May

May

ஜோன் ஹோம்ஸும் இன்று வருகிறார்

john-holmes.jpgஇலங்கைக்கு இன்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விடயங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கைக்கு இன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவுள்ள நிலையில் அவருடன் இவரும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜோன் ஹோம்ஸுடன் ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரிகள் 10 பேர் வரவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முகாம்களுக்கும் மோதல் நடைபெற்ற பகுதிக்கும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவரது தலைமை அதிகாரியான நம்பியார் நேற்று வியாழக்கிழமை வவுனியாவிலுள்ள முகாமுக்குச் சென்று பார்வையிட்டதுடன் மோதல் நடைபெற்ற பகுதியை விமானத்தில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜோன் ஹோம்ஸுடன் 10 ஐ.நா. அதிகாரிகள் வருகை தரவுள்ளதாகவும் இதில் ஐ.நா. அரசியல் தலைவர் லின் ஹஸ்டேயும் வரவுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் இன்று பதவியேற்றார்.

pm-manmogan.jpg இந்தியாவின் 18வது பிரதமராக மன்மோகன் சிங் இன்று மாலை பதவியேற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புரிமையும் செய்து வைத்தார்.

பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு தற்காலிக விசா வழங்க கோரிக்கை -அவுஸ்திரேலிய அரசிடம் எதிரணி வேண்டுகோள்

smoke_.jpgயுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்க வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களில் உள்ளனர். அவர்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக கவலைகொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசும் கூறியுள்ளது. ஆனால், தற்போது நடைமுறையிலுள்ள அகதிகளுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவுஸ்திரேலியாவில் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் ஏதாவது திட்டம் இருக்கின்றதா என்பது தொடர்பாக தெரிவிக்க இதுவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.

பால்கன், கிழக்கு திமோர் நெருக்கடிகளின் போது மேற்கொண்டிருந்தமை போன்று தமிழர்களை தற்காலிகமாக பாதுகாக்க அவுஸ்திரேலியா முன்வருவது தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிரணி குடிவரவுத்துறை பேச்சாளர் சர்மன் ஸ்ரோன் “த வேல்ட் டுடே’ க்கு கூறியுள்ளார்.

நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோது 1999 மேயில் பால்கன் யுத்த நெருக்கடி தோன்றிய சமயம், 4 ஆயிரம் கொசோவோக்களை பாதுகாப்பு புகலிட விசாக்களை வழங்கி அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வந்தோம். இந்த அரசுக்கு பல தேர்வுகள் உள்ளன. அவை குறித்து அவர்கள் பேசுவதோ சிந்திப்பதோ இல்லை. இவை தொடர்பான ஏற்பாடுகள் அவுஸ்திரேலியாவின் சட்டத்தில் உள்ளன என்றும் அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

1958 ஆம் ஆண்டு குடிவரவு சட்டத்தில் “பாதுகாப்பு புகலிட விசா’ ஏற்பாடு இருப்பதாக அவர் தெரிவித்தார். சொந்த நாட்டில் பிரச்சினை தீரும்வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு இந்த விசா வழிசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏனைய நாடுகளிலிருந்து வந்த குடியேற்றவாசிகளை போன்றே தமிழர்களும் அவுஸ்திரேலிய சமூகத்துடன் ஒருங்கிணைந்துவிட்டனர். உலகிலுள்ள மிகவும் வெற்றிகரமான பல கலாசார மக்கள் வாழும் நாடுகளில் எமது நாடும் ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தி சமஷ்டி தீர்வுக்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும் -தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை

menon-narayan.jpg வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களை துரிதகதியில் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றி இயல்பு நிலையை உருவாக்கவேண்டும், இனநெருக்கடித் தீர்வுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும், இராணுவ முற்றுகையிலிருந்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களை மீட்க வேண்டும், இதற்கான நடவடிக்கைகளை சமாந்தரமாக முன்னெடுக்க இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருடன் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை வலியுறுத்திக் கூறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

விரைவில் பொதுத் தேர்தல்?

parliament.jpgபாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவித்தலை விரைவில் எதிர்பார்க்க முடியும் என்று ஜனாதிபதியுடன் நெருங்கிய வட்டாரங்களை மேற்கொள் காட்டி இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலில் வெற்றி கொண்டதையடுத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை விடுப்பதற்கு இது உகந்த தருணம் என ஆளும் தரப்பில் கருதப்படுகிறது. தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 2010 ஏப்ரலில் முடிவடைகிறது.

மூதூர் மக்கள் கட்டைபறிச்சானில் மீள்குடியேற்றம்

images-house.jpg திருகோணமலை மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயாந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள மக்கள் கட்டைபறிச்சான் தில்லங்கேணி பகுதியில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக கிழக்குமாகாண மீள் குடியேற்ற இணைப்பாளர் இ. செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசஅதிபர் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 200 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்கென கட்டைபறிச்சான் பகுதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் பணியினை திருகோணமலை மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்

நிவாரணக் கிராமங்களில் அரச வைத்திய முகாம்

idps200_1.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களின் நலன் கருதி அரசாங்கம் தினமும் வைத்திய சிகிச்சை முகாம்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்தின் 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் வலயங்களிலுள்ள நலன்புரி நிலையங்களிலும் இந்த வைத்திய சிகிச்சை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இந்த வைத்திய சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு காயமடைந்தோருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய மருத்துவர் குழு இன்று இலங்கை வருகை

indian-madi.jpgஇலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் பொருட்டு இந்திய மருத்துவர் குழுவொன்று இன்று இலங்கை வந்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு 8 மருத்துவர் உட்பட 27 பேர் அடங்கிய குழு 25 தொன் நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது புல்மோட்டை பகுதியில் 110 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவ முகாமை வவுனியாவுக்கு மாற்றுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாகவும் பிரிகேடியர் பி.சச்டேவா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.

பாலம் விமானத்தளத்திலிருந்து இன்று காலை விங் கொமாண்டர் எச்.பி.குமார் தலைமையில் இந்திய விமானப் படையின் ஐஎல் 76 ரக விமானத்தில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் அவை இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் 180 நாட்களில் மீள்குடியமர்த்தப்படுவர்: இலங்கை – இந்தியா கூட்டறிக்கை

indo-lanka.jpg வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 280,000 பேரில் பெரும்பாலானவர்கள் ஆறு மாதங்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கையும்,  இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பின் பின்னரே இந்த கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 25 வருடங்களாகத் தொடர்ந்துவந்த தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி அவர்களிடம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும், இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் மீள்குடியேற்றம் பற்றிக் கலந்துரையாடினர்.

கூடிய விரைவில் நலன்புரி நிலையங்களை இல்லாமல் செய்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 180 நாள் வேலைத்திட்டத்திற்கமைய இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலான மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கையும், இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான உட்கட்டுமானங்கள், வீடுகள் நிர்மானம் போன்றவற்றுக்குத் தமது உதவிகளை வழங்கும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்படும்வரை மக்களை முகாம்களுக்குள் தடுத்துவைக்கவேண்டிய தேவை இருந்ததாகவும்,  இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் சர்வதேச தரம் பேணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம்,  இந்தியத் தூதுவர்களிடம் கூறியுள்ளது.

அதேநேரம்,  22 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய அதிகாரப்பகிர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள தமிழ் தரப்பினர் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாரென்பதை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த இணை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்துமுடிந்த போர் வெற்றியானதல்ல : ஜெயலலிதா

jayalaitha.jpgஇலங்கையில் நடந்த போரில் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான தொப்புள் கொடி உறவில், இலங்கைப் பிரச்சினைக்காக, முன்னாள் பாரதப் பிரதமரையும், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் இந்தியாவும் இழந்திருக்கிறது. இந்தப்போரின் முடிவு யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது தனி ஈழம் அமைத்துக் கொடுத்தே தீருவேன் என்று முழங்கி வந்த ஜெயலலிதா, தனது அறிக்கையில், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், பிற பிரிவினருக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று மட்டும் கூறிக் கொண்டு நிறுத்தி விட்டார். தனி ஈழம் குறித்த தனது நிலை குறித்து அவர் இந்த அறிக்கையில் எதையும் கண்டு கொள்ளவில்லை.