“வன்னியில் மிகப்பாரதூரமான மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளதுடன், சாவுகளும் அழிவுகளும் பெருந்தொகையில் இடம்பெறுகின்றன. வன்னியில் இடம்பெறுவது போன்ற மனிதப் பேரவலம் உலகில் வேறெந்த நாடுகளிலும் இடம்பெற்றிருக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். வன்னியில் பல பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. அரசு இவ்வாறு கூறும் பகுதிகளில் ஒரு மனிதரோ, ஒரு வீடுகளோ கூட இல்லாத நிலையில், அரசு எதை விடுவித்ததாகக் கூறுகின்றதெனவும் சம்பந்தன் மேலும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சம்பந்தன் மேலும் கூறியதாவது; வன்னியில் மிகமோசமான முறையில் விமானக் குண்டு வீச்சுகளும் ஷெல் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. இதனால், மக்கள் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்ந்த மக்கள் இன்று அனைத்தையும் இழந்து படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பலர் பட்டினியில் வாடுகின்றனர். அடிப்படை வசதிகளின்றி அவலப்படுகின்றனர். இன்று அவர்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளனர். வன்னியில் 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகவே அரசு கூறி வந்தது. அதற்களவான வகையிலேயே உணவு அனுப்பியது. ஆனால், இன்று வன்னியிலிருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் மக்கள் அரச பகுதிக்கு வந்துள்ளதாகக் கூறுகின்றது.
எமது கணிப்பின்படி இன்னும் ஒன்றரை லட்சம் மக்கள் வன்னியில் உள்ளனர். அவ்வாறானால் அரசு இவ்வளவு காலமும் வன்னி மக்களை திட்டமிட்ட வகையில் பட்டினி போட்டு வந்துள்ளது என்பது நிரூபணமாகிறது. வன்னியில் மிகப் பெரும்மனிதப் பேரவலம் இடம்பெற்று வருகின்றது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த அவலங்களுக்கு எந்த சாட்சியமும் இல்லை. இவ்வாறான அவலங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு எவரும் செல்லமுடியாது என்பதன் மூலம் அரசு இரகசியத்தைப் பேண முற்படுகின்றது.
தற்போதைய இந்த அவலநிலை இனிமேலும் தொடரக்கூடாதென நாம் அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பசில் ராஜபக்ஷ இந்திய அரசுக்கு வாக்குறுதி கொடுத்த பின்னரே பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வன்னியில் இடம்பெறும் படுகொலைகள், தாக்குதல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் மிகவும் துலாம்பரமான திட்டவட்டமான தகவல்களை கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு யுத்தத்தில் என்ன நடந்ததென்பதை அந்த அறிக்கை மிகவும் தெளிவாக விளக்குகின்றது. வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவோர் வவுனியாவில் உள்ள தங்குமிடமுகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். முட்கம்பி வேலிகளுக்குள் அவர்களின் சுதந்திரமான நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதிமுகாம்களுக்கு ஊடகவியலளர்கள், சர்வதேச மனித உரிமை முகவர் அமைப்புகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதன் மூலம் அங்குள்ள உண்மை நிலையை வெளிக்கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் அலுவலகத்தை இலங்கையில் திறக்குமாறு லூயில் ஆர்பர் கோரிக்கை விடுத்தார். ஆனால்,இலங்கையில் மனித உரிமை மீறல்கள் சட்டத்தின் அனுமதியுடன் அதிகளவில் நடப்பதால் அதற்கு அரசாங்கம் இணங்கவில்லை என்றார்.