வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் நேற்று (10) முதல் தாங்களாக சமைக்கத் தொடங்கியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அவர்கள் தாமாக சமைத்து சாப்பிட சமையல் உபகரணங்கள், உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள் அடங்கலான சகல நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று (10) வவுனியா அரச அதிபர் பணிமனையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த மாநாட்டில் வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ், மேஜர் ஜெனரல் சந்ரசிரி, அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் 4 நிவாரணக் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவுகளே இவ்வளவு காலமும் வழங்கப்பட்டன. இவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தினூடாக அரிசி, மா, பருப்பு, சீனி என்பன வழங்கப்படுவதோடு ஏனைய உலர் உணவுப் பொருட்கள் சமையல் உபகரணங்கள் என்பனவற்றை அராசங்கமும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
மக்கள் மீள்குடியேற்றப்படும் வரை மக்களுக்கு இலவசமாக தொடர்ந்து உலர் உணவுப் பொருட்கள், மலிகைச் சாமான்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, மக்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்குவதற்கென வவுனியாவில் களஞ்சியமொன்றை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார். இனிமேல் வவுனியா அரச அதிபரினூடாக மாத்திரமே இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்க விரும்புபவர்கள் வவுனியா அரச அதிபரிடம் தமது உதவிகளை கையளிக்குமாறும் அவர் கோரினார்.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்த அமைச்சர் அவர்களுக்கான சேமநல திட்டங்களை துரிதப்படுத்துமாறு பணித்தார்.
குடிநீர் மற்றும் மலசலகூட வசதியற்றவர்களுக்கு உடனடியாக உரிய வசதிகள் அளிக்குமாறும் அவர் தெரிவித்தார். மலசல மற்றும் குடிநீர் வசதியற்றவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இதன்போது இணக்கம் தெரிவித்தன.
வவுனியா மாவட்டத்தில் உள்ள சில பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், விரைவில் குறித்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார். ஆண்டியபுளியங்குளம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 1346 பேர் இன்று (11) வலயம் 2 இல் தங்கவைக்கப்பட உள்ளனர். அருவித்தோட்டம் சிவானந்த கல்லூரியில் உள்ள மக்களும் விரைவில் நிவாரணக் கிராமங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.
இதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சிறியவர் முதல் பெரியவர் வரை சகலரையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவுரைகளை அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ளார்.
இதுவரை ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 910 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் அனைவரும் இன, மத, பேதங்களை மறந்து உதவ முன்வர வேண்டும் எனவும் கோரினார். அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகக் கூறிய அவர், பருப்பு, கடலை, நெத்தலி, மீன் மற்றும் மலிகைச் சாமான்களே அதிகமாகத் தேவைப்படுவதாகவும் கூறினார். இங்கு கருத்துத் தெரிவித்த மேஜர் ஜெனரல் சந்ரசிரி இராணுவத்தினரின், அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு உதவி வருவதாகக் கூறினார்.
முதியவர்களை தமது உறவினர்களுடன் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதித்து வருவதாகக் கூறிய அவர் பிரிந்த குடும்பத்தவர்களை இணைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.
மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிக வீடமைப்பு, மலசலகூடம், மின்சாரம், குடிநீர், சுகாதாரம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டது. வெளி மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு கையளிக்கப்படும் நிவாரணப் பொருட்களை வவுனியாவில் களஞ்சியப்படுத்த மூன்று நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.