விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ‘கொல்லப்பட்டபோது’ நடந்த சம்பவங்கள் குறித்து இலங்கை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அது இதோ…
பிரபாகரனின் நடமாட்டம், அவர் எங்கு செல்கிறார் என்பது அவரது மனைவி மதிவதனி தவிர மூன்றே மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு மட்டும்தான் தெரியுமாம்.
ஒருவர் பொட்டு அம்மான், இன்னொருவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி. மூன்றாவது நபர் புலிகளின் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் ரீகன்.
சமீபத்தில் டாக்டர் ரீகன் ராணுவத்திடம் சிக்கினார். அவரை பல நாட்கள் கடுமையாக சித்திரவதை செய்து விசாரித்துள்ளனர். முதலில் பிரபாகரன் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் ரீகன். ஆனால் கொடூர சித்திரவதையில் பிரபாகரன் இருப்பிடம் குறித்து கூறி விட்டார் ரீகன்.
இதன் மூலம் 16ம் தேதி நள்ளிரவுவாக்கில்தான் பிரபாகரன் இருப்பிடம் குறித்து ராணுவத்திற்கு தெளிவாகத் தெரிய வந்தது.
மேலும், பிரபாகரன் போட்டு வைத்திருந்த முழுத் திட்டமும் தெரிய வந்தது.
பிரபாகரனின் திட்டம் என்னவென்றால், ராணுவத்தின் 53வது முன்னரங்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு, முல்லைத்தீவு- வெளிஓயா காடுகளுக்குச் செல்வது. பின்னர் அங்கிருந்து திரிகோணமலை வழியாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு அல்லது அம்பாரைக்கு தப்பிச் செல்வது.
ஏற்கனவே அங்கு நிலை கொண்டிருந்த கர்னல் ராம் தலைமையிலான படையினரிடம் தங்களது வருகையை முன்கூட்டியே தெரிவித்து விட்டாராம் பிரபாகரன்.
இதையடுத்து 17ம் தேதி அதிகாலையில் புலிகள் தங்களது கடைசி தாக்குதலைத் தொடங்கினர். கடல் மார்க்கமாக விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் படு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டு சென்றனர்.
ஏற்கனவே எச்சரித்து வைக்கப்பட்டிருந்த ராணுவப் பிரிவுகள், விடுதலைப் புலிகளை மடக்க முயன்றன. ஆனால், அதையும் மீறி 53வது பிரிவின் முன்னரங்கு பாதுகாப்பு வளையத்தை புலிகள் உடைத்துக் கொண்டு சென்றனர்.
மேலும் ராணுவத்தின் ஆம்புலன்ஸ் ஒன்றையும் பறித்துக் கொண்ட அவர்கள், 15 ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றனர்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ராணுவம் திருப்பித் தாக்கத் தொடங்கியது. சக்தி வாய்ந்த எறிகணை ராக்கெட்டுகளை வீசித் தாக்கியது. இதில் 200 விடுதலைப் புலி வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 30 பேர் வரை கருகிப் போய் விட்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலேயே மிகச் சிறந்த வீரர்களாக அவர்களின் உடல்கள் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. விடுதலைப் புலிகள் தப்பிச் சென்ற ஆம்புலன்ஸும் தாக்குதலில் சிக்கி எரிந்து போனது.
பின்னர் ராணுவத்தினர் அந்த ஆம்புலன்ஸை நெருங்கிப் பார்த்தபோது உள்ளே பிரபாகரனைப் போன்ற உடலமைப்புடன் கூடிய உடல் உள்பட 3 உடல்கள் சிக்கின.
பிரபாகரனைப் போன்ற உடலமைப்புடன் கூடிய உடல், கருகிப் போயிருந்தது. முகத்தையோ, உடலையோ அடையாளம் காணவே முடியாத அளவுக்கு அது இருந்தது.
(முதலில் இப்படித்தான் கூறியிருந்தது இலங்கை ராணுவமும், அரசும். அந்த கருகிப் போன உடலை அடையாளம் காண முயன்று வருவதாகவும் அது கூறியிருந்தது.
ஆனால் திடீரென பிரஷ்ஷான முக அமைப்புடன் கூடிய ஒரு உடலைக் காட்டி இதுதான் பிரபாகரன், நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் இந்தப் பிணம் கிடந்தது என்று இலங்கை அரசும், ராணுவமும் கூறியது நினைவிருக்கலாம்.
முதலில் கருகிப் போய் அடையாளமே தெரியவில்லை என்று கூறிய ராணுவம், பின்னர் புது உடலைக் காட்டியதுதான் ராணுவத்தின் பேச்சை நம்புவதா, இல்லையா என்ற சந்தேகத்தை பலமாக எழுப்பியுள்ளது).
இருந்தாலும், அந்த உடல் பிரபாகரனுடையதாக இருக்கும் என்றே ராணுவம் உறுதியாக நம்பியது. காரணம், பிரபாகரன் தப்பிப் போக வேறு வழியே இல்லை.
சிறப்பு ராணுவப் படையினரால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது காயமடைந்து, நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் போய் அவர் உயிரிழந்திருக்க வேண்டும்.
ஆனால் அவரது உடலை கருகிப் போன ஆம்புலன்ஸிலிருந்துதான் ராணுவம் எடுத்தது.
இந்தத் தாக்குதலின்போது உயிருடன் சிக்கிய விடுதலைப் புலிகள் சிலரை விசாரித்தபோது, பிரபாகரன் சுடப்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.
பிரபாகரன் உள்ளிட்டோரின் கருகிய உடல்களை 53வது பிரிவு வீரர்கள் மீட்டாலும் கூட, உடலை வேறு ஒரு பிரிவினர் வந்து வாங்கிச் சென்று விட்டனர்.
ராணுவம் 400 உடல்களை மீட்டது. உடல்களை மீட்கும் பணியில் 1, 2, மற்றும் 5வது சிறப்புப் படைப் பிரிவினர் ஈடுபட்டனர்.
கொல்லப்பட்ட வீரர்கள் பட்டியலில் முக்கியமான விடுதலைப் புலிகளான லாரன்ஸ், கரிகாலன், பாப்பா, இளந்திரையன் ஆகியோரைக் காணவில்லை.
அதேசமயம், பொட்டு அம்மான், பானு, சூசை ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.
இவர்களில் சூசையும், சொர்ணமும்தான் இறுதி வரை தீரத்துடன் போராடினார்கள். மற்றவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது இவர்கள் இருவரும் அவ்வாறு செய்ய முயலாமல், ராணுவத்தை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டனர். இருப்பினும் அவர்கள் இருவரையும் ராணுவ வீரர்கள் கொன்று விட்டனர் என்று அந்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
நன்றி;தட்ஸ் இந்தியா