23

23

தமிழகம்:117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்

refugee_.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர்.

இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். 

இரா.சம்பந்தன் புதுடில்லி பயணம்!

sampanthan.jpgஇலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் புதுடில்லி செல்லவுள்ளார்.
 
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைச் சந்தித்ததைத் தொடர்ந்தே கூட்டமைப்பு புதுடில்லி சென்று இந்திய அரசியல் தலைமையைச் சந்திக்கத் திட்டமிட்டது.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்பதே 13வது திருத்தத்தின் முக்கிய பகுதியென்பதைக் கூட்டமைப்பினர் இந்தியத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்ததுடன், மத்திய அரசாங்கத்திடம் காணப்படும் பெரும்பாலான அதிகாரங்கள் இதுவரை மாகாணசபைகளுக்கு பகிரப்படாமையையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.இந்த விடயம் குறித்து புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரெனவும் இந்தியத் தூதுவர்கள் உறுதிமொழி வழங்கிச் சென்றுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்கள் 48மணி நேரத்துள் சரணடைய வேண்டும் : யாழ். இராணுவத் தளபதி

யாழ்.  குடாநாட்டில் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ். இராணுவத் தளபதி கேட்டுள்ளார்.

அதேவேளை புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை கொடுத்து உதவுவது சட்டரீதியான மாபெரும் தவறு என்றும் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்களை படையினரிடம் சரணடைய செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் யாழ். இராணுவத் தளபதி பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி

pm-manmogan.jpgஇலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.

மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றதை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள வாழத்து செய்தியில்இதனை குறிப்பிட்டுள்ளார்.இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

ஐநா செயலர் பான்கிமூன் வவுனியாவிற்கு விஜயம்

u_n__secretarygeneral-visits-idp.jpgஇலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கிமூன் வவுனியாவிற்கு இன்று (23.05.2009) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது இடம்பெயாந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். இந்த மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்த மக்களுக்கான நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற பிரதிநிதிகளுடன் அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

முதல் அரை இறுதியில் ஹைதராபாத் வெற்றி : இன்று இரண்டாவது அரை இறுதிப் போட்டி

ipl-2009-01.jpgநேற்று நடந்த ஐபிஎல் முதல் அரை இறுதிப் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அபாரமாக ஆடி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் 2ஆவது அரை இறுதியில், சென்னை அணியும், பெங்களூரும் சந்திக்கின்றன. தென் ஆபிரிக்காவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டன.

நேற்று முதலாவது அரை இறுதிப் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்தது. ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று இரவு 8.00 மணிக்கு சென்னை-பெங்களூர் அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ,

புலம்பெயர் நாடுகளில் துயர நாள் கடைப்பிடிப்பு

b-day.jpgவன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய மனிதப் பேரவலத்தினை நினைவுகூர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் சுவிற்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், சுவீடன், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் நேற்று துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு விடுத்த பிரதமருக்கு நன்றி:கலைஞர்

pm-manmogan.jpgமத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தன.  இவற்றை மறுத்த பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சரவையில் இடம்பெற முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி, ‘’அமைச்சரவை அமைக்கும் காலத்தில் டெல்லியில் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள்.  இவற்றுக்கெல்லாம் விளக்கமளித்து மறுத்த பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நன்றி. மத்திய அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்த பிரதமருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும்,  ‘’அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து விவாதித்து முடிவு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

6 மத்திய அமைச்சர்கள் இலாகாக்கள் அறிவிப்பு

india-f-m.jpgஇந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மன்மோகன்சிங் மீண்டும் பதவி ஏற்றார். அவருடன் 19 `கேபினட்’ மந்திரிகளும் பதவி ஏற்றனர். இவர்களில் பிரணாப் முகர்ஜிக்கு நிதித்துறையும், ப.சிதம்பரத்துக்கு உள்துறையும், ஏ.கே.அந்தோணிக்கு பாதுகாப்பு துறையும், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வெளியுறவு துறையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு ரெயில்வேயும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வேளாண்மை, உணவு மற்றும் சிவில் சப்ளை துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் தற்கொலை

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ யுன் (62) இன்று தற்கொலை செய்துகொண்டார். நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அருகேயுள்ள மலை ஒன்றில் ஏறி அங்கிருந்து கீழே குதித்ததாகவும், பாறை ஒன்றின் மீது அவர் உடல் பலமாக மோதியதில் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, தகவல் கிடைத்ததும் அவர் பூசான் நகர மருத்துவமனைக்கு உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலை 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த தகவல் குறிப்பில், வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது என்றும், ஏராளமான மக்களை அவதிக்குள்ளாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தற்கொலை செய்திருப்பது தென் கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.