12

12

பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்கமுடியாது – அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவிப்பு

usa-flag.jpgஇலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உடனடியாக பொதுமக்களின் இழப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் இயன்கெல்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பொதுமக்களின் இழப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இந்த நிலைமை குறித்து அமெரிக்கா கூர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றது. கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

புலிகள் ஆயுதங்களை களைந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான ஒழுங்குகளை செய்ய வேண்டும். யுத்த சூனிய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதி அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பான்கீ மூன்

ban_ki_moon_.jpgகடந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் தொடரும் மோதல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கைவிடுத்துள்ளது.
 
 “மேலும் மோசமான இரத்தக்களரி ஏற்படாதவாறு தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயவேண்டும்” என ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் அவசரவேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.

அதேநேரம், விடுதலைப் புலிகளும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இணங்கவேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

“கடந்த வார இறுதியில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்” என பான்கீ மூனின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகமும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

netherland-flag.jpgஇலங் கைத் தமிழர்களினால் நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இன்று நண்பகல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழர் போராட்டம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல்கள்

_michaelmartin.jpgதமிழர் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற சதுக்கத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக, நாடாளுமன்றத்தின் மக்கள் அவையின் சபாநாயகர் மைக்கேல் மார்ட்டின் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இவர்களின் இந்த நடவடிக்கைக்கள் மற்ற நியாயமான ஜனநாயக ரீதியிலான போராட்டக்காரர்களின் உரிமைகளை பறிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த போராட்டக்காரர்கள் காரணமாக தமது செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த போராட்டக்காரர்களுக்கு 50 பேர் வரை குழுமலாம் என்று அனுமதி அளித்தால் 50 பேர் வரை தான் குழும வேண்டும் என்று கண்டிப்பு தெரிவித்த மார்டின் அவர்கள், அதற்கு பதிலாக நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடாரங்கள் அமைத்துக் கொள்வது, உணவு கொண்டுவருது என்பதெல்லாம் போராட்டத்திற்கான அனுமதிகளாக ஆகாது என்றும் கண்டித்தார். நாடாளுமன்ற சதுக்கத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், தலைநகரின் மையப்பகுதியை செயலிழக்கச் செய்யும் இவர்களின் இந்த செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று குற்றம் சாட்டிய எதிர்கட்சியைச் சேர்ந்த நிழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெரால்ட் ஹோவர்த் அவர்கள் லண்டன் மாநகர காவல்துறையின் ஆணையர் என்ன செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார் என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா சொல்வது போல தனி ஈழத்தை எந்த அரசும் அமைக்காது – சோ ராமசாமி

tamilnadupolitics.jpgஅதிமுக ஆதரவுடன் மத்தியில் அமையும் ஆட்சியில் தனி ஈழம் அமைக்கப்படும் என ஜெயலலிதா சொல்வது தவறு. காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலும் சரி தனி ஈழம் அமைய எந்த இந்திய அரசும் ஆதரவு தராது, அமைக்கவும் செய்யாது என்று கூறியுள்ளார் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு சோ அளித்துள்ள பேட்டி…

வருகிற தேர்தலில் மக்கள் எந்தக் குறிப்பிட்ட கூட்டணிக்கும் தனித்து வாக்களிக்க மாட்டார்கள். யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது. இருப்பினும் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என நம்புகிறேன். கேரளாவைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸுக்கு ஆதரவான நிலை இல்லை. மாறாக, பாஜகவுக்கு குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர் என பல மாநிலங்களில் சாதக நிலை காணப்படுகிறது. எனவே பாஜகதான் தனிபபெரும் கட்சியாக உருவெடுக்கும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் கூட்டணிக் கட்சிகளில் திமுகவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் மட்டுமே சற்று ஆரோக்கியமாக உள்ளன. அதிலும் கூட திமுக இந்த முறை மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதேசமயம், பாஜகவைப் பொறுத்தவரை அதன் தோழமைக் கட்சிகளான அகாலிதளமும், ஐக்கிய ஜனதாதளமும் பெரும் வெற்றியைப் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சியும், யாருடனும் கூட்டணி வைக்கும் நிலையைத்தான் நாம் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் பார்த்து வருகிறோம். அதை போலத்தான் இந்த முறையும் நடக்கும். ஒவ்வொரு கட்சியும் தனக்கென சில எம்.பிக்களை வைத்துக் கொண்டு பேரம் பேச ஆரம்பிக்கும். ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு போன்றோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். நவீன் பட்நாயக் கூட , சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு பாஜகவை ஆதரிக்கலாம்.

பாஜகவுக்கு 170 சீட்கள் வரை கிடைத்தால் அது மதச்சார்பற்ற கட்சியாக உருவெடுக்கும். அதாவது பல மதச்சார்பற்ற கட்சிகள் அதற்கு ஆதரவு தந்து பாஜக ஆட்சியை அமைக்கும். 150 சீட்களுக்கும் குறைவாக கிடைத்தால் அது தொடர்ந்து மதவாத கட்சியாகவே பார்க்கப்படும். அதாவது அது ஆட்சி அமைப்பது இயலாத காரியமாகி விடும். இருப்பினும் பாஜக மதச்சார்பற்ற கட்சியாக மாறக் கூடும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். மதச்சார்பற்ற எண்ணிக்கை, மதவாத எணிக்கைக்கு நடுவிலான எண்ணிக்கை கொண்ட எம்.பிக்களை அது பெறலாம்.

மூன்றாவது அணியில் யார் இருக்கிறார். ஜெயலலிதா பெரிய வெற்றியைப் பெறலாம். நாயுடு பெரிய வெற்றியைப் பெறலாம், ஆனால் தேவெ கெளடாவிடம் எதிர்பார்க்க முடியாது. கம்யூனிஸ்டுகள் இருக்கிற இடங்களையும் இந்த முறை இழக்கப் போகிறார்கள். வேறு யார் இருக்கிறார்கள் அங்கே..தேர்தலுக்குப் பின்னர் மாயாவதி பிரதமராகக் கூடிய வாய்ப்புகள் அறவே இல்லை. அவரை யாருமே ஆதரிக்க மாட்டார்கள். தனது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் போக்கு அவரிடம் கிடையாது. எனவே அவர் பிரதமராக வருவார் என நான் நினைக்கவில்லை.

ராகுல் காந்தி இன்னும் வாக்குகளை கவரும் வகையிலான தலைவராக உருவெடுக்கவில்லை. இருப்பினும் புத்திசாலியான நபராக அவர் உருவெடுத்து வருகிறார். பேச்சுக்கும், செயலுக்கும் இடையே சம அளவிலான நிலையை அவர் வைத்துக் கொள்கிறார். கட்சிக்குள் அவர் முக்கியமான தலைவராக உருவெடுத்து வருகிறார். இன்னும் தீவிர அரசியலுக்கு அவர் பக்குவப்படவில்லை. அதற்கான மன நிலையில் அவரும் இல்லை. அரசியலில் வெற்றி பெற லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். லட்சியம் இல்லாமல் யாரையும் நாம் கவர முடியாது. வருண் காந்தியுடன் ஒப்பிடுகையில், ராகுல் காந்தி முதிர்ச்சியானவராக, பக்குவப்பட்டவராக இருக்கிறார். அதில் சந்தேகமே இல்லை. வருண் காந்தி எப்படி என்றால் மீடியாக்களைக் கவரும் வகையில் பரபரப்பாக பேசவே விரும்புகிறார். இதனால் தீவிரமான கருத்துக்களைப் பேசி வருகிறார். அது சரி வராது. ஆனால் ராகுல் காந்தி அப்படிப் பேசுவதில்லை, நடந்து கொள்வதும் இல்லை.

வருண் காந்தியைப் போல பேசினால் நாளிதழ்களில் நம்மைப் பற்றி நியூஸ் போடுவார்கள் அவ்வளவுதான். ஆனால் மக்களிடம் அபிமானம் கிடைக்காது. ராகுல் காந்தியின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, அவர் கவனிப்புக்குரியவராக இருக்கிறார். கட்சியின் தலைமைப் பீடம் நோக்கி அவர் நிதானமாக, மெதுவாக அடியெடுத்து வைத்து வருகிறார். தனக்கான நேரம் வரட்டும் என அவர் பொறுமையாக காத்திருக்கிறார். இன்னொரு விஷயம், காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தினர் வசம்தான் பல காலமாக இருந்து வருகிறது. காங்கிரஸாரும் கூட அதைத்தான் விரும்புகின்றனர். எனவே அந்த குடும்பத்தைச் சேர்ந்த யார் நினைத்தாலும், எந்த நேரத்திலும் தலைவர் பதவியை அடைய முடியும். பிரதமர் பதவியையும் கூட அடைய முடியும்.

இருப்பினும் கூட அந்தப் பதவிக்கு வருகிறபோது அதை அனைவரும் ஏற்கும்படியான தகுதியை வைத்துக் கொள்வது முக்கியம். அந்தத் தகுதியை தற்போது ராகுல் காந்தி வளர்த்துக் கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக நல்ல விஷயம்தான்.தேர்தலுக்குப் பின்னர் மோடியை தேசிய அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால் அது பாஜகவின் கூட்டணிக் கட்சிகளின் அபிலாஷைகளைப் பொறுத்தது. சிலர் சொல்லலாம் மோடி இருக்கட்டும் என்று. சிலர் விரும்பாமல் போகலாம். இருப்பினும் மத்திய அரசில் மோடிக்கும் ஏதாவது பங்கு கொடுக்க பாஜக முயலலாம்.

எதிர்காலத்தில் மோடி முக்கியப் பங்கு வகிப்பவராக உருவெடுப்பார் என நான் நினைக்கிறேன். சில காலங்களுக்கு முன்பு வரை பாஜக தீண்டத்தகாத கட்சியாக இருந்தது. பின்னர் ஜார்ஜ் பெர்னாண்ட்ஸ், கருணாநிதி போன்றோரெல்லாம் வந்து சேர்ந்து கொண்டனர். பாஜகவுடன் நெருங்கி உறவாடினர். அதேபோல மோடி விவகாரத்திலும் நிலைமை மாறலாம். குஜராத்துடன் மோடி நின்று விட மாட்டார். தேசிய தலைவராக அவர் நிச்சயம் உருவெடுப்பார்.

தமிழக தேர்தலில் பெரும் வெற்றியைப் பெறப் போவது யார் என்றால் அது அதிமுகவாக இருக்கலாம். அதாவது, விஜயகாந்த் வாக்குகளை மட்டுமே பிரிக்கிறார், எனவே அவருக்கு ஓட்டுப் போட வேண்டாம் என மக்கள் நினைத்தால் அப்படி நடக்கலாம். விஜயகாந்த்தை மக்கள் இன்னும் பெரிய சக்தியாக கருதவில்லை. சட்டசபையில் அவரது கட்சி வாங்கிய ஓட்டுக்களைத் தாண்டி இந்த முறை அவருக்கு வாக்குகள் கிடைக்காவிட்டால் நிச்சயம் அதிமுகதான் பெரும் வெற்றி பெறும். விஜயகாந்த்துக்கு இப்போது வரும் வாக்குகள் எல்லாமே அரசுக்கு எதிரான கருத்துடையவர்களின் வாக்குகள்தான். அரசுக்கு சாதகமான வாக்குகள் திமுகவுக்குப் போகும். தற்போது விஜயகாந்த் பிரிப்பது திமுகவுக்கு எதிரான வாக்குகளைத்தான். அவர் இல்லாவிட்டால், அரசுக்கு எதிரான வாக்குகள் அப்படியே அதிமுகவுக்குத்தான் போகும்.

நாயுடுவும், ஜெயலலிதாவும் காங்கிரஸுக்கு சாதகமாக போவார்களா என்று கேட்டால், ஜெயலலிதா போகலாம். ஆனால் நாயுடு போக மாடடார். அவரது அரசியலே காங்கிரஸை எதிர்த்துதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே மத்தியில் காங்கிரஸுக்கு அவர் ஆதரவு தந்தால் அவரது அரசியலே அடிபட்டுப் போய் விடும். அதேசமயம், திமுக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று காங்கிரஸ் உறுதியளித்தால் உடனே காங்கிரஸுக்கு ஆதரவு தர தயாராகி விடுவார் ஜெயலலிதா.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் தேர்தல் பிரச்சினையாக இருக்காது. மக்கள் அப்படி நினைக்கவில்லை. ஜெயா டிவியில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்புகளில் கூட அதிமுகவுக்கு ஏன் வாக்களிக்கிறோம் என்பதற்கு மக்கள் கூறிய காரணங்களில் ஒரு காரணம் கூட இலங்கைப் பிரச்சினைக்காக என்று சொல்லவில்லை. அதேபோல ஜெயலலிதா சொல்வது போல இந்தியா தனி ஈழத்தை அமைத்துக் கொடுக்காது. எந்த அரசும் அது போல செய்யாது. காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலம் சரி, யாரும் அதை செய்ய மாட்டார்கள். இதுதொடர்பான ஜெயலலிதாவின் கருத்து ஏற்புக்குரியதல்ல.பின்னர் பாகிஸ்தான் நம்மிடம் வந்து, காஷ்மீரை விடுவித்து விடுங்கள் என்று கேட்கலாம். அல்லது இந்து காஷ்மீர், முஸ்லீம் காஷ்மீர் என பிரித்து விடுங்கள் என்று கேட்கலாம் என்றார் சோ.

இடம்பெயர்ந்த மக்களின் பதிவுகள் நடைபெறவுள்ளன.

Wanni_War_IDPsவடக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிறப்பு, இறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக பிறப்பு இறப்பு பதிவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது சம்மந்தமாக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் இ. எம். குணசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்று (11.05.2009) இரவு 7 மணியளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கொக்குவில் மேற்கு கேணியடியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தங்கராஜா ரதீபன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் இவர்மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலம் பொலிஸாரினால் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

vanni-0001.jpgவடகிழக்கு பகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் சிக்கியுள்ள மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கவும், அங்கிருக்கும் காயமடைந்த மற்றும் நோய்வாய் பட்டவர்களை வெறியேற்ற முடியாத நிலையும் உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

தற்போது அங்கிருக்கும் களநிலைமைகள் இதற்கு ஏதுவாக இல்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கிறது. அங்கு மனித நேயப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக ஒரு கப்பல் வடகிழக்கு கடற்கரை பகுதியில் காத்திருப்பதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மீதான தமது இறுதி தாக்குதலை தொடங்கியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையின் வடக்கே மருத்துவமனை மீது தாக்குதல்:45 பேர் பலி

vanni0002.jpgஇலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது இலங்கையின் அரச படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளும் அந்த மருத்துவமனை தகவல்களும் தெரிவிக்கின்றன  என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவரும் தற்காலிக மருத்துவமனை மீது இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணி வாக்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெற்ற தாக்குதலில் காயமடைந்து தங்கியிருந்தவர்களில் சிலரும் பலியாகியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இலங்கை அரசின் அதிகார்கள் கூறியுள்ளனர். இலங்கை இராணுவம் அப்பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறது என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

ரி.எம்.வி.பி அலுவலகத்தில் மீட்கப்பட்ட 4 சிறார்களும் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில்

child.jpgமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரையம்பதி மற்றும் கல்லடி காரியாலயங்களில் பொலிஸார் கண்டுபிடித்த 4 சிறுவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் அம்பேபுஸ்ஸ சிறுவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமது அலுவலகத்தில் சிறுவர்களை வைத்திருந்தார் என்ற குற்றத்தின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைதான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த 3 பேர் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்தார்.