10

10

சோனியாவை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: 220 பேர் கைது

06-sonia.jpgதேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன், தமிழர் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையின் ஓரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். சென்னையில் இன்று நடைபெற்ற கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களில் 220 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ராஜீவ் – ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் – சோனியா

06-sonia.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு, ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின்படி தீர்வு காண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

தீவுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரப் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்றார், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் கருணாநிதியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சோனியா காந்தியின் பேச்சு..

இந்திரா காந்தி காலம் முதலே தமிழகமும், தமிழக மக்களும் எங்கள் குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் அன்பும், மதி்ப்பும் வைத்திருக்கிறீர்கள்.

இலங்கையில் இன்று அப்பாவித் தமிழர்கள் படும் வேதனையும், துயரமும் கண்டு நான் மிகுந்த வேதனையை அடைந்துள்ளேன்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பேரவதிக்குள்ளாகியுள்ளனர். இது எனக்கு வேதனையைத் தருகிறது. நான் கவலை அடைந்துள்ளேன்.

இலங்கையில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படுவது குறித்து இந்தியா உறுதிபட செயல்பட்டு வருவதாக ஏற்கனவே பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்நாட்டு சட்டத்திற்குட்பட்டு, சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ, அமைதியுடன் வாழ, கெளரவத்துடன் வாழ ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் தந்தது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி நிதியைத் தந்ததும் எங்களது அரசுதான். சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வ்ததும் எங்களது அரசுதான்.

என்றார் சோனியா காந்தி.

சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் வடக்கே கடும் தாக்குதல்: 378 பேர் பலி, 1122 பேர் காயம்

vanni-manitharkal.jpg இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் சனிக்கிழமை இரவும், இன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் வரை இடம் பெற்ற கடும் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதலில் 378 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் அரச மருத்துவர் பி.பி.சி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார் என பி.பி.சி இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இந்தத் தாக்குதல்களில் 1122 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கி வரும் தற்காலிக மருத்துவமனைக்கு வந்துள்ள 378 உடல்களில், 106 உடல்கள் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுடையது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மருத்துவமனைக்கு வந்தவர்கள் மேலும் பல சடலங்கள் வீதிகளில் இருப்பதாக தம்மிடம் கூறியதாகவும் அந்த அரச மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அரச மருத்துவர் கூறுகிறார்.

அப்பகுதியில் ஷெல் தாக்குதல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அரசின் இராணுவ விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது விடுதலைப் புலிகள் ஒரு பிரச்சாரமே என்றும் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் தங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த விதமான அழுத்தங்களையும் சந்திக்கவில்லை என்று அந்த அரச மருத்துவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

போர் நடக்கும் பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால் தகவல்களை சுயாதீனமான வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை என பி.பி.சி இணையத்தளம் தெரிவிக்கின்றது.

வெளிநாட்டு செய்தியாளர்கள் 3 பேர் இன்று வெளியேற்றப்பட்டார்

channel-4news.jpgஇலங்கை அரசிற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட வெளிநாட்டு செய்தியாளர்கள் 3 பேர் இன்று (10.05.2009) காலை 7.30 மணியளவில் அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானியாவின் சுயாதீன தொலைக்காட்சியான சனல் – 4 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிக்பற்றன் வோல்ஸ் என்பவர் உட்பட 3 பேர் அடங்குகின்றனர். இவர்கள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிக்கப்பூர் ஊடாக பிரிததானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் வைத்து நேற்று பிரித்தானிய சுயாதீன தொலைக்காட்சியின் செய்தி தயாரிப்பாளரும், புகைப்படக்கலைஞரும், இவருடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி இவர்கள் வெளியிட்ட இலங்கை தொடர்பான தவறான செய்தியொன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம்; ஐ.நா.வில் “ஆர்2பி’ குறித்து தற்போது பேச்சு – பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வாரா பான் கீ மூன்?

UN_Logoவட இலங்கையில் குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் விடுத்த அழைப்பு குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தற்போதும் கவனமாக பரிசீலனை செய்து கொண்டிருக்கும் அதே சமயம் “பாதுகாப்பதற்கான பொறுப்பு’ ( Responsibility to Protect (R2P)) தொடர்பான பேச்சு ஐ.நா. மட்டத்தில் இடம்பெறுவதாக அங்குள்ள இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை வரவேற்பு நிகழ்வொன்றில் பான் கீ மூனும் “பாதுகாப்பதற்கான பொறுப்பு’ (ஆர்2பி) விடயத்திற்கான பான் கீ மூனின் விசேட ஆலோசகர் எட்லக்கும் கலந்து கொண்டனர். இந்த “பாதுப்பதற்கான பொறுப்பு’ என்ற கொள்கையை எவ்விதம் இலங்கை விவகாரம் தொடர்பாக பிரயோகிக்க முடியும்? என்று லக்கிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. “இருதரப்புகளுக்கும்’ என்று லக் பதிலளித்திருக்கிறார்.

கென்யாவில் கொபி அனான் (முன்னாள் செயலாளர் நாயகம்) மேற்கொண்ட மத்தியஸ்த நடவடிக்கையின் போது ஆர்2பி ஆனது உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேசமயம் ஐ.நா. பொதுச் சபைத் தலைவருக்கு “ஆர்2பி’ விடயத்திற்கான ஆலோசகராக இந்திய முன்னாள் தூதுவர் நிரூபம் சென்னின் நியமனம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் என்று இன்னர்சிற்றி பிரஸ் லக்கிடம் கேள்வி எழுப்பியது. சென்னை இராஜதந்திர ரீதியாக பாராட்டியுள்ள அதேசமயம், 2005 இல் ஆர்2பி ஆவணம் தொடர்பாக மேலேழுந்து வந்த கடைசி நாடு இந்தியா என்று லக் கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (மே 7) “ஆர்2பி’ தொடர்பாக நிரூபம் சென்னிடம் அவரின் கருத்துக்களை இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. விசேடமாக இலங்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கை தொடர்பாக பதிலளிக்க மறுத்த அதேசமயம் 2005 இல் ஏற்பட்ட கருத்தொருமைப்பாட்டில் கடைசியாக இந்தியா இணைந்து கொண்டதென்பதை நிராகரித்தார். முதலிலேயே இந்தியா இதில் இணைந்து கொண்டதாக அவர் வலியுறுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். “ஆர்2பி’ ஆனது ஐ.நா.வின் சித்தாத்தமாகவே இருக்கவேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்றும் சென் கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பினர்கள் வீட்டோ செய்தால் அதனை இரத்து செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஐ.நா.வின் கொள்கையே இந்த ஆர்2பி என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். எந்தவொரு பாரிய சக்தியினதும் தந்திரோபாயமான நிராகரிக்க முடியாத விடயங்களை இல்லாதொழிக்கவே இது உபயோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிரான விடயம் என்னவென்றால் சீனாவும் கணிசமான அளவுக்கு ரஷ்யாவும் இலங்கை விவகாரம் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படுவதற்கு எதிராக “வீட்டோ’ அச்சுறுத்தல்களை விடுத்துள்ளன. இலங்கை விடயத்தை ஐ.நா.வின் அடித்தளத்தில் ஆராய்வதற்கே அவை மட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன.

அதேசமயம் சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் டொலர்கள் உதவி கோரி இலங்கை விண்ணப்பித்திருப்பது பற்றியும் இந்த விடயத்தில் இரத்தப்பெருக்கு மற்றும் வடக்கிலுள்ள முகாம்கள் தொடர்பான விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமா என்று நிரூபம் சென்னிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. மனிதாபிமான விளைவுகளின் தாக்கத்தை அகற்றும் விடயத்திலான சரியான பாதையில் செல்லும் போது சர்வதேச நாணய நிதியம் எதனையும் குறைப்பதில்லையெனவும் நிபந்தனை விதித்து நிராகரிப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், தன்னிச்சையாக கடன் தொகையை ஒதுக்கீடு செய்தாலோ சுயாதீனமாக ஆட்களை தடுத்து வைத்தாலோ அதற்கு கடனானது பயன்படுத்தப்பட்டால் அதனை நாணய நிதியம் செய்யாது என்று சென் அழுத்திக் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் (மே 8) இலங்கை அரசு பான் கீ மூனுக்கு விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பாக அவரின் சிரேஷ்ட ஆலோசகரிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. “செயலாளர் நாயகம் பயணம் மேற்கொள்வாரென நான் நினைக்கவில்லை’ என்று ஆலோசகர் பதிலளித்தார். அரசாங்கம் அதனை இப்போது பயன்படுத்த முடியும். இதற்குப் பதிலாக ஐ.நா. சாசன விதி 99 ஐ பான் கீ மூன் பயன்படுத்த வேண்டும் என்ற சிபார்சை அவர் முன்வைத்தார். அதாவது “ஆர்2பி’யின் பெயரால் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையை உள்ளடக்கவேண்டுமென்று அவர் கூறியுள்ளார். செயலாளர் நாயகம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஆவணவரைவு இடமளித்திருப்பதாக பானின் ஆலோசகர் தெரிவித்திருக்கிறார். ஒரு மணித்தியாலம் கழித்து இது தொடர்பாக பான் கீ மூனின் பிரதி பேச்சாளரிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. ஆனால் பான் கீ மூன் மே 5 ஆம் திகதி கூறியிருந்ததை விட மேலதிகமாக கூறுவதற்கு தன்னிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் பான் கீ மூனின் விஜயங்கள் தொடர்பாக வெள்ளிக்கிழமை பிரதி பேச்சாளர் அறிவித்தார். அதில் இலங்கை விஜயம் உள்ளடக்கப்படவில்லை. பனாமா, பஹ்ரெய்ன் ஆகிய இடங்களுக்கே அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த “முன்னுரிமைகள்’ பலருக்கு வித்தியாசமாக தென்படுகிறது என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க “ஆர்2பி’ தொடர்பாக அதிக அளவுக்கு வலியுறுத்துபவரான பிரேஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மே 11 இல் (நாளை) பாதுகாப்பு சபை அமர்வுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரா என்று ஐ.நா.விலுள்ள பிரெஞ்சு தூதுவர் ஜேன் மொரீஸ் ரைபேர்ட்டிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. அச்சமயம் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லி பான்ட்டும் நியூயோர்க்கில் இருப்பார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு தொடர்பான கூட்டத்துடன் பிரிட்டனுடன் நாம் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். சரியான வடிவம் கொடுப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ரைபோட் கூறியுள்ளார்.

சோனியாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: நெடுமாறன்- பாரதிராஜா

06-sonia.jpgசென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை : “சோனியாகாந்தி கடந்த புதன்கிழமை தமிழகம் வருவதாக இருந்தது. அதை ரத்து செய்தார். அதனால் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டமும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் ஞாயிற்றுக்கிழமையன்று சோனியா சென்னையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஈழத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளைச் சற்றும் மதிக்காத அவர் தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் தமிழகம் வருகிறார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடவேண்டும். அனைவரும் கறுப்புச் சின்னம் குத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகே கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நானும் பாரதிராஜாவும் பங்கேற்கிறோம்’ எனக் கூறியுள்ளார் பழ.நெடுமாறன்.

வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் 200 விடுதலைப்புலிகள் சரண்

saran.jpgமோதல் இடம்பெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களிலிருந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் 200 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தோர் மறுவாழ்வுக்கு உதவ நிதிவளம் இல்லை என்கின்றன உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்

ngo.bmp
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் மறுவாழ்வுக்கு உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.  நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு உதவி வழங்கக்கூடிய நிதிவளம் தங்களிடம் இல்லை என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று  தகவல் வெளியிட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கான மறுவாழ்வுத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்தரையாடினார்.

ஒவ்வொரு நிறுவனமும் தம்மாலான உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். என்றும்  நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களிற்கு உதவக்கூடிய வகையில்  நிதிவளம் தங்களிடம் இல்லை என்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் சிறிய நிதிகளைக் கொண்டு தாம் சிறு சிறு திட்டங்களை நடை முறைப்படுத்தி வருவதாகவும் உள்ளூர் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர். உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் போதிய நிதி வளங்களுடன் செயற்படக் கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார் என்று கொழும்பு ஊடகம் தனது செய்தியில் விவரித்துள்ளது.

இலங்கைக்கு ஐ.நா.வின் விசேட தூதுவராக கிளின்டன் அல்லது அனானை நியமிக்குமாறு கோரிக்கை

w_news.jpgஇலங்கைக்கு ஐ.நா. தூதுவராக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனை அல்லது முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானை நியமிக்குமாறு அமெரிக்கத் தமிழர்கள் அமைப்பானது ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

“ஒபாமாவுக்கான தமிழர்கள்’ என்ற அமெரிக்காவிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு இக்கோரிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் விடுத்திருக்கிறது.

நிலைமையை தெளிவாக ஆராய்ந்து தீர்வு யோசனையை முன்வைக்கக்கூடியவரை விசேட தூதுவராக நியமிக்குமாறு செயலாளர் நாயகத்துக்கு ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவித்தன.

நளினியை பிரியங்கா சந்தித்த பிறகே இலங்கையில் போர் தீவிரமடைந்தது – ஜெயலலிதா

j-j-j.jpgவேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்துள்ளது. எனவே சிறையில் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நேற்று மாலை பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,

ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்தன் மர்மம் என்ன?. இந்த சந்திப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது?. இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?. பிரியங்கா-நளினி சந்திப்பிற்கு பிறகு தான் இலங்கை தமிழர்கள் மீதான அந்த நாட்டின் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. எனவே, பிரியங்கா-நளினி சந்திப்பின் போது நடந்தவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும். இதை முதல்வர் கருணாநிதிதான் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர் பிரச்சினையை முதல்வர் கருணாநிதி சரியாக கையாளவில்லை. தேர்தலை மனதில் கொண்டுதான் அவர் செயல்படுகிறார். திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்றால் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.