விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாதத்தை இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களில் முற்றாக ஒழித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்பில் உலகத்தில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியவர்கள். முதன் முதலாக மனித வெடிகுண்டு என்ற அழிவு முன்மாதிரியை வெளிக்காட்டியவர்கள். எனது இளமைக் காலம் அரசியல் தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முக்கியமாக சிவிலியன்களை புலிகள் கொலை செய்தனர். மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. தமிழ் மக்களுக்கே துரோகம் இழைத்தனர்.
இலங்கையின் பொருளாதார மையங்களை அழித்தனர். புலிகளின் அழித்தல் தொடர்பான விடயங்களை கேள்வியுற்றவாறே எனது இளமை காலம் கழிந்தது. எப்போதும் நிம்மதியற்ற வகையிலேயே காலத்தை கழித்தோம். ஆனால், தற்போது எதிர்கால சந்ததியினருக்கு நாம் அதனை விட்டு வைக்கவில்லை. இன்னும் புலிகளுக்கு சிலர் வக்காளத்து வாங்குவதாகவே தெரிகிறது. பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லையென சர்வதேச மட்டத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயற்படின் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்.