”புலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும்.”
”உங்கள் கைவசம் உள்ள ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்து சரணடையாவிட்டால் உங்கள் வீடு புகுந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சுட்டுத்தள்ளுவோம்.”
முதல் அறிவிப்பு இலங்கையின் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவினால் ஏப்ரல் இறுதிப்பகுதி முதல் இப்போதும் அறிவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச எல்லைகளில் உள்ள மரங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டி தமிழ் பாடல்களை ஒலிபரப்பி இடையிடையே இந்த அறிவித்தலையும் இலங்கை இராணுவம் செய்கின்றது.
கீழுள்ள அறிவிப்பு வாகனங்களில் ஒலிபெருக்கிகளைக்கட்டி 1986ம் ஆண்டு ஏப்ரல் 29 முதல் மே 6 வரை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு. யாழ் நகரத்தின் பகுதிகளில் அறிவிப்பாளர் கே எஸ் ராஜாவை துப்பாக்கி முனையில் கடத்தி வந்து கணீர் குரலிலும் இந்த அறிவிப்புச் செய்யப்பட்டது.
ஜரோப்பாவில் 600க்கும் மேற்ப்பட்ட முன்னாள் ரெலோ போராளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரக் கொலைகளினால் பாதிக்கப்பட்டவர்கள். புலிகளினால் அடித்து கலைத்தும் பின்னால் கலைத்துச் சுடப்பட்டும் இந்த துப்பாக்கி சூட்டில் தப்பிப்பிழைத்தவர்கள். இன்றும் புலிகளினால் தமது அவயவங்களை இழந்து உள்ளேயும் வெளியேயும் வலியுடனும் வடுக்களுடனும் வாழ்பவர்கள். மற்றும் ஒருபிரிவினர் புலிகளுடன் தொடரும் சண்டைகள் தமிழினத்தின் கேடு என்பதனால் புலிகளுடன் இணைந்து வேலை செய்ய முயற்ச்சித்தவர்கள் இன்னும் சிலர் இவற்றுடன் உடன்படாமல் ஒதுங்கி வாழ்பவர்கள்.
இவர்களில் சிலர் ரெலோ தலைவர் சிறிசபா கொல்லப்படும் போது அவருடன் புலிகளால் கொல்லப்பட்டவர்களை நேரில் பார்த்தவர்களும் புலிகளுடன் நேருக்கு நேர்நின்று துப்பாக்கி சமர் புரிந்தவர்கள். இன்னும் சிலர் புலிகளினால் சிறைபிடிக்கப்பட்டு சிறையிலிருந்து தப்பியவர்கள். மேலும் சிலர் புலிகளின் விதிகளுக்கு ஏற்ப்ப அரசியல் செய்யமாட்டோம் என எழுத்து மூலம் வழங்கியவர்கள். இன்னும் சிலர் வட-கிழக்கு பிரதேசத்தில் இனிமேல் வாழவரக் கூடாது என்று வாக்குறுதி பெறப்பட்டவர்கள்.
23 வருடங்கள் கடந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் அன்று நிகழ்ந்த கோரம் நேற்று நடந்தது போன்ற உணர்வுடன் கொல்லப்பட்ட அத்தனை தோழர்களும் எம்மனதில் வாழ்கிறார்கள். இது தினம்தினம் எமக்கு நினைக்கும் போதெல்லாம் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணுகிறது என்கிறார்கள் முன்னாள் ரெலோ தோழர்கள்.
இவ்வளவு கொடுமைகளும் கொலைகளும் இழைக்கப்பட்டு இருந்தாலும் தமிழ் மக்களுக்கு புலிகள் இன்று அழிந்து கொண்டிருக்கும் வேளையில் அப்போராளிகள் கொல்லப்படக் கூடாது என்ற மனிதத்துவத்தை பெரும்பாலும் காணக் கூடியதாக உள்ளது. தமிழ் மக்கள் பட்ட இன்னல்களும், தமிழ் மக்கள் மனிதக் கேடயமாக்கப்பட்டதும் அவர்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டதும் பெரும்பாலானவர்களது பழிவாங்கும் உணர்வை அமைதிப்படுத்தி உள்ளது.
புலிகளினால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரங்களை இப்போது பேசுவதால் மக்களுக்கு என்ன வந்துவிடப் போகிறது என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது. இது தமிழர் வரலாறு. தமிழர்கள் தமது போராட்டத்தை தோற்ற வரலாறு. எமது புதிய சந்ததியினருக்குத் தெரியப்படுத்தப்படாத வரலாறு. எமது புதிய சந்ததியினர்க்கு மறைக்கப்பட்ட வரலாறு. இந்த காரணங்களால் இந்த வரலாறு வெளிப்படையாக திறந்த மனதுடன் எமது உள்ளகிடக்கைகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது என்பதே முன்னாள் ரெலோ தோழர்களின் கருத்தாகவும் உள்ளது.
புலிகளுடைய பயங்கரவாதப் போக்கு தமிழர்களுடைய போராட்டத்தை தோல்வியுறச் செய்தபோதும் இப் பயங்கரவாதப் போக்கு எப்போதோ ஒரு நாள் அடங்கியே தீரும் எனப் பலர் எதிர்வு கூர்ந்தனர். இருந்தாலும் இது மிக நீண்ட காலத்தை எடுத்து தமிழ் மக்களை சீரழித்து விட்டது. உலகின் சர்வதேச பயங்கரவாததிற்கு எதிரானதும் இந்திய பிராந்தியப் பயங்கரவாத்திற்கும் எதிரான நிகழ்ச்சி நிரல் இலங்கை அரசுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. அது தற்போது இலங்கையின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து உள்ளது.
அன்று ஊடகங்கள் கூட பயந்து இப்பயங்கரவாதப் போக்கிற்கு எதிராக எதையும் பேசியதில்லை. எழுதியதில்லை. அவர்கள் அப்படி எழுதியிருந்தாலும் அவர்களுக்கும் ரெலோ போராளிகளுக்கு நடந்ததே நடந்திருக்கும். ஆனால் இன்றுள்ள ஊடகங்கள் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள ஊடகங்கள் தமது ஊடக சுதந்திரத்தையும் பேச்சுரிமையையும் அனுபவித்துக்கொண்டு அதற்கு மாறாகச் செயற்படுகிறார்கள். ஜபிசி போன்ற ஊடகங்கள் ரெலோ போராளிகளின் கொலைகளை ஆதரித்தும் அவர்களைத் தூற்றியும் அவர்கள் பற்றி அதாவதூறாக கருத்துக்களை வெளியிடுவதும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது.
ரெலோவினுடைய தலைமை அழிக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டாலும் ரெலொவினை அழிக்க முடியவில்லை. இது ரெலோவிற்கு மட்டுமல்ல ஏனைய அமைப்புகளுக்கும் பொதுவானதே. குறிப்பாக இன்று புலிகளை அழிக்க கங்கணம் கட்டி நிற்கும் இலங்கை அரசும் இந்த யதார்த்தத்தை புரிந்தகொள்ள வேண்டும்.
தமது அமைப்பு புலிகளால் வேட்டையாடி அழிக்கப்பட்டது தொடர்பில் அவ்வமைப்பைச் சார்ந்த சில தோழர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். அவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.
”இவற்றையெல்லாம் நாம் மறந்துவிடுவோமா?” முன்னாள் ரெலோ போராளி
இன்று குண்டுத் தாக்குதலுக்கு பயந்து தப்பியோடும் மக்களை பிடித்து வந்து முதுகுத் தோல் உரிக்கும் புலிகள் எப்படி ரெலோக்களை கொலை செய்திருப்பார்கள என்பதனை நினைத்துப் பார்க்க முடியும். மக்களை சுதந்திரமாக சிந்திக்க அனுமதிக்கவில்லை. மக்களை சாப்பிட மட்டுமே வாய்திறக்க விட்டனர்.
புலிகளால் கைகள் வெட்டப்பட்ட தோழர்கள் இன்றும் எம்முடன் வாழ்கின்றனர். புலிகளால் தமது கால் துண்டாடப்பட்டவர்கள் எம்முடன் வாழ்கின்றனர். எமது நண்பர் ஒருவருக்கு மலவாசலில் தும்புத்தடியை புகுத்தி பின்னர் அடித்தனர். எஸ்லோன் குழாயை மலவாசலில் செலத்திய பின்னர் அதனூடாக முள்ளுக்கம்பியை மலவாசலில் செலுத்தினர். இவை எல்லாம் போராட்ட இயக்கம் செய்த வேலைகள் இவற்றையெல்லாம் நாம் மறந்துவிடுவோமா?
எமது தோழரின் ஒரு காலை மரத்தில் கட்டிவிட்டு மறு காலை ராக்ரரில் கட்டிவிட்டு இழுத்துக் கிழித்தனர். இந்த விடயம் நெடுங்கேணியில் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
இன்று வரையில் இவ்வளவு கொடுமைகள் செய்த புலிகள் இது வரையில் இந்த கொலைகளுக்கு மன்னிப்பு கேட்கவில்லை. இந்தப்புலிகளின் ஆதரவாளர்கள் இவற்றை இன்றும் சரியானது என்றே வாதிடுகிறார்கள். புலிகள் இது பற்றி சிந்திக்கவில்லை. இவர்கள் இந்த கொலைகளுக்கு மன்னிப்பு கேட்காதவரையில் புலிகளால் என்றுமே தொடர்ந்து எதுவும் செய்ய முடியாது.
”புலிகளது அழிவு தவிர்க்க முடியாதது.” முன்னாள் ரெலொ போராளி
எனது சகோதரன் திருமலையில் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டான். பின்னர் வீட்டுக்கு வந்து என்னையும் எனது அப்பாவையும் தமது முகாமிற்கு எடுத்துச்சென்று அடித்தனர். இன்றும் எனது முதுகில் காயங்கள் உண்டு. எமது சகோதரனின் இறந்த உடலை நாமே எமது வீட்டுக்கு தூக்கி செல்ல வைத்தனர். இது தான் இவர்களின் ஆட்சியிலும் நடந்திருக்கும். இவர்கள் மக்களின் போராளிகளா? என்று நாம் தினம் தினம் கேட்கும் கேள்வி இது. நான் ரெலோ என்பதற்காக மலம் தின்ன வைத்த புலிகளை என்றுமே மன்னிக்க முடியாது. இன்று புலிகளது அழிவு தவிர்க்க முடியாதது.
”ஈழப்போராட்டம் ரெலோ அழிப்பின் அன்றே சிதைக்கப்பட்டுவிட்டது.” சாம் ரெலோ அமைப்பாளர் லண்டன்
ஈழப்போராட்டம் ரெலோ அழிப்பின் அன்றே சிதைக்கப்பட்டுள்ளது. தமிழீழப் போராட்டம்; தோல்வியடைந்து விட்டது. இதற்கு முழுப் பொறுப்பும் புலிகளே. நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து ஒரு தீர்வுத்திட்டத்தை கொண்டு சென்றிருப்போம், இந்திய உறவுடன் சேர்ந்து வெளியுலகின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றம் பெறக் கூடியவராக சிறீசபா இருந்தவர். சிறீசபா போராட்டத்தின் நட்பு சக்தியாக இந்தியா என்பதை குட்டிமணி தங்கத்துரை காலத்திலிருந்தே சரியாக அடையாளம் கண்டு கொண்டவர். இது அன்றிலிருந்து இன்று வரை எவ்வளவு முக்கியமானது என்பதை இப்போது வரலாறு நிரூபித்துள்ளது. சிறீசபா கூட்டுமுன்னணி உருவாக்க முன்னின்றவர். சிறீசபா யாரும் அணுகக்க கூடியவர் பலரை தான் நாட்டில் இருந்த காலத்தில் சந்தித்தவர்.
மாற்று இயக்கத்தவர்களுடன் புரிந்துணர்வு கொள்ளும் போது புலிகளுடனும் பேச வேண்டும். சேர்ந்து இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். இதன் காரணமாகவே கிட்டுவின் முகாம் இராணுவத்தால் தாக்கப்பட்ட போது பிரபாகரன் சிறீசபாவிடம் கேட்டதிற்கு இணங்க எமது தோழர்களை கிட்டுவின் முகாமை சுற்றியுள்ள இராணுவத்தினரை அகற்றி உதவி செய்தவர். பின்னர் கிட்டு ஈழநாடு பத்திரிகையில் இதற்காக எமது ரெலோவிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
சிறீசபாவின் இராணுவத் தாக்குதல்கள் என்பது மக்கள் பலியாவதை குறைக்கும் நடவடிக்கைகளாகவே இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டியவர். இதற்கு கிளிநொச்சி ரயில்த் தாக்குதல்கள் சிறப்பான உதாரணமாகும்.
பாக்கிஸ்தான் பயிற்ச்சி பெற்ற சாவகச்சேரிப் பொலீஸ் நிலையத் தாக்குதல்கள் நாம் எந்த பயிற்ச்சி பெற்ற அரசபடைகளும் எமக்கு பொருட்டல்ல என்பது அரசுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இருந்தது.
எமது தமிழீழப் போராட்டத்தின் முதுகெலும்பு இந்திய உறவு. இதைகெடுத்தவர்கள் புலிகளே. படிப்படியாக கட்டம் கட்டமாக சுயநிர்ணய போராட்டததை நோக்கிய திட்டத்தை சிறீசபா கொண்டிருந்தார். இப்படியானவர்கள் கொல்லப்பட்டது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இக்கொலைகளை இன்றும் நாம் கண்டிக்கிறோம்.
நாம் எல்லோரும் சேர்ந்து இந்தியாவின் உதவியுடன் போராடுவோம் என்று ஒன்னிணைந்துவிட்டு பின்னர் எம்மை இந்திய உளவாளிகள் என்று பட்டம் சூட்டி எமக்கு துரோகிப் பட்டம் சூட்டி எமது தோழர்களை கொலை செய்தது மன்னிக்க முடியாதது.
”புலிகள் இன்றுவரை தவறுகளை ஒத்துக்கொள்ளவில்லை.” முன்னாள் ரெலோ போராளி
எமது கிழக்கு மாகாணத் தோழர்களை உயிருடன் மரத்தில் கட்டி வைத்து கழுத்தில் டயர் போட்டு பெற்றோல் ஊத்தி உயிருடன் கொலை செய்த போது தாங்கள் யார் என்பதை புலிகள் தெரியப்படுத்திவிடடனர். இதிலிருந்தே புலிகள் கிழக்கு மாகாணத்தவர்களை இரண்டாம்தர பிரஜைகளாக்கி விட்டனர். அன்று ரெலோவில் இருந்தவர்கள் பலர் இன்று வரை புலிகளை துரோகிகளாகவே பார்க்கின்றனர். ரெலோ மீது புலிகளால் செய்யப்பட்ட இந்த துரோகத்தனம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நினைவு கூரப்படல் வேண்டும். அப்படி துரோகத்தனமாக கொல்லப்பட்ட அந்தத் தோழர்களை மறந்துவிடக் கூடாது. இலங்கை அரச தமிழர் மீது செய்த தவறுகளை ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் புலிகள் இன்றுவரை தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ளாதவர்களாகவே உள்ளனர்.
“தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மம் ஜெயிக்கும்.” முன்னாள் ரெலோ போராளி
ரெலோ அழிப்பின் போது புலிகள் இரவு பகலாக தொடர்ந்து அழித்வர்கள் ரெலோ போராளிகள் தப்பிவிடக் கூடாது என்ற வெறியை நான் நேரே பாத்ததேன். யுத்த தர்மம் இரவில் என்றாலும் எதிரியைத் தூங்க விடுவது. இது புலிகளுக்கு தமது சகோதரர்களைக் கொல்லும் போது கூட, இப்படி இரவு இரவாக கொல்ல வேண்டுமா என்பது நினைவுக்கு வரவில்லை.
முதலில் கிட்டு ரெலி ஜெகன் உட்பட 15 பேர்களை கட்டி இழத்துப்போய் செம்மணிச் சுடலையில் சுட்டு எரித்துவிட்டு இயக்கத்தை தடைசெய்த விட்டோம் என்று அறிவிக்கும் போதே போராட்டத்தை எப்படி நடாத்துவார்கள் என்பதை சொல்லிவிட்டரர்கள். பின்னர் ரெலோவின் அழிப்புடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். புலிகளால் பின்னர் செய்யப்பட்டதெல்லாம் பயங்கரவாதமே.
முதன் முதலாக புலிக் கொடியுடன் புலிகள் உள்ளே இருக்க இந்திய இராணவத்தின் வாகனம் வெளியே வந்தது. நாம் தெருவில் புலிகளின் அனுமதி கேட்டு அவர்களின் முன்னிலையிலேயே இந்திய இராணுவத்திடம் பேசினோம். பின்னர் புலிகள் இந்திய இராணுவத்துடன் சண்டைகளை ஆரம்பித்த போது இலங்கை அரசுடன் ஓடிப்போய் சேர்ந்தனர். புலிகள் முதன் முதலில் இலங்கை இராணுவத்திடம் போய்ச் சேர்ந்து காட்டிக் கொடுக்கும் துரோகத்தை ஆரம்பித்தது. அன்றே புலிகளுக்குள்ளே இலங்கை அரசு தனத உளவாளிகளை புகுத்திவிட்டது. இக்காலத்தில் புலிகள் இலங்கை அரசின் இராணுவத்தின் பொலீசின் அனுமதியடன் 170 ரெலோ உட்பட பல மாற்று இயகத்தவர்களை தமக்கு விரும்பாதவர்களை துணுக்காய்க்கு எடுத்து வந்து கொன்றனர்.
தமிழர்களிடையே கொலைகளை சர்வசாதாரணமாக்கியது புலிகள். பின்னர் முஸ்லீம்களை கொலை செய்து இனக்குரோதத்ததை வளர்த்ததும் புலிகள்.
சந்தேகத்துக்கு உரியவர்களை எல்லாம் கொன்றது புலிகள். கிளிநொச்சியில் புலிகளின் பொறுப்பாளர்கள் கிளிநொச்சி தெரியாதவர்கள். இவர்கள் கிளிநொச்சியில் உள்ள மனநோயாளர்களை எல்லாம் உளவாளிகள் என்று மிகவும் கேவலமாக கொலை செய்தனர். கொலைகளிலே தமது காலத்தை கடத்தினர் புலிகள். ரெலோ உறுப்பினர்களின் ஆண் உறுப்பை அறுத்து வாயில் திணித்தனர். புலிகள் ரெலோ போராளிகளை உயிருடன் எரிக்கும் போதே எம்மை எல்லாம் காப்பாற்றிய புண்ணிய தர்மங்கள் எல்லாம் எம்மைவிட்டுப் போயின.
நீதிகளை மிதித்துக் கொண்டு பலதூரம் வந்தவர்கள் புலிகள். தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு முன்பு புலிகள் தமது அமைப்பினுள்ளே பலருக்கு மரணதண்டனை கொடுத்தனர். காரணம் இந்தப் புலிகள் பெண்கள் உட்பட பிள்ளைகளை வீடுவீடாய் போய் இயக்கத்திற்கு கட்டாயப்படுத்தி ஆள்சேர்த்தனர். பின்னர் இவர்களை விடுதலை செய்ய அந்த பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி இயக்கத்தைவிட்டு வெளியேற அனுமதித்தனர். இந்தப் பெண்களை தனித்தனியே வீடுகளில் அடைத்துவைத்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி சில பெண்களை கொலையும் செய்தனர். இபடியான சம்பவங்களில் 58 வயது நிரம்பிய பெருமாள் என்பவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டது. இந்த சம்பவங்கள் தென்பகுதி பல்கழைக்கழக மாணவர்கள் கிளிநொச்சி மக்ளுக்கு உதவி செய்ய சென்ற போது அந்த மக்களிடமிருந்து பெறப்பட்டவைகளாகும்.
குழந்தைகளைப் பிடித்துப்போக பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். ‘நாம் பாம்புக்கு பால்வார்த்து விட்டோம் இப்போது அது எங்களை கொல்லுகிறது.’ இப்படி கிளிநொச்சி பெற்றோர் வவுனியா முகாமில் இருப்பவர்கள் கூறுகின்றார்கள். ஆயுதப் போராட்டம் எப்போதோ முடிந்து விட்டது. எம்முடன் இருந்த தர்மங்கள் எல்லாம் எம்மை விட்டுவிலகி விட்டது.
குமாரசூரியரை எதிர்த்து பேச துணிவு இருந்தது முட்டை எறிந்தாலும் எம்மை பொலீசார் பிடித்து போனாலும் குமாரசூரியரே பொலீசாருக்கு போன் செய்து எம்மை விடுதலைசெய்யச் சொல்லுவார். இப்படியானவர்களை எல்லாம் நாம் தவறாக பார்த்துவிட்டோம். இவர்களைவிட இந்த இளைஞர்கள் மிகச் சிறப்பாக எம்மை நடாத்துவர் எமது மக்களுக்கு உதவிகள் செய்வார்கள் என்றெல்லாம் நம்பி ஏமாந்து போய்விட்டோம் என்றார்.
மனிதர்களின் உயிர்வாழ்வதற்கான உத்தரவாதத்தை புலிகள் அழித்துவிட்டனர். சிறியண்ணாவை படுகொலை செய்தவிதம் எமது தர்மத்தை அழித்து விட்டது. தர்மதேவதை தலைகுனிந்துவிட்டாள் என்றே சொல்லுவேன். பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் மண் அள்ளித்திட்டினர். அந்த சாபங்கள் இன்று புலிகளை அழிக்கின்றது.
“தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மம் ஜெயிக்கும்.”
”குட்டிமணி தங்கத்துரையை காட்டிக் கொடுத்தது யார்?” முன்னாள் ரெலோ போராளி
இதர போராட்ட இயக்கங்களை அழித்தவர்கள் போராளிகள் அல்ல. பயங்கரவாதிகளே. குட்டிமணி தங்கத்துரையை காட்டிக் கொடுத்தது யார்? இது குட்டிமணிக்கு நன்கு தெரியும். இன்றும் சாட்சியங்களுடன் அவரது சட்டத்தரணி கரிகாலன் உள்ளார். இவர் பின்னர் தனது கட்டுரையில் குட்டிமணியை காட்டிக்கொடுத்ததில் வேறு ஒரு இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக எழுதியுள்ளார். புலிகள் எடுக்கும் எந்த முடிவும் மக்கள் நலனுக்காக எடுக்கப்படவில்லை. அதைவிட எத்தனை ஒப்பந்தங்கள் வந்தது அவற்றை எல்லாம் சரியாக கையாளத் தெரியாதவர்கள். இவர்களிடம் அரசியல் இருக்கவில்லை.
”ஈழத்தில் நடைபெற்றது போராட்டமல்ல இராணுவக் கிளர்ச்சி.” முன்னாள் ரெலோ போராளி
போராட்டம் மக்கள் இணைந்தது. ஆனால் ஈழத்தில் நடைபெற்றது இராணுவக் கிளர்ச்சி. இப்படியான கிளர்ச்சிகளை பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட இராணுவம் வெற்றி கொள்வது இயல்பானதே. இன்று இந்தப் புலிகளின் ஆயுதங்கள் மக்களுக்கு எதிராக செயற்ப்படுவதை நாம் ரெலோ அழிப்பின் போதே பார்த்துவிட்டோம். அனாலும் புலிகள் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு எதிராக பாவித்து விட்டனர். இது தமிழ் மக்களுக்கு செய்த துரோகமே.
”புலிகள் அழியும் போதும் எமது மனம் வெதும்பி அழுகின்றது.” முன்னாள் ரெலோ போராளி
எமது முழுக் குடும்பத்தையும் அழித்தது புலிகள். இதற்கான ஒரே ஒரு காரணம் நான் ரெலோ என்பதே. நாம் தெருக்களில் நாய்களைவிட கேவலமாக சுட்டுக்கொல்லப்பட்ட போது எமக்கு இருந்த மனோநிலை எப்படி இருந்ததோ அதே போல இன்று இந்த புலிகள் அழியும் போதும் எமது மனம் வெதும்பி அழுகின்றது. எமக்கு தெரியும் மரண பயம் என்பது என்ன என்று இந்தப் புலிகளே எமக்கு காட்டினர். அந்தப் புலிகள் இன்று எமது மக்களுக்காக செய்தது என்ன? வெறும் கோழைகள். எனது உறவினர் கும்பத்தில் உள்ள சகோதரங்களை மற்ற புலியைச் சேர்ந்த சகோதரனால் கொல்லப்பட்டதை இன்றும் அந்தக் குடும்பம் நினைத்து நினைத்து அழுகின்றது.
தமது சொந்த இயக்கத்தினுள்ளேயே உள்முரண்பாடுகளை கொலைசெய்து தீர்க்கும் இயக்கம் எப்படி மக்கள் அமைப்பாக அல்லது மக்கள் அமைப்பாக அல்லது மக்கள் பிரதிநிதியாக மாற்றம் பெற்றிருக்க முடியும் என்று மக்கள் எதிர்பாத்திருந்தார்கள். புலிகள் தம்மிலேயே நம்பிக்கையில்லாமல் சயனைட்டை கழுத்தில் தூக்கிக் கொண்டு திரிபவர்கள் கொலைக்கலாச்சாரத்தின் புருஷர்கள் புலிகள். தமது கொலைக் கலாச்சாரத்தை புலம்பெயர் ஜரோப்பிய வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிலையில் இன்று உள்ளனர்.
”ரெலோ புலிகளுடனான உறவை ஏற்படுத்தியது கடந்த காலத்தவறு.” முன்னாள் ரெலோ போராளி
புலிகளைப் பற்றி பேசி நேரம்மினக்கெட வேண்டாம். ஆனால் இன்று நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரெலோ இயக்கம் புலிகளுடனான உறவை ஏற்படுத்தியது கடந்த காலத்தவறே. இதை செல்வமே செய்தார். ரெலோ பல போராட்டத் தலைவர்களை உருவாக்கிய அமைப்பு. எத்தனை பல போராளிகளை பலி கொடுத்து வளர்க்கப்பட்ட அமைப்பு. இன்று இதில் உள்ள சில தலைவர்கள் இந்த அமைப்பை தமது சுய தேவைகளுக்காக பாவிக்கின்றார்கள்.
ரெலோவினுள் ஏற்ப்பட்ட சுதன் – ரமேஸ் பிரச்சினையின் போதே புலிகளின் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. புலிகளை நம்பிய சிறீசபாதான் பாவம் நம்பிக் கெட்டார். ஆனால் இனிமேல் எந்த தலைவர்களும் நம்பமாட்டார்கள். இதில் மகிந்தா ராஜபக்ஸ மிகவும் தெளிவுடன் உள்ளார்.
”எங்கே அந்தக் கடிதங்கள்?” ஐயர் முன்னாள் ரெலோ தோழர்
விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தனிமனிதனால் நடாத்தப்படும் அமைப்பு என்பதை தற்போது உலகம் நன்கு அவதானித்த பின்பே புலிகளின் அழிப்பை ஒன்று சேர்த்து நடாத்துகிறார்கள். புலிகள் அமைப்பு ஒரு மக்கள் இயக்கம் அல்ல. அது ஒரு இராணுவ அமைப்பு. அதன் முடிவும் இராணுவத் தோல்வியிலேயே முடிவடையக் கூடியது. இலங்கை இராணுவம் ஆட்பலத்தில் கூடிய அமைப்பு எப்போதும் இயல்பாகவே வென்றுகொள்ளும் என்பது சாதாரணமாக எவராலும் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் புலிகளுக்கு மட்டும் இது புரிய முடியாதது. காரணம் அவர்களது சிந்தனை முறையையே வேறானது. அதுவே இன்று தோற்கும் நிலைக்கு வந்துள்ளது. புலிகளக்கு அரசியல் என்ற அர்த்தம் இன்று வரையில் விளங்கிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
புலிகள் என்றுமே மக்களுடன் பேசியதில்லை. யார் சரி ஒரு உதாரணத்தை காட்டட்டும் புலிகள் மக்களிடம் அவர்களது அபிப்பிராயத்தை அறிந்தது பற்றி. புலிகள் எப்பவுமே தாம் முடிவு எடுப்பார்கள். அதை மக்களுக்கு திணிப்பார்கள். இந்தப் புலிகள் தமது ஆட்சியதிகாரம் உள்ள பிரதேசங்களில் தாம் ஒரு ஜனநாயக நடைமுறையை அமுல்படுத்தி தமது மக்கள் அரசியலை உலகத்திற்கு எடுத்துக்காட்டியிருக்கலாம் ஏன் செய்யவில்லை? காரணம் புலிகள் இயக்கம் ஒரு மக்கள் அமைப்பு அல்ல.
புலிகள் மக்களுக்கு செய்த ஒரு நல்ல உதாரணத்தை எடுத்துக்காட்ட முடியமா? இலங்கை இராணுவம் நாம் எதிரி என்று போராட ஆரம்பித்த அந்த இராணுவம் இன்று மக்களுக்கு செய்யும் உதவிகளை தினம் தினம் நாம் பார்க்கிறோம். இந்த விடயத்தில் புலிகள் கிட்டவும் வரமுடியாது – இராணுவம் செல்லடிப்பதும் மக்கள் சாவதும் புலிகள் மக்களை கேடயமாக வைத்திருப்பதனாலே. புலிகள் மக்களுக்கு சிங்களவன், சிங்களம் கொலை செய்யுறான் என்று சொன்னால் தமிழர்கள் தொடர்ந்தும் தமது பக்கம் இருப்பார்கள் என்று நினைத்திருந்தனர். ஆனால் சிங்கள மக்களும் அரசும் தமது நல்லெண்ணங்களை காட்டி தமது இனக்கலாச்சாரத்தை உயர்த்திவிடடனர். புலிகளின் கொலைக் கலாச்சாரத்தால் தமிழர்கள் தாழ்த்தப்பட்டுள்ளனர்.
நாம் தமிழ்ப் பிரதேசத்தைவிட்டு வெளியேறியதே புலிகள் எம்மிடம் தமிழ்ப் பிரதேசத்தில் இருக்கக்கூடாது என்று கை எழுத்து வாங்கியதாலேயே. போராடத்தில் பங்கு கொள்ளக் கூடாது என்று எழுத்தில் வாங்கியதாலேயே. எங்கே அந்தக் கடிதங்கள்? இந்த காரணங்களே தமிழர் போராட்டத்தை தோல்வியடையச் செய்தது.
”புலிகள் மன்னிப்பு கேட்டிருந்தால் நாம் மாறியிருந்திருக்கக் கூடும்.” முன்னாள் ரெலோ போராளி
எமது ரெலோ தோழர்களை கொலை செய்த கிட்டுவை கேணல் கிட்டு என்ற நினைவ தினமும் பிரபாகரனை தேசியத்தலைவர் என்றும் போற்றுபவர்களும் ரெலோ மீதான கொலைகளை நியாயப்படுத்துபவர்களாகவே கருதுகிறேன். புலிகள் மன்னிப்பு கேட்டிருந்தால் நாம் சிலவேளை மாறியிருந்திருக்கக் கூடும்.
தாஸ்-சிறீசபா உறவு குலைந்ததே புலிகள் ரெலோ மீதான படுகொலைக்கு காரணமாகியது. இந்த விடயத்தில் சிறிசபாவிலும் சில தவறுகள் உள்ளது. இவைகளே சிறீசபாவின் எதிரிகளாகிவிட்டது. ஆனாலும் புலிகள் ஏன் மற்ற அமைப்பினரை அழிக்க வேண்டும். காரணம் புலிகள் மற்ற இயக்கத்தை அழிக்கவே மற்ற அமைப்பினருடன் கூட்டுமுன்னணி சேர்ந்தவர்கள் என்பது முக்கியமான விடயம்.
சிறிசபா கொல்லப்படுவதற்கு முதல் நாட்களில் 23ம் திகதி ஏப்ரல் மாதம் கிட்டு கல்வியங்காட்டில் சிறிசபாவை சந்திக்க காவல் இருந்தவர். நான் முன்னால் பல தடைவ அவதானித்துவிட்டு சிறிசபாவிடம் கேட்டபோது சிறீசபா அந்தக் காலத்தில் பிரபாகரனுடன் உறவு வளர்ந்து கொண்டிருக்கும் காலம் இது அப்போது இப்படி பல சந்திப்புக்கள் நடந்து கொண்டேயிருந்தது. புலிகளுக்கு அமெரிக்க ஆயுதங்கள் 1985ம் ஆண்டு கிடைக்க ஆரம்பித்த போதே இந்த இயக்கப் பிரச்சினைகளும் ஆரம்பித்துவிட்டது.
எது எப்படி இருப்பினும் இந்திராகாந்தி இருந்திருந்தால் புலிகள் ரெலோ மீது கை வைத்திருக்க மாட்டார்கள். இப்ப புலிகளும் புலிகளின் தலைவரும் ராஜா வாழ்க்கை வாழ்ந்து முடித்தாச்சு. அவரின் வாழ்வுக்காலமும் முடிந்துவிடப் போகிறது. இப்படி சில நாடுகளில் சில பயங்கரவாதிகள் போராட்ம் என்று காலத்தை கடத்திவிட்டு செத்துப்போனார்கள். இதுதான் தமிழர்க்கும் நடக்கிறது போலவே எனக்கு தெரிகிறது.
”ஒரேஒரு வழி நாம் இந்தியாவை நாடுவது தான்.” முன்னாள் ரெலோ போராளி
ஈழத்தமிழர்களுக்காக போராடிய எவரையும் மறக்க முடியாது. அரசியல் இராணுவ இயக்கத் தலைமைகள் எல்லாமே தவறு விட்டுள்ளன.
ஜநா வரும் அமெரிக்கா வரும் ஒபாமா தருவார் இப்படி எல்லாம் வெளிநாட்டிலுள்ள புலிகள் நாட்டிலுள்ள புலிகளை தவறாக வழிநடாத்தி இவர்களின் இந்த வழிகாட்டல்களைப் புலிகள் ஏற்று நடக்கப்போய் இன்று புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியாமலும் ஒரு திடமான அரசியல்ப் பாதையைத் தெரிவு செய்ய முடியாமலும் குழம்பிப்போய் உள்ளனர். மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும். எப்படி?
இன்று எமக்குள்ள ஒரேஒரு வழி நாம் இந்தியாவை நாடுவது தான். இந்தியா எமது போராட்டத்தின் முக்கிய உந்து சக்தியாகவும் செயலாற்றியாகவும் இருந்தது. இந்த நிலையை மாற்றியது புலிகளின் தவறான அணுகு முறை. இப்போ மீண்டும் தமிழர்கள் இந்திய அரசிடம் போவதே சரியானதும் ஒரே ஒருவழியும்.
”புலிக் கொடி தேசியக் கொடி அல்ல தமிழர்களின் இரத்தக்கறை படிந்த கொடி.” முன்னாள் ரெலோ போராளி
புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஜனநாயக வழிக்குவருவதை தெரிவிப்பதே ஒரே வழி. அதிலிருந்து தான் புலிகள் ஒரு பாதையை தெரிவு செய்யலாம். இன்று புலம்பெயர் நாட்டில் புலிக் கொடியை தேசியக் கொடியாக தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். இந்தக் கொடி இரத்தம் தோய்ந்த கொடி. தமிழர்களையே கொலை செய்த கொடி இதை தமிழர்களின் கொடியாக ஏற்றுக் கொள்ள முடியாது.
வன்னியில் மக்களை கொலை செய்த புலிகள் இனிமேல் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்கமுடியாது. மக்களைப் பாதுகாக்க புலிகள் எதுவுமே செய்ததில்லை. ரெலோவை அழித்தனர். மற்றய அமைப்புக்களை அழித்தனர். வயது குறைந்த குழந்தைகளை போர்க்களத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துப்போயினர். இவர்களுக்கு மாவீரர் பட்டம் சூட்டுவதும் போராட்ட நடவடிக்கைகள் என்றே சித்தரிக்கின்றனர்.
”தமது உயிரை மதிக்காத புலிகள் எப்படி மற்ற மனிதர்களின் உயிரை வாழ்க்கையை மதிப்பார்கள்.” முன்னாள் ரெலோ போராளி
ரெலோ உட்பட எல்லாத் தமிழ் இயக்கங்களும் தவறு செய்தவர்கள். ஆனால் நீண்டகாலமாக தன்னைத்தானே ஏகபோக பிரதிநிதியாக்கி முழுப்போராட்டத்தையும் தொலைத்தவர் பிரபாகரனே.
இளையோர் தமிழ் அமைப்பக்களுக்கு தமிழர் வரலாறு தெரியுமா? புலிகள் ரெலோவை அழித்த வரலாறு தெரியுமா? ஆரம்பத்தில் தமிழ் மாணவர்களை கெடுத்தது இயக்கங்கள். இப்போ வெளிநாட்டில் தமிழ் மாணவர்களை கெடுப்பதும் புலிகள்.
அன்று ரெலோவிற்கு துரோகிப்பட்டம் இன்று வன்னியில் தப்பி உயிர்வாழ ஓடும் மக்களுக்கு துரோகிப்பட்டம் இங்கும் தமிழர்களை தவறாக பயன்படுத்தி சுயலாபம் தேடுகினறனர்.
தமது உயிரை மதிக்காத புலிகள் எப்படி மற்ற மனிதர்களின் உயிரை வாழ்க்கையை மதிப்பார்கள். இவர்கள் எப்படி மக்கள் நல்வாழ்விற்காக போராடுபவர்கள் என்று எதிர்பார்ப்பது. இது ரெலோமீதான கொலையன்றே தெரிந்து விட்டதொன்று.
”கடந்த காலம் என்னைத் துரத்துகின்றது.” முன்னாள் ரெலொ போராளி
நான் சிறுவயதில் இயக்கத்தில் சேர்ந்தேன் இயக்க முடிவகளை எல்லோரையும் போலவே நானும் ஏற்று நடந்தேன். இயக்கம் எடுத்த முடிவகளுக்கு ஏற்ப சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டேன். அந்த சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் பற்றி இப்போது வேதனைப்படுகிறேன். எனது குடும்பத்தைப் பார்க்கும் போது கொல்லப்பட்டவரின் குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டு இருக்கும் என்று நான் பலமுறை சிந்தித்துள்ளேன். எனது குடும்பம் எனது குழந்தைகள் என்ற வாழ்வுக்குள் வந்தபோது கடந்த காலம் என்னைத் துரத்துகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் திசைமாறிப் போய் நாம் கருவிகளாக்கப்பட்டுவிட்டோம்.
Sri Sabrathnam – one of the pdf published by x telo member.