இலங்கைப் படைகளால் தொடர்ந்து கடுமையாக ஷெல்வீச்சு மேற்கொள்ளப்படுவதாகவும் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக வைத்திருப்பதாகவும் நேற்றுமுன்தினம் வியாழக் கிழமை தெரிவித்துள்ள அமெரிக்கா, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம் எனவும் இந்தப் பிரச்சினையை முழுமையான கவனமெடுத்து கையாளுமாறும் ஐ.நா.பாதுகாப்புச்சபையைக் கேட்டிருக்கிறது.
இரு தரப்பினருமே பொறுப்பாளிகள். இந்த மோசமடைந்து செல்லும் நெருக்கடியில் இந்த அறையிலுள்ள எமக்கும் பொறுப்புகள் உண்டு என்று ஐ.நா.பாதுகாப்புச்சபையில் உரையாற்றுகையில் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் ரைஸ் கூறியுள்ளார்.
இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அங்கு இடம்பெறும் மோதலினால் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அப்பாவிப் பொதுமக்களை மோசமான துன்பநிலைக்கு இது இட்டுச் சென்றுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை இருதரப்பும் மீறுவது தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து நாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் சூசன் ரைஸ் குறிப்பிட்டதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று தெரிவித்தது. யுத்த நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக இலங்கை உறுதிமொழி அளித்திருந்ததற்கு மத்தியிலும் மோதல் வலயத்திற்குள் ஷெல் தாக்குதல் தொடர்ந்து இடம்பெறுவதாக பலதரப்புத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் இழப்புகள் எண்ணிக்கை தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் விதத்திலான அறிக்கைகள் எமக்குக் கிடைத்துள்ளன. புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக வைத்திருப்பது தொடர்பான மிகவும் நம்பகரமான அறிக்கைகளையும் நாம் பெற்றுள்ளோம். மோதல் பகுதியிலிருந்து வெளியேற முயற்சிக்கும் பொதுமக்களை அவர்கள் சுட்ட சில சம்பவங்களும் உள்ளன என்று ரைஸ் கூறியுள்ளார்.
இருதரப்பும் மேற்கொள்ளும் இந்தமாதிரியான நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சார்ல் பில்ட்ற் கொழும்புக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டமை ஏமாற்றமளிக்கும் விடயமாகும். இலங்கை அரசு ஏன் அவருக்கு அனுமதி மறுத்தது என்பதை அமெரிக்காவால் புரிந்துகொள்வது கடினமானதாக உள்ளது.
மோதல் பகுதிக்கு ஐ.நா. மனிதாபிமானக்குழு செல்வதை நிராகரித்திருப்பதை இலங்கை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது. பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான அனுசரணையாகவும் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்கான ஒத்தாசை புரியவுமே மனிதாபிமானக்குழுவை ஐ.நா. அனுப்பிவைக்க திட்டமிட்டது. இந்தப் பிரச்சினை தொடர்பாக பாரியளவில் பாதுகாப்புச்சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களில் 1 இலட்சத்து 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக இடம்பெயர்ந்து வந்தவர்களுக்குரிய பதிவுகள், தங்குமிடங்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட ஐ.நா.வுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும். 400 பேர் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக கிடைத்த அறிக்கைகளையிட்டு வரவேற்பு தெரிவிக்கிறோம். அதேசமயம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான தனது உறுதிப்பாட்டை அரசு தொடர்ந்து கடைப்பிடிக்குமென எதிர்பார்க்கின்றோம் என்றும் சூசன் ரைஸ் கூறியுள்ளார்.