இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டம் அதன் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் சென்னை பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* இலங்கையில் சிங்கள ராணுவத்தாக்குதல் காரணமாக 1 லட்சத்துக்கும் மேலான தமிழர்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் உயிருக்கு போராடி வருகிறார்கள். பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள் உணவு, மருந்து குடிநீர் இல்லாமல் ராணுவத்தின் பிடியில் அவதிப்படுகிறார்கள்.
* போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறி உலக நாடுகளை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது.
* ஈழத் தமிழர்களை பாதுகாக்க, ஐ.நா. மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பு ஏற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடு களுக்கு திரும்ப வேண்டும்.
* போரில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், உறுப்புகளை இழந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே, சிங்கள ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஐ.நா. மன்றம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எழுச்சி பேரணி நடத்துவது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.