தி.மு.க.வின் சுயநலப் போக்கு மத்திய அமைச்சரவையில் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. குடும்ப சுயநலத்திற்காக ஆட்சி நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி முயல்கிறாரென குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ். ஷேக் தாவூத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
கருணாநிதியின் குடும்ப அரசியல் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அல்லது 5 பேர் மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை கேட்டு அமைச்சரானால் ஒரு குடும்ப ஆட்சி இந்தியாவில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவந்தது போல் அமையாதா? படித்தவர்கள் அரசியல் வித்தகர்கள் என்ன நினைக்கிறார்கள்? இது ஜனநாயகக் கேலிக்கூத்து.
ஆகவே ஒரு குடும்ப ஆட்சிமுறை மறுக்கப்பட வேண்டும். ஆனாலும், கருணாநிதி குடும்ப நலன் காரணமாக பிடிவாதமாக தி.மு.க.விற்கு மத்தியில் 9 அமைச்சர்கள் கேட்டு அது மறுக்கப்பட்டு 7 அமைச்சர்கள் காங்கிரசாரால் ஒத்துக்கொள்ளப்பட்டு மீண்டும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி அதுவும் மறுக்கப்பட்டு காங்கிரசின் புதிய திட்டப்படி 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மத்திய அமைச்சர் என்ற நிலையை தி. மு.க நிராகரித்துவிட்டதாக நாளேடுகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வெளியில் இருந்து காங்கிரசுக்கு ஆதரவு என்று கருணாநிதியால் சொல்லப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மொத்தத்தில் மழை ஓய்ந்தும் தூவானம் விடாமல் இருக்கிறது.
கருணாநிதி அவர்கள் மத்தியில் காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து தமிழகம் திரும்பினால் தமிழகத்திலும் கருணாநிதி தலைமையிலான மந்திரி சபை ஆட்டம் காணுகின்ற சூழல் உருவாகும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் தான் தி.மு.க சிறுபான்மை அரசு ஆட்சியில் உடும்புப் பிடியாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆதரவு தமிழகத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டால் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் காங்கிரசை ஆதரித்து காங்கிரஸ் ஏன் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்கக்கூடாது? இது ஒரு நல்ல முன்மாதிரியாக காங்கிரசாருக்கு அமையும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் நம்புகிறது.