08

08

மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஹெனா நெஸ்டட் இலங்கை வரத் தடை

annan.jpgநியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதை, அரசாங்கம் தடைசெய்துள்ளது.மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை தொடர்பாக பொய்யான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

ஹெனா, சுற்றுலா வீசா அனுமதியுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து வவுனியாவுக்குச் சென்று, உண்மைக்கு புறம்பான தகவல்களை சேகரித்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யரான ஹெனா, தம்மை சட்டத்தரணியென கூறி, இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை ஏமாற்றியுள்ளதாக புலனாய்வு துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், இலங்கை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கிய 45 பக்க அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்பித்துள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. 

புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை குழப்ப சதி: எச்சரிக்கை

indo-lanka.jpgதாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஐ.சி.ஆர்.சிக்கு பாதுகாப்பு வழங்கப்படும். விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிப்பு

lttelogo.jpgசெஞ்சிலுவைச் சர்வதேச குழு தனக்குரிய பணிகளை எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மேற்கொள்வதற்கு  நாம் சகல பாதுகாப்பையும் அளிப்போம்  என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர் என இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள  செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் தலைமையலுவலகத்திற்கு  விடுதலைப் புலிகள் எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என இணையத் தள தகவல் தெரிவித்தன. எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் செயற்பாடுகளுக்கு நாம் பூரண பாதுகாப்பளிப்போம். அதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கிறோம். செஞ்சிலுவைக் குழுவின் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை நாம் வழங்குவோம்  என்று அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல்

india-elc-2009.jpg சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, நான் தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பத்திரிகை சந்திப்பில் எப்போது தமிழகம் வருவீர்கள் என்று கேட்டார்கள். விரைவில் வருவேன் என்று சொன்னேன். வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.

எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழகர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களும் எங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் வாழும் நம் சகோதரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு ஜனநாயக முறையில்தான் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய அமைச்சர்கள், அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி பேச்சு நடத்தி வருகிறது. இலங்கை தமிழர்கள் அமைதியாக முறையில் வாழ மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எங்களது முயற்சியால் தான் அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு தவிர்த்துள்ளது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி; ஒன்பது பேர் காயம்:

gun00.jpgகொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள ஜும்மா மஸ்ஜித் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். ஜும்மா தொழுகையின் பின்னர், அந்த பிரதேசத்திற்கு வந்த முகமூடி தரித்த ஆயுததாரிகளினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்திற்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பின் பாதுகாப்பு உத்தரவாதம் தேவை: ஐ.சி.ஆர்.சி

medical_lorry.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேதச மக்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்புவது மிகவும் கடினமான பிரச்சினையாக உள்ளது. “5000 தொன் உணவை அனுப்பவதற்கு அரசாங்கம் தயாராகவிருந்தாலும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அதனை எடுத்துச் செல்ல ஒத்துழைக்கவில்லை” என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பாகவே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என தனது கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் நிம்மதியும் சுதந்திரமும் கிடைக்கும் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpg“சரியான வாழ்க்கை வழிமுறையானது புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனுகூலமாக அமைவதனாலாகும், நான்கு தீய குணங்களில் இருந்து விடுபட்டு பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் சுதந்திரமும் நிம்மதியும் கிடைக்கும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் தினசெய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் கூறியதாவது, புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறு தல், இறப்பு, முதலானவற்றை நினைவுகூரும் வெசாக் பண்டிகையை இம்முறையும் அரச அனுசரணையில் கெளரவத்துடனும், தூய்மையுடனும், கொண்டாடக் கிடைத்துள்ளதைப் பெரும்பேறாகக் கருதுகிறேன். மேலான பெளத்த போதனைகள் எமக்கு சரியான வாழ்க்கை வழிமுறையைக் காட்டித்தருகின்றன. எமது அரச கொள்கைகளின் பிரகாரமும் அம் மதத்தை பெருமதித்தே செயலாற்றப்படுகின்றன.

இதற்குக் காரணம் சரியான வாழ்க்கை வழிமுறையானது புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனுகூலமாக அமைவதனாலாகும். நான்கு தீய குணங்களில் இருந்து விடுபட்டு பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் சுதந்திரமும் நிம்மதியும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

“ஜயங் வேறங் பசவதி-துக்கங் சேதி பறாஜினோ
உபசன்னோ சுகங் சேதி- ஹித்வா ஜய பறாஜயங்”

“வெற்றியடைபவர், தோல்வியடைவோரின் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்துகிறார். தோல்வியடைபவர் துக்கத்துடன் வாழ்கின்றார். நடுநிலையாக செயற்படும் சாந்த குணமுடையவர் வெற்றி தோல்வியில் இருந்து விடுபட்டு சுகமாக வாழ்வார்” என புனித பெளத்த போதனைகள் குறிப்பிடுகின்றன.

தீவிரவாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு குரோதமில்லாது எம்மை மனிதாபிமான அடிப்படையில் பலப்படுத்தியதும் புனித பெளத்தத்தைக் கடைப்பிடித்துவருவதனாலேயாகும். எம்மை குரோதத்துடன் நோக்கிய எதிரிகளை வெற்றிகொண்டதன் பின்னர் அன்புடன் செயலாற்றுவதற்கு வழிகாட்டியதும் எமது சமய ஒழுக்கநெறிகளாகும்.

தீவிரவாதத்தின் மூலம் இலட்சக்கணக்கான எமது சகோதர மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தானம் வழங்குவதும், நல்ல வார்த்தைகள் மூலம் ஆறுதல் கூறுவதும், சமத்துவமாகக் கவனிப்பதும் இந்த புனித வெசாக் காலத்தில் நன்மை பயக்கக்கூடிய வழிமுறை என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.

புனித பெளத்த போதனைகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே எமது இலட்சியமாக இருக்கவேண்டும். இந்த வெசாக் காலம் அதற்கு வழிவகுக்கும். அதன் பிரகாரம் எமது வீரத்தைப் பயன்படுத்தி தோல்வியடையச் செய்யவேண்டிய எதிரிகளாக இருப்பது, பேராசை, பாகுபாடு, மடமை என்பவையாகும். பெளத்த கொள்கையை மதிக்கும் நம் எல்லோரினதும் எதிரிகள் இவையேயாகும்.

நாம் வெற்றி கொள்ளவேண்டியது அன்பு, கருணை, காருண்ணியம் என்பவற்றையேயாகும். அப்போது தோல்வியும் இல்லை, பொறாமையும், குரோதமும் இல்லை. நாம் அந்த செம்மையான இலட்சியப் பாதையை நோக்கி அணி திரள்வோமாக. உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இவ்வாறு ஜனாதிபதி தனது வெசாக் தினத்தையொட்டிய ஆசிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மன்னார் – பூநகரி வீதி புனரமைப்பு

sri-lankan-road.jpgமன்னார் – பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் 83 கிலோமீற்றர் நீளமான ஏ-32 பிரதான வீதியை மூவாயிரம் மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிரி தெரிவித்தார்.

எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள முதற்கட்ட பணியின்போது 48 கிலோ மீற்றர் நீளமான வீதியே புனரமைக்கப்படவுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்டதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் எஞ்சியுள்ள வீதியை வெகுவிரைவில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டிற்கு இலகுவாக செல்லும் 280 மீற்றர் நீளத்தைக் கொண்ட சங்குப்பிட்டி பாலம் நிர்மாணிக்கும் பயணிகள் இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வட மாகாணத்தில் வெகு விரைவில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏ-32 பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள அதே சமயம், யாழ் – கண்டி- கொழும்பு ஏ-9 பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகளும் 12 கிலோ மீற்றர் நீளமான சிலாவத்துறை- முருங்கன் வீதி, 40 கிலோ மீற்றர் நீளமான புத்தளம் – மன்னார் வீதியின் புனரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், மேலும் இந்தப் பகுதியிலுள்ள வீதிகளும், பாலங்களும் புனரமைப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிறி மேலும் தெரிவித்தார்.

செல்வி ஜெயலலிதாவின் தமிழீழம் தொடர்பான நிலைப்பாட்டிற்கு பிரித்தானியத் தமிழர் வரவேற்பு

british_tamil_forum.jpg இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரித்தானிய தமிழர்களும் இணைந்து வரவேற்கின்றனர். அத்துடன் இது எம்மை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் 60 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட தமிழர்களின் முதலமைச்சராக இரண்டு தடவைகள் இருந்த தழிழ்த் தலைவரின் இந்தக் கூற்று எமது பிரச்சனை தொடர்பாக வெளியிடப்பட்ட இந்தக் கருத்து, மிகமுக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.

தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நீண்ட காலமாக உணர்வுபூர்வமாக ஆதரவளித்து வரும் தமிழகத்தின் தமிழ் தலைவர்களுக்கு எமது நன்றியறிதலை வெளிப்படுத்தும் இதேவேளை, தமிழரின் போராட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ள இந்த தருணத்தில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் வெளியிட்ட இந்த கருத்து எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இந்தநிலையில் சர்வதேச அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்களும் அமைப்புக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியின் இந்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுகின்றது.

முதலாம் கட்ட வழிகாட்டித் தொகுதிகள் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. : ஜெயபாலன் & புன்னியாமீன்

01.jpgவன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரி நிலையங்களினுள்ளே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஏப்ரல் 01ஆம் திகதி புள்ளிவிபரப்படி மேற்படி நலன்புரி நிலையங்களில் 13 பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி சில கல்வி செயற்பாட்டு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதன் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்துள்ளது.

செட்டிக்குளம் ம.வித்தியாலயத்தில் இயங்கும் விசேட கல்வி அலுவலகத்தின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின் கீழ் நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் கல்வி பயிலும் 1057 மாணவர்களுக்கு முதல் கட்டமாக பின்வரும் மாதிரிவினாத்தாள்களும்,  வழிகாட்டிப் புத்தகங்களும் திரு. த. மேகநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Letter_01_Mehanathan_06May09

Letter_02_Mehanathan_06May09

மாதிரி வினாத்தாள் இலக்கம் 01 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 02 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 03 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 04 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 05 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 06 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 07 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 08 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 09 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 10 – 1100 பிரதிகள்

இவ்வினாத்தாள்கள் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு பரீட்சையாக நடத்தப்பட்டு மாணவர்கள் வழிகாட்டப்படுகின்றனர்.

மேலும்,  தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 01 எனும் நூலின் 1100 பிரதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி மாதிரி வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம்,  செட்டிக்குளம் ம.வி, பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம்,  முஸ்லிம் ம.வி, காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி.

தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 20 மாதிரி வினாத்தாள்களையும் (இலக்கம் 11 – 30 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன்,  தரம் 06,07,08,09,10,11 மாணவர்களுக்காக வேண்டி ஒரு தொகுதி செயல் நூல்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாத இறுதியில் வன்னி பிரதேசத்திலிருந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அதிகளவில் மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இந்தநிலையங்களில் தரம் 5 இல் பயிலும் மாணவர்கள் மாத்திரம் 1860 பேர் கடந்த இரண்டு வாரத்துக்குள் இடம் பெயர்ந்துள்ளதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின்  கற்றல் நடவடிக்கைகளில் உதவுவது  குறித்தும்  சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் ஆலோசித்து வருகின்றது.

02.jpg 03.jpg 04.jpg