இலங்கைப் பிரச்சனையைக் காரணம் காட்டி இந்திய ராணுவ வாகனங்களையும் ராணுவத்தினரையும் தாக்குவது என்பது மன்னிக்க முடியாத தேச விரோதச் செயல் என்று இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் கூறியுள்ளார். கோயம்புத்தூரில் மே 2ம் தேதி விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சியினர் ராணுவ வண்டிகளை, ராணுவ வீரர்களைத் தாக்கியிருப்பது வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரிய விஷயம். இப்படி அசம்பாவிதம் நடக்கலாம் என்பதை மத்திய, மாநில அரசுகள் எதிர்பார்க்காமல் இருந்தது மிகுந்த கவலை அளிக்கிறது.
உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து உரிய நடவடிக்கையால் தடுத்து நிறுத்தாமல் இந்தத் தடவையும் கோட்டை விட்டுள்ளது. இது ஆபத்தானது. இலங்கையில் நடந்து வருகிற அட்டூழியங்கள் கடும் கண்டனத்திற்குரியது என்பதில் சந்தேகமே இல்லை. அந்நாட்டில் போரால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அவர்கள் உரிமையோடும் தன் மானத்தோடும் வாழ வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இலங்கைப் பிரச்சனையைக் காரணம் காட்டி பாரத ராணுவத்தைத் தாக்குவது என்பது மன்னிக்க முடியாத தேச விரோதச் செயல். இந்தச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு மேலாகியும் மாநில அரசியல் கட்சிகள் எதுவும் இதற்குக் கண்டனம் தெரிவிக்காதது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்டம்.
கோவையில் முன்பு காவல்துறையினர் தாக்கப்பட்டபோது பொறுப்பில்லாமல் வேடிக்கைப் பார்த்ததினால்தான் பெரும் கலவரம் மூண்டது. அதை அன்றே வேருடன் கிள்ளி எறியாமல் விட்டதால் இன்று ராணுவமே தாக்கப்பட்டிருக்கிறது. தாக்கியவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்தால் திருப்பித் தாக்க முடியும். வெறி பிடித்த சிலர் இப்படித் தாக்கியது பாரதத்தின் இறையாண்மைக்கு விடப்படுகிற மிகப்பெரிய சவால். இந்தச் சம்பவம் நடந்தவுடன் விடுதலைப் புலி ஆதரவு இணைய தளங்களில் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது வருங்காலத்தில் என்னவெல்லாம் நிகழ முடியும் என்பதற்கு இது முன்னோட்டமாகத் தெரிகிறது.
கிட்டத்தட்ட உள்நாட்டு யுத்தத்திற்கான ஒத்திகையோ இது என்று பலர் சந்தேகிக்கிறார்கள். வருங்காலத்தில் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்படலாம். வானொலி, தொலைபேசி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் சேதமாக்கப்படலாம், மின்சாரம், சாலைகள் துண்டிக்கப்படலாம். பிரிவினைவாதிகளும், பயங்கரவாதி களும் கைகோர்த்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள். மத்திய, மாநில அரசுகள் இத்தகைய புல்லுருவிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முன்வர வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் உள்ள தேசபக்த இளைஞர்கள் தான் இதனை எதிர்த்துப் போராடி முறியடிக்க முடியும். நாட்டிற்கு ஏற்படும் இதுபோன்ற ஆபத்துகளை எதிர்த்துப் போராட எவ்விலை கொடுக்கவும் ஆயத்தமாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.