இரத்தக்களறியின் பின்
இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து பிரச்சார கூட்டம் ஒன்று பிரான்ஸ்ல் நடைபெறவுள்ளது
இந்தக் கூட்டம் இம்மாதம் 28ம் திகதி 2009 அன்று (The meeting place is) AGECA, 144 bd de Charonne, 75011 – Métro Alexandre Dumas (ligne 2) நடைபெறவுள்ளது.
கடந்த ஜனவரி 2ல் இரானுவம் கிளிநொச்சியை பிடித்ததில் இருந்து 20,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்த 300 000க்கும் அதிகமான மக்களை சுற்றிவளைத்த இரானுவம் தினமும் கடும் தாக்குதல்செய்து கொலைவெறியாடியது. உணவு மருத்துவம் தங்கும் வசதிகள் இன்றி பட்டினியில் வாடிய மக்கள்மேல் குண்டுமாரி பொழிந்து கொன்று தள்ளியது. மக்கள் கூட்டமாக இருந்த இடங்கள் மருத்துவமனைகள் என்று முரட்டுத்தனமாக செல்கள் அடிக்கப்பட்டு மக்கள் வேட்டையாடப்பட்டதை மனித உரிமை அமைப்புக்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதனால் இராணுவம் இந்த மனித உரிமை அமைப்புக்களையும் பத்திரிகையாளர்களையும் யுத்தபிரதேசத்தில் இருந்து முற்றாக தடைசெய்தது மட்டுமின்றி தெற்கில் தமக்கெதிராக இயங்க அல்லது பேச முற்பட்டவர்ளையும் வேட்டையாடியது.
கடந்த பல மாதங்களாக நடத்திமுடித்த கொலைவெறியாட்டத்தின் பின் மகிந்த ராஜபக்ச மக்களை ‘விடுதலை’ செய்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றி விட்டதாக கடந்த மே 18ல் ‘வெற்றி’ யை அறிவித்துள்ளார் ஜனாதிபதி. இலங்கை மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பாரிய உயிரிழப்புக்காக துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் 20ம் திகதியை கொண்டாடும் நாளாக அரச விடுமுறையை அறிவித்துள்ளது அரசு. 20 000க்கும் மேற்பட்ட உயிர்களை சில மாதங்களுக்குள் சூறையாடியதை வெற்றியாக அறிவித்து கொண்டாடும் சிங்கள இலங்கை அரசு தமிழர் உரிமை பற்றி பேச எந்த தகுதியும் அற்றது. வெற்றி கொண்டாட்டங்களுக்கு முந்திய சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கும் ஒன்றுக்கும் உதவாத யு.என் கூட இறுதி நாட்கள் நிகழ்வுகளை ‘இரத்தகளறி’ என்று வர்ணித்துள்ளது. மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை பற்றி எந்த அக்கறையு மற்ற வலதுசாரி வியாபரிகளான ஜரோப்பிய ஒன்றியம் கூட யுத்த குற்றம் சார்பாக தனியாக விசாரனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
பாரிய அவலத்தை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த யுத்த முடிவு எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக்கப்பட்டு – இரண்டரை லட்சத்துக்கு அதிகமானவர்கள் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் அடைக்கப்பட்டு –பேச்சுரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு பயக்கெடுதிக்குள் வாழும்படி தள்ளப்பட்டுள்ள நிலையில் கொண்டாட என்ன இருக்கு? தெற்குக்கு தப்பியோடியவர்கள்கூட திரும்பிவர ஒன்றுமில்லாதபடி தரைமட்டமாக்கப்பட்ட வாழ்விடங்களை பார்த்து சந்தோசப்பட என்ன இருக்கு? யுத்தத்தால் ஏற்கனவே கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களை முகாம்களில் அடைத்து தலையாட்டிகள் முன்நிறுத்தி குற்றவாளிகளாக குறுக்கி அவர்களை மேலும் மன உளைச்சல் நோக்கி தள்ளும் அக்கிரமத்தை பார்த்துகொண்டு பேசாமல் இருக்கமுடியாது.
உரிமை போராட்டம் தொடர்வது அவசியதேவை
பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் யுத்தம் ஆயிரக்கணக்கான தமிழர் உயிர்களை வேட்டையாடியுள்ளதால் தமிழர்கள் இனி தம்மேல் திணிக்கப்படும் அரசியலை ஏற்றுக்கnhள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கொலை வெறியாட்டம் மூலம் தமிழர் தம் உரிமைகளை சரணாகதியாக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது மிகத்தவறு. தமிழ் மக்கள் மிகக்கேவலமான வறுமைக்குள் வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில் தமிழ் மக்களின் பாரிய ஒன்றுபட்ட எழுச்சியே அவர்களை அடக்குமுறையில் இருந்து மீட்கக்கூடியது. இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் அத்தகைய உரிமை கோரலை தலையெடுக்காவண்ணம் அனைத்து கட்டுப்பாடுகளையும் உருவாக்கியுள்ளது அரசு. இருப்பினும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தொடர்வதும் மக்கள் சுதந்திரமாக தமது தேவைக்கான குரலை வைக்கும் சூழலை உருவாக்குவதும் அத்தியாவசிய தேவை. அதற்கான முதற்கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியை நாம் செய்துவருகிறோம். எமது அணிதிரட்டல் பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
1 இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து – தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறு. மக்கள் கடத்தப்பட்டும் காணாமற் போய்க் கொண்டிருப்பதை நிறுத்து.
2 தடுப்பு முகாம்களை மூடு – தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளான உணவு, தங்கும் வசதி, மருத்துவத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்.
3 அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்து. – பேச்சுரிமை, ஊடக உரிமை, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களினதும் தொழிற்சங்க உரிமை, இனம் மதம் சாதி பால் வேறுபாடின்றி அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கும் கட்சிகள் சுதந்திரமாக இயங்க தேர்தலில் பங்குபற்றும் உரிமை, முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.
4 ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவோம். – கூட்டமைக்கும் அல்லது அணிதிரள்வதற்கான உரிமையை வழங்கு. கொலை மற்றும் காணாமற் போகின்றவர்கள் பற்றிக் கண்காணிக்கும் ‘மக்கள் கண்காணிப்பு குழு’ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக பணியாற்றும் உரிமையை வழங்கு.
5 சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்து (நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஒரு சட்ட நிர்ணய சபையை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறேதாவது முறையிலோ சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கான வழியேற்படுத்து.) வறிய மக்கள், தொழிலாளர்கள் ஒன்றுபடுதலின் அடிப்படையில் மக்கள் தம் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.