26

26

கொழும்பு பிரதம நீதிவான் முன் தயாமாஸ்ரர், ஜோர்ஜ் ஆஜர்

விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி மற்றும் மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் எனும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்தினம் இருவரும் கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த அப்புஆராச்சி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதிவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரையும் கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி, விசாரணைகள் தொடர்பாக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.

தயா மாஸ்டர் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்க ஊடக பேச்சாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். படையினரின் மனிதாபிமான நடவடிக்கையின் போது கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் இருந்து வந்த மக்களுடன் இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வந்து, பின்னர் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

இதனையடுத்து, இருவரும் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணை செய்யப்பட்டு அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. புலிகள் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும், அந்த அமைப்பை அபிவிருத்தி செய்ய பல உதவி, ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர்.

தயா மாஸ்டர் ஊடக பேச்சாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியுள்ளார். இவர்களது, செயற்பாடுகள் பொது, பாதுகாப்புக்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவித்து விடுவதை தடுக்கும் வகையிலேயே கைது செய்யப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது உத்தரவின் பேரில் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மேம்பாட்டுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கும் ஊடகங்களுக்கும் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் அவர்களது, செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை கண்டறிய விசாரணை நடத்தப்படுகின்றது.

சுகயீனம் காரணமாக இருவருக்கும் மருந்துகள் வாங்கிக் கொடுக்கப்பட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடமும் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? என்று தெரிவித்துள்ளனர்.  அத்துடன், தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் இருவரையும் நேரில் பார்வையிட்ட கொழும்பு பிரதான நீதிவான், இருவரையும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அன்றைய தினம் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

நேபாளத்தின் புதிய பிரதமாரானார் மாதவ் குமார்

madhav_nepal.jpg நேபாளத்தில் மூத்த கம்யூனிஸ அரசியல்வாதியான மாதவ் குமார் நேபாள் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

நேபாளத்தில் பிரதமர் பதவியில் இருந்து பிரசண்தா பதவி விலகியதை ஒட்டி உருவான அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் இந்த பதவியேற்பு நடந்துள்ளது. பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் மிகப் பெரியக் கட்சியாக விளங்கும் மாவோயியவாதிகள் கலந்துகொள்ளாமல் போனதை அடுத்து மாதவ குமார் நேபாள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இராணுவத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்ய முந்தையப் பிரதமர் பிரச்சண்டா செய்த முயற்சியை நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் தடுத்ததை அடுத்து மாவோயியத் தலைவர் பிரச்சண்டா பதவி விலகியிருந்தார்.

வடகொரியா இரண்டாவது அணுகுண்டு பரிசோதனை

statetv_grab-korutroket.jpgவட கொரியாவினால் செய்யப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையை அதன் நெருக்கமான இராஜதந்திர கூட்டாளி நாடான சீனா விமர்சித்துள்ளது.நிலத்தடியில் வைத்து செய்யப்பட்டுள்ள இந்த அணுகுண்டு சோதனையை தாம் திட்டவட்டமாக எதிர்ப்பதாக சீனா கூறியுள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அணுகுண்டு சோதனை வெற்றிகரமானது என்று வடகொரியா புகழ்ந்துள்ளது.

அந்த வெடிப்பின் சக்தியானது 1945ல் நாகசாக்கியில் போடப்பட்ட அணுக்குண்டுக்கு ஒப்பானது என்று ரஷ்ய இராணுவ அறிக்கை மதிப்பிட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வடகொரியாவின் அணுச் சோதனையை விட இது பெரியதாகும். சிறிது நேரத்தின் பின்னர் வடகொரியா மூன்று குறுந்தூர ஏவுகணைகளையும் பரிசோதித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

காலஞ்சென்ற கனகசபை பத்மநாதனின் வெற்றிடத்திற்கு டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை

காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் வெற்றிடத்திற்கு டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்படவிருக்கின்றார்.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலி்ன் முடிவுகளின் படி விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இந்நியமனத்தை அவர் பெறவிருக்கின்றார்.பிரபல சமூக சேவையாளரான பாண்டிருப்பைச் சேர்ந்த தோமஸ் வில்லியம் தங்கத்துரை கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே நேரடியாக அரசியலில் நுழைந்தார்.

இதற்கிடையில் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் நடை பெற்றது.அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் இதில் கலந்து கொண்டனர். 

மேற்கு வங்கத்தில் பெரும் புயல் கடும் சேதம், 45பேர் பலி

rain.jpgகொல்கத்தா வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அய்லா புயல் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 45 பேர் பலியாகியுள்ளனர்.

வங்கக் கடலில் மேற்கு மத்திய பகுதியில் ஒரிசாவின் பாரதீப துறைமுகத்திலிருந்து தென் கிழக்கே 450 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று முன்தினம் காலை பிரதீப்பின் தென் கிழக்கே 350 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு இருந்தது.

அது மேலும் வலுவடைந்து தீவிர புயல் சின்னமாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து சாகர் தீவில் இருந்து 100 கிலோமீட்டர் கிழக்கே மேற்கு வங்காளம்- வங்காள தேசத்துக்கு இடையே நேற்று மாலை கரையை கடக்கலாமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் அய்லா புயல் கொல்கத்தாவை நெருங்கியது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.

இலங்கையை ஆதரிக்கும் சீனா- இந்தியா

இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் இந்த மனித உரிமை பாதிப்புகள் குறித்து விவாதிக்க ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் (UNHCR ) இன்று ஜெனீவாவி்ல் நடக்கிறது.

இலங்கையில் இடம் பெயர்ந்து ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இந்த அமைப்பு, இலங்கை ராணுவத்தினரால் தமிழர்கள் பெரும் கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். தமிழ் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தி்ல் சேர்க்க ஆரம்பித்துள்ளனர் என்று கூறியுள்ளது.

இந் நிலையில் இந்த அமைப்பில் உள்ள 47 நாடுகளில் 17 நாடுகள் உடனே இதன் கூட்டத்தைக் கூட்டி தமிழர்கள் நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என கோரியுள்ளன. இந்தக் கோரிக்கையை விடுத்த நாடுகளில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் ஆகியவை அடங்கும்.

மேலும் இந்த அமைப்பு இரண்டு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கவுள்ளது. முதலாவது தீர்மானம் ஸ்விட்சர்லாந்து முன் மொழிந்ததாகும்.

இதன்படி இடம் பெயர்ந்து அரசு முகாம்களில் வசித்து வரும் தமிழர்களுக்கு உதவ சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாத அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்பதாகும். இதை ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆதரித்துள்ளன.

இந்த அனுமதியை இலங்கை அரசு தர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது தீர்மானம் இலங்கை அரசே முன் மொழிந்ததாகும். இதன்படி தமிழர்களுக்கு நிவாரணத்தை இலங்கை அரசே வழங்கும் என்றும் இதற்கு ஐ.நா. ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்த நிவாரணப் பணிகளுக்காக உலக நாடுகள் இலங்கைக்கு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இலங்கை உள் நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு மிக நெருக்கமான நாடான சீனா இந்தியாவும் ஆதரிக்கிறது.

இஸ்ரேலின் யோசனை தோற்கடிப்பு; சர்வதேசத்தில் இலங்கைக்கு கிடைத்த வெற்றி

nimal-siriiii.jpgஉலக சுகாதார ஸ்தாபன அமர்வில் இலங்கைக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை 193 நாடுகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டதாக சுகாதார போஷாக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62 ஆவது அமர்வில் இலங்கை சார்பாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்துகொண்டார்.

நேற்று முன்தினம் (24) மாலை நாடு திரும்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்த அமர்வில் உலக சுகாதார ஸ்தாபன தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டார். மனிதாபிமான உரிமைகளை மீறும் நாடாகக் கருதி இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபன விசாரணைக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென இந்த அமர்வின் போது இஸ்ரேல் யோசனையொன்றை முன்வைத்தது. ஆனால், சக நாடுகளின் உதவியுடன் இந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபன தலைவர் பதவி எனக்குக் கிடைத்தது இலங்கைக்கு கிடைத்த கெளரவமாகும்.

இதற்கு முன் இலங்கையர் எவரும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது கிடையாது. உலக சுகாதார ஸ்தாபன தலைவர் பதவிக்கு எனது பெயர் சிபார்சு செய்யப்பட்டுள்ளதை அறிந்தது முதல் ஜெனீவா உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு முன்பாகவும் ஐ. நா. முன்பாகவும் பெருமளவு புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல நாடுகள் இலங்கைக்கு இந்தப் பதவி கிடைப்பதை தடுக்க முயன்றன. இறுதியில் அந்த நாடுகளுக்கும் எமக்கு ஆதரவு வழங்க நேரிட்டது என்றும் அவர் சொன்னார்.

புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தது போல புலிகளின் கருத்துக்களை உலக சுகாதார ஸ்தாபனத்தினுள்ளும் தோற்கடிக்க முடிந்தது. காஸாவிலுள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள் அளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் காஸாவுக்கு உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் அனுப்பப்பட்டது போல இலங்கைக்கும் அனுப்ப இஸ்ரேல் முயன்றது. இலங்கை மனித உரிமைகளை மீறும் நாடு என்ற கருத்தை பரப்ப அந்த நாடு முயன்றது என்றும் அவர் கூறினார்.

ஆனால் சகல நட்பு நாடுகளுக்கும் நான் இலங்கை தொடர்பான உண்மை நிலைவரத்தை விளக்கினேன். ஐ. நா. செயலாளர் நாயகம் இலங்கை வருவதற்கு முன்னதாக நான் அவருடன் அரை மணி நேரம் பேச்சு நடத்தினேன். அவருக்கும் இலங்கையின் உண்மை நிலைமைகளை எடுத்துக் கூறினேன். இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது சர்வதேச ரீதியில் எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இலங்கையின் உண்மை நிலைவரம் குறித்து தொடர்ந்து வெளிநாடுகளையும் வெளிநாட்டு தூதுவர்களையும் அறிவூட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய நினைவு சின்னம் பரிசு

russuia-2.jpgஇலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தது மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்காக குரல் கொடுத்தும் வரும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய நினைவுச் சின்னமொன்றை வழங்கியுள்ளது.

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்குச் சென்ற ஹெல உறுமய பிக்குமார் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் அந்த நினைவுச் சின்னத்தை கையளித்தனர். இலங்கை அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு உதவியமைக்காக ரஷ்யாவுக்கு பிக்குமார் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான பிக்குமார் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாதிக்கப்பட்ட 580 குடும்பங்களுக்கு அடுத்த வாரம் வீடு

images-house.jpgதிரு கோணமலை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள 580 குடும்பங்களுக்கு அடுத்த மாதம் நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவி ருத்தி அதிகார சபை, ஜாதிக சவிய திட்டத்தின் கீழ் 86.27 மில்லியன் ரூபா செலவில் இந்த வீடுகளை நிர்மாணித் திருக்கிறது.

வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரஃபின் ஆலோசனையின் பேரில் நிர்மாணி க்கப்பட்டிருக்கும் இந்த வீடுகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம். பி. யின் வழிகாட்டலின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப் படவிருக்கிறது.

இவ் வீடமைப்புத் திட்டங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் தெமட்டவெவ, கோணமரியாவ, கீரலகம ஆகிய இடங்களிலும், திருமலை மாவட்டத்தில் கல்யாணபுர, மொரவெவ, கல்கடுவெவ, இந்திகட்டுவ ஆகிய இடங்களிலும், மொனறாகலை மாவட்டத்தில் கேவனப்பிட்டிய, காண்டுகல ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடமைப்பு திட்டங்களில் வீதி, குடிநீர் வசதி உட்பட பொது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

துவக்குச் சூட்டில் வர்த்தகர் படுகாயம்

Gun 01திருக்கோவில் கோளாவில் 3 இல் நேற்றுத் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாகம வீதியிலுள்ள இவரது வர்த்தக நிலையத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற ஆயுதபாணிகள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

மார்பில் படுகாயமடைந்த நிலையில் இவர் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான நா.லிங்கராசா (55 வயது) என்பவரே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.