நாடெங்கிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்காக நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை ஒழித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க முன்வரவேண்டும் என்றும் அமைச்சு மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
டெங்கு காய்ச்சல் காரணமாக இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 63 பேர் உயிரிழந்திருப்பதுடன், 4600 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டிருப்பதாக அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவின் சமூக நோயியல் ஆலோசகர் டாக்டர் ஹசித திசேரா நேற்று தெரிவித்தார்.
கண்டி, கொழும்பு, கேகாலை, மட்டக்களப்பு, திருமலை, கம்பஹா, குருணாகல், ஹம்பாந்தோட்டை உட்பட பல மாவட்டங்களில் இக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகவும் அவர் கூறினார்.
அண்மைக்கால அவதானிப்புக்களின்படி, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகள் வெயில் காலத்திலும் பல்கிப் பெருகி இக் காய்ச்சலைப் பரப்பக் கூடிய வகையில் வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எவருக்காவது மூன்று நாட்களுக்குத் தீவிர காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் : இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 12ம் திகதி வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளனர். 4600 பேர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இக்காய்ச்சல் காரணமாக இக்காலப் பகுதியில் கேகாலை மாவட்டத்தில் தான் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கண்டி மாவட்டத்தில் தான் அதிகளவானோர் இக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் காரணமாக கேகாலை மாவட்டத்தில் 11 பேரும், கண்டி மாவட்டத்தில் 9 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 8 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 7 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 5 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 5 பேரும் இக்காலப் பகுதியில் உயிரிழந்திருக்கிறார்கள்.
இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலேயே 63 பேர் உயிரிழந்து விட்டனர். ஆனால் கடந்த வருடத்தில் 27 பேரே இக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.
இதன்படி டெங்கு காய்ச்சல் இப்போது மிகவும் தீவிரமடைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.
அதேநேரம் தற்போது வெயில் கால நிலை நிலவிய போதிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருக்கின்றது. ஆகவே டெங்கு காய்ச்சலைப் பரப்பப் கூடிய நுளம்புகள் வெயில் காலத்திலும் பல்கிப் பெருகக் கூடிய வகையில் முதிர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.
நுளம்புகள் பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேவேளை எவருக்காவது மூன்று நாட்களுக்குத் தீவிர காய்ச்சல் காணப்பட்டால் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். இது உயிரிழப்பைத் தவிர்ப்பதற்குப் பெரிதும் உதவும் என்றார்.