இலங்கையின் வடக்கே போர் நடக்கும் பகுதியில் இருக்கும் தற்காலிக மருத்துவமனையின் மீது நடந்த எறிகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது
இது குறித்து தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையின் மருத்துவர் ஷண்முகராஜா, இன்று மருத்துவமனைமீது இரண்டு எறிகணைத் தாக்குதல்கள் நடந்ததாகவும் இத்தாக்குதலில் 52 பேர் உயிரழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
இத்தாக்குதலில் மருத்துவமனைப் பணியாளர் ஒருவரும் வேறு ஒரு தொண்டரும் உயிரழந்ததாக அவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு பெரும் சிரமங்கள் இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு உதவக்கூட இப்போது ஆட்பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் சுமார் 75 இறந்த உடல்கள் இருப்பதாகவும், இந்த உடல்களை அடக்கம் செய்யக்கூட முடியவில்லை என்றும் தற்போது இந்த வளாகத்திலேயே அடக்கம் செய்ய முடியுமா என்று தாங்கள் பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரச படைகள் ஷெல் தாக்குதல் நடத்தவில்லை என்கிறார் பிரிகேடியர் உதய நானயக்கார
பிரிகேடியர் உதய நானயக்கார அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து பிபிசி சார்பாக கேட்டபோது, மோதலற்றப் பிரதேசங்களையும் சேர்த்து புலிகளிடம் 4.5 கிலோமீட்டர் பகுதிதான் எஞ்சியுள்ளது. எனவே இந்தப் பகுதியில் ஷெல் தாக்குதல்களை நடத்த தேவையில்லை. இராணுவத்தினர் சிறு குழுக்களாக சிறு ஆயுதங்களைக் கொண்டு முன்னேறி வருகின்றனர் என்றார்.