15

15

“எமது கடைசி வேண்டுகோள்…..” : புலிகள்

Eelamவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன், வன்னிப்பகுதியில் பாதுகாப்பு வலையம் மீது இன்று இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்திவருவது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும், ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ மீது படையினர் இன்று வெள்ளிக்கிழமை  ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது.  இதனால் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த மக்களின் உடல்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை.

மருத்துவமனைகள் இல்லாத நிலையிலும் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர்.

ஆனால் எந்த வசதியும் இல்லாத நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இங்குள்ள ஒரு லட்சத்து 65 பேரை காப்பாற்ற வேண்டுமானால் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு வலையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!

விடுதலைப் புலிகள் வசம் உள்ள மிகக் குறுகிய பகுதியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் இறுதிக் கட்ட தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து, கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பாதுகாப்பு வலையப் பகுதியில் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இன்னும் 48 மணி நேரத்தி்ல விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவார்கள் புலிகள் வசம் உள்ள அனைத்து அப்பாவி மக்களும் மீட்கப்பட்டு விடுவார்கள் என இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு வளையப் பகுதி முழுவதிலும் இருந்து கரும்புகை வெளிவந்த வண்ணம் உள்ளது. மிகக் குறுகிய கடற்பரப்பான பாதுகாப்பு வளையப் பகுதியை அழிக்கும் வகையில் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் இந்தப் பகுதியை கைப்பற்றும் முடிவில் ராணுவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யாரை நோக்கி இக்கற்கள்….? – குலன்

புலிகளின் வீழ்ச்சி உறுதியாகி விட்டதா? மூக்குள்ள வரை சளி என்பது போல்தான் ஈழத்தமிழர் வாழ்க்கை அமையப் போகிறதா? சிங்கள இனவாதிகளுடனும், இலங்கை அரச ராணுவ இயந்திரங்களின்கீழும் மீண்டும் மிதிபடும் நிலை தொடருமா? ஒற்றையாட்சியினுள் ஆயுதங்கள் முடக்கப்படுமா? இப்படிப் பல கேள்விகளின் மத்தியில் பதுங்கிக் கொள்கிறது மனமும் உணர்வுகளும்.

இன்றைய தேவை கருதி தம்முள் உள்ள குத்து வெட்டுக்களின் தவறுகளை உணர்ந்து அதனை நிராகரித்து ஒன்றிணைந்த ஒரு கிராமத்தை இங்கு குறிப்பிடுவது முக்கியம். யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியிலுள்ள ஒரு மீன்பிடிக் கிராமம். குத்து வெட்டுகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புலிகளின் யாழ் வீழ்ச்சியுடன் வன்னி நோக்கி நகர்ந்து மீண்டும் புலிகளின் பலாற்காரத்தால் கடைசி வரையும் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பின் புலிகளின் பிராந்தியத்தை விட்டு 120 குடும்பங்கள் (சுமார் 600 பேர்) இராணுவப் பகுதிக்கு வந்துள்ளனர் என அறிந்ததும் மீதியாய் கிராமத்தில் இருந்த 28 குடும்பங்களும் வேற்றுமைகளை மறந்து ஒருநாள் எல்லோருமாகச் சேர்ந்து கடலட்டை பிடித்து 8 இலட்சம் ரூபாய்க்கு விற்று அப்பணத்தை இடம்பெயர்ந்து அல்லலுறும் கிராமத்தவர்க்குப் பகிர்ந்து கொடுத்தார்கள் என்றால் நாம்….? இதைப் பார்த்தாவது தேவையறிந்து சிந்திப்பீர்களா? IPKF ஈழத்தில் நிற்கும்போது பொது எதிரியாக இருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துப் புலிகளும், இலங்கை இராணுவமும் இயங்கின. சுனாமியின் போதும் இப்படியே நடந்தது. எதிரிகளே ஒன்றாகி ஒரு பொது நோக்குக்காக செயற்படும் போது தமிழர்களாய் நீங்கள் பிரிவுண்டுதான் இருக்கப் போகிறீர்களா?

மாற்றுக் கருத்தாளர்கள், புத்திஜீவிகள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள், சமூக மாற்றம் விரும்பிகள், பெண்கள் சந்திப்புக்கள், பின்னவீனத்துவம், சிறு சஞ்சிகைகள், ஊடகங்கள், எல்லோரையும் நோக்கியே என் எழுத்துக் கற்கள் வீசப்படுகின்றன. நீங்கள் இவ்வளவு காலமும் செய்து கொண்டிருந்தது புலி எதிர்ப்பு வாதம் மட்டுமே. எம்மக்களுக்கான எந்த மாற்று மையங்களை உருவாக்கினீர்கள். உருவாகிய மையங்களினுள்ளும் அமைப்புகளுக்குள்ளும் ஆயுதமின்றிக் குத்து வெட்டுப்பட்டு பிரிந்து பிளந்து கிடக்கிறீர்கள். உங்களுக்கு பாசிச சிங்கள அரசு மட்டுமல்ல பாசிசப் புலிகளும் எதிரிகள் என்றால் புலிகளால் பாதிக்கப்பட அமைப்புகளில் இருந்தவர்கள், மற்றும் மேற்குறிப்பிட்ட அனைவரும் ஒன்றாய் நின்று எம்மக்களுக்கு ஒரு மாற்று வழியைத் தயார்படுத்தி இருக்கலாம் செய்தீர்களா? சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறீர்களே. புலிகளால் பொது வேலைத்திட்டத்தில் செயற்பட முடியாது என்றால் (உ+ம்: திம்பு) உங்களால் ஏன் முடியவில்லை. நீங்களும் புலிகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதைத்தான் உறுதிப்படுத்துகிறீர்கள். புலியின் போராட்டத்துடன் ஒத்துப்போகாத அனைவரும் காட்டும் காரணங்கள் மக்கள் மக்கள் மக்கள். அந்த மக்கள்தான் இன்று உங்கள் முன் அவலத்தில் விளிம்பில் நிற்கிறார்கள். என்ன செய்யப் போகிறீர்கள்? காலம் கனிந்திருக்கிறது. இனியாவது ஒன்று சேர்வீர்களா? புலி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ்… எனஇருந்து பின் பிரிந்து சென்றீர்கள். இனி ஏன் மீண்டும் பழைய கனவுகள். புதிதாகச் சிந்தியுங்கள் மக்களுக்காக மக்களாக ஒன்றுபடுங்கள். இன்று புலிகளுக்குக் கூட மாற்று வழியில்லை. எங்கே உங்களது மாற்றுவழியும் சமூக மாற்றமும்?

ஆயுதப்புரட்சி ஒன்றே எமது விடுதலையை வென்றுதரும் என்ற புலிகள் அதே ஆயுதங்களால் இன்று அடியறுந்து நிற்கின்றனர். காரணம் புதிதாகச் சிந்திக்க மறந்து, மறுத்து, பழைய பல்லவியையே பாடிய ஆடியதன் விளைவா? மண்மீட்பு மட்டுமல்ல மக்கள் மீட்பு மட்டுமே எம் மக்களின் விடுதலை என்று, புலிகளின் ஆயுதங்களால் துரத்தப்பட்ட மாற்று கருத்தாளர்கள் இன்னுமேன் மௌனம். புலியெதிர்ப்பு வாதம் மட்டும்தான் உங்கள் பணியா? மக்கள் மீட்பு என்று கருதினால் இந்த மக்கள் மீட்பும் சிங்கள மக்களுக்கும் தேவைப்பட்டது தேவைப்படுகிறது. எமது நியாயமான கோரிக்கைகளைத் தரமறுத்த சிங்கள அரசுக்கெதிராக ஏன் சிங்கள மக்களையே கிளர்ந்தெழ நீங்கள் உதவியிருக்கலாம்? இதைக் கூட நீங்கள் குறைந்தபட்சம் தெற்கிலங்கையிலுள்ள உங்கள் கருத்துக்களுடன் ஆக்கபூர்வமாக இணையக் கூடியவர்களுடனாவது இணைந்து ஒற்றையாட்சியின் கீழ் மக்கள் மீட்பை உருவாக்க முயன்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை? முதுகில் குத்தப்படும் முத்திரைகளுக்குப் பயந்தீர்களா? முத்திரை குத்தப்படாத கடிதங்கள் உங்களைப் போல் முடங்கித்தான் கிடக்கும்.

முட்டாள்தனமாக ஆயுதத்தில் மனநோய் (psychopath) கொண்ட புலிகளின் வானவேடிக்கைகளிலும் கீரோயிசத்தையும் வெற்றி என்று நம்பி, உயிர்களையும் காவுகொடுத்து, உடமைகளை இழந்து, விடுதலை என்பதை பரம்பரைக்கே உச்சரிக்க முடியாதபடி எம்மக்கள் இன்று இருக்கிறார்கள். இதற்குப் புலிகளே பொறுப்பாளிகள் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஒழித்துக் கொள்ளமுடியாது. நீங்கள் புலிகளுக்குப் பயந்து சிங்கள அரசுடன் கைகோத்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. சிறுசிறு குழுக்களாக இருக்கும் நீங்கள் ஏன் மக்களெனும் பொது நோக்குக்காக பெரிதாக இணையக்கூடாது.

விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டு திரியும் புலிப் பினாமிகளின் வால்கள் கேட்டும் கேள்வி என்னவென்றால் புலிகளை விட்டால் மக்களுக்கு என்ன வழி? அரசாங்கத்துக்கு அடிபணியச் சொல்கிறீர்களா? சிங்கள மக்களும் அரசும் இனி எம்மை மதிக்குமா? தமிழனின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லவேண்டியவர்கள். புலிகளிலும் பலர் மாற்று வழியின்றியே அங்கே நிற்கிறார்கள் என்பதை அறிக.

மாற்றுக்கருத்துக் கொண்ட மன்னர்கள் மக்களுக்காக இந்தியாவில் என்று, பின் சிங்கப்பூரில் என்று, பின் இலங்கையில் ஒருசந்திப்பை ஏற்படுத்தினீர்கள். ஆக்கபூர்வமாக என்ன நடந்தது? உங்கள் கருத்துக்களை அன்றி மக்களின் நிலை, எதிர்காலம் பற்றி ஏதாவது கதைத்தீர்களா? அரசும் அவர்களின் ஆலோசகர்களும் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இதைக் கேட்பதற்கு கணனி, ரேடியோ, தொலைக்காட்சி என்று போதியளவு ஊடகங்கள் உள்ளன. இவ்வளவு செலவழித்துக் கொண்டு போகவேண்டிய அவசியம் என்ன? சுற்றுலாவா?

தயவுசெய்து இனியாவது சிந்தியுங்கள் புலிகளால் என்றும் ஒருசரியான முடிவை எடுக்க முடியாது. தாம்செய்த பிழைகளை ஒத்துக்கொள்ளக் கூடியவீரம் அவர்களிடம் இல்லை. இருந்திருந்தால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தூக்கிக் கொண்டு செய்த பிழைகளுக்கு நியாயம் கற்பிக்க முயல்வார்களா? கொண்டு திரியும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினூடாக தமக்கு பணம் கொட்டித்தர இன்னும் எவ்வளவு வெளிநாட்டுத் தமிழர்கள் உள்ளார்கள் என்று கணக்குப் போடுகிறார்களா? என்று திம்புப் பேச்சுவார்த்தைக்குச் சென்றீர்களோ அன்றே வட்டுக்கோட்டைத் தீர்மானம் புலிகளின் பக்கத்திலும் இறந்துவிட்டது. இப்ப என்ன வேண்டியிருக்கிறது புதிய வட்டுக்கோட்டைப் பிரகடனம்.

இப்படியான எண்ணமும் கருத்தும் உள்ள புலிகளால் மக்களை மையப்படுத்திய சரியான ஒருபோராட்டத்தை முன்வைக்க இயலாது. மக்களை மையப்படுத்திய போராட்டமானது அரசில் சுபீட்சம் உள்ளதாக ஏன் புலிகள் விரும்பும் தமிழீழமாகவும் இருக்கலாம். அதையும் அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். ஐயோ போதும் போராட்டம் வேண்டாம் மக்கள் களைத்துவிட்டார்கள் என்கிறீர்களா? சரி அந்த மக்களை என்ன செய்யப் போகிறீர்கள் சிறு சிறு ஆயுதக்குழுக்களிடம் ஒப்படைக்கப் போகிறீர்களா? இதைத்தான் அரசு செய்கிறது. இதை அனுமதிக்கப் போகிறீர்களா?

இன்று வெளிப்புலத்தில் எமக்கும் ஈழத்தில் எம்மக்களுக்கும் அரசியல், வாழ்வியல் சம்பந்தமாக பலதேவைகள் இருக்கிறது என்பதை யாவரும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டு இருப்பதை விடுத்து இனியாவது முன்பு நாம் படித்த பாடங்களை மனதில் கொண்டு முன்நோக்கி நகரவேண்டிய தேவையும், காலத்தின் கட்டாயமும் எம் முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. எதிரி துரோகி என்றும் அவன் இவன் என்றும் முதுகில் முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, நீங்கள் கொண்டுவந்து அமைப்புச் சாயங்களைக் கழுவி விட்டு ஒன்றினைத்து ஈழத்திலுள்ள தமிழ் மக்களின் குரல்களைச் செவிமடுத்து நாம் நாமாக எல்லோருமாக இணைந்து செயற்பட வேண்டிய காலத்தில் காலடி வைக்க வேண்டியுள்ளது.

புலிகளினுள்ளும் மாற்றுவழியின்றிப் பலர் இருக்கின்றனர் என்பதை உணரமுடிகிறது. மக்களின் நலனுக்காக மனந்திறந்து இணைக்கூடிய எல்லாச் சக்திகளையும் ஒன்றிணைத்து பொதுவான வேலைத்திட்டங்களை உருவாக்கி, மக்களின் தேவைகளைக் கூர்மைப்படுத்தி இயங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சமூகம் என்பது பலதரப்பட்டவர்களைக் கொண்டது. ஆதலால் கருத்துக்களில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மாற்றமில்லாத எதுவுமே வளர்ச்சியடையாது. வளர்ச்சி கூட மாற்றம் தான் என்பதை மறுக்க முடியுமா?

இனியாவது திறந்த மனங்களுடன் மக்களின் தேவைகருதி, பழைய சாயங்களை களைந்து கட்டிய கைகளை அகலத் திறவுங்கள். உங்கள் விரிந்த நெஞ்சங்களில் தமிழ் மக்கள் மையம்கொள்ளட்டும். உங்கள் உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனங்களை வையுங்கள். கருத்துக்களைக் கருத்துக்களால் சந்தியுங்கள். குறைந்தபட்ச உடன்பாட்டுடனாவது எம்மை நோக்கிக் கையேந்தி நிற்கும் எம்மக்களுக்காக உங்கள் கண்களை அகல விரியுங்கள். மீண்டும் பழைய பல்லவிகளை விட்டுவிட்டு புதியவர்களாக புதிய கருத்துக்களுடன் உங்கள் கருத்துக்களை எம் மக்கள்மேல் குவியுங்கள். உங்களின் ஒற்றுமையில்தான் ஈழ மக்களின் எதிர்காலம் உள்ளது என்பதை மறக்காதீர். நீங்கள் எந்த அமைப்புச் சாந்தவர்களாகவும் இருந்திருக்கலாம். புதியபாதையை மக்கள் நலனுக்காகவும் இனத்துக்காகவும் திறவுங்கள். சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உரியது. அதை அடைவு வைக்கவோ, ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி உரிமை கொண்ட முயலுபவர்கள் மாபியாக்களாகவே பிரணமிப்பார்கள். புலிகள் புறப்பட்ட பயணம் பாதைமாறி பாதாளத்துள் விழுந்துள்ளது. புலிகளும் மாறலாம் மாறவேண்டும் என்பது அவர்கள் இன்று படித்த பாடம் என்பதையும் அறிக.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்: மனோ

mano-2.jpg“இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்” என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சுதந்திரத்திற்கான மேடையின் அரங்கம் எனும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்த வலய பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் விபரங்களை அரசு இரகசியமாக வைத்திருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடுதலைப்புலிகளிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதைக் காரணம் காட்டி அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் கம்பஹா, கண்டி போன்ற பிரதேசங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களின் விலாசம் மற்றும் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முகாம்களில் பல மக்கள் சிக்கியுள்ளதால் தமது உறவினர்கள் உயிருடன் உள்ளார்களா? இல்லையா? என இலட்சகணக்கான மக்கள் பதறுகின்றனர். அவர்களுடைய வேதனையை தொலைபேசி வாயிலாக எமக்கு கூறுகிறார்கள்.எனவே முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் உள்ள மக்களின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்” என்றார்.

வெள்ளவத்தையில் தற்கொலை அங்கிகள் மீட்பு!

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள ஏழு மாடிக் கட்டிடம் ஒன்றில் நான்கு தற்கொலை அங்கிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான  ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை இன்னும் 48 மணி நேரத்துக்குள் மீட்போம் – ஜேர்தானில் ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமுல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் தோற்கடித்து புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை படை வீரர்கள்  விடுவித்துவிடுவார்களென நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் மத்தியில் நேற்று உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார். ஜேர்தானில் உள்ள தொழில் பேட்டையில் கெஷ வல் வெயா ஆடை உற்பத்தி நிலையத்தில் இது தொடர்பான வைபவம் நடைபெற்றது. இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது.

இலங்கையில் இப்போது என்ன நடக்கின்றது என்பதை அறிய வெளிநாட்டில் உள்ளவாகள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது எனக்குத் தெரியும்.

2005 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மகிழ்சியைக் கொண்டாட புலிகள் இடம்தரவில்லை. நிராயுதபாணிகளான படை வீரர்களை அவர்கள் படுகொலை செய்தனர். எனினும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம் என புலிகளை நாம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும் இப்பேச்சுவார்த்தையை புலிகள் இடையில் முறித்துக்கொண்டனர்.

கிழக்கில் விவசாயத்தை நம்பி வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கு புலிகள் தண்ணீர் வழங்க மறுத்து மாவில் ஆறு அணைக்கட்டை மூடினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக படையினர் மனிதாபிமான நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து புலிகளை தோற்கடித்து மக்களுக்கு நீர் வழங்கினர்

மூதூர் மூஸ்லிம்களை தமது சொந்த இடங்களிலிருந்து புலிகள் விரட்டியபோது படையினர் அங்கிருந்து புலிகளை விரட்டியடித்து 40 நாட்களுக்குள் முஸ்லிம் மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தினர். அதேபோன்று கிழக்குப் பிரதேசம் முழுவதையும் மீட்டு அங்கு ஜனாநாயத்தை உருவாக்கினோம். 2001 ஆம் ஆண்டில் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வடக்கையும் கிழக்கையும் புலிகளுக்கு சட்டரீதியாக ஒப்படைத்தார்.

இப்போதும் அவர் மேற்குலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் புலிகளுக்கு சார்பான அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்தோம்.

சில நாடுகள் இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீதே அழுத்தங்களைக் கொடுக்க முயற்சித்துவருகின்றன. இலங்கை மக்கள் நாட்டின் கௌரவத்தையும் கீர்த்தியையும் பேணிப்பாதுகாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

வடக்கிலே இடம்பெயர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் ஏற்கெனவே எடுத்துள்ளோம். இந்த விடயத்தில் இதுபோன்ற யுத்தநிலைமைகள் ஏற்பட்டுள்ள ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகின்றபோது நாம் மிகவும் விரைவாக அவற்றை மேற்கொண்டுள்ளோம்.

அடுத்த கட்டமாக நாடு துண்டாடப்படுவதைத்; தவிர்க்கின்றவகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படும். எல்லா மக்களும் கௌரவத்தோடும் தன்மானத்தோடும் வாழ்வதற்கான ஒரு சுதந்திர தேசத்தைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும். எமது மக்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்த எமது படைவீரர்களை நாம் பாராட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். 

தப்பிச் செல்ல முயன்ற சூசையின் குடும்பத்தினர் கடற்படையினரால் கைது!

sri_lanka_navy_logo.pngபடகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார். புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான படகை கடற்படையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோதே சூசையின் குடும்பத்தினர் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

சூசையின் மனைவி,  அவரது மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர். சூசை இன்னமும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருப்பதாக சூசையின் குடும்ப உறுப்பினர்கள் படையினரிடம் தெரிவித்துள்ளனர். எந்தவொரு புலி உறுப்பினருக்கும் கடல் மூலம் தப்பிச் செல்ல முடியாதவாறு கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க கூறினார். 

நாளை வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார்

india-elc.jpgமக்களவைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே ஆட்சியமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்று, மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைப்பது குறித்த முயற்சிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடுமுழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தேர்தல் முடிவுகளை தெரிவிக்க ஏதுவாக சுமார் ஆயிரத்து 80 பத்திரிகை தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணைய நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகளிலும், முடிவுகளைத் தெரிவிக்கும் பணிகளிலும் நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இரு மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, அவ்வப்போது வெளியாகும் முடிவுகள் வெளியிடப்படும். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒரிஸ்ஸா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களுக்குதவ அமெரிக்க கடற்படை தயார் நிலையில்

us-navy.jpgஇலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் நிலைப்பாட்டில் அமெரிக்க கடற்படையினர் உள்ளனர்.

இடம்பெயர் மக்களைப் பார்வையிட்டு உதவ அரசு எமக்கு அனுமதி வழங்கவில்லை: ரவூப் ஹக்கீம்

hakkem.jpg“வடக்கில் இடம்பெறும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உதவிகளை வழங்கும் ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை” என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுதந்திரத்திற்கான மேடையின் அரங்கம் என்ற அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஒபாமாவின் பேச்சுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்பு

obama_.jpgஇலங்கையில் மனிதாபிமானப் பிரச்சனை உருவாவதைத் தவிர்க்குமாறு கோரியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் பராக் ஒபாமா, இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சனை உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்சனை ஒரு பேரழிவாக மாற்றமடைவதற்கு முன்பாக சிறிலங்க அரசு போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, வெள்ளை மாளிமை முன்பாக கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒபாமாவின் பேச்சுக்கு இன்று வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு தலைமை தாங்கி போராட்டம் நடத்தி வரும் எலியாஸ் ஜெயராஜா இதுகுறித்துப் பேசுகையில், தமிழர்கள் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும், போர் பகுதியில் சிக்கியுள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்ற அதிபர் ஒபாமாவின் கோரிக்கையை சிறிலங்க அரசாங்கம் மறுக்க முடியாது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதிபர் ஒபாமாவின் பேச்சு, இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை பார்த்துக் கொண்டு உலக நாடுகள் அமைதியாக இருக்காது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் ஜெயராஜா கூறினார்.