18

18

பிரபாகரன் மறைவு எதிரொலி: மதிமுக தொண்டர் தீக்குளிப்பு

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது.  இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.

இதனால் மனம் கொதித்துப்போன மதிமுக தொண்டர் தீக்குளித்துள்ளார்.   அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளித்த மதிமுக தொண்டர் சிதம்பரம் அருகில் உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர்.

பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்தியாவுக்கு உறுதி செய்தது இலங்கை அரசு.

Pirabakaran_Vராணுவ முற்றுகையின் போது, பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்தியாவுக்கு உறுதி செய்தது இலங்கை அரசு. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று போன் செய்துள்ளார். அப்போது, பிரபாகரன் கொல்லப்பட்ட விஷயத்தை உறுதி செய்ததாகவும்,  அதிகாரப்பரவல் குறித்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் இருவரும் தகவல் பரிமாறிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி விஷ்ணு பிரசாத்,  ‘’இலங்கையில் பல ஆண்டாக நடந்து வந்த உள்நாட்டுப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே தெரிவித்தார். பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயத்தையும் அவர் உறுதி செய்தார். ‘இந்நிலையில், அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்து, தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் அதிகாரப்பரவலை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரணாப் வலியுறுத்தினார்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன் பேட்டி

Pirabakaran_Vஇன்று இரவு சென்னையில் உள்ள கொங்கு தமிழ் அறக்கட்டளையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்களான பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோர் ஒன்று கூடி இலங்கையின் தற்போதுள்ள நிலைமை குறித்து  தீவிரமாக  ஆலோசித்து வருகிறார்கள். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்பாக பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரபாகரன் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

பிரபாகரன் நலமுடன் தான் இருக்கிறார்.

எப்படி இவ்வாறு உறுதியுடன் சொல்கிறீர்கள்.  நீங்கள் அவருடன் பேசினீர்களா?

நான் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ளுங்கள்.

இலங்கை பிரச்சனையில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மே-21ல் தமிழகம் முழுவதும் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

நாளை முதல் வெற்றி வாரம் பிரகடனம்

sri-lankan-government.jpgஇலங்கை யின் வட பிரதேசம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் முகமாக நாளை 19 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்துக்கு அரசாங்கத்தினால் விடுதலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சகல அரசாங்க நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றிவைக்குமாறும் நாளை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையை சகலரும் செவிமடுக்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சகல அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அரச நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் வேண்டுகேள் விடுத்துள்ளார்.

யுத்தம் முழுமையாக நிறைவடைந்து விட்டது முப்படை தளபதிகளும் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

18052009.jpgபயங்கர வாதத்திற்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முழுமையாக நிறைவடைந்து விட்டது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முப்படைத்தளபதியினால் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி தங்களுடைய கடமைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் நாட்டின் முழு பாதுகாப்பும் படையினரின் வசமுள்ளதாகவும் முப்படைகளின் தளபதிகளும் படைத்தரப்பு முக்கியஸ்தர்களும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட , விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க ,பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்

ஒரு வாரகாலத்திற்கு வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைகழகழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது

jaffna_university.jpgவன்னியில் இடம்பெறும் அதிகரித்த மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளதால் யாழ்ப்பாண பல்கலைக்கழக வன்னி மாணவர்கள் கல்விகற்க முடியாத மனநிலை காரணமாக வரும் ஒரு வாரகாலத்திற்கு வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைகழகழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

தமது பெற்றோர்கள் மற்றும் உறவுகளது மரணம் காரணமாக எமது பல்கலைகழக மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். தமது உறவுகள் எங்கிருக்கின்றனர், எப்படி இருக்கின்றனர் என்று பெரும் கவலையுடன் இருப்பதனால் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இன்றுமுதல் வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமக முன் காலாண்டு இடைப்பரீட்சைகளையும் பின்னர் நடத்தும்படி பீடங்களிடம் வலியுறுத்துகின்றோம். மாணவர்களது வகுப்புக்கள் தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் 

இரத்த ஆறு ஓடாதவகையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

mahinda_samarasinghe.jpgமுப்பது வருடங்களுக்கு மேலாக நாட்டில் நீடித்திருந்த பயங்கரவாதத்தை இரத்த ஆறு ஓடாத வகையில் ஒழித்துக் கட்டிய பெருமை இலங்கைக்கு மாத்திரமே உரித்தாகும் என அனர்த்த இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான சிவிலியன்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் அடுத்தகட்ட இலக்கு எனவும்  அவரது அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் கூறினார்.  புலிகளின் பிடியிலிருந்து அனைத்து சிவிலியன்களையும் அரசாங்கம் எவ்வாறு வெற்றிகரமாக மீட்டெடுத்ததோ அதேபோல் அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவந்து வடக்கில் மீண்டும் ஜனநாயகம் நிலை நிறுத்தப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும் அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.

முப்படை தளபதிகளுக்கும் பதவி உயர்வு

18052009.jpg
பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிப்பதற்கு முன்னின்று உழைத்தமைக்காக முப்படைகளின் தளபதிகளினதும் பதவி நிலை முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திங்கட்கிழமை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா ஜெனரலாகவும் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரலாகவும் , விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க எயார் சீப் மார்ஷலாகவும் பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது – டக்ளஸ் தேவானந்தா

da-de.gifஎன்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் இன்று கொல்லப்பட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரபாகரன் என்றோ தற்கொலை செய்து கொண்டவர் என்றே நான் கருதுகின்றேன். எமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடப் புறப்பட்ட சகோதர இயக்கத் தலைவர்களையும், பல்லாயிரக்கணக்கான சக இயக்கப் போராளிகளையும் தெருத்தெருவாகப் புலித்தலைமை கொன்றொழித்த போதே பிரபாகரன் தற்கொலை செய்துவிட்டதாகவே நான் கருதுகின்றேன். ஆயுதப்போராட்ட வழியில் மட்டுமன்றி அகிம்சை வழியில் உரிமை கேட்டு போராடியிருந்த தமிழ்த் தலைவர்களையும் சேர்த்தே புலித்தலைமை கொன்றொழித்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன். பல நூறு புத்திஜீவிகளையும் தலை சிறந்த கல்விமான்களையும் புலித்தலைமை கொன்றொழித்திருந்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் எமது மக்களின் உரிமைகளுக்காக நீதியான ஒரு உரிமைப் போராட்டம் நடந்திருந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்றுச் செயற்பட்டிருக்கின்றேன். அந்தப் போராட்டத்தில் புலிகளுக்கு இருந்த பங்களிப்பை நான் மறுக்கவில்லை. அதை நான் கொச்சைப்படுத்தவும் இல்லை. ஆனாலும் அப்போது கூட புலித்தலைமை அரச படையினருக்கு எதிராகத் தங்களது துப்பாக்கிகளை திருப்பியதை விடவும் சகோதர இயக்கங்கள் மீதே தமது துப்பாக்கிகளைத் திருப்பியிருந்தார்கள். இது தற்கொலைக்கு ஒப்பானது என்ற விடயத்தை புலித்தலைமை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அது குறித்து அப்போது சிந்தித்திருக்கவில்லை. எமது உரிமைப் போராட்டத்தின் ஆரம்பங்களில் பிரபாகரனுக்கு இருந்த பங்களிப்பை நான் ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக எமது போராட்டத்தைச் சொந்த இனத்தின் குருதி குடிக்கும் அழிவு யுத்தமாக மாற்றியது குறித்த முரண்பாடுகளே எனக்கு அதிகம் உண்டு.

பிரபாகரனை நம்பி தமது உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தமிழ் இளைஞர் யுவதிகளின் தியாகங்கள் அனைத்தும் வீணாகிப்போய் விட்டது என்பதே எமது கவலை. தவறுகளுக்கு அப்பால் புலிகள் உட்பட அனைத்து விடுதலை இயக்கங்களினதும் தியாகங்களினால்தான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் அதைப் புலித்தலைமை பயன்படுத்தியிருக்கவில்லை. அன்று அதை ஏற்று செயற்பட்டிருந்தால் தவறுகளுக்கு அப்பாலும் பிரபாகரனுக்கு இன்று இந்த நிலை உருவாகியிருக்காது. உன் கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. உனக்கு நீயே என்றோ தூவி விட்டவைகள். இதைத்தான் என்னால் கூற முடியும்.

தமக்குரிய படுகுழியைத் தாமே தோண்டி விட்டு அதனுள் வீழ்வதற்கு அவர்களே காத்திருந்து வீழ்ந்தமைக்கு அடுத்தவர்கள் எவரும் காரணமல்ல. பிரபாகரனின் முடிவிற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பயணத்திற்கான தடைகள் அகன்றிருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அதேவேளை தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மாயையை ஏற்றுக்கொள்ள எமது கட்சி தயாராக இல்லை. ஏனென்றால் புலிகள் படுகொலையைப் புரிந்து பயங்கரவாதத்தை நடாத்தியபோது எமது தோழர்களும், மக்களும் படுகொலை செய்யப்பட்டபோதும் பல இழப்புக்களைச் சுமந்து கொண்டு ஜனநாயக வழிமுறையில் நடைமுறைச் சாத்தியமான வழியிலேயே போராடி வந்துள்ளோம். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுற்படுத்துவதன் ஊடாக தமிழ்பேசும் மக்களின் கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நான் நம்புகின்றேன்.

இதை வலியுறுத்தி நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம். எமது இந்த முயற்சிக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்த நாடு என்ற வகையிலும் எம் மக்கள் மீதான அன்பும், அக்கறையும், உரிமையும் கொண்ட நாடுமாகிய இந்தியாவின் பங்களிப்பு மிக அவசியம் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். யார்தான் மரணித்தாலும், மக்களையும் மண்ணையும் கைவிட்டு ஓடினாலும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமை சுதந்திரம் நோக்கிய பயணம் தொடரும். அது பிபாகரனின் அழிவுப்பாதையில் அல்ல. ஆக்கபூர்வமான எமது நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் மட்டுமே தொடரும்.

டக்ளஸ் தேவானந்தா பா.உ.
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
அமைச்சர்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை.

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

ranil_wickramasinghe.jpg பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் இறுதிக்கட்ட மோதல்களில் உயிரிழந்து, நாடு முற்றாக விடுவிக்கப்பட்டதனை கொழும்பில் பட்டாசு கொளுத்தியும், தேசிய கொடிகளைப் பறக்கவிட்டும் மக்கள் கொண்டாடினர்.