்ப உறுப்பினர்களான மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் சிறிய மகனான பாலச்சந்திரன் ஆகியோர் தொடர்பில் படைத்தரப்புக்கு இதுவரையில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தும் இதுவரையில் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
அதேவேளை அவர்கள் மூவரது சடலங்களும் படையினரால் மீட்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘எனக்கு முன்னிருந்த தலைவர்களால் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. இனிமேல், நான் உட்பட எவரும் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்யாமல் இருக்க முடியாது. இதற்காக அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். படைவீரர்களைப் பாராட்டும் விழா நேற்று பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்தில் நடந்தது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலட்சக் கணக்கானோர் கலந்துகொண்ட ஜனசமுத்திரத்தின் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டை முழுமையாக மீட்டெடுத்ததன் பின் நடத்தப்படும் முதலாவது தேசிய விழா இது. புலிகள் என்றதும் சிலரின் கால்கள் நடுங்கின. புலிகள் திறமைமிக்கவர்கள், அவர்களுடன் போராடி வெல்ல முடியாது. யுத்தம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இந்த நாட்டிலுள்ள சிலரும் எம்மிடம் கூறினர்.
இந்த நாட்டை ஆட்சி செய்த முன்னாள் தலைவர்களால் கூட புலிகளை தோற்கடிக்க முடியாமல் போய்விட்டது. நாட்டை பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று கூட கூறினர். ஆனால் நான் எனது முப்படைத் தளபதிகளை நம்பினேன். இந்நாட்டிலுள்ள தாய்மாரின் புதல்வர்களை நம்பினேன். இந்த நாட்டிலுள்ள அனைவரிடத்திலும் நாட்டுப்பற்று இருக்கிறது. நாட்டின் மீது அன்பும் இருக்கிறது. இவை புதைக்கப்பட்டிருந்தது.
கடற்புலிகளின் தளங்கள் அனைத்தும் கடலுக்குள்ளேயே சமாதியாக்கப்பட்டு விட்டன. எமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்ற போது, அங்குள்ள பிள்ளைகள் துப்பாக்கிகளை ஏந்தின. ஆனால் பிரபாகரனின் பிள்ளைகள் பாடசாலை சென்றனர். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு எமது தாய்மார் பாடசாலை கதவோரம் நின்று காவல் புரிந்தார்கள். ஏன் குண்டு வெடிக்கும் என்ற பயம் அவர்களுக்கு. இனி அந்த குண்டு வெடிக்காது என்பதை எமது தாய்மார்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.
தேசியக் கொடியை வடபகுதியில் பறக்க விட புலிகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்த காலமொன்று இருந்தது. ஆனால் அந்தநிலை இனி இல்லை. எங்கும் தேசியக் கொடி பறக்கும். தலதா மாளிகைக்கு முன் பறக்க விடப்படும் தேசியக் கொடி தான் புதுமாத்தளனிலும் பறக்கும். இப்போது நாம் பெரும் வெற்றிக்களிப்பில் இருக்கிறோம். இந்த வெற்றி கொண்டாட்டமானது வேறு எவரது மனதையும் புண்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது.
இன்று தமிழ், முஸ்லிம் வீடுகளிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நாடு பூரண சுதந்திரம் பெற்றுவிட்டதாகவே கருதுகிறார்கள்.
தீவிரவாதத்தை எவ்வாறு தோற்கடித்தோமோ அதே போன்று போதைப் பொருள் பாவனையையும், சட்ட விரோத மதுபான உற்பத்தியையும் ஒழிக்க வேண்டியுள்ளது. இந்தச் சவாலிலும் ஜெயிப்போம் என்றார் ஜனாதிபதி. பொலிஸ் மற்றும் முப்படை வீரர்களையும் பாராட்டும் தேசிய விழா பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். அவருடன் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மனைவி, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் மனைவி, விமானப் படை தளபதியின் மனைவி, பொலிஸ் மா அதிபரின் மனைவி, மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்றிருந்தனர்.
வவுனியா அரசஅதிபர் திருமதி சார்ள்ஸ், ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார். நேற்றுக் காலை 10.30 மணியளவில் ஹெலிக்கொப்டரில் சென்ற இவர்கள் வவுனியா மணிக் பாம் நிவாரணக் கிராமத்தில் 4 ஆவது வலயப் பகுதிக்குச் சென்றனர்.
ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் “சிறிலிய சவிய” வேலைத் திட்டத்தின் கீழ் நிவாரணக் கிராமங்களிலுள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள், உடைகள், பெண்களுக்கான உடைகள், வீட்டுப் பாவனை பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றையும் வழங்கினார்.
அவர்களுடன் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியூகே, நிவாரணக் கிராமங்களுக்குப் பொறுப்பான இராணுவ பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக நடந்த இறுதிகட்ட போரில் கடந்த மூன்று வருடங்களில் 6200 க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் பலியானதாகவும், முப்பதினாயிரம் பேர்வரை காயமடைந்ததாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்க தொலைக்காட்சியில் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த 26 வருட மோதல்களில் மொத்தமாக எண்பதினாயிரம் பேர்வரை கொல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. அரசாங்கத்தின் ஐடிஎன் தொலைக்காட்சியில் உரையாற்றிய கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள், கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகள் ஆரம்பமான பின்னர் 6261 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 29,551 பாதுகாப்புப் படையினர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளளார்.
மோதல் பகுதிகளிலிருந்து பெருந் தொகையான சிவிலியன்களை அரசாங்கம் வெளியேற்றியுள்ளமையானது, இலங்கைப் பிரச்சினையில், இரத்தக் களரியைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கியுள்ளதாக ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி விஜே நம்பியார் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரகாலமாக கொழும்பில் தங்கியிருக்கும் விஜே நம்பியார் நேற்று (22) கொழும்பில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அவர், இறுதிக் கட்ட மோதல் நடை பெற்ற பாதுகாப்பு வலய பகுதியை விமா னத்திலிருந்தவாறே பார்வையிட்டு விட்டுத் திரும்பினார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்த நம்பியார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், மனிதநேய முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்தார்.
புலிகளுடனான ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தமை தொடர்பில் எந்தக் கேள்விக்கும் இடமில்லையெனத் தெரிவித்த விஜய் நம்பியார், இது இலங்கையின் வரலாற்றில் முக்கிய திருப்பமாகுமென்றும் தெரிவித்தார். அதேநேரம், இலங்கையின் மீள்கட்டுமான பணிகளுக்கு ஐ. நா. உதவுமென்று தெரிவித்த அவர், மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவதிலும் ஒத்துழைப்புகளை நல்குமென்றும் தெரிவித்தார்.