01

01

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள மடல்

Wanni_War_Bombed_Safe-Zone01.05.2009

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள்

இலங்கை ஓர் தேசமாக தனது நாணயத்தைக் இழக்காது காப்பாற்றக் கூடிய வகையில் தங்களில் உடன் நடவடிக்கைக்காக நான் கவலையடையும் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தங்கள் நடவடிக்கைகளுக்கு எனது உயிருக்கு பெரும் அச்சுறுததல் இருந்தும் கூட எனது முழு ஒத்துழைப்பை தங்களுக்கு நல்கி தங்களை தப்பாக என்றும் நான் வழி நடத்தவில்லை. நான் ஆதாரமற்று கேள்விப்படுவனவற்றையோ, அல்லது பிறர் கூறும் அனைத்தையுமோ முற்று முழுதாக நம்புகிறவன் அல்ல.

இன்றும் வன்னியில் அகப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்துக்கு மேல் இருக்கின்றனர் என்று நம்பகமான செய்தி கிடைத்திருக்கின்ற போதும் நிச்சயமாக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் நம்புகின்றேன். முன்பு ஒரு சந்தர்பத்தில் எனது எண்ணிக்கை சரியானதென நிரூபணமானதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். துரதிஷ்டவசமாக விமானத்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து செல், ஆட்டிலறி தாக்குதல்கள் தொடர்கின்றன. அவற்றை உடன் நிறுத்தி அப்பாவி பொது மக்களை காப்பாற்றுங்கள்.

நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஒரு விடயம் யாதெனில் யுத்த நடவடிக்கைகள் பல இடம்பெயர்ந்தோரை கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அதேவேளையில் நலன்புரி நிலையங்களுக்கு தப்பி வந்துள்ளவர்களை பெரும் பயத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்குவதோடு அவர்களின் உறவுகள் பலர் இன்னும் வன்னியில் இருப்பதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். ஓவ்வொரு உயிரும் பெறுமதிமிக்கதால் அப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமை தங்களுக்குண்டு. நான் முன்பு தங்களுக்கு எழுதியது போல சில விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் போது நம் நாடு சர்வதேச சமூகத்தால் பெரும் கண்டனத்துக்குள்ளாகும்.

வன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரை மாதம் 2ம் திகதி 1100 மெற்றிக் தொன் உணவு அங்கே அனுப்பப்பட்டதன் பின் 28ம், 29ம் திகதிகளில் தினம் 30 மெற்றிக் தொன் உணவே சென்றுள்ளது. இந்த இரு நாட்களிலும் அவர்களுக்கு தினம் கிடைத்துள்ள சீனி 1000 கிலோ கிறாம் மட்டுமே. ஆகவே தயது செய்து உடன் தேவைப்படும் உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இக் கடைசி நேரத்திலும் கூட நான் கூறும் ஆலோசனை தங்களுக்கு ஏற்புடையதாயின் அதை அமுல்ப்படுத்த முயற்சியுங்கள். எனது ஆலோசனை யாதெனில் அரசுக்கு ஏற்புடையதான ஓர் சர்வதேச அமைப்பை வன்னிக்கு அனுப்பி மக்களை விடுவிக்குமாறும், ஆயுதங்களுடன் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதாகவும் கூறி அனுப்பி வையுங்கள். இதற்குத் தேவையான இருவார காலக்கெடுவும் கொடுக்கலாம். பொது மக்களை வெளியில் கொண்டுவர அத்தகையதோர் ஏற்பாடு செய்யத் தவறின் முடிவில் நாட்டின் நற்பெயரை நாசம் செய்யும் ஓர் பாரிய அனர்த்தம் தேசிய ரீதியில் ஏற்படவும் கூடும்

நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ

மோதல் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

sri-lanka-flags.jpgவிடுவிக் கப்படாத பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வான் மார்க்கமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. “புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக நீங்கள் தொடர்ச்சியான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், நீங்கள் மனிதக் கேடயங்களாகவும் வைக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, உங்கள் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேறி வாருங்கள்” என ஜனாதிபதி விடுத்தவேண்டுகோள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வான் மார்க்கமாக வீசப்பட்டுள்ளன.

இதுவரை பெருமளவான மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வருகை

mahinda-samarasinha.jpgபுலிகளின் பிடியில் இருந்து இதுவரை 1,88,535 மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் 12,393 பொதுமக்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பிரமுகர்களின் விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் மாநாடு நேற்று (30.04.2009) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்குள்ள மக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. இடம் பெயாந்து வந்தமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு மேலும் பல முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரண்

ltte_.jpgபுலி உறுப்பினர்கள் 58 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. 14 வயது தொடக்கம் 18 வயதையுடைய 38 ஆண்களும், 20 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் படையினரால் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்களை அம்பேபுஸ்ஸவில் உள்ள சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனி நபர் ஒருவரை அழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் யுத்தம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது

waroooo.jpgதனி நபர் ஒருவரை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் ஒருபோதும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பிரபாகரனை பிடிப்பதனை மட்டுமே இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் பயனளிக்கப் போவதில்லை என அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர்ந்த ஏனையோருக்கு பொது மன்னிப்பு வழங்க யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இந்த யோசனைத் திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர் பிரச்சினைகளுக்கு செவிமடுக்க கொழும்பு அரசாங்கங்கள் காட்டி வரும் தயக்கமே ஆயுதப் போராட்டத்திற்கு வழி கோலியதாக தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இரு தரப்பு செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது – அமெரிக்கா தெரிவிப்பு

usa-flag.jpgஅப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவது மற்றும் விடுதலைப் புலிகள், பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவது ஆகிய இரண்டுமே முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்ஸிலில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சூசன் ரைஸ் உரையாற்றினார். அப்போது அவர் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருவதற்கு ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

போர் பகுதிக்குச் செல்ல ஐ.நா. மனிதநேய குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் அப்பாவி மக்களை போர் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் – கோத்தபாய ராஜபக்ஷ

gotabaya-rajapakasa.jpgபிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அண்மைய இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த விசேட பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

கூட்டத்தின்போது பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் பல தடவைகள் இடையூறுகளை விளைவித்தார். அது அவருடைய போக்காக இருக்கலாம். எனக்கு அவரது நடத்தையோ அல்லது அவரது போக்கோ குறித்து ஆட்சேபனை இல்லை. எனது விடயம் என்னவெனில் தற்போதைய நிலைமையில் எதற்காக அவர் இதில் தலையிட வேண்டும் என்பதேயாகும். இந்த நாட்டின் மக்கள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை அங்கீகரித்துள்ளனர்.

நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் நாட்டு மக்கள் கூறுவதையே செவிமடுக்கவேண்டும். அதனைவிடுத்து பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கூறுவதையல்ல. இதனைத்தான் நான் அவருக்கு கூறினேன் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மேற்குல நாடுகளில் வசித்துவரும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கில் ஐரோப்பிய தலைவர்கள் தேவையற்ற வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களை எவ்வாறு பாதுகாப்பதென்பதனை படையினர் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியல் தலைவர்களையும் பொது மக்களையும் படுகொலை செய்தபோது இந்த டேவிட் மிலிபான்ட் எங்கு சென்றார்? உறங்கிக்கொண்டிருந்தாரா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே ஐரோப்பிய இராஜதந்திரிகள் இலங்கைக்கு விரைவதாகவும் தமிழ் மக்கள் மீதான கரிசனை எதுவும் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் பொது மக்கள் மீது எறிகணை தாக்குதல் நடத்தவதாக பி.பி.சீ.யை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சர் மிலிபான்ட் வெளியிட்ட கருத்தின் காரணமாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் மிலிபான்டுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பி.பி.சி. உலக சேவை புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவதாக கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் பிரதமர் கோர்டவுன் பிறவுன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மற்றும் ஜீ. 8 நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இலங்கை தமிழர்கள் தொடர்பில் காட்டும் கரிசனை வெறும் அரசியல் நோக்கங்களை கொண்டது எனவும் மக்கள் தொடர்பான உண்மையான கரிசனை எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்போம்: வைகோ

vaiko00001.jpgதேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு ஆதரவாக பேசிய வைகோ,

இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு காரணம் இந்திய அரசு தான். உலகமே போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி வரும் வேளையில், சோனியாவும், மன்மோகன் சிங்கும் மௌனம் காக்கின்றனர். மேலும், முதல்வர் கருணாநிதியோ அண்ணா சமாதியில் படுத்துக்கொண்டு உண்ணாவிரத நாடகமாடுகிறார்.

அடுத்த மாதம் மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா சொன்னது போல் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்றார்.

ஈழத்தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி மானியம்: ஜெ. உறுதி

j-j-j.jpgஇடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து கீழவீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும். தமிழகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியா அமைதிப்பூங்காவாக மாறி பொருளாதார வளர்ச்சி பெறும்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வழி செய்யப்படும். தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு ரூ. 10 ஆயிரம் கோடி மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மட்டு நகரில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டமை கவலை அளிக்கிறது -மட்டக்களப்பு சர்வ மத சமாதான ஒன்றியம்

thinu.jpgமட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் பாடசாலை சென்றிருந்த மாணவியொருவர் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சததையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு சர்வ மத சமாதான ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

திருகோணமலையில் 6 வயது மாணவியொருவர் சில வாரங்களுக்கு முன்பு கடத்தப்டட்டு படுகொலை செய்யப்பட சம்பவத்தையும் சுட்டிக் காட்டி சர்வமத சமாதான ஒன்றியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான சதீஸ்குமார் தினுஷிக்கா மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஒரு கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.