09

09

புதிய பாதுகாப்பு வலய பிரகடனம்: ஐ.சி.ஆர்.சியினருக்கு அறிவுறுத்தல்; பிரசுரங்களில் மக்களுக்கு விளக்கம்

new-safe-zone.jpgமீள வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். அதேநேரம், பொது மக்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். விமான மூலம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன், ஊடகங்கள் வாயிலாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயத்தை நேற்று முன்தினம் வெள்ளி மாலையிலிருந்து அரசாங்கம் மீள வரையறுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, வெள்ளமுள்ளி வாய்க்கால் – கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் நீளமும், ஒன்றரை கிலோ மீற்றர் அகலமும் கொண்டதாகப் புதிய பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்திற்கு அப்பால் புலிகளை இலக்குவைத்து நடவடிக்கை எடுக்கப்படுமென்பதால், பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் இருக்கக் கூடாதென பிரிகேடியர் தெரிவித்தார். மேற்குறித்த பகுதியிலேயே பொது மக்கள் அதிகம் தங்கியிருப்பதால், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகக் கூறிய பிரிகேடியர்,  இனி பொதுமக்களைப் புலிகளால் வைத்திருக்க முடியாதென்றும் கூறினார்.

இதேவேளை, தற்போது புலிகள் சிக்குண்டுள்ள பகுதிக்குள் படையினர் 800 மீற்றர் தூரம் வரை உட் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சுற்றி சுமார் இரண்டாயிரம் கரும்புலிகள் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எனவே, மிகவும் சூட்சுமமான முறையில் படையினர் முன்னேறி வருவதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

new-safe-zone.jpg

முல்லைக் கடற்பரப்பில் சமர்: புலிகளின் வள்ளங்கள் நிர்மூலம்

boat.jpgமுல்லைத்தீவு, வெள்ளிமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்த வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி வள்ளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்படை வட்டாரங்கள் தகவல் தருகையில்,

இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில், கடற்படையினரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த வந்து கொண்டிருந்த நான்கு வள்ளங்கள் மீது கடற்படையினர் பலத்த தாக்குதலை மேற்கொண்டனர். இதன் காரணமாக இரு வள்ளங்கள் முற்றாக நிர்மூலமானதுடன் மேலும் இரு வள்ளங்களைக் கடற்படையினர் கைப்பற்றினர். 14 கடற்புலிகள் இந்ததச் சம்பவத்தில் கொல்லப்பட்டனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையாமுள்ளி வாய்க்கால் மண் அணை படையினர்வசம்

sl-army.jpgமுல்லைத்தீவு கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று (08.05.2009) புலிகளின் மண்அணை ஒன்று படையினரால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. பலமணிநேர மோதலை அடுத்தே இந்த மண் அணையை படையினர் மீட்டுள்ளனர். இங்கு இடம்பெற்ற தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுலின் போது புலிகளின் 35 சடலங்களும் பெருந்தொகையான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

vavuniyatents.jpgதமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், பத்மநாபா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் செயலாளர் தி. சிறிதரன் ஆகிய மூவரும் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து பேசியசந்தர்ப்பத்தில் அவரிடம் விடுத்த வேண்டுகோள்

05.05.2009

மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
அலரி மாளிகை,
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.

01. நீர்

தந்போதைய காலநிலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே. வேறு பல்வேறு தேவைகளுக்கும் உதவும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இடம் பெயர்ந்த மக்களுக்கு இதுவொரு பாரிய பிரச்சினையாகும். பலர் நீண்ட நாட்களாக குளிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இந் நீர் தட்டுப்பாட்டை நீக்க யுனுசுயு என்ற ஸ்தாபனத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதிய வசதிகள் அவர்களிடம் இருப்பதாக நான் நம்புகின்றேன். 250 மீற்றர் ஆழத்திற்கு குழாய் கிணறை அடிக்கின்ற வாய்ப்பும் ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் அமைக்கக்கூடிய தகுதியும் அவர்களிடம் இருக்கிறது. 5000 கலன்கள் கொள்ளக்கூடிய கொள்கலன்களும் அவர்களிடம் உண்டு.

02. உணவு

அதிகமான முகாம்களில் உணவுப் பிரச்சினை இல்லாத போதும் சில முகாம்களில் சில வேளைகளில் உணவு வழங்கப்படுவதில்லை. முறையான திட்டமின்மையே இதற்குக் காரணமாகும்.

03 முதியோர்களை விடுவித்தல்

60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை விடுவிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இத் தீர்மானத்தை மாற்றி 60 இற்கும் 60 இற்கு அண்மித்துள்ள வயதுடையோரின் மனைவிமாரை அல்லது கணவன்மாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. நோயாளிகள்

பல நோயாளிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால் தம் செலவிலேயே நல்ல வைத்திய சேவையை பெற்றிருக்க முடியும். இதற்குக் காரணம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதுமே ஆகும்

05. வெளிநாட்டில் வைத்தியம் பெறுதல்

வெளிநாட்டில் வைத்தியம் பெற வசதியுடையோர் விரும்பிக் கேட்பின் அதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

06. அரச ஊழியர்கள்

கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் அவரவர் குடும்பத்துடன் விடுவிக்கப்பட்டு அவர்களி;ன் சேவை முகாம்களில் பயன்படுத்தப்பட வேண்டும்.

07. அரசாங்க அதிபர்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தோரை பொறுப்பெடுத்து வவுனியாவில் கச்சேரி அமைத்து செயற்படுவதோடு படிப்படியாக அப் பணிகளை தம் மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கலாம். இம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை கவனிக்க பணிக்கப்பட வேண்டும்.

08. குடும்பத்தினரை மீள ஒன்றிணைத்தல்

பல்வேறு முகாம்களில் சிதறுண்டு இருக்கும் ஓரே குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் பணியில் அனைவரும் ஒரு முகாமுக்கு மாற்றப்பட வேண்டும்.

09. தொலைபேசி இணைப்புக்கள்

தற்போது வழங்கப்படுகின்ற தொலைபேசி இணைப்புக்கள் போதாமையால் மேலும் சில இணைப்புக்கள் ஒவ்வொரு முகாமுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

10. உறவினர்களின் சந்திப்பு

முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஒருவரேனும் வந்து பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

11. கர்ப்பிணி பெண்கள் பற்றியது.

கர்ப்பிணிகளும், குழந்தைகளின் தாய்மார்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மடு தேவாலய முகாமில் அனுமதிக்கப்பட வேண்டும்.

12. ஊனமுற்றோர், அனாதை குழந்தைகள், முதியோர், சித்த சுயாதீனமற்றோர்.

ஓர் விசேட குழு அமைக்கப்பட்டு மேற் கூறப்பட்டவர்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய வகையில் வதி விடங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்.

13. விதவைகள்

விதவைகள் அனேகர் உருவாக்கப்பட்டிருக்கின்றபடியினால் அவர்களை பொறுப்பேற்பதற்கும் புதிய ஆலோசனை வழங்குவதற்கும் மகளிர் நலன்புரி அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

14. பிரேத அறை

முறையான ஒரு பிரேத அறை இன்மையால் நாம் மதிப்பு மரியாதையோடு எமது கலாச்சாரத்துக்கு அமைய அடக்கம் செய்ய முடியாமல் அழுகிய நிலையில் அண்மையில் உள்ள நோயாளிகளுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியதோடு அப் பிரேத அறையிலிருந்து எழும் துர்நாற்றம் சுமார் 200 மீற்றர் விட்ட பிரதேசத்துக்கு பரவுகிறது. பிரேதங்கள் உறவினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையளிக்கப்படும் வரை பாதுகாத்து வைக்கக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்

புதுமாத்தளனில் வாரத்திற்கு 478 மெற்றிக் தொன் உணவு தேவைப்படுகிறது. எம்மால் கூறப்படுகின்ற ஆலோசனைகளை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ  

த.சித்தார்த்தன்
புளொட்         

தி.சிறிதரன்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

பிரித்தானியாவில் 8 ஆவது நாளாக மாணவர்களின் போராட்டம்

uk-stu.jpgபிரித்தானிய அரசாங்கமே தமிழீழ தாயகத்தில் அல்லலுறும் மக்களை காப்பாற்று என கடந்த 33 நாட்களாக மாணவர்களும் மக்களும் நடுவீதியில் நின்று தங்கள் கோரிக்கையை கோசங்களாக எழுப்புவதுடன், 8வது (08.05.09) நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் எங்கள் மக்களுக்காக உயிரையும் விடுவோமென உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

சர்வகட்சிக் குழு கருத்தொருமைப்பாட்டுடன் யோசனையை முன்வைக்கும் சாத்தியம் இல்லை -முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிப்பு

SLMC Gen Sec M T Hasan Aliயுத்தம் முடிவை அண்மித்துக் கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதமற்ற சூழ்நிலை ஏற்பட்டதும் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனை வரைபு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ள நிலையில், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஏகோபித்த கருத்தொருமைப்பாட்டுக்கான சாத்தியம் இல்லை என்பதை அக்குழுவிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருப்பதுடன், அவ்வாறு ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டாலும் அது ஆளும் கட்சியின் நிலைப்பாட்டை அடியொற்றியதாகவே இருக்கும் என்றும் அதனால் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள், அபிலாசைகள் நிறைவேறுமென எதிர்பார்க்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன்அலி, உண்மையில் தீர்வொன்றை முன்வைக்க அரசு விரும்பியிருந்தால் யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அதனை செய்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தற்போது ஆளும்தரப்பிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளைத் தவிர வெளியேயுள்ள கட்சிகளா முஸ்லிம் காங்கிரஸும் ஜனநாயக மக்கள் முன்னணியுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் எவ்வேளையிலும் முஸ்லிம் காங்கிரஸ் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து வெளியேறிவிடும் என்று எச்சரித்திருப்பதாகவும் கூறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இப்போது இல்லை, ஜே.வி.பி. யும் இல்லை. ஏனைய பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கும் குறைவான அதிகாரப் பகிர்வையே வலியுறுத்தி வருகின்றன. சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 13 ஆவது திருத்தத்திற்கும் அதிகமானவற்றை வலியுறுத்துகின்றன. எண்கணிதப்படி பார்த்தால் +13 (13)=0 ஆகும். நடைமுறையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஏனையகட்சிகளை தனது நிலைப்பாட்டுக்கு இழுத்துவிடும் நிலைமையே காணப்படுகிறது. அதனால் சிறுபான்மையினர்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வுகாணும் யோசனை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என்று ஹசன் அலி தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்ட யோசனை 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லுமென அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவினதும் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாகவே இதனை அரசு தெரிவிக்கின்றது. உண்மையில் பெரும்பான்மையினர் 13 ஆவது திருத்தத்துக்கு குறைவானதையே வழங்க விரும்புகின்றனர்.

அரசாங்கம் இது தொடர்பில் நம்பகத்தன்மையுடன் செயற்படவில்லையென்பதை நாம் அவதானிப்போம். இதையடுத்து இந்த குழுவிலிருந்து நாம் எந்நேரத்திலும் வெளியேறுவோம் எனத் தெரிவித்துள்ளோம். இன்றைய அரசு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் அமைக்கப்பட்டதாகும். அக்கட்சி அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்த தமது யோசனையில் அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லையெனத் தெரிவித்துள்ளது. மற்றைய கட்சிகளின் கருத்தினைப்பெற்று இதனைக் கேட்டு பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கும் யோசனையில் அரசு இல்லை. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு 100 க்கு மேற்பட்ட தடவை கூடியுள்ளபோதும் யோசனையை முன்வைக்கவில்லை.

அவ்வாறான யோசனை இருந்தால் யுத்தத்தை நடத்திக்கொண்டே அரசியல் தீர்வினை அரசு முன்வைத்திருக்கும். வெற்றியின் பின்னர் குறைந்தளவிலான உரிமைகளையே முன்வைக்கப் பார்க்கின்றது. இந்த அரசு ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமயவுடன் தலதாமாளிகையில் செய்யப்பட்ட உடன்படிக்கையின் படி சரியான தீர்வினை முன்வைக்கமுடியாது. இந்நிலையில், அரசாங்கம் சரியான தீர்வுத் திட்டத்துக்கு கையை விரிக்கப்போகின்றதெனத் தெரிந்தும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசுக்கு ஆதரவு வழங்கி பலப்படுத்துகின்றன. இதற்கு அவர்கள் பதில் கூற வேண்டியவர்களாகவுள்ளார்கள்.

சிறுபான்மை சமூகத்துக்கு பாதகமான உள்ளூராட்சி திருத்தச் சட்டத்தை தடுப்பதற்கு நாம் நீதிமன்றம் சென்றோம். இவ்வாறு அரசு சிறுபான்மையினருக்கு பாதகமான செயற்பாட்டில் ஈடுபடும்போது அதற்கு ஆதரவளிக்கும் சிறுபான்மை கட்சிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஜேர்மனி, பேர்லினில் ஸ்ரீலங்கா அரசின் இனஅழிப்பிற்கு எதிரான உண்ணாவிரதமும், ஆர்ப்பாட்டமும்

img_.jpgஜேர்மனி, பேர்லினில் உள்ள சகல பொதுஅமைப்புக்களின் ஒத்துழைப்புடன் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளின் தூதரகத்தின் முன்றலில் அடையாள உண்ணாவிரதமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு பேச்சு நடத்த கொழும்பு வருகிறது

european-union.jpg
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்தது. இரு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடல்களின் பொருட்டு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிநாட்டமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமைத்துவம், அடுத்து வரவிருக்கும் தலைமைத்துவம் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கவிருக்கின்றனர்.  இந்த கலந்துரையாடல்களின் போது, இலங்கையின் அரசியல், மனித உரிமைகள், மனிதாபிமான நிலைவரங்கள், வர்த்தக மற்றும் அபிவிருத்தி உதவிகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் பேசப்படவிருப்பதாக வெளிநாட்டமைச்சு வட்டாரங்கள் கூறின.

அத்துடன், இந்தக் கலந்துரையாடலானது ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய நாடுகளுடனும் வழமையாக நடத்துவது போன்றதொன்றானதும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இவ்வாறானதொரு கலந்துரையாடல் கடந்த வருடமும் நடைபெற்றதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

டெஸ் பிறவுண் இந்தியாவுக்கு அவசர விஜயம்

browne_.jpgபிரிட்டனின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டெஸ் பிறவுண் அவசரமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள 50 ஆயிரம் மக்களின் பாதுகாப்பே மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம். தற்போது இலங்கையில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தைக் கண்காணிப்பது அவசியம். அதேவேளை, இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் மக்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும். மேலதிக வளங்கள் தேவை, சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கு விசா வழங்கப்படவேண்டும் என்று பேச்சுக்களின் பின்னர் அவர் கருத்துத் தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலை கண்டித்து ஆப்கானிஸ்தான் வீதிகளில் பாரிய ஆர்ப்பாட்டம்

w_news.jpgஅமெரிக்க இராணுவத்தை வெளியேறுமாறு ஆப்கானிஸ்தானில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடந்தது. ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரான பராவில் சென்ற வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் பிரவேசித்த எட்டு வருடங்களில் நடந்த மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். அமெரிக்கப் படைகள் நடாத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்காவுக்குச் சாவு, ஆக்கிரமிப்புப் படையே வெளியேறு என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமாகக் கத்தினர். அரச கட்டடங்களின் ஜன்னல்கள் கதவுகளை உடைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அலுவலகங்கள் சிலவற்றுக்கும் தீவைத்தனர். இவர்களை அடக்க பொலிஸார் முயன்ற போது பொலிஸார் மீது கற்கள் போத்தல்கள் பொல்லுகளை வீசினர். நிலைமை மோசமடைந்த போது பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார். மூன்று பேர் சன நெரிசலில் சிக்கிக் காயமடைந்தனர். வைத்தியசாலையில் மூன்றுபேர் சிகிச்சை பெறவந்ததாக டாக்டர்கள் கூறினர்.

நேற்று முன்தினம், அமெரிக்க இராணுவம் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் யார் என்பதை சி.ஐ.ஏ.உம் ஆப்கானிஸ்தான் இராணுவமும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறினர்.

147 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ள போதும் அதை ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார். 20 சிறுவர்களின் பிரேதங்களை தாம் கண்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் கூறினர். பொதுமக்களின் உச்சக் கட்டப் பாதுகாப்பை உறுதிசெய்ய அமெரிக்கப் படைகள் உத்தரவாதம் தந்துள்ளதாக ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி சொன்னார்.

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட்கேட்ஸ் இது பற்றிக் கூறுகையில் தலிபான்கள் வீசிய கைக்குண்டுகளில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படைகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்று தலிபான்கள் பொதுமக்களைக் கொல்வதாகவும் ரொபேர்ட் கேட்ஸ் சொன்னார். என்றுமில்லாதவாறு ஆப்கானிஸ்தானியர்கள் ஆவேசத்துடனும் ஆத்திரத்துடனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பலியானமைக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும்.

ஆக்கிரமிப்புப் படை ஆப்கானைவிட்டு வெளியேர வேண்டும். அதுவரை ஆர்ப்பாட்டங்கள் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் பலியாவது ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஹமித் அல் கர்ஸாயிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென அவதானிகள் கூறுகின்றனர்.