05

05

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பு

parliament-of-sri-lanka.jpgவிடுதலைப் புலிகளை சிறுபகுதிக்குள் ஒடுக்கிவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிவரும் நிலையில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

pr-tam-deli.jpgதமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (05) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. அதேநேரம் இச்சந்திப்பில் த.தே.கூட்டமைப்பினரும் கலந்துகொள்ள இருந்ததாகவும் அவர்கள் அத்தீர்மானத்தை கடைசி நேரத்தில் ரத்துச்செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

pr-tam-deli.jpg

தினுஷிக்காவின் கொலை சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை

batticalo_0505.jpg
மட்டக்களப்பு பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார் தினுஷிக்கா (8 வயது) என்ற சிறுமியில் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் 3 பேர் இன்று (05.05.2009) அதிகாலை சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கல்வியங்காடு பாரதி ஒழுங்கை பகுதியை சேர்ந்தவர்களான மகிந்ததாஸ் மயூரன் (வயது 24), எட்வேர்ட் ஜூலியட் ஸ்டனிஸ்லோஸ் (வயது 20), ஏரன்ஸ் ஒழுங்கையைச் செர்ந்த சம்பா எனப்படும் சோமசுந்தரம் அனுஷன் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி மயூரன் என்பவரது வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லண்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்த இரு இலங்கையரின் வழக்கு வெற்றி

uk-200.jpg
இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த அண்ணன் தங்கையான அவ்விருவரும் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டன் வந்தனர். இலங்கையில் தாங்கள் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் கொடுமைக்கும் ஆளானதாகக் கூறி, அகதிகளாகத் தங்களை அங்கீகரிக்கக் கோரி இங்கிலாந்து குடியேற்றத் துறைக்கு அவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் குடியேற்றத்துறை இவ்விண்ணப்பத்தை ஏற்கவில்லை. மேலும் இருவரையும் நாடு கடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இருவரும் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், தங்களை நாடு கடத்தினால் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செட்லி, ஆர்டன், மோசஸ் ஆகியோர், “இருவரையும் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். மேலும் நாமே அவர்களைக் கொன்றது போலவும் ஆகிவிடும். இது ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டுப் பிரகடனத்திற்கு விரோதமானது” என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் சகோதர, சகோதரிகள் இங்கிலாந்திலேயே தங்கவும் அவர்கள் அனுமதி அளித்துள்ளனர். இங்கிலாந்து அரசுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து இங்கிலாந்து குடியேற்றப் பிரிவுத்துறை அமைச்சர் பில் ஊலஸ் கூறுகையில், “இது பொது அறிவே இல்லாத தீர்ப்பு. எதிர்காலத்தில் இங்கிலாந்துக்குச் சட்டவிரோதமாக வருவோரும், அகதிகளும் இந்தத் தீர்ப்பைக் காட்டி இங்கேயே தங்க முயற்சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் லார்ட்ஸ் சபையில் மனு தாக்கல் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

புலிகள் வசமிருக்கும் எஞ்சிய பகுதியை நோக்கிப் பல முனைகளிலும் படைநகர்வு

waroooo.jpgபாதுகாப்பு அமைச்சு கூறுகிறதுமுல்லைத்தீவில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் விடுதலைப் புலிகள் வசமிருக்கும் மிகுதிப் பகுதியையும் கைப்பற்றும் கடும் தாக்குதலை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் “ஏ35′ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மிக அருகருகே நடைபெற்ற கடும் சமரையடுத்து அப்பகுதியில் புலிகளால் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ள மண் அணையை 53 ஆவது படையணியினர் தகர்த்துள்ளனர்.

இதையடுத்து, மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் புலிகள் வசம் எஞ்சியிருக்கும் கடைசி 5 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  “ஏ35′ வீதி, முல்லைத்தீவு புதுமாத்தளன் வீதியை இணைக்கும் முக்கிய சந்திக்குத் தெற்கே நந்திக்கடல் வாவிக்கும் “ஏ35′ வீதிக்குமிடையிலுள்ள சிறிய பகுதியில் தற்போது 53 ஆவது படையணி செயற்படுகிறது.

சனிக்கிழமை 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள், புதுமாத்தளன் முல்லைத்தீவு மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கும் இடையிலுள்ள முக்கிய சந்தியைக்கைப்பற்றியுள்ளது.  இந்தக் கடும் சமரின் போது விடுதலைப் புலிகள், தாங்கள் அமைத்திருக்கும் மண் அணையை படையினர் கைப்பற்றுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை புலிகள் இந்தப் பகுதிக்கு பல வாகனங்களில் மேலதிகமாக தங்கள் ஆட்களை அனுப்பி படையினரின் நகர்வுகளை முறியடிக்க பல தடவைகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.  எனினும், புலிகளினால் கண்ணி வெடிகள், மிதி வெடிகள் மிக அதிகளவில் புதைக்கப்பட்டு மிகவும் வலுவாக வைத்திருந்த மண் அணையை படையினர் கடும் சமரின் பின்னர் கைப்பற்றியுள்ளதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.

தற்போது எஞ்சியிருக்கும் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் படையினர் சகல முனைகளிலும் முன்னேறி வருவதால் புலிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.

கிளிநொச்சியில் சிங்களவனால் இறக்கப்பட்ட புலிக்கொடி இன்று உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது; – சீமான்

semaan.jpg
கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு  சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய ‘மேலைக் கடலில் ஈழக்காற்று’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.
 
இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர்  சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார். இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே!  யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்.  புலிகள்தான்!

கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

இத்தாலி சோனியாவை “பாரதத்தின் அன்னை” என்று அழைக்கும்போது, என் சொந்த இரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன். தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்..சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க…இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது. ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், இராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து.  என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ். அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும். நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்’’ என்று ஆவேசமாக பேசினார்   சீமான்.

இடம்பெயர்ந்தோர் நலன் குறித்து பிரித்தானிய எம்.பி. க்களுக்கு ஜனாதிபதி விளக்கம்

uk_delegation-2009-05-05.pngஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினருக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

 இச்சந்திப்பில் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம,  மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

4வது கட்டத் தேர்தல்-இன்று பிரச்சாரம் முடிகிறது

iindias-election.jpg மக்களவை தேர்தலில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 85 தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்தத் தொகுதிகளில் நாளை மறுநாளான 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. நாடாளுமன்றத்திற்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. நான்காவது கட்டத் தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 85 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கும்.

இதில் ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகள், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகள், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 18 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 4 தொகுதிகளுக்கும், பிகாரில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.

இந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, லாலு பிரசாத், கபில் சிபல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் அடங்குவர்.

பிரபாகரன் இன்னும் பாதுகாப்பு வலயத்திலேயே ஒழிந்துள்ளார் – சபையில் பிரதமர் விளக்கம்

pm-srilanka.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் பாதுகாப்பு வலயத்திலேயே ஒழிந்திருக்கிறார். இதனை புலணாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பாதுகாப்புப் படையினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதால் புலிகளின் தலைவர் தப்பி ஓடுவதற்கு வழியெதுவுமில்லை என பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகளுடன் எத்தகைய யுத்தநிறுத்தத்தையும் மேற்கொள்வதில்லை எனும் நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாகவே உள்ளது. மரணப்படுக்கையில் உள்ள புலிகளுடன் யுத்தநிறுத்தம் ஒன்றைச் செய்வதற்கு எத்தகைய அவசியமும் இல்லை. கடந்த காலங்களில் யுத்தநிறுத்தம் அமுலில் இருந்தபோது புலிகள் தங்களை எவ்வாறு பலப்படுத்திக்கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பல வெளிநாட்டுப் பிரமுகர்கள் புலிகளின் தலைவரை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் யுத்தநிறுத்தப் பிரேரணைகளை முன்வைத்து வருகின்றனர். எனினும் அத்தகைய சக்திகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. புலிகளின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் குறித்து வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே உள்ளனர். இவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்

j-j-j.jpgமுன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் நேற்று மாலை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இன்று (நேற்று) பகல் 12.30 மணி அளவில் “இன்-லேன்ட்” கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் பெயரோ, முகவரியோ இல்லை.

கடிதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரை கொலை செய்து விடுவோம் என்று கடுமையான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு முன்னாள் முதல்-அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

புகார் மனுவோடு கொலை மிரட்டல் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. கடிதத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-

நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. எனவே உங்களை மே 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதிக்குள் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கலாம். தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது போல நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள். தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பும் போது உங்கள் வீட்டு வாசலில் குண்டு வெடிக்கலாம். நீங்கள் கொலை செய்யப்படும் தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்படும். எச்சரிக்கையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் வாசகங்கள் உள்ளன. கடித வாசகங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளார்.